Skip to main content

திரு பாவை துதி -25

திரு பாவை துதி -25





கோதா ஸ்துதி - 25 - கோதையின் புருவ நெறிப்பால் பெருமாளின் சுவாதந்திரியம் குலைதல்


கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்

ப்ருக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல:|

கர்மாநுபத்தபலதா நரதஸ்ய பர்த்து:

ஸ்வாதந்த்ரிய துர் விஷஹ மர்மபிதா நிதாநம் || .25


எளிய தமிழ் விளக்கம்


கோதாய்! 

அவரவர் செய்த பாபங்களுக்கு ஏற்றவாறு

தக்கப் பலனை அளிப்பதில் உறுதியான உன் நாதனின்

சுவாதந்திரியத்தை உன் புருவ நெறிப்பால் பிளந்து 

பெருமாளுக்கு போகமும், 

சரணாகதனுக்கு யோகமும் அளிக்கிறாய்


சற்றே சிறிய விளக்கம் 


ஆண்டாளின் இனிப்பான ‘கூடாரை வெல்லும் கோவிந்தா’ என்ற பாசுரத்தில் ‘கூடுபவரிடம் தோற்கும் கோவிந்தா’  என்பது மறைந்துள்ளது.  

ஸ்ரீ ராமாயணத்தில் இப்படி ஒரு ஸ்லோகம் வருகிறது “சசால சாபஞ்ச முமோசவீர:” அதாவது எதிரிகளிடம் தன் வில்லை காட்டியே ஜெயிப்பவன் ஸ்ரீராமன்.  


யுத்தத்தில் இராவணன்  சளைத்துப்போய் வில்லை கீழே போட உடனே ஸ்ரீராமர் “என்ன வீரன் என்ன வீரன்” என்று புகழ்ந்தாராம். அதாவது இராவணன் வில்லை போட்டுவிட்டுச் சரணடைய ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது சரணடைந்தால் நிச்சயம் ஸ்ரீராமர் தோற்றுப் போயிருப்பார் ஆனால் அந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டான் இராவணன். அதனால் இன்று போய் நாளை வா என்று இரண்டாவது இன்னிங்சில் வந்து சரணடைவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் மறுநாள் மிக வல்லவன் போல வந்து நின்ற போது ’பொல்லா அரக்கனின் தலைகளைக் கிள்ளிக் களைந்தான்’  


ஸ்ரீராமர் தோற்பதற்குப் பாக்கியம் செய்யவில்லை என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. 


கூடாதவர்களையும், கூடியவர்களையும் தன் குணத்தால் வெல்லுகிறார் ஸ்ரீராமர். 


ராவணனை வில்லால் தானே அடித்து வீழ்த்தினார், இங்கே குணம் இங்கே வந்தது என்று நமக்குத் தோன்றும்.  வில்லில் இருக்கும் கயிற்றுக்குக் குணம் என்று பெயர். ராவணன் போல இருப்பவர்களை அந்தக் குணத்தை இழுத்து அடித்து வெல்வான். 


நாமும் பாபம் செய்வதில் அந்த இராவணனுக்கு சளைத்தவர்கள் இல்லை.  இராமர் நம்மை வில்லால் அடிக்க வரும் போது கோதையின் புருவத்தின் நெறித்தலையே வில்லாகக் கொண்டு அஞ்சலி என்ற அம்பை அதன் மூலம் எய்தினால் அவனைச் சுலபமாகத் தோற்கடிக்கலாம் என்று நமக்குத் தேசிகன் வழிகாட்டுகிறார். 


படம்: ஒருத்தி - ஒருத்தி மகனாய் கண்ணன்


- சுஜாதா தேசிகன்

10.1.2023

ஒருத்தி… 


Comments