திரு பாவை துதி -29
கோதா ஸ்துதி - 29 - நற்பயன் - மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே!
இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத்
பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: |
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் || .29.
எளிய தமிழ் விளக்கம்
இக் கோதா ஸ்துதி,
கோதையின் திருவடியில் விஸ்தாரமாக
பக்தியின் ஈடுபாட்டால் வேங்கடேசனிடமிருந்து
பக்தி பரவசத்தில் மலர்ந்து, தானாக அவதரித்து,
மனங்கவரும் எல்லா வகையான குணங்களுடைய
அழகிய கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ,
அவர்கள் திருமகளோடு கூடிய ரங்கநாதனின்
முடிவில்லாத திருவடி கைங்கரியத்தைப் பெற்று
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே
சற்றே பெரிய விளக்கம்
நேற்றுடன் கோதா ஸ்துதி முடிந்தது. இந்த ஸ்லோகம் ‘பலச்ருதி’ - ஸ்தோத்ரத்தின் சிறப்பையும், பலனைச் சொல்கிறது.
ஸ்ரீ வேங்கடேசன் என்ற நம் ஸ்ரீ வேதாந்த தேசிகன், இந்தக் கோதா ஸ்துதியை நான் ஆக்கியது அல்ல, இது தோன்றியது. விஷ்ணுசித்தரின் இல்லத்தில் கோதை தோன்றியது போல, அடியேனிடம் மலர்ந்த கோதா பக்தியினால் அவள் ‘வாக்கை தந்து’ அவதரித்தது.
கோதையின் பக்தி மலர் மாலையாக மலர்ந்தது;
கோதையின் அநுகாரம் திருப்பாவையாக மலர்ந்தது;
கோதையின் மீது உள்ள ஏகாந்த பக்தியி கோதா ஸ்துதியாக மலர்ந்தது.
கோதை சூடிய மாலையைப் பல குணங்களுடன் ( குணம் - நார்/கயிறு) கட்டப்பட்ட மாலை ரங்கனுக்கு இஷ்டமாக அமைந்தது. அதைத் தலையில் வைத்துக்கொண்டாடினார். இதைத் திருவரங்கத்து அமுதனார் ‘அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள்’ என்று உறுதி செய்கிறார்.
நம் தேசிகன் கோதா ஸ்துதியைப் பல குணச்சிறப்புகளுடன் கோதையின் வாக்கைக் கொண்டு ‘எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்’ அமைத்தார்
(8+2=10 ; பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே )
திருப்பாவையை ‘முப்பது தப்பாமே’ என்று தப்பாகச் சொல்லக் கூடாது என்ற நிபந்தம் உண்டு. ஆனால் கோதா ஸ்துதிக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. கோதா கொடுத்த வாக்கைக்கொண்டு அவளையே ஸ்தோத்திரம் செய்தால் நம் மனம் பக்தியில் மலரும்.
கோதை நாச்சியார் திருமொழியில் வேங்கடவனுக்கு தூதுவிட்டாள். அந்தப் பெயர் கொண்ட வேங்கடேசனே கோதா ஸ்துதியை அருளினார்.
இந்தக் கோதா ஸ்துதியை ‘யவன் சொல்லுகிறானோ அவன்’ என்கிறார் ஸ்வாமி தேசிகன், அது நம்மாழ்வார் சொல்லும் ‘யவன் அவன்’ என்று பெருமாளை பேசுவது போல உள்ளது. கோதா ஸ்துதியைச் சொல்லுபவர்கள் மகிமை அவ்வளவு பெரிதாம். இதைச் சொல்லுபவர்கள் ‘உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்ற கைங்கரியம் கிடைத்து, இந்த லோகத்தில் விஷ்ணுசித்தரைப் போலப் பலராலும் மதிக்கப்பட்டு, திருமங்கை ஆழ்வார் சொல்லுவது போல ‘மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே’ என்று இகத்திலும் பரத்திலும் பெருவாழ்வு பெறுவார் என்று உத்தரவாதம் தருகிறார் நம் தேசிகன்.
படம்: உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ ||
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
தூப்புல் வேதாந்த தேசிகனே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
கோதா ஸ்துதி முற்றிற்று
-சுஜாதா தேசிகன்
14.1.2024
சிற்றம்....
Comments
Post a Comment