ஆண்டாளின் நகைக்கடை
நேற்று 'கூடாரை வெல்லும்’ பாசுரத்தால் கொலஸ்ட்ரால் ஏற்றிக்கொண்டவர்கள்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
என்ற வரிகளை படித்திருப்பீர்கள்.
இரண்டு வரியில் ஒரு நகைக்கடையே அடக்கிவிடுகிறாள் ஆண்டாள்.
ஸ்ரீ சேவா ஸ்வாமி சில அற்புதமான விஷயங்களைக் கூறியுள்ளார். அதன் சாரத்தையும் சில ஆழ்வார் பாசுரங்களுடன் சேர்த்து அனுபவத்திற்கு தருகிறேன்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் வால்மீகி ‘பெருமாளைப் பாடினால் சன்மானம் கிடைக்கும்’ என்கிறார்.
ஸ்ரீராம சரித்திரத்தை லவகுசர்கள் வாயினால் பாடிக்கொண்டு சென்றார்கள். அதைக் கேட்டு மகரிஷிகள் அனைவரும் ‘ஆஹா என்ன இனிமை என்ன இனிமை’ என்று அதில் மோகித்து, பல பரிசுகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பரிசு - மான் தோல், பூணூல், கமண்டலம், விறகு, விறகுவெட்டி, சின்ன கோடாரி, தர்ப்பாசனம், மரவுரி போன்றவை. இதை எல்லாம் குழந்தைகளுக்குத் தரும் பரிசா ? அவர்களிடம் இருப்பதைத் தானே பரிசாகக் கொடுக்க முடியும் !
ஆனால் ஆயர் பாடி பெண்களுக்கு நகை என்றால் மிகுந்த ஆசையாம். அவர்கள் ‘சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீகள்’. ஆண்டாள் தனக்கு மட்டும் அல்லாமல் ’யாம் அணிவோம்’ என்று ஐந்து லட்சம் பெண்களுக்கும் ‘என்றனைய பலகலனும்' என்று மொத்தத்தையும் கொண்டு வா என்கிறாள்.
கண்ணன் இருக்க இந்த நகைக்கு எல்லாம் இவர்கள் ஆசைப்படலாமா என்று நமக்குத் தோன்றும்.
அசோகவனத்தில் சீதை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாள். அந்தச் சமயம் அனுமான் கொண்டு வந்து கொடுத்த ஸ்ரீராமரின் மோதிரத்தைப் பார்த்து அவளுக்கு ஒரே சந்தோஷம். அது அவளுக்கு ஸ்ரீராமராகவே காட்சி கொடுத்தது. அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறாள்.
பின் தன் தலையில் சாற்றிக்கொண்ட சூடாமணியை அனுமான் மூலம் கொடுத்து அனுப்ப, அதை கையில் வாங்கிய ஸ்ரீராமர் சீதையை நினைத்துக் கதறி அழுதார். பொதுவாக பெண்கள் அழுவார்கள் என்பார்கள் ஆனால் இங்கே சீதை மகிழ்ந்தாள்; ஸ்ரீராமர் அழுதார்.
இதில் நகை என்பது ஒரு பொருள். மென்பொருளில் ‘ஆபரேட்டர் ஓவர்லோடிங்’(operator overloading) என்று ஒன்று உண்டு. ‘+’ என்ற குறியீடுக்கு ஒரு சிறப்பு அர்த்தம் கொடுக்கலாம். அது போல இங்கே நகை என்பது ஓர் அழகுப் பொருள் என்றாலும் அது ஸ்ரீராமர், சீதையாக ஓவர்லோடு செய்யப்படுகிறது.
சீதைக்கு ஸ்ரீராமரின் மோதிரம்; ஸ்ரீராமருக்கு சீதையின் சூடாமணி இவர்களுக்கு நாடு புகழும் பரிசு!
ஸ்ரீராமரின் பட்டாபிஷேகத்தின் போது ஒரு முத்து மாலையை ஸ்ரீராமர் ‘இந்தப் பரிசை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ நீயே உன் கையால் கொடு’ என்று சொல்ல அதை அனுமானுக்கு கொடுக்கிறாள். சீதையாகிற ஆபரணத்தை ஸ்ரீராமரிடம் சேர்ப்பித்ததற்கு அனுமானுக்கு கிடைத்த ஆபரணம் நாடு புகழும் பரிசு.
பெருமாளிடம் இவ்வளவு நகைகள் இருக்கும் என்று ஆண்டாளுக்கு எப்படித் தெரிந்தது ? பெரியாழ்வார் தான் காரணம்.
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
செந்தாமரைப் பூபோன்ற சிறிய பூவிதழ் போன்ற திருவடி விரல்களில் சோபிக்கிற மோதிரங்களும் கிண்கிணியும், இடுப்பில் தங்கிட அரைநாணும், தங்கக் காம்போடு கூடின நல்ல மாதுளைப் பூவோடு சேர்த்துக்கோர்த்த பொன்மணியும், மோதிரமும், மணிக்கட்டில் பவள வடமும், மங்களகரமான பஞ்சாயுதங்களும், தோள்வளையும், காதணிகளும், மகர குண்டலங்களும், வாளிகளும், நெற்றிச் சுட்டியும் சேர்த்து விளங்க எங்கள் வம்சத்துக்கு அரசனே என்கிறார்.
ஸ்ரீராமானுஜர் தமது கத்யத்ரயத்தில் பெருமாள் சாற்றிக்கொண்டு இருக்கும் ஆபரணங்களைப் பட்டியலிடுகிறார்.
கிரீட மகுட சூடாவதம்ச
மகர குண்டல க்ரைவேயக
ஹார கேயூர கடக ஸ்ரீ வத்ஸ
கௌச்துப முக்தா தாமோதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராத்
அபரிமித திவ்ய பூஷண
கிரீடம், அதற்கு மேல் மகுடம், திருச்சுட்டி, திருச்செவி மலர், மகர குண்டலம், கழுத்துக்கு முத்து மணி, மார்பில் திருவாரம், தோள்வளை, கையில் வளையல்கள், கெளஸ்துபம், முத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், பீதாம்பரம், இடுப்பு நாண், கணுக்கால் சிலம்பு போன்று எண்ணற்ற பல ஆபரணங்கள்.
நம்மாழ்வார் ’பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே’ என்கிறார். பெருமாளின் குணங்கள் போல பல ஆபரணங்கள் என்கிறார்.
இன்றும் திருமணத்தில் மாப்பிள்ளையை விஷ்ணுவாகப் பாவித்து, பெண்ணை கன்யாதானம் செய்து கொடுக்கும் போது ‘கன்யாம் கனகஸ்ம்பன்னம் ஸ்ர்வாபரண பூஷிதாம்’ என்கிறோம்.
அதற்குப் பிறகு மாப்பிள்ளை பெண்ணுக்கு வாங்கித்தரும் முதல் வஸ்து கூரைப்புடைவை. அதையும் ஆண்டாள் ‘ஆடை உடுப்போம்' என்று வாங்கிக்கொண்டாள்.
பிகு: இதுவரை ’கூடாரை வெல்லும்’ பாசுர நாள் அன்று நகை வாங்கினால் அதிர்ஷ்டம் என்று கிளம்பவில்லை.
- சுஜாதா தேசிகன்
13.01.2024
Comments
Post a Comment