Skip to main content

திரு பாவை துதி -23

திரு பாவை துதி -23



கோதா ஸ்துதி - 23 - ஆண்டாள், ஸ்ரீதேவியுடன் கூடிய நாதனை ஆராதித்தே அரசர்கள் ஆண்டனர். 


அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகமப்ரஸூனை:

நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |

மாதச்சிரம் நிரவிசந் நிஜமாதிராஜ்யம்

மாந்யா மநுப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || .23.



எளிய தமிழ் விளக்கம்


கோதாய்! 

சூரிய வம்சத்து மநு போன்ற மகாராஜாக்கள்

பூமிதேவியான உன்னோடும், 

ஸ்ரீதேவியுடன் எப்போதும்

இணைந்திருக்கும்

ஸ்ரீபூநாதனை வெகுகாலம் நியமங்களுடன் 

வேத மந்திர மலர்களால் 

நன்றாகச் சேர்த்தியில் சேர்த்து அர்ச்சித்து

தங்கள் சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் 

ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 


சற்றே பெரிய விளக்கம் 


பூதத்தாழ்வார் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தைப் முதலில் பார்க்கலாம் 



கோ ஆகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே

மா ஏகி செல்கின்ற மன்னவரும் பூ மேவும்

செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்

தண் கமலம் ஏய்ந்தார் தமர்


அரசர்களுக்கு அரசர்களாய் பரந்த பூமண்டலத்தை நம் கண்ணெதிரே குதிரையேறித் திரிகின்ற அரசர்களும்  செந்தாமரை மலர் பொருந்திப் பெற்ற திரு நாபியையுடைய பெருமானுடைய திருவடிகளுக்கு ஏழ் ஏழ் பிறப்பிலும் அழகிய குளிர்ந்த தாமரைப் பூக்களை சமர்ப்பித்த பக்தர்களாவார் 


திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் 


தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற

காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை


அழகிய வடிவுடைய பூமாதேவியையும், ஸ்ரீதேவியுடன் சங்கு சக்கரம் பளபளக்கும் கற்பகச் சோலையாகவே, கற்பகம் போலப் பக்தர்களுக்கு அருள் புரிகிறான் என்கிறார். 


ஸ்வாமி தேசிகன் கூறுவதையும் இரண்டு ஆழ்வார்கள் கூறுவதையும் சேர்த்துப் படித்தால் நன்கு அனுபவிக்கலாம். 


மேலும் சில குறிப்புகள் 



ஸ்ரீரங்கம் ஸ்ரீ.உ.வே முரளி பட்டர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். 

முரளி பட்டரின் தந்தை மூலஸ்தானத்தில் இருந்த சமயம் அரசியல் பிரமுகர் ஒருவர் அங்கே பெருமாள் சேவிக்க வரும் போது ஒரு கேள்வியைக் கேட்டார் “ஏன் உபய நாச்சிமார்கள் பக்தர்களைப் பார்த்து அருள் புரியாமல் எதிர் எதிரே ஒருவரையொருவர் பார்த்த வண்ணமாக இருக்கிறார்கள்?”

அதற்கு முரளி பட்டரின் தந்தை “அப்படியன்று, இருவருமே பக்தர்களை உய்விக்க நம்பெருமாளின் திவ்யமான திருவடிகளைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் கோலத்தில் தரிசனம் தருகிறார்கள்” என்றார் 


இன்னொரு குறிப்பு:


ஸ்ரீபூநாதனை -  ஸ்ரீதேவி பூதேவி சமேத என்று கூறுவதைத் தான் ஸ்ரீபூநாதன் என்று குறிப்பிட்டுள்ளேன். 


படம்: மாரிமலை முழைஞ்சில்.. 

- சுஜாதா தேசிகன்

8.1.2023

மாரிமலை முழைஞ்சில்…





Comments