Skip to main content

திரு பாவை துதி -28

திரு பாவை துதி -28




கோதா ஸ்துதி - 28 - கோதை நம் உள்ளக் கோயிலில் சந்நிதிக் கொள்ளட்டும்

சதமகமணிநீலா சாருகல்ஹாரஹஸ்தா


         ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |

அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா

         விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: ||  .28.


எளிய தமிழ் விளக்கம்


இந்திர நீலக்கல் ரத்தினம் போன்ற ஜொலிப்பவள்;,

அழகிய செங்கழுநீர் மலரை ஏந்தியவள்;

பெருத்த திருமார்பின் பக்தி பாரத்தால்

வளைந்த வணங்கிய திருமேனி;

அடியார்களுக்குத் தாய்ப்பாசக் கருணைக் கடல்;

முடிசூடிக் கொடுத்த மலர் மாலையால்

’ரங்க’ நாதனைத் தன்வசமாக்கியவளும், 

விஷ்ணு சித்தர் திருமகளுமான 

கோதைப்பிராட்டி நம் எல்லோருடைய 

சித்தத்திலும் என்றும் விளங்கி அருளட்டும்!


சற்றே பெரிய விளக்கம் 


இந்த ஸ்லோகம் தியான ஸ்லோகம். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கோதை நாச்சியாரை நம் தேசிகன் வேறாக ஆவாகனம் செய்து இந்த ஸ்லோகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்.  ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கோதை நாச்சியாரை சேவிக்க முடியவில்லை என்றால் இந்த ஸ்லோகத்தைச் சேவித்தால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நம் உள்ளக் கோயிலில் என்றும் சேவை சாதிப்பாள். 


மேலே ‘பெருத்த திருமார்பின் பக்தி பாரத்தால் வளைந்த வணங்கிய திருமேனி’ என்பதில் ‘பக்தி பாரம்’ என்ற பிரயோகத்தைக் கவனித்திருக்கலாம். . 

நாச்சியார் திருமொழியில் 


பிராயம் தொடங்கி அவரையே என்றும் விரும்பியதால்

கிளர்ந்து எழுந்த என் பருத்த முலைகளை

துவாரகா நாதனுக்குச் சமர்ப்பித்து

அவைகளைத் தொழுதேன்

விரைந்து என்னை அவனிடம் கொண்டு செல்!

என்கிறாள். 


ஆழ்வார் பாசுரங்களில் திருமார்புக்கு (முலைகளுக்கு) உள்ளுறைப் பொருளை ஆசாரியர்கள் விவரித்துள்ளார்கள். 


’முலைகள்’ வசீகரிப்பவை. முலை என்ற அவயவம் முதிர்ந்த பக்தியைக் குறிக்கும். வசீகரிக்கப்பட்ட கணவன் மனைவியிடம் ஆசையுடன் விழுவான். அது போல, பக்தி பெருமாளை வசீகரிக்கும். பரிபக்குவமான பக்தி இருந்தால் எம்பெருமான் எம் மீது விழுவான். 


‘பிராயம் தொடங்கி அவரையே என்றும் விரும்பியதால், கிளர்ந்து எழுந்த என் பருத்த முலைகளை துவாரகா நாதனுக்குச் சமர்ப்பித்து’  என்ற வரியில் முலை=பக்தி என்று மாற்றி படித்துப் பாருங்கள். 


இளைய பெருமாள் எப்படி ஸ்ரீராமனிடம் பால்யப் பருவம் முதற்கொண்டு(தொட்டில் அழுத கதை) பிரேமை கொண்டாரோ, அது போல ஆண்டாளுடைய திரு மார்பகங்கள் எம்பெருமானையே அணைக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்தனவாம். அதனால் அவை கண்ணனின் உடைமையானது. கண்ணனின் உடைமையான பின் அவை வணங்கத்தக்கவை .அதனால் ஆண்டாள் தன் திருமுலைகளை தானே வணங்குகிறாள்!


ஆண்டாள் இன்னொரு பாசுரத்தில் "கொம்மை முலைதன் இடர்தீர கோவிந்தற்கோர் குற்றேவல்" என்கிறாள். பராங்குச நாயகியாக நம்மாழ்வார் ஆண்டாளைப் போல்  "முலையால் அணைக்க" என்று சொல்ல வேண்டிய இடத்தில் "திருவடிக்கீழ்க் குற்றவேல்" என்று கூறுகிறார். 


இதற்கு நம்பிள்ளை ஈட்டுல் ’வேதம் ஓதிய அந்தணனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் வேதத்தையே சொல்லித் திரிதல்போல, ஆழ்வாருக்கு நிலைமை மாறினாலும் பாசுரம் பேசும் முறைமை மாத்திரம் மாறவில்லை’ என்கிறார்!


பின்குறிப்பு: 


நேற்று வாத்ஸல்யம் என்ற சொல்லுக்கு நல்ல தமிழ் வார்த்தை இல்லை என்று கூறியிருந்தேன். சில சமயம் நாம் அதிகம் யோசிப்போம் ஆனால் கையில் வெண்ணெய் என்பது போல வாத்ஸல்யம் என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் தாய்ப்பாசம்! 


படம்: கறவைகள் பின் சென்று... கண்ணன் பசுக்கள் பின் தொடர்கிறது..


-சுஜாதா தேசிகன்

13.1.2023

கறவைகள்..


Comments