Skip to main content

திரு பாவை துதி -21

திரு பாவை துதி -21





கோதா ஸ்துதி - 21 - அரங்கன் மாலை மாற்றல் வைபவம்

ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்திமபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதிகத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

எளிய தமிழ் விளக்கம்

ஹே பூமி தேவியே!
திருவரங்கனுக்கும் உனக்கும் ஏற்பட்ட
தெய்வீகக் காதல் அனுபந்தத்தால்
ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்ளும் அழகைப்
பக்த ரசிகர்கள் பலவாறு உயர்வு, குறைவு, சமம் என்று
ரசமாக விவாதிக்க அது மகிழ்ச்சி ஆரவாரப் பேரொலியாக

மூன்று உலகங்களையும் ஆக்கிரமிக்கிறது!

சற்றே பெரிய விளக்கம்

இன்றைய அவசரத் திருமணங்களிலும் மாலை மாற்றும் நிகழ்ச்சி இன்னும் நடைபெறுகிறது. பெண்ணுக்கு ஆண்டாள் கொண்டை அலங்காரமாக ‘மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்’ (யார் எழுதியது என்று தெரியாது) பாடலை வாத்தியாருடன் மடிசார் மாமிகள் பாடுவார்கள். ( முழுவதையும் கீழே கொடுத்திருக்கிறேன்)

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

இந்தச் சமயம் இருவீட்டாரும் கூக்குரல், கூச்சல், கூப்பாடு போட்டு மாலை போடுவதில் போட்டி போடுவார்கள்.

நாச்சியார் திருமொழி இரண்டு பாசுரங்களில்
“வைகல் தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள்” என்றும் “பங்குனி நாள் கடை பாரித்தோம்” என்று பாடுகிறாள்.

இது ஆண்டாளுடைய கனவு! இன்றும் அதே பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மாலை மாற்றிக்கொண்ட பின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இந்த வைபவத்தை, ஆண்டாளின் கனவை ஸ்லோகத்தின் மூலம் நனவாக்கி நடத்தி வைக்கிறார் என்றால் மிகையாகாது.

எல்லா திவ்ய தேசங்களிலும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் என்ன விசேஷம் ?

எல்லா திவ்ய தேசங்களிலும் திருக்கல்யாணம் நடைபெற்ற பின் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும் ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் மாலை மாற்றிக்கொண்ட பின் தான் ஆண்டாள் திருக்கல்யாணம்! இது ஆண்டாளின் மாலைக்கு உள்ள ஏற்றம்.

இன்னொரு ஏற்றமும் உண்டு.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மாலை பிரசித்தம் என்பது உங்களுக்குத் தெரியும். அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டுச் சமர்ப்பிக்கப்படும் மாலையை மட்டுமே ஏற்றுக்கொள்வார். நம்பெருமாள் சுகுமாரன், இரண்டு மாலைகளுக்கு மேல் சாத்திக்கொள்ள மாட்டார்.

நாம் வாங்கிக்கொண்டு செல்லும் மாலைகளை எல்லாம் தன் தோள்களில் சாற்றிக்கொள்ள மாட்டார் ஏன் சேர்த்தி உற்சவம் அன்று இவர் மாலையை பிராட்டிகளுக்கு சாற்றுவார்கள் ஆனால் பெரிய பிராட்டி, சேரகுலவல்லி நாச்சியார் மாலைகளை இவர் சாற்றிக்கொள்ள மாட்டார்.

ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் மாலைக்கு மட்டும் விதிவிலக்கு! ஆண்டாளின் மாலையைத் தவிர வேறு எந்த மாலையும் அவர் தோள்களில் ஏற்றுக்கொள்வதில்லை!

மேலும் சில கருத்துக்கள்:

மாலை மாற்றிக்கொள்ளும் போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் இருவரும் தங்கள் பக்கம் தான் ஏற்றம் என்று விவாதிப்பார்கள். கூச்சல், கூப்பாடு ஆரவாரம் அங்கே நிகழும். நத்திங் பர்சனல், கொஞ்சம் ஜாலியான விஷயம்.

ஸ்ரீராமனுக்கு சீதைக்கும் நடக்கும் திருமணத்தை விவரிக்கும் கம்பர்

நம்பியைக் காண நங்கைக்கு
ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும்தோறும்.
குரிசிற்கும் அன்னதே ஆம்;

அதாவது “இராமனது வடிவழகைக் காண்பதற்கு சீதைக்குக் கண்கள்

ஆயிரம்; வேண்டும்” என்று ராமரின் வீட்டார் கூற அதற்கு சீதையின் வீட்டார் ”பூங்கொம்பு போன்ற சீதையை பார்க்கும் போது புதிய புதிய வடிவழகு புலப்படுவதால் புதிது புதிதாக ஆயிரம் கண்கள் ராமருக்கு வேண்டும்” என்பார்களாம்.

அதே போல பெருமாளையும், பிராட்டியும் உயர்த்தியும், தாழ்த்தியும், சிலர் நடுநிலைமையுடன் பேசும் பேச்சுகள் பேரொலி உண்டாயிற்று என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

இவற்றை ரசமாக அனுபவிக்க வேண்டும்.

எப்போதும் கிருஷ்ணப் பக்தியில் ஈடுபடும் நம்மாழ்வார் “கற்பார் இராம-பிரானை அல்லால், மற்றும் கற்பரோ?”

நீங்கள் கற்க வேண்டும் என்றால் அது ராமரைத் தான் என்கிறார். உடனே கிருஷ்ணருக்கு ஏற்றம் குறைவா என்று கேட்கக் கூடாது. இது கிருஷ்ணரை நிந்திப்பது இல்லை இதை ‘நஹி நிந்தா நியாயம்’ என்பார்கள்.

மை 2 செண்ட்ஸ்:


இந்த மாதிரியான கல்யாண உற்சவங்கள் இன்றும் நடக்கிறது, பெண் வீட்டார்,பையன் வீட்டார் ஏற்றத்தாழ்வு நடுநிலைமை கூக்குரல், கூச்சல், கூப்பாடு இன்றும் இருக்கிறது, ஆனால் கொஞ்சம் பர்சனலாக !

படம்: ஏற்ற கலங்கள்..

- சுஜாதா தேசிகன்
6.1.2024
ஏற்ற கலங்கள்...

Comments