Skip to main content

திரு பாவை துதி -22

திரு பாவை துதி -22




கோதா ஸ்துதி - 22 - அரங்கன் மயில் கழுத்து நிறம் பெறுதல்


துர்வாதளப்ரதிமயா தவ தேஹகாந்த்யா:

கோரோசனாருசிரயா ச ருசேந்திராயா: |

ஆஸீதநுஜ்ஜித சிகாவனகண்டசோபம்

மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் || .22.


எளிய தமிழ் விளக்கம்

தொழுபவர்களுக்கு மங்களத்தை நல்கும் 

மதுசூதனன் திருமேனியானது

அருகம்புல்லைப் போன்ற உன் பச்சை வண்ணப் பொலிவினாலும், 

கோரோசனத்தை போன்ற திருமகளின் மஞ்சள் சிகப்பு பொன் வண்ண ஜொலிப்பினாலும், 

பல வர்ணங்களைக் கொண்ட மயில் கழுத்தின் அழகை இடைவிடாது பெற்றது. 


சற்றே பெரிய விளக்கம் 

அருகம்புல் போன்ற பசுமையான நிறம் பூமாதேவியின் அம்சமான கோதையுடையது. கோரோசனம்* போன்ற மஞ்சள் சிகப்பு கலந்த பொன் நிறத்தை உடையவள் ஸ்ரீதேவி. பசுமையான பச்சை நிறமும், ஜொலிக்கும் தங்க நிறமும், மதுசூதனனின் கரு நீல மேனியில் படும் போது, பெருமாள் மயில் கழுத்தின் நிறத்தில் ‘பேடை மயில் சாயல் பின்னை மணாளா’ ‘நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால்’ என்று பெரியாழ்வார் வர்ணிப்பது போல இடைவிடாது ஜொலித்து எல்லோருக்கும் மங்கலத்தைக் கொடுப்பவராக இருக்கிறார்! நம் தேசிகன் வர்ணிக்கும் இந்த வண்ணப் பெருமாளை எங்கும் தேட வேண்டாம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயியாக சேவை சாதிக்கிறார். படத்தில் பச்சை வண்ணத்தில் பூமாதேவி, ஸ்ரீதேவி தங்க வண்ணத்தில் அவை பெருமாள் மீது பட்டு அவர் ஜொலிக்கும் வண்ணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!



இந்தப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் வடைவழகிய நம்பியாக திருக்குறுங்குடியில் சேவை சாதிக்கிறார்.

( இங்கேயும் அதே வண்ணங்களைக் காணலாம் )


அடுத்த முறை இந்தப் பெருமாளை சேவிக்கும் போது ஸ்வாமி தேசிகனையும் கோதையும் நினைத்துக்கொள்ளுங்கள் ! ஒரே ஒரு குறிப்பு: *கோரோசனம் - மஞ்சள் சிகப்பு நிறம் கொண்ட பசு மாட்டின் பித்தப்பையிலிருந்து எடுக்கப்படுவது. ஸ்ரீமத் ராமாயணத்தில் இந்த உவமை கூறப்பட்டுள்ளது. படம்: அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே... ஓவியங்கள் சில்பி, மணிவேல். அவர்களுக்கு நன்றி.

- சுஜாதா தேசிகன்

7.1.2023

அங்கண்மா ஞாலத்து .. 


Comments