Skip to main content

Posts

Showing posts from September, 2023

1. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை - யார் அந்த குழந்தை ?

1. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை -  யார் அந்த குழந்தை ? வருடம் - 1273 .  காஞ்சிபுரம். ஸ்ரீ வரதராஜர் கோயில்.  காலை.  நடாதூர் அம்மாள் என்ற வைணவ பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார்.  அவரை சுற்றி, வடக்கு திருவீதிப் பிள்ளை, ச்ருத பிரகாசிக பட்டர் போன்ற பெரியவர்கள் கூர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அச்சமயம் பளிச் என்ற திருமண்ணுடன் குட்டி ராமானுஜர் போல ஐந்து வயதுக் குழந்தை, தன் மாமாவான கிடாம்பி அப்புள்ளார் கையை பிடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே வர, எல்லோரும் அந்தக் குழந்தையை வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.  நடாதூர் அம்மாள் மெய்மறந்து  “அடடா ! என்ன முகப்பொலிவு! நம் ராமானுஜரே குழந்தையாக நடந்து வருவது போல இருக்கிறதே!” என்று தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் “கிடாம்பி அப்புள்ளாரே!  இந்தக் குழந்தை யார் ? ” என்று கேட்க, அப்புள்ளார் “என் சகோதரியின் மகன்.  என் மருமான்.  பெயர் ’திருவேங்கட நாதன்’ ” என்றார்.   உடனே அந்தக் குழந்தை நடாதூர் அம்மளை விழுந்து சேவித்தது. அம்மாள்  குழந்தையை கையில் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் தன் காலக்ஷேபத்தை

அஹோபிலத்தில் கோல் தேடி ஓடி...

அஹோபிலத்தில் கோல் தேடி ஓடி... ’ ஸ்ரீமத் ஆதிவண் சடகோபனின் சங்கல்பம் ’ என்று ஒரு வாரத்துக்கு முன் ஒரு பதிவு எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் முதலாம் அழகிய சிங்கர் பல காலட்சேபங்களை நிகழ்த்திய மண்டபம் குறித்து எழுதியிருந்தேன். எழுதும் போது ’என்றாவது நாள்’ மீண்டும் சென்று சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என்றாவது ஒரு நாள்’ என்பதற்குக் காரணம் அஹோபிலம் செல்லத் திருமங்கை ஆழ்வார் போல அஹோபலம் வேண்டும். திருப்பதி என்றால் TTD டிக்கெட் ’க்யூ’ நினைவுக்கு வருவது போல, அஹோபிலத்தில் நீரோடைகள், மழைச் சாரலுடன், மலைமேல் ஜ்வாலா நரசிம்மரை சேவிக்க மனதிலும் உடலிலும் குளுக்கோஸ் வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு திடீர் என்று அஹோபிலம் கிளம்பலாம் என்று தோன்றி சனிக்கிழமை காலை புறப்பட்டு, நண்பகல் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கரை சேவித்துவிட்டு, ஆழ்வார் 'கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்’ என்கிறார். அடியேனோ ஐந்து ரூபாய் கோல் தேடி ஓடி அதன் உதவியால் மாலோலனை மெதுவாக நடந்து சென்று சேவித்து, கால்ட்சேப மண்டபத்தை அடைந்து அங்கே பிரதிஷ்டைக்குத் தயாராக இருக்கும் ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவ

ஸ்ரீமத் ஆதிவண் சடகோபனின் சங்கல்பம்

ஸ்ரீமத் ஆதிவண் சடகோபனின் சங்கல்பம் நரசிம்ம அவதாரம் தனித்துவமானது. ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று குறிப்பிடுவதற்கு ஏற்றால் போல், ஒரே சமயத்தில் தன் கண்கள் மூலம் பிரகலாதனிடம் கருணையையும் ஹிரண்யகசிபுவிடம் சீற்றத்தையும் காண்பித்தார். நரசிம்ம அவதாரத்தின் இப்பகுதியை ஸ்வாமி தேசிகன் கொண்டாடுகிறார். அதுமட்டும் இல்லாமல், ஸ்வாமி தேசிகன் ஒரு படி மேலே சென்று நரசிம்மர் மற்ற மூன்று உலகங்களிலும், உண்மையான பக்தன் கூப்பிடும் போது வெளிவரத் தயாராக இன்றும் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். இந்த நரசிம்மரை நாம் அஹோபிலத்தில் ஒன்பது விதமாகத் தரிசிக்கலாம். ஸ்ரீராமானுஜருக்கு பிறகு பல ஆசாரியர்கள் ஸ்ரீ வைஷ்ணவத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். அவர்களில் ஸ்ரீ வேந்தாந்த தேசிகனுக்குத் தனி இடம் உண்டு. அவருக்குப் பின் அவர் திரு குமாரர் வரதாச்சார்யார் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கச் சரியான தலைமை அமையவில்லை. அஹோபிலத்தின் முதல் ஜீயர் 1379ல் கிடாம்பு கேசவாச்சார்யர் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாச்சார்யார் என்பவர் ஸ்ரீ நாராயணன் மீது அளவு

கண்ணன் கதைகள் - 10

 கண்ணன் கதைகள் - 10 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் உபன்யாசம் ஒன்றில் பண்டரீபுரத்தில் பாண்டுரங்கனாக அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கும் விட்டலனை விவரிக்க விவரிக்க கண்களில் கண்ணீர் வர, உடனே பண்டரீபூருக்கு உடனே செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே போக முடியாவிட்டாலும், பதினைந்து வருடங்களுக்கு பிறகு சென்றேன். விட்டலனை ‘தொட்டு’ சேவிக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகமாகியது. காரில் சென்ற போது, மாலை ஏழு மணிவரை சூரியன் பிரகாசித்து வழி காண்பித்தது. எட்டு மணிக்கு பண்டரீபுரம் வந்தடைந்த போது வெளிச்சம் சித்ரா பௌர்ணமி உபயத்தால் “கதிர் மதியம்” போலத் தொடர்ந்தது. இரவு ஒன்பது மணிக்கு கியூவில் சென்று நின்றுகொண்டோம். பண்டரீபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டும், உட்காரத் திண்ணையும் உண்டு. இன்ஸ்டண்ட் எனர்ஜிக்கு ஐந்து ரூபாய்க்கு ஆரஞ்சு கலர் புளிப்பு மிட்டாய், கூடவே பக்தர்கள் பாடும் அபங்கங்களும் போதும். ஸ்ரீ ஏகநாதர் அவர்கள் அபங்கம் ஒன்றின் பொருள் இது: “அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை நிறைந்துள

கண்ணன் கதைகள் - 9

கண்ணன் கதைகள் - 9 கண்ணன் பற்றி கூறிவிட்டு மாடுகள் பற்றி கூறவில்லை என்றால் ? இதோ சில மாடு கதைகள். நந்திகிராம் போகும் வழியில் ஒடும் பஸ்ஸிலிருந்து ஒரு படம் எடுத்தேன். கயிற்றில் கட்டப்பட்ட சின்ன பிளஸ்டிக் கார் இன்னொரு கையில் மாட்டை இணைக்கும் கயிறு. என்ன ஒரு சிம்பிள் வாழ்க்கை ! இந்த வயதில் மாடு மேய்க்கப் போக வேண்டிய நிலை என்று நமக்கு தோன்றும் ஆனால் யோகா, தியானம் என்று செலவு செய்யாமல் அவன் முகத்தில் உள்ள சந்தோஷம் இன்று நம் பிள்ளைகளிடம் இல்லை. பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சந்து பொந்து எல்லா இடங்களிலும் அவை நம்மைப் போல உலாவுகின்றன. கடைக்கு முன் நின்று சப்பாத்தி வாங்கிச் சாப்பிடுகிறது. சாலைக் குறுக்கே சென்று டிராபிக் ஜாம் செய்தால் அவற்றை ‘ஹார்ன்’ அடித்து யாரும் விரட்டுவதில்லை. சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள். உஜ்ஜைனில் ஸ்ரீராமானுஜ கூ

கண்ணன் கதைகள் - 8

 கண்ணன் கதைகள் - 8 பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது.. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார். புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார். மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் - ’ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம் உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது. விரகு, மண் சட்டி பானைகள், எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது ! கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள்.முழுவதும் ஈக்கோ ஃபிரண்டிலி! மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை. சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள். இதைத் தவிர . காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார

கண்ணன் கதைகள் - 7

 கண்ணன் கதைகள் - 7 ’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார். இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம். பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் தீர்த்தவாரி போது ’கூடியிருந்து குளிர்ந்தேலோர்’ என்பது போல பெருமாளின் தீர்த்த பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும். பெருமாளின் அவதார காலத்தில் ஸ்ரீராமாவதாரத்தில், சக்கரவர்த்தி திருமகனை சிலர் தான் பார்த்து அனுபவித்தார்கள். உதாரணம் ஸ்ரீஹனுமான், விபீஷணாழ்வார், ஏன் சூர்ப்பணகை கூடப் அதில் சேர்த்துக்கொள்ளலாம் ! ஆனால் நமக்கு அந்த கொடுப்பினை இல்லை. ஆனால் அர்ச்சாவதாரத்தில் இந்தப் பிரச்சனையே இல்லை தெருக்கோடியில் இருக்கும் பாலாஜியையோ, அல்லது மலைக்கோட்டை எக்

கண்ணன் கதைகள் - 6

 கண்ணன் கதைகள் - 6 புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்‌ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். கீழே இறங்கி வரும் போது நேற்றைய கொடியை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். பல கொடிகள் விதவித அளவில் இருக்கும். நான் சின்னதாக ஒன்றை வாங்கினேன். விலை 100/= “இதை வைத்துக்கொண்டு என்ன செய்வீங்க? வாட் இஸ் தி யூஸ் ?” என்றார் பக்கத்தில் இருந்தவர் ”அமெரிக்கா, பாரிஸ் போகும் அங்கே மொமொண்டோ என்று ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து எல்லோரிடமும் அந்தப் பொம்மையைப் பெருமையாக காண்பிக்கிறோம். இது துணி ஆனால் இதன் பின் கதை இருக்கிறது, ஜகந்நாத பெருமாள் கோயில் மீது ஒரு நாள் அதற்குச் சம

கண்ணன் கதைகள் - 5

 கண்ணன் கதைகள் - 5 துவாரகை முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். காரணம் எல்லோர் இடத்திலும் இருக்கும் கிருஷ்ணப் பக்தி. தொலைப்பேசி வந்தால் ஹலோ என்று சொல்லாமல் "ஜெய் துவாரகாதீஷ்" என்கிறார்கள். கோயிலில் இருக்கும் காவல்துறையினர் எல்லோரும் பக்தியுடன் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். எங்களுடன் வந்த ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார் அதை ஒரு காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார். கண்ணனுக்கு மரியாதை! எல்லோருக்கும் ஒரே க்யூ தான். ஆதிஷேசன் மாதிரி வளைந்து நெளிந்து போகிறது. . 250, 100, 50 என்ற சிறப்புப் பக்தி இங்கே இல்லை. சாதாரண க்யூ, அசாதாரணமான பக்தி. எங்களுடன் ஒரு காவல்துறை உயர் அதிகாரி கூட வரிசையில் தான் வந்தார் ! ஏந்த சீட்டும் இல்லாமல் நேற்று 3000 பேருக்கு மேல் குறையில்லாமல் எல்லோருக்கும் சேவை சாதித்தார் துவரகாதீஷ். ஒரு முறை இல்லை பல முறை! என்ன காரணம் என்று யோசித்தால் ஆட்சி செய்பவர்களுக்குத் தெய்வப் பக்தி இருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு கொள்கை கட்சி அங்கே இல்லை. கிருஷ்ணர் சாரி கண்ணன் காலை 5 மணிக்குச் சின்ன துண்டுடன் டிரஸ் போட ஆரம்பித்தார் 8 மணி

கண்ணன் கதைகள் - 4

 கண்ணன் கதைகள் - 4 யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள். பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள். "தஸ் ரூப்பா" "வேண்டாம்" வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் - பேச்சுக் கொடுத்தேன் "என்ன கிளாஸ்?" "ஃபர்ஸ்ட்" "ஸ்கூல் யூனிஃபார்ம்" "சுட்டி, சண்டே" படகில் இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன் "ராஜகுமாரி" - சுஜாதா தேசிகன் ஸ்ரீஜெயந்தி

கண்ணன் கதைகள் - 3

 கண்ணன் கதைகள் - 3 ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன். கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில் "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை " மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன். பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன். ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்‌ஷாவிற்கு ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப் பதில் ‘ராதே கிருஷ்ணா’ தான். ஊர் தலைவரான நந்தகோபர் மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்துச் சொல்லும் இடத்துக்குப் பக்கம் குழந்தைகளைப் பார்க்க கார்டூன் குழந்தைகள் மாதிரியே இருக்கிறார்கள். கண்களில் அவ்வளவு innocence. உற்றுப் பார்த்தால் அன்று கண்ணனுடன் விளையாடிய குழந்தைகள் போலவே இருந்தார்கள். சந்தேகம் இருந்தால் நான் எடுத்த படங்களை பார்க்கவும் - சுஜாதா தேசிகன் ஸ்ரீஜெயந்தி

கண்ணன் கதைகள் - 2

கண்ணன் கதைகள் - 2 ஈட்டில் "மிளகாழ்வான் வார்த்தை" என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார். அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை' என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், "பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார். இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான் சொல்ல வில்லையே!” உடனே மிளகாழ்வான் “அப்படி என்றால் ஏன் தானம் கொடுக்க மறுக்கிறீர்?” என்று கேட்க, அரசன் "நீர் ஸ்ரீவைஷ்ணவராகையாலே உமக்குக் கொடுக்க நான் விரும்பவில்லை "என்று மறுமொழி தருகின்றான். உடனே மிளகாழ்வான் பரமானந்தம் அடைந்து கூத்தாடுகின்றார். மேல்கோட்டையில் மிளகாழ்வான் இருக்கும் தூணைக் கண்டுபிடித்துச் சேவித்தபொழுது....பெயருக்கு ஏற்றமாதிரி மிளகு அளவில் தான் இருக்கிறார் ! ஸ்ரீரங்கம் வேணுகோபாலன் சன்னதியில் இதே போல மிளகாழ்வான் அளவுக்குக் கண்ணன் சிற்பம் ஒன்று இருக்கிறது. பார்க

கண்ணன் கதைகள் - 1

கண்ணன் வசிக்கும் இடங்களில் எனக்குக் கிடைத்த சில கதைகள் இவை. கண்ணன் கதைகள் - 1   தொட்டமளூர் ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன். மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் - குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து வருகிறான். கூப்பிட்டால் வீட்டுக்கே வந்துவிடுவான் என்று தோன்றுகிறது. எங்கள் காரை ஒரு சின்னப் பையன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு மனநலம் சரியில்லாதவன் போல் இருந்தான். சதா வாயில் எச்சில் ஒழுக, மிட்டாயைக் கடித்துக்கொண்டு, கையில் பிசுக்காக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருக்கும் கடையில் சென்று 'Good Day' பிஸ்கெட் பாக்கெட் ஒன்று வாங்கி அவனிடம் தந்தேன், ஆனால் அதை மறுத்துவிட்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு ரூபாய் பந்துதான் தனக்கு வேண்டும் என்று சொன்னான். வாங்கித் தந்

வைகுண்ட வாசல் வரை சென்று வந்தவர்!

 வைகுண்ட வாசல் வரை சென்று வந்தவர்! ஸ்ரீரங்கத்தில் உருவான ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சுமார் மூன்னூறு வருடப் பாரம்பரியம் கொண்டதாகும். ஸ்ரீவேதாந்த தேசிகரின் கொள்கைகளைப் பின்பற்றும் வடகலை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான முக்கியமான ஆச்சாரியப் பீடங்களில் இதுவும் ஒன்று. ஆன்மிகப் பணியுடன் நில்லாமல் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவில் ஊரகப்பகுதி மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் தன்னாட்சிக் கலைக்கல்லூரியையும் நடத்தி வருகின்றது . மேலும் கோசலை, அன்னதானம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளை இம்மடம் சிறப்புடன் ஆற்றிவருகின்றது. ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் பன்னிரண்டாவது பீடாதிபதியாக தற்பொழுது அருளாட்சி செய்து வருபவர் ஸ்ரீவராஹமஹாதேசிகன் ஸ்வாமிகள் ஆவார். இப்பீடத்தின் எட்டாவது தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் தஞ்சை மாவட்டம் தென்பரை என்ற அக்ராஹாரத்தில் 1886 ஆம் வருடம் அவதரித்த ஸ்ரீஉப.வே . வேங்கடராகவாச்சாரியர் ஸ்வாமிகளாவர். குறைவில்லாத கல்வி ஞானம் பெற்றதுடன், பல்வேறு சமஸ்தானங்களிடமிருந்து விருதுகளும் சன்மானங்களும் கிடைத்த பொழுதிலும் தினந்தோறும் உஞ்சவிருத்தி செய்து எளி