கண்ணன் கதைகள் - 10
30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் உபன்யாசம் ஒன்றில் பண்டரீபுரத்தில் பாண்டுரங்கனாக அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கும் விட்டலனை விவரிக்க விவரிக்க கண்களில் கண்ணீர் வர, உடனே பண்டரீபூருக்கு உடனே செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே போக முடியாவிட்டாலும், பதினைந்து வருடங்களுக்கு பிறகு சென்றேன்.
விட்டலனை ‘தொட்டு’ சேவிக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகமாகியது. காரில் சென்ற போது, மாலை ஏழு மணிவரை சூரியன் பிரகாசித்து வழி காண்பித்தது. எட்டு மணிக்கு பண்டரீபுரம் வந்தடைந்த போது வெளிச்சம் சித்ரா பௌர்ணமி உபயத்தால் “கதிர் மதியம்” போலத் தொடர்ந்தது.
இரவு ஒன்பது மணிக்கு கியூவில் சென்று நின்றுகொண்டோம். பண்டரீபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டும், உட்காரத் திண்ணையும் உண்டு.
இன்ஸ்டண்ட் எனர்ஜிக்கு ஐந்து ரூபாய்க்கு ஆரஞ்சு கலர் புளிப்பு மிட்டாய், கூடவே பக்தர்கள் பாடும் அபங்கங்களும் போதும்.
ஸ்ரீ ஏகநாதர் அவர்கள் அபங்கம் ஒன்றின் பொருள் இது:
“அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை நிறைந்துள்ளவனை நான் கண்டது ஒரு செங்கல் மீது ! பண்டரீயில் ! வேதங்களும் புராணங்களும் யாரைப் புகழ்ந்து பாடுகின்றனவே அவன் புண்டலீகனின் பின்புறம் காட்சியளிக்கிறான். யாரை அறிய முடியவில்லை என்று ஸ்ருதிகள் செல்கின்றனவோ அவன் எளிமையாக சந்திரபாகா நதிக்கரையில் விட்டலனாக நிற்கிறான்”
’விட்’ என்றால் மராத்திய மொழியில் செங்கல் என்று பொருள். ’விட்டலன்’ பெயர் காரணம் இது தான்.
வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால், அங்கே கிடைக்கும் சுகங்களுக்கு அடிமையாகி மீண்டும் தாய்நாடு வர யோசிக்கும் இந்தக் காலத்தில் வைகுண்டத்தைவிட்டு நமக்காகச் செங்கல் மீது 28 யுகங்களாக இடுப்பில் கைவைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கும் விட்டலன் தான் எத்தனை எளிமையானவன் ! நாம் தான் சென்று சேவிக்க யோசிக்கிறோம்.
அவனுடைய ஒரே லட்சியம், குறிக்கோள் நம்மைக் காக்க வேண்டும் என்பது தான். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி பிடித்ததில் ஆச்சரியம் என்ன இருக்கு ? இன்று ராட்சத கிரேன் அந்த வேலையை செய்துவிடும். அங்கே பார்க்க வேண்டியது “குன்றம் ஏந்திக் குளிர் மழை ’காத்தவன்’” தன்னை நம்பி இருப்பவர்களைக் கைவிடாமல் காத்தான் என்பது தான் முக்கியம்.
இன்னும் சில அடிகளில் விட்டலனை பார்க்கப் போகிறோம் என்று கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது. பலர் ஏற்கனவே வந்தவர்கள் என்று தெரிகிறது இருந்தாலும் அவர்கள் முகத்தில் முதல் முறை பார்க்கும் அதே எதிர்பார்ப்பு பூரிப்பு தெரிகிறது!
நாமதேவரின் ஒரு அபங்கம் “நவ்ஹே மாஜே காஹீ நேணோ துஜவிண” என்பதற்கு அர்த்தம் “எனக்கு உன்னைத்தவிர வேறுயாரையும் தெரியாது. நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உன் திருப்பாதங்களை எனக்குக் காண்பித்து அருள்வாயாக” இதையே ஆண்டாள் “எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்கிறாள். வடக்கு தெற்கு, கிருஷ்ண பக்தி ஒன்று தான்.
எத்தனையோ மகான்கள், என் ஆசாரியன் ஸ்ரீமத் அழகியசிங்கர் வரை தொட்டு சேவித்த பாதத்தை நாமும் பற்ற போகிறோம் என்ற நினைப்பே ஆனந்தத்தை கொடுக்கிறது.
”சலே சலே ..” என்று கூட்டம் பாண்டுரங்கனிடம் நம்மை அழைத்துச் செல்லுகிறது. இரண்டு, மூன்று முறை விட்டலனின் பாதங்களை தடவிப் பற்றினேன். அங்கே இருந்த அர்ச்சகர், ”ஒன்லி ஒன் டச்” என்று திடீர் ரூல்ஸை அமல்படுத்தினார்!
வெளியே வந்த போது, அனல் அடிக்கும் வெய்யிலிலும் ஓர் அணில் பெருமாள் பிரசாதமான பொரியை சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. கொடுத்து வைத்த ஆணில் !
இவ்வளவு தூரம் வந்து ஆழ்வார் பாடல்களை பாடி பாண்டுரங்கனை சேவிக்கவில்லையே என்று மீண்டும் இரவு கோயிலுக்கு சென்றேன்.
இந்த முறை திருப்பவை சேவித்துக்கொண்டு, “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்” என்ற பாசுரம் சொல்லி அவன் பாதங்களை பற்றிய போது, ஞானேஷ்வர் ”விட்டலனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி கொப்பளிக்கிறது” என்கிறார். துக்காராமோ “அவன் உருவமே எனக்கு மகிழ்ச்சி” என்கிறார்.
அந்த மகிழ்ச்சியை ஒரு முறை அனுபவித்துவிடுங்கள்.
- சுஜாதா தேசிகன்
ஸ்ரீஜெயந்தி
Comments
Post a Comment