ஸ்ரீமத் ஆதிவண் சடகோபனின் சங்கல்பம்
நரசிம்ம அவதாரம் தனித்துவமானது. ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று குறிப்பிடுவதற்கு ஏற்றால் போல், ஒரே சமயத்தில் தன் கண்கள் மூலம் பிரகலாதனிடம் கருணையையும் ஹிரண்யகசிபுவிடம் சீற்றத்தையும் காண்பித்தார்.
நரசிம்ம அவதாரத்தின் இப்பகுதியை ஸ்வாமி தேசிகன் கொண்டாடுகிறார். அதுமட்டும் இல்லாமல், ஸ்வாமி தேசிகன் ஒரு படி மேலே சென்று நரசிம்மர் மற்ற மூன்று உலகங்களிலும், உண்மையான பக்தன் கூப்பிடும் போது வெளிவரத் தயாராக இன்றும் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த நரசிம்மரை நாம் அஹோபிலத்தில் ஒன்பது விதமாகத் தரிசிக்கலாம்.
ஸ்ரீராமானுஜருக்கு பிறகு பல ஆசாரியர்கள் ஸ்ரீ வைஷ்ணவத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். அவர்களில் ஸ்ரீ வேந்தாந்த தேசிகனுக்குத் தனி இடம் உண்டு. அவருக்குப் பின் அவர் திரு குமாரர் வரதாச்சார்யார் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கச் சரியான தலைமை அமையவில்லை.
அஹோபிலத்தின் முதல் ஜீயர்
1379ல் கிடாம்பு கேசவாச்சார்யர் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாச்சார்யார் என்பவர் ஸ்ரீ நாராயணன் மீது அளவு கடந்த பக்தியுடன் சாஸ்திரங்கள் நன்று கற்று, விசயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் ராஜ சபையில் விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டிப் புகழ்பெற்றார். அவருடைய 20வது வயதில் நரசிம்மர் கனவில் தோன்றி அஹோபிலத்துக்கு வா என்று அழைக்க அங்கே சென்ற போது அவரை நரசிம்மர் ஒரு வயதான யோகியின் தோற்றத்தில் வரவேற்று, வேதங்களுடன் நரசிம்ம மந்திரத்தை அவருக்கு உபதேசித்து அங்கு உள்ள ஸ்ரீராமானுஜர் சன்னதியில் திரிதண்டத்தை வழங்கி சந்நியாசத் தர்மத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ’சடகோப யதி’ என்ற திருநாமத்தையும் சூட்டினார். வயதான யோகி தான் நரசிம்மர் என்று உணர்ந்த ஸ்ரீநிவாச்சார், ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நிறுத்த நிர்மாணித்தது தான் அஹோபில மடம்.
அஹோபில மடத்தின் வரலாறுகள் அஹோபலம் என்ற ஸ்தலத்துடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. ஸ்வாமி தேசிகன் கூறுவது போல, இன்றும் நரசிம்மர் தனது உண்மையான பக்தர்களை எவ்வாறு காப்பாற்ற வருகிறார் என்பது பற்றிய சில அஹோபில மடத்தின் ஜீயர்களில் பலரின் சுவாரஸ்யமான கதைகள் நமக்குக் கிடைக்கிறது.
அவற்றைப் பார்க்கும் முன், சங்கல்பம் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். எளிய தமிழில் தீர்மானம், உறுதி, முடிவு போன்றவை அதனுடன் ஒத்துப் போகிறது.
“தெய்வ சங்கல்பம் இப்படி இருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்?” என்று நாம் ஒன்று நினைக்க நடப்பது வேறாக இருக்கும்போது அடிக்கடி நாம் கூறும் வார்த்தை. இதையே ”Man proposes, God disposes” என்று ஸ்டைலாகச் சொல்லுவதும் உண்டு.
இந்த உலகம் இயங்குவது, இன்று மழை பெய்வது, நான் இதை எழுதுவது, நீங்கள் இதைப் படிப்பது என்று எல்லாவற்றையும் ‘தெய்வ சங்கல்பம்’ என்பதில் அடக்கிவிடலாம். பெருமாள் ஏற்கனவே ஒரு ப்ரோகிராம் செய்து வைத்துவிட்டார் இந்த உலகத்தில் ‘உண்டியே உடையே என உகந்தோடுவது’ எல்லாம் அவன் எழுதிய ப்ரோகிராம் தான்.
ஸ்ரீ ராமானுஜர் மேல்நாட்டில் (மேல்கோட்டை) எழுந்தருளியபோது அவருடைய கனவில் ஒரு மரத்தடியில் உள்ள புற்றில் தான் இருப்பதாக்கப் பெருமாள் கூற மறுநாள் அந்த இடத்தைத் தேடிச் சென்றார். அங்கே ஒரு புற்று தென்பட அதன் மீது பாலால் திருமஞ்சனம் செய்தபோது
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் கனவில்
மிக கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிக கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு
என்று இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் கண்ட கனவு எம்பெருமானார் மூலம் பலித்தது!
புற்றுக்குள் ‘திரு நாராயணனை’ தம் திருக்கரங்களாலேயே கண்டெடுத்து திருவாராதனம் செய்து இன்று மேல்கோட்டை என்ற திருநாராயணபுர திவ்ய தேசமே அதற்கு அத்தாட்சி.
அஹோபில மடத்தின் 33ஆம் பட்டம் ஜீயர் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு தருகிறேன்.
ஒரு பிற்பகல் அஹோபில ஷேத்திரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக நடந்து மைசூர் சென்று கொண்டிருந்தார். அந்திப் பொழுது வர, ஓர் ஓடை அருகே ஸ்ரீ மாலோலனுக்கு பூஜை செய்ய முடிவு செய்தார் ஜீயர். அச்சமயத்தில் அங்கே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. மடத்தின் சிஷ்யர்கள் வேகமாக ஓடி வந்தார்கள். அவர்கள் முகத்தில் பயம் தென்பட்டது.
நடுக்கத்துடன் “கொள்ளையர்கள் நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள்” என்றார்கள்.
ஜீயர் கலங்கவில்லை. கொள்ளைக் கூட்டத்தின் தலைவனிடம் “எங்களிடம் இருப்பது எல்லாம் பெருமாளின் உடமை. நீங்கள் ஆசைப்பட்டதை எல்லாம் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பெருமாளுக்கு பூஜை நடந்த பிறகு எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் அதற்கு ஒத்துக்கொண்டான்.
மாலோலனுக்கு பூஜைகள் நடைபெற்றது. வழக்கமாக நரசிம்மருக்கு பானகம் கண்டருளச் செய்வார்கள். ஆனால் அன்று ஜீயர் சர்க்கரைப் பொங்கல் செய்யச் சொல்லி அதைக் கண்டருளச் செய்து, மங்கல ஆரத்தியை மூன்று முறை செய்தார். மூன்றாம் முறை செய்யும் போது கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் ஜீயர் திருவடிகளில் விழுந்து “ஸ்வாமி, எங்களைக் காப்பாற்றுங்கள். சிங்கக் கூட்டம் எங்களைத் தாக்குகிறது” என்றான். ஜீயர் சிரித்துக்கொண்டு இது மாலோலனின் செயல் என்று புரிந்துகொண்டு மாலோனிடம் பிராத்திக்க, சிங்கங்கள் மறைந்தது. கொள்ளையர்கள் ஜீயரையும் சிஷ்யர்களையும் பாதுகாப்பாகக் காட்டைக் கடக்க உதவி செய்தார்கள்.
2013ல் முதல் முறை அஹோபிலம் சென்றிருந்தேன். எல்லாம் புதிதாக இருந்தது. மலை, காடு, பாறை, ஓடை, நீர்விழுச்சிகளுக்கு நடுவில் நவ நரசிம்மர்களை சேவித்தேன். போகும் வழியில் ஒரு பாழடைந்த மண்டபம் ஒன்று இருந்தது. அந்த மண்டபம் ஏதோ ஒரு வகையில் என்னை ஈர்த்தது. அந்த மண்டபத்தினுள் சற்று சென்று நில நிமிடங்கள் இருந்துவிட்டு வந்தேன்.
பிறகு 2017ல் ஆம் ஆண்டு மீண்டும் அஹோபிலம் சென்ற போது மீண்டும் அந்த மண்டபத்தினுள் சென்று சற்று நேரம் இருந்தேன். அந்த மண்டபம் என்னவாக இருக்கும் என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. பிறகு அதைக் குறித்து ஆராய்ந்த போது சில விவரங்கள் கிட்டியது. என் பயண அனுபவத்தில் அதைக் குறித்து இவ்வாறு எழுதியிருந்தேன்.
………போகும் பாதையில், அடர்ந்த மரம், செடிகள், கூழாங்கற்களுடன் ரம்மியமாக ஓடும் நீரோடைகள், பறவைகளின் ஒலி, மழைச் சாரலுடன் நடந்து செல்லும் போது வழியில் 116 தூண்கள் கொண்ட காலட்சேப மண்டபம் செடிகளுடன் காட்சி அளிக்கிறது.
விஜயநகர அரசர்கள், அல்லது அவர்களுக்கு முன் கட்டிய 11-12 ஆம் நூற்றாண்டு மண்டபம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மண்டபத்தில் தான் முதலாம் அழகிய சிங்கர் பல காலட்சேபங்களை நிகழ்த்தினார் என்ற பல நூறு ஆண்டுகள் வரலாற்றைப் பத்து அடி நடந்து கடந்து சென்றோம்……
இன்றும் நம் ஆசாரியர்களுக்கு பெருமாள் அவன் சங்கல்பத்தால் சிலவற்றைக் காண்பித்துக்கொடுக்கிறான். ஒரு வாரத்துக்கு முன் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஒரு காணொளி வந்தது. இந்த வருடம் சாதுர்மாஸ்யத்துக்கு 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கிறார். அங்கே அந்த மண்டபத்தில் ஸ்ரீபாஷ்ய சதஸ் ஏற்பாடு செய்தது பற்றி விவரித்திருந்தார். அந்தக் காணொளியில் அவர் கூறியவற்றை எழுத்து வடிவில் இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
திடீர் என்று ஒரு நாளைக்கு உள்ளே என்ன தான் இருக்கிறது போய் பார்ப்போமே என்று உள்ளே வந்தோம். பெருமாளுடைய சங்கல்பம் இல்லை என்றால் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது தீர்மானம். உள்ளே வந்தவுடனேயே நம்மை அறியாமல் ஒரு வைபரேஷன். என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த விக்கிரகம் வைத்திருக்கும் இடத்தில் திரை போட்டிருக்கும் இடத்திலிருந்து மேலே பார்த்தால் அந்த மலையில் அப்படியே ஓர் ஆதிசேஷன் அதன் கீழே ஸ்ரீ ஆதிவண் சடகோப ஸ்வாமி உட்கார்ந்து காலட்சேபம் செய்வது போலச் சேவை. சேவை ஆன பிறகு இப்படி இருக்கிறது என்ன பண்ணலாம் என்று நினைக்கும் போது ”ஏன் கவலைப் படுகிற நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று பெருமாள் நியமனம். இது உண்மை. ஏத்துகிறவா ஏத்துக்கலாம். ஆனால் அப்படி நடந்தது. சரி என்னடா பண்றது மடத்திலே எவ்வளவோ காரியங்கள் பண்ணவேண்டியதாக இறுக்கு. எப்படியாவது ஒரு வருஷமாவது சதஸ் நடத்தவேண்டும் என்று எண்ணம் ஆப்போ தொனித்து. ஆசாரியனுடைய அனுக்ரஹம் இல்லை என்றால் எம்பெருமானுடைய அனுக்ரஹம் கிடைக்காது. ஆசாரியனுடைய அநுகிஹத்தாலே ஸ்ரீ ஆதிவண் சடகோப ஸ்வாமியுடைய அனுக்ரஹம் தான் இன்று இப்படி ( கால்ட்சேபம்) நடக்கிறது. அவன் சங்கல்பத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. இப்படி நடக்குமா என்று நினைத்தே பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று இன்று நடந்திருக்கிறது. முந்தாநாள் கூட கேட்டா, அப்போது கூட யாருடா வரபோகிறா என்றேன். நேற்று சாயங்காலம் தோணிண்டே இருந்தது அப்போது சோகத்தூர் ராமானுஜாசாரியாரியாரும் இதைப் பற்றிக் கேட்க, எல்லோருக்கும் தோன்றிற்று, இந்த மண்டபத்தில் எல்லா சதஸும் நடக்கவேண்டும், கீதா பாஷ்யம், ரஹஸ்யத்ரயஸாரம், எல்லாம் நடக்க வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
முதல் அஹோபில ஜீயரான ஸ்ரீமத் ஆதிவண் சடகோபன் காலட்சேபம் செய்த அதே இடத்தில் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் அதை இப்போது தொடர்வது அவன் சங்கல்பம். இதைப் குறித்து அடியேன் எழுதுவதும், அதை நீங்கள் படிப்பதும் அவன் சங்கல்பமே!
500 வருடங்கள் கழித்து அதே மண்டபத்தில் மீண்டும்... |
- சுஜாதா தேசிகன்
17.9.2023
படங்கள் : ஓவியம் திரு கேஷவ்,
46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் படங்கள் வீடியொ நன்றி Prasad Ahobilam,
ஸ்ரீ ஆதீவன் சடகோப ஜீயர் படங்கள் Ahobilam - The Sacred Abode of the Nava Narasimha book இவர்களுக்கு என் நன்றிகள்.
2013, 2017 ( படங்கள் அடியேன் எடுத்தது )
மிகவும அருமையான நல்ல பதிவு. நன்றி
ReplyDeleteExcellent
ReplyDelete