Skip to main content

வைகுண்ட வாசல் வரை சென்று வந்தவர்!

 வைகுண்ட வாசல் வரை சென்று வந்தவர்!



ஸ்ரீரங்கத்தில் உருவான ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சுமார் மூன்னூறு வருடப் பாரம்பரியம் கொண்டதாகும். ஸ்ரீவேதாந்த தேசிகரின் கொள்கைகளைப் பின்பற்றும் வடகலை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான முக்கியமான ஆச்சாரியப் பீடங்களில் இதுவும் ஒன்று.

ஆன்மிகப் பணியுடன் நில்லாமல் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவில் ஊரகப்பகுதி மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் தன்னாட்சிக் கலைக்கல்லூரியையும் நடத்தி வருகின்றது . மேலும் கோசலை, அன்னதானம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளை இம்மடம் சிறப்புடன் ஆற்றிவருகின்றது. ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் பன்னிரண்டாவது பீடாதிபதியாக தற்பொழுது அருளாட்சி செய்து வருபவர் ஸ்ரீவராஹமஹாதேசிகன் ஸ்வாமிகள் ஆவார்.

இப்பீடத்தின் எட்டாவது தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் தஞ்சை மாவட்டம் தென்பரை என்ற அக்ராஹாரத்தில் 1886 ஆம் வருடம் அவதரித்த ஸ்ரீஉப.வே . வேங்கடராகவாச்சாரியர் ஸ்வாமிகளாவர். குறைவில்லாத கல்வி ஞானம் பெற்றதுடன், பல்வேறு சமஸ்தானங்களிடமிருந்து விருதுகளும் சன்மானங்களும் கிடைத்த பொழுதிலும் தினந்தோறும் உஞ்சவிருத்தி செய்து எளிமையான ஆன்மிக வாழ்வை ந த்தியவர் இம்மஹான். சாந்தஸ்வரூபியாகிய இவர், நாள்தோறும் தம்மை நாடிவரும் சிஷ்யகோடிகளுக்கு எளிய புராண இதிகாசக்கதைகளைக் கூறி ஆசியளித்து வழிநடத்துவது வழக்கம்.

இவரது காலத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் அருமை பெருமைகள் வெளி உலகிற்க்குத் தெரியத் தொடங்கியது. பின்னர் ஒன்பதாவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற ஸ்ரீ உபவே கண்ணன் ஸ்வாமிகளின் காலத்தில் இம்மடம் விசுவரூபம் எடுத்தது .

ஸ்ரீமத்தென்பரை ஆண்டவன் ஸ்வாமிகளுக்கு அடுத்ததாக ஸ்ரீஉப.வே.கண்ணன் ஸ்வாமிகளை ஆச்சாரியபீடத்தில் அமர்த்துகின்ற நேரத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயம் இவ்விரண்டு மஹான்களின் பெருமையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துவிட்டது.

1963ஆம் வருடம் ஸ்ரீமத்தென்பரை ஆண்டவனின் திருமேனி தளர்ந்த பொழுது அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஸ்வாமிகள் முக்தியடைந்து விட்டதாகவே அறிவித்துவிட்டார். வெளியூரிலிருந்த கண்ணன் ஸ்வாமிகளுக்குத் தந்தி மூலம் தகவல் தெறிவிக்கப்பட்டு, ஆசிரமத்திலுள்ள சிஷ்யர்கள் அனைவரும் அவரது வருகைக்காகக் கவலையுடன் காத்திருந்தனர்.

கண்ணன் ஸ்வாமிகள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் ஸ்ரீமத்தென்பரை ஆண்டவனின் திருமேனியில் அசைவு தெரிந்தது. லேசாகக் கண்களைத் திறந்த ஸ்வாமிகள், 'கண்ணன் வந்தாச்சா?' என்று கேட்டு அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார் .

பின்னர் எழுந்து அமர்ந்து கொண்ட ஸ்ரீமத் தென்பரை ஆண்டவன் ஸ்வாமிகள், "வைகுண்டலோகத்துக்கு முன்னால் இருக்கின்ற விராஜா நதிக்கரை வரைக்கும் போய்விட்டேன். நீ போய்க் கண்ணனைப் பீடத்தில் அவர்த்திவிட்டு வா என்று பெருமாள் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்!" என்று கூறி ஆச்சரியப்படுத்தினர்.

உடனடியாக ஸ்ரீ உப.வே. கண்ணன் ஸ்வாமிகள் சந்நியாசம் ஏற்பதற்கான சடங்குகள் தொடங்கின. மறுநாள் (1963 சுபகிருது பங்குனி மதம் 23ம் தேதி) ஸ்ரீவேதாந்தராமாநுஜ மஹாதேசிகன் என்ற திருப்பெயருடன் கண்ணன் ஸ்வாமிகள் பீடாதிபதியானார். பிற்காலத்தில் திருக்குடந்தை ஆண்டவன் என்றும் அழைக்கப்பட்ட ஸ்ரீ உப.வே. கண்ணன் ஸ்வாமிகள் பீடமேற்றதும் நடைபெற்ற ததீயாராதனை என்ற விருந்து முடிந்தவுடன், "எல்லாம் ஆச்சா?" என்று கேட்டபடி ஸ்ரீமத் தென்பரை ஆண்டவன் முக்தியடைந்துவிட்டார்.

தம்முடைய சிஷ்யரைப் பீடத்தில் அமர்த்துவதற்காக வைகுண்ட உலகத்தின் வாசல் வரை சென்று மீண்டும் எழுந்தருளிய ஸ்ரீமத்தென்பரை ஆண்டவன் ஸ்ரீரெங்கநாத மஹாதேசிகனுடைய அவதரித்த திருநாள் 3.9.2023 (ஆவணி 17ஆம் தேதி) அன்று அமைகின்றது.

பிகு: அடியேனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வந்த பத்திரிக்கை செய்தி. இது எந்த பத்திரிக்கை, எழுதியது யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவர்களுக்கு நன்றி.

- சுஜாதா தேசிகன்
3.9.2023

Comments

  1. அடியேனுக்கும் இந்த நிகழ்ச்சி சிறு வயதில் பெரியவர்களால் சொல்லப்பட்டது. 🙏

    ReplyDelete

Post a Comment