பக்தியினால் தமிழ் அர்ச்சனை சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை திருக்குடந்தை ஆராவமுதன் சந்நிதியில் சேவித்துக்கொண்டு இருந்த போது திடீர் என்று சுனாமி போல் ஒரு கூட்டம் வந்து, சில நிமிடங்களில் முழு சந்நிதியையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். முக ஜாடை நேபாளம் என்று காட்டிக்கொடுத்தது. கோயிலில் இருந்தவர்கள் “பேசாமல் இருங்க” “அங்கே தள்ளி போங்க” ”இப்படி வாங்க” போன்ற எதையும் சட்டை செய்யாமல் மனம் உருகி பெருமாளைச் சேவிப்பதே தங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். அந்தக் குழுவில் நடக்க கூட முடியாத வயதான சில முதியவர்களும், மூதாட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு பெருமாளைக் கண்டதில் பரவசத்தைக் கண முடிந்தது. கோயிலுக்கு வெளியே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன் ”நாங்கள் நேபாளத்திலிருந்து வருகிறோம். ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்கள் சேவிக்க வந்துள்ளோம்” என்றார்கள். ”சக்கரபாணி கோயில் எப்படிப் போக வேண்டும்?” என்று கேட்டுவிட்டு காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து சென்றார்கள். இந்த மாதிரி கூட்ட அலையைப் பார்க்கும் போது நாம் பொதுவாக ‘கோவிந்தா’ கூட்டம் என்று எண்ணவும், எழுதவும் செய்கிறோம். பக்தியில் அவர்கள் சற்று தாழ