Skip to main content

கண்ணன் கதைகள் - 1

கண்ணன் காலடிப் பட்ட இடங்களுக்கு சென்ற போது எனக்குக் கிடைத்த அனுவங்களை கூறும் கதைகள். 

கண்ணன் கதைகள்  - 1 

தொட்டமளூர்



ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன். 

மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் - குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து வருகிறான். கூப்பிட்டால் வீட்டுக்கே வந்துவிடுவான் என்று தோன்றுகிறது.

எங்கள் காரை ஒரு சின்னப் பையன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு மனநலம் சரியில்லாதவன் போல் இருந்தான். சதா வாயில் எச்சில் ஒழுக, மிட்டாயைக் கடித்துக்கொண்டு, கையில் பிசுக்காக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருக்கும் கடையில் சென்று 'Good Day' பிஸ்கெட் பாக்கெட் ஒன்று வாங்கி அவனிடம் தந்தேன், ஆனால் அதை மறுத்துவிட்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு ரூபாய் பந்துதான் தனக்கு வேண்டும் என்று சொன்னான். வாங்கித் தந்தேன். குழந்தை.

பிறகு ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று, திரும்பி வரும் வழியில் மளூர் கண்ணனை மீண்டும் தரிசித்துவிட்டு, வெளியில் வந்தபோது, மதியம் பார்த்த அதே பையன், இப்போது எங்களைப் பார்த்துச் சிரித்தான். நாங்கள் காரில் புறப்பட்ட போது எங்கள் கார் பின்னாலேயே கொஞ்சம் தூரம் ஓடிவந்தான். கண்ணனாக இருப்பானோ? என்று தோன்றியது. 

- சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி

Comments