Skip to main content

வயலழகிய சிங்கர்

வயலழகிய சிங்கர் 


பெருமாள் பல அவதாரங்கள் செய்கிறார். ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்கு ஏதாவது தொல்லைகள் நேர்கிறது. கண்ணனுக்கு கம்சன்; ராமருக்கு இராவணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கொஞ்சம் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் நாம் ஊட்டி கொடைக்கானல் செல்வது போல, பெருமாள் தேர்ந்தெடுக்கும் இடம் பெரியாழ்வாரின் மனம். அங்கே அவன் கவலை இல்லாமல் பத்திரமாக இருக்கலாம். ஆழ்வார் யசோதை போல பார்த்துக்கொள்வார். அதனால் தான் ஆழ்வாருக்கு ’விட்டு சித்தன்’ என்றே திருநாமம். 


அர்ச்சையில் பெருமாள், தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே கூடாரம் அமைத்து முகாமிட்டுத் தங்கிவிடுவார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களின் மங்களாசாசனத்தால் தான் அக்கூடாரங்கள் திவ்ய தேசங்களாக மாறுகிறது. 


சக்கரவர்த்தி திருமகனின் பட்டாபிஷேகத்தின் போது தான் ஆராதித்த பெருமாளையும் விமானத்தையும் விபீஷணனுக்குப் பரிசாகக் கொடுத்தார். விபீஷணன் தலையில் சுமந்துகொண்டு, இலங்கைக்கு செல்லும் வழியில் திருவரங்கத்தின் அழகில் மயங்கி கீழே இறங்கி, காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்து, விபீஷணனுக்காக ‘தென்திசை இலங்கை நோக்கி’ தன் திருப்பாதங்களை நீட்டிப் படுத்துக்கொண்டுவிட்டார். 

காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளும் அரங்கம் அமைத்து அதற்கு இடையில் முகாமிட்டுப் பின் ஆழ்வார்கள் எல்லோரும் பாடிய பின் அது ’கோயில்’ ஆகியது. முக்கூர் அழகிய சிங்கர் கட்டிய கோபுரத்தின் மீது ஏறிப் பார்த்தால் காவிரி, கொள்ளிடம் பெருமாளுக்கு மாலை போல அமைந்திருப்பதை காணலாம். கோபுரத்தின் மீது ஏற முடியாதவர்கள் கூகிள் மேப்பில் பார்க்கலாம். 


அதே போலத் திருவரங்கத்தில் காடுகளுக்கு நடுவில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ’காட்டழகிய சிங்கராக’ வீற்றிருக்கிறார். இன்று அழகிய சிங்கர் இருக்கிறார் ஆனால் அதைச் சுற்றி அழகிய காடுகள் தான் இல்லை. குலசேகர ஆழ்வார் ‘திருவரங்கப் பெருநகருள் தென்னீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்’ "கருமணியான கோமளம்" மட்டுமே இருக்கிறது. தண்ணீர் பல கிலோமீட்டர் முன்பே நின்றுவிட்டது. அதே போல  ’வண்டு இனம் முரலும் சோலை’ ஆழ்வார் பார்த்த திருவரங்கத்தில் வண்டிகளும், வீடுகளும் தான் இருக்கிறது. 


ஆழ்வார்கள் வர்ணித்தது போன்ற ஒரு கோயில் எங்காவது உள்ளதா என்று ஏங்கியது உண்டு. அப்படி ஒரு கோயிலைச் சமீபத்தில் கண்டு அனுபவித்தேன். 
ஆளவந்தார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஆளவந்தார் குறித்து நம் பூர்வர்கள் கூறிய சில விஷயங்களை எழுதியிருந்தேன். சில நாள் கழித்து காலை ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. தொடர்புகொண்டவர் திப்பசந்திராவிலிருந்து PCP ஹரன். நீங்கள் தான் ஆளவந்தார் குறித்து எழுதியதா ? என்று விசாரித்துவிட்டு, உங்களிடம் ஸ்ரீ உ.வே. ‘பட்டண்ணா’ ஸ்வாமிகள் பேச விருப்பப்படுகிறார். ஸ்வாமிகள், ஸ்ரீ.உ.வே வேளுக்குடி வரதாசாரியார் ( இவருடைய சித்தப்பா ) அவரிடமும், ஶ்ரீ உத்தமூர் வீரராகவாச்சாரியார் மற்றும் பல பெரியோர்களிடம் கற்றவர் என்று சிறு குறிப்பும் தந்தார். 

அடியேனே பேசுகிறேன் என்று பயந்துகொண்டு ஸ்வாமிகளை அழைத்தேன். மறுமுனையில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ என்று ஒலித்த குரலுக்கு பின் அவர் பேச ஆரம்பித்த போது, நெடுநாள் பரிச்சயம் போன்ற எண்ணம் உடனே ஏற்பட்டுவிட்டது. மைசூர் போகும் வழியில் பெலகோலாவில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயில் ஒன்று அமைத்து அங்கே கைங்கரியம் செய்து வருகிறோம். நிச்சயம் பெருமாளைச் சேவிக்க வர வேண்டும் என்றார். சென்றேன். 


ஆழ்வார்களுக்கு பெருமாளின் கல்யாண குனங்களின் மீது எவ்வளவு ஈடுபாடோ அதே போல் ‘வயல் சூழ்’ என்று மங்களாசாசனம் செய்வதிலும். ‘செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்’ ‘சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்’ ‘நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே’ ’வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை’ என்று இதில் முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு அனுபவித்திருக்கிறார்கள். அங்கே சென்ற போது, ஆழ்வார்கள் கூறிய அதே ’வயல் சூழ்’ சூழ்நிலையில் அழகிய கோயில் ஒன்று தென்பட்டது. காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் போல இவர் ‘வயலழகிய அழகியசிங்கர்’ என்று பார்த்தவுடன் தோன்றியது. 


உள்ளே சென்ற போது, காவிரி முதல் தீர்த்தமாக சின்ன ஓடையாக ஓட, சுற்றி பறவைகள் கீச்கீச் என்று பேசிக்கொண்டு இருக்க, பசுமையான வெள்ளை செண்பகப் பூ, மாதுளை, மல்லிகை என்று பெரியாழ்வார் தோட்டம் போல காட்சி கொடுத்தது. செடிகளும் மரங்களும் சூழ்ந்த ‘fantasy’ இடத்துக்கு நடுவில் பட்டண்ணா ஸ்வாமியின் திருமாளிகை போளிக்கு உள்ளே இருக்கும் பூர்ணம் போல பரிபூரணமாக இருந்தது. அவருடைய திருமாளிகையின் உள்ளே ஓட்டிலிருந்து சூரிய ஒளி எட்டிப் பார்க்க, ரெட்டாக்ஸைட் தரை அவர் பேச்சு போலவே வழவழப்பாக இருந்தது. சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்த போது ”நீங்கள் இருக்கும் இடத்தை பார்க்கும் போது இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது !” என்றேன். 


கோயிலுக்கு அழைத்துக்கொண்டு சென்றார். உள்ளே பார்த்த போது நரசிம்மர் ”மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கமாக’ பிரம்மாண்டமாக காட்சி கொடுத்தார். ஐந்து வயதில் அடியேன் நரசிம்மர் படம் ஒன்றை வைத்துத் தான் ‘பெருமாளுக்கு’ செய்வேன். அப்போது நரசிம்மரைப் பார்த்தால் பயம் இல்லை, ஆனால் பெரியவனான பிறகு பயம் சேர்ந்துகொண்டது! பயத்தைப் போக்கிக்கொள்ள முதலில் நரசிம்மர் மடியில் கருணையின் வடிவாக இருக்கும் பிராட்டியைச் சேவித்துவிட்டு நரசிம்மரைத் தரிசித்தேன். இத் தளத்தின் நரசிம்மரைப் படத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரில் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. 


இந்த பிரமிப்பு அடங்குவதற்குள் எதிரே திருவடியாம் ஆஞ்சநேயர் சந்நிதிக்குச் சென்ற போது நாமக்கல் ஆஞ்சநேயர் போலக் காட்சி கொடுத்தார். அருகில் சென்று அவரை தரிசித்துவிட்டு வரும் வழியில் ஸ்வாமிகள் இந்தக் கோயில் எப்படி உருவானது என்று விவரித்தார். அது கேட்க மேலும் பிரமிப்பாக இருந்தது. 

அவர் சொன்னதை இங்கே தருகிறேன். 


ஒரு வேத பாட சாலை அமைக்கலாம் என்று எண்ணியிருந்த சமயம், ஒருநாள், ஈரோட்டிலிருந்து தந்தி ஒன்று வந்தது 

“Perumal arriving by Mayiladuthurai–Mysore Express. You can take delivery from Mysore station” என்று அதற்கு உண்டான ரசீது எல்லாம் அனுப்பியிருந்தார்கள். யார் என்று தெரியவில்லை. சரி பெருமாளை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வரலாம் என்று சென்றேன். ஆனால் அங்கே சென்ற போது தான் அவர் ‘பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்டு அமரர்க்கு அரிய ஆதிபிரான்’ என்று கூறும் படி மிகப் பெரியவராக மயிலாடுதுரை எக்ஸ்பிரஸில் வந்து இறங்கினார். 


அங்கே ஸ்டேஷன் மாஸ்டர் ’ஆட்டோவாவில் வந்தீரா ?’ என்று சிரித்தார். அங்கே இருந்த போர்டர்கள் பெரிய பெட்டியை பார்த்து ‘குருவே இது என்ன என்று கேட்க” “பெருமாள்” என்று சொன்னவுடன் ஓடிச் சென்று ரயிலுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயில் எல்லோரும் குளித்துவிட்டு ஸ்ரீபாதத் தாங்கிகளாக டெம்போ ஒன்றை ஏற்பாடு செய்து, ;கோவிந்தா கோவிந்தா’ என்று பெருமாள் டெம்போவில் ஏறி ’கோவிந்தா கோவிந்தா என்று இறங்கினார். இவர்கள் யாரும் பணம் எதுவும் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்கள்!


இல்லத்தில் பெட்டியை மெதுவாக பிரித்த போது முதலில் தெரிந்தது பிராட்டியின் திருவடி, பிறகு பெருமாளின் திருவடி தெரிய முழுவதும் பிரித்த போது ஆச்சரியமான திருமேனியுடன் . 


ஆடி ஆடி அகம் கரைந்து, இசை 

பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்

நாடி நாடி நரசிங்கா என்று, 

வாடி வாடும் இவ் வாள் நுதலே. 


என்பது போலக் காட்சி கொடுத்தார். 


இவரைத்தான் மூலவராக பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, வீட்டின் ஹாலில் ஒரு மேடையில் பிரதிஷ்டை செய்ய, உடுப்பி கிருஷ்ணன் போல எல்லோரும் ஜன்னல் வழியே சேவித்துவிட்டுச் சென்றார்கள் என்று விவரித்த ஸ்வாமிகள், இவர் வந்த பிறகு குருகுலம் தொடங்கிப் பல விஷயங்கள் தானாக நடக்க ஆரம்பித்தது. நான்கு குழந்தைகளுடன் ஆரம்பித்து வேதபாட சாலையில் இன்று 100 பேராக வளர்ந்து இருக்கிறது. 
பெருமாள் வந்த பிறகு, ஆழ்வார்கள் ஆசாரியர்கள் என்று இவருக்கு மங்களாசாசனம் செய்ய எல்லாரும் வந்தார்கள். 


அவன் விருப்பப்பட்டு, இடத்தை தேர்ந்தெடுத்து வந்த பிறகு இங்கே அவனே தலைவனாக எல்லாவற்றையும் வழி நடத்துகிறான். நாங்கள் அமைதியான பார்வையாளர்களாக, அமைதியான சேவகர்களாக தினம்தினம் பார்த்து பிரமித்துப் போகிறோம் என்றார். 


ஆழ்வார் ‘தெழிகுரல் அருவி’ என்கிறார் அதாவது திருவேங்கடத்தில் அருவிகள் ”கைங்கரியத்தில் ருசியுடையீர் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்ய வாருங்கள்!” என்று அழைக்கின்றனவாம். அருவிகள் அழைப்பது சிலருக்குத் தான் கேட்கிறது. அதில் பட்டண்ணா ஸ்வாமிகளும் ஒருவர். 
ஸ்வாமிகள் கூறியதைக் கேட்டு, வேறு எதுவும் பேச முடியாமல், அவரை தண்டம் சமர்ப்பித்துவிட்டு அவருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். 


84 வயதான ஸ்வாமிகள் வாசல் வரை வந்து வழி அனுப்பிய போது ‘Down to Earth’ என்பதன் பொருள் விளங்கியது. இது போன்ற குணத்தை அடியேனுக்கும் கொடு என்று நரசிம்மரிடம் வேண்டிக்கொண்டு திரும்பினேன். 


பிகு: ஸ்ரீ உ.வே திருநாகை ந.வீரராகவாசாரியார் ஸ்வாமி அவர்களை அன்புடன் ஸ்ரீ பட்டண்ணா ஸ்வாமி என்று அழைப்பார்கள்.


- சுஜாதா தேசிகன்

16-09-2021

கோயில் செல்லும் வழி : https://goo.gl/maps/rhGAHK5KJoxexWnY6

கோயில் குறித்த தகவல்கள் : https://lakshmi-narasimha.org/ 


.


Comments

 1. pranamam to swamigal. stayed there for more than four days and had the blessings of Bhagavan and Bhagavanadiyar sri u.ve.pattanna swamigal. வைஷ்ணவ உதாரண புருஷர். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கின்றனர். அவர்களை பகவான் கைங்கர்ய ஸ்ரீமானாக்கியுள்ளார். குருகுலம் அற்புதமாக நடந்து கொண்டு வருகிறது. அவர்கள் ஆசிகளைக் கோரி தெண்டஸமர்ப்பிக்கின்றேன்.
  திருமலை சேஷாத்ரி
  சென்னை.

  ReplyDelete
 2. படிக்கும்படி மெய்சிலிர்க்கிறது. நரசிம்மன் என்று அழைத்து தரிசனம் கொடுப்பானோ தெரியவில்லை.

  ReplyDelete
 3. Adiyen and couple of friends stayed overnight and had a blissful time. Have been recommending this place to many. Sure after reading this blog, many are sure to visit.

  " நடுவில் பட்டண்ணா ஸ்வாமியின் திருமாளிகை போளிக்கு உள்ளே இருக்கும் பூர்ணம் போல பரிபூரணமாக இருந்தது. ' beautiful expression.

  ReplyDelete
 4. அடியேன் இராமானுஜ தான்.
  பூர்வாசார்யர்கள் போதம் அநுஷ்டானத்தின்படி ஸ்கல கைங்கர்யங்களும் நடக்கின்றன.
  ஸ்வாமிகளின் கைங்கர்யங்கள் தொடர ஆசார்யனை அடியேன் ப்ரார்திக்கிறேன்.
  ஸ்வாமிகள் இன்னும் பல நூற்றாண்டு இரும்.
  அடியேனை பரமபத ப்ராப்திக்கு தகுதி உடையவனாக திருத்தி பணி கொள்ள வேண்டும்.

  ReplyDelete

Post a Comment