Skip to main content

கண்ணன் கதைகள் - 11

கண்ணன் கதைகள் - 11


ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாசுரங்களில் கண்ணன் எங்கும் வியாபித்திருப்பதைக் காணலாம்.

உன்னிப்பாக கவனித்தால் ஆண்டாளுக்கு வடக்கே கொஞ்சம் 'ஃசாப்ட் கார்ணர்’ இருப்பதைக் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

“சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!” என்று திருப்பாவை முதல் பாட்டில் ஆரம்பிக்கிறார். பின்பு ”மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” என்கிறாள் பிறகு நாச்சியார் திருமொழியில் கவனித்தால் அங்கேயும் ஆயர்பாடி, மதுரைப்பதி என்று அவள் உள்ளம் வடக்கை இருக்கும் கண்ணனை நோக்கி தான்.

அதே போல் நாச்சியார் திருமொழியில் என் கண்ணனை கண்டீரே ? கண்டீரே ? என்று கேட்டுவிட்டு ‘விருந்தாவனத்தே கண்டோமே’ என்று முடிப்பதைப் பார்த்திருக்கலாம். அவளுக்கு கண்ணன் என்றால்  விருந்தாவனத்தில் தான் இருக்கிறான்!

நம்மூர் கண்ணன் எல்லாம் ஆண்டாளுக்கு டூப்ளிகேட் விருந்தாவனத்தில் ’தூய பெருநீர் யமுனைத் துறைவன்’ தான் ஒரிஜினல் கண்ணன்!.

விருந்தாவனம் என்றால் துளசி நிறைந்த வனம் ஒன்று ஒரு பொருள் இருக்கிறது. யமுனை கரையில் அழகு கொஞ்சும் இடத்தில் கூட்டம் கூட்டமாகப் பசுமாடுகளை இன்றும் பார்க்கலாம். ப்ருந்தா என்றால் கூட்டம் என்று இன்னொரு பொருளும் இருக்கிறது.

ஒரு யாத்திரையின் போது இதை எல்லாம் ஸேவிக்கும் பாக்கியம் பெற்றேன். அப்படியே எங்கள் இல்லத்தில் இருக்கும் குட்டி ஆண்டாளுக்கு விருந்தாவன ஒரிஜினல் கருப்பு கண்ணனை அழைத்து வந்து  அந்த மார்கழி மாதம் ஆண்டாளுடன் சேர்த்தி சேவையின் போது ஆண்டாள் திருமுகத்தில் மெல்லிய வெட்க புன்னகை தெரிகிறதா ?

பிகு : மதுரைக்காரர்கள் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தெம்பாக சண்டைக்கு வராதீர்கள். 

- சுஜாதா தேசிகன்

31-08-2021

ஸ்ரீஜெயந்தி

Comments