Skip to main content

பக்தியினால் தமிழ் அர்ச்சனை

பக்தியினால் தமிழ் அர்ச்சனை 

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை திருக்குடந்தை ஆராவமுதன் சந்நிதியில் சேவித்துக்கொண்டு இருந்த போது திடீர் என்று சுனாமி போல் ஒரு கூட்டம் வந்து, சில நிமிடங்களில் முழு சந்நிதியையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.  முக ஜாடை நேபாளம் என்று காட்டிக்கொடுத்தது. 

கோயிலில் இருந்தவர்கள் “பேசாமல் இருங்க” “அங்கே தள்ளி போங்க” ”இப்படி வாங்க” போன்ற எதையும் சட்டை செய்யாமல் மனம் உருகி பெருமாளைச் சேவிப்பதே தங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். 

அந்தக் குழுவில் நடக்க கூட முடியாத வயதான சில முதியவர்களும், மூதாட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு பெருமாளைக் கண்டதில் பரவசத்தைக் கண முடிந்தது.

கோயிலுக்கு வெளியே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன் ”நாங்கள் நேபாளத்திலிருந்து வருகிறோம். ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்கள் சேவிக்க வந்துள்ளோம்” என்றார்கள். ”சக்கரபாணி கோயில் எப்படிப் போக வேண்டும்?”  என்று கேட்டுவிட்டு காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து சென்றார்கள். 

இந்த மாதிரி கூட்ட அலையைப் பார்க்கும் போது நாம் பொதுவாக ‘கோவிந்தா’ கூட்டம் என்று எண்ணவும், எழுதவும் செய்கிறோம். பக்தியில் அவர்கள் சற்று தாழ்ந்தவர்கள் என்று நம்மை அறியாமல் எண்ணிவிடுகிறோம். ஆனால் நாம் வட தேசம் சென்றால் என்ன நடக்கிறது ? 

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கர் நகரில் உள்ள ’ரங்காஜி’ கோயிலுக்கு  சென்றிருந்தேன். கோயிலுக்கு வெளியே கடையில் இருந்த சின்ன பையனிடம் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு, 20ரூபாய் கொடுத்தேன். அவனும் வாங்கிக்கொண்டான். தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த அவன் தந்தை ஓடி வந்தார். நெற்றியில் அடியேன் தரித்திருந்த திருமண்ணைக் காண்பித்து.“நாமம் போட்டு யாத்திரைக்கு வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம் நீ எப்படி லாபம் பார்க்கலாம். ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடு” என்றார் கோபமாக.  நான் “பரவாயில்லை” என்று சொல்லியும் அவர் விடுவதாக இல்லை.  சின்ன பையன், சின்ன விரல்களால் கல்லாவில் உள்ள ஒத்த ரூபாயை எல்லாம் பொறுக்கி என்னிடம் கொடுத்தான். பத்திரமாக யாத்திரை முடியும் வரை அதைச் செலவு செய்யவில்லை.

பக்தியைப் பார்த்து வியந்துகொண்டு இருக்கும் போது அவர்களுடைய தமிழ் வியக்க வைக்கும். கர்நாடகாவில் இருக்கும்  மேல்கோட்டையில் பிரபந்தத்தைக் கன்னட மொழியில் அச்சடித்துச் சேவிக்கிறார்கள். ஆந்திராவில் திருப்பதியில் ஏழுமலையானுக்கு  திருமஞ்சனம் நடைபெறும் போது ஆண்டாளின் நாச்சியார் திருமொழியைச் சேவிக்கிறார்கள். 

பத்ரிக்குச் செல்லும்போது வரும் திவ்ய தேசம் கண்டம் என்னும் கடிநகர். ஹரித்வாரத்திலிருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் இருக்கிறது இந்தத் திவ்ய தேசம். 2720 அடி உயரத்தில் பெரியாழ்வார் ‘கண்டம் என்னும் கடிநகர்’ என்று பாடியுள்ளார் (கண்டம் - பாரத கண்டம், கடி என்றால் சிறப்பான என்று பொருள்)  இங்கே இருக்கும் பெருமாள் நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் என்று திருநாமம்.  இந்த இடத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் வந்து எல்லோரும் கஷ்டப்பட்டார்கள். உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர் கால்பட்டால் மழை வரும் என்று சொன்னார்கள். அப்போது பெரியாழ்வாரை இங்கே அழைத்து வந்தார்கள். அவர் காலடிப் பட்ட போது மழை வந்தது. மழையுடன் தமிழும் இங்கே வந்து சேர்ந்தது. நைமிசாரண்யம் கோயிலில் பன்னிரண்டு ஆழ்வார்கள் படமும் அதன் கீழே ஹிந்தியில் அவர்கள் பெயர்களும், அவதரித்த இடத்தையும் பிழை இல்லாமல் எழுதி வைத்துள்ளார்கள். அங்கே இருக்கும் மாணவர்கள் பெரியாழ்வார் போல பூ மாலை தொடுத்து,  பெரியாழ்வார்களின் பாசுரங்களை ஹிந்தியில் எழுதி வைத்து தமிழில் சேவிக்கிறார்கள். தமிழை வளர்க்கத் தமிழ்நாட்டில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்றும், சினிமா பெயர்கள் தமிழில் வைத்தால் சலுகை என்று  கஷ்டப்படும்போது எங்கோ மலை உச்சியில் பெரியாழ்வாரின் பாசுரங்களைத் தமிழில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் நரசிம்ம சந்நிதிக்கு அவர்களே ‘நரசிம்ம கோயில்’ என்று சிகப்பு நிறத்தில் தமிழில் எழுதியிருக்கிறார்கள்! ஆண்டாள் திருப்பாவையில் ‘’தரிக்கிலான்’  என்ற வார்த்தையை உபயோகிக்கிறாள். கண்ணன் வளர்கிறான் என்ற வார்த்தையே கம்சனுக்குப் பொறுக்க முடியவில்லை. மனது ‘தரிக்க’ மாட்டாது இருந்தான் என்பதைத் தான் ’தரிக்கிலான் ஆகி’  என்கிறாள் ஆண்டாள். அரசியல் என்று பல காரணங்கள் சொன்னாலும் கடந்த 50 வருடமாக தப்பான விஷயத்தைத் தொடர்ந்து கற்பித்ததால் ஹிந்து, பிராமணர்கள் என்றால் கம்சன் போலப் பொறுக்க முடியாத வெறுப்பும், துவேஷமும் காணமுடிகிறது.  தமிழை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் பக்தி இலக்கியங்களை நம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அப்போது தான் தமிழ் வளரும், அப்படி தான் வளர்க்க வேண்டும். பக்தியின் மிகுதியால் வந்தது தான் தமிழ். பக்தி இல்லாமல் அரசாங்க உத்தரவு மூலம் தமிழை வளர்க்க முடியாது.  கண்ணுநுண் சிறுத்தாம்பு என்ற பாசுரத்தில் ”பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்- உரியனாய் ‘அடியேன்’ பெற்ற நன்மையே” என்று 'அடியேன்' என்ற மதுரகவி ஆழ்வார் உபயோகித்த தமிழ் வார்த்தை,  ஸ்ரீராமானுஜர் மூலமாக நேபாளத்தில் ஒலித்தது. எப்படி என்று சொல்கிறேன். 

நேபாளத்தில் உள்ள முக்திநாத் சென்று  கண்டகி ஆற்றில் ஸ்நானம் செய்துகொண்டு இருந்தார் ஸ்ரீகிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள். அப்போது ஒரு வயதான நேபாள வம்சத்து மூதாட்டி அவரை பார்த்து 

“எங்கிருந்து வருகிறீர்கள் ?” என்று ஹிந்தியில் கேட்க அதற்கு ஸ்வாமிகள் 

“ஸ்ரீரங்கத்திலிருந்து” என்று சொன்ன உடன் “பொன் அரங்கமென்னில் மயலே பெருகும்” என்பது போல அவள் பூரித்து ஸ்வாமிகள் காலில் விழுந்து 

“ஸ்ரீரங்கத்திலிருந்தா ? ஆஹா “ என்று பூரிப்பு அடங்கச் சற்று நேரம் ஆனது. 

ஸ்வாமிகள் அவரிடம் ”நீங்கள் யார் ? உங்கள் பெயர் என்ன ?” என்று கேட்ட போது அந்த மூதாட்டி சொன்ன பதில் “அடியேன் ராமானுஜ தாஸி” 

ஸ்ரீராமானுஜ சித்தாந்தமும் தமிழும் எப்படி எல்லாம் பரவியிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. 

நேற்று அடியேனுடன் நேபாளத்திலிருந்து ஸ்ரீ பார்த்தசாரதி என்பவர் பேசினார்.  நமஸ்காரம் ஸ்வாமி. அடியேன் தற்போது முக்திநாத் போகும் வழியில் பாக்லுங் என்ற ஊரில் இருக்கும் வேதவித்யாஸ்ரமத்தில் மூன்று மாதங்களாக தங்கியிருக்கிறேன். முக்திநாத் கோயில் இன்னும் திறக்கவில்லை.  இங்கே வேத பாடசாலையில் தங்கி காத்துக்கொண்டு இருக்கிறேன்.  வேத பாடசாலை மாணவர்கள் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்கள் தேவநாகரி மொழியில் வைத்துள்ளார்கள். அடியேன் பிரபந்தம் சேவிக்கும் போது அவர்கள் எங்களுக்கும் இதே போலச் சந்தை முறையில்  கற்றுக்கொடுங்கள் என்று ஆர்வமாக கேட்கிறார்கள். உங்கள் பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம் கிடைத்தால் பேருதவியாக இருக்கும். மீண்டும் மார்கழி மாதம் செல்ல இருக்கிறேன். அப்போது மூன்று மாதங்கள் இங்கே இவர்களுக்குச் சந்தை முறையில் சொல்லித்தரப் போகிறேன். இதுவரை நான் முக்திநாத் 17 முறை சென்றுள்ளேன். எனக்கு வயது 78 என்றார். தமிழில் அர்ச்சனை என்பது தமிழில் மீது உள்ளப் பற்றினால் செய்வதில்லை, சமிஸ்கிரத மொழியின் மீது உள்ள துவேஷத்தால் செய்வது. பக்தியினால் மட்டுமே தமிழை வளர்க்க முடியும். மற்றவை எல்லாம் தேவை இல்லாத ஆணி. 

- சுஜாதா தேசிகன்

23-09-2021

படம் : 

1. நேபாளத்தில் பிரபந்தம் கற்றுக்கொள்ள ஆர்வம் காண்பிக்கும் வேத பாடசாலை மாணவர்கள். 

2. கண்டம் என்னும் கடிநகரம் படங்கள்.

3. வீடியோ: தற்போது நேபாள மாணவர்கள் சேவிக்கும் ஆழ்வார்களுடைய பிரபந்தம் ( என்ன அழகு ! ) 

4. ஆழ்வார் படங்கள், மாலை கட்டும் மாணவர்கள் - நைமிசாரண்யம். 

( நேபாள படங்கள் அடியேனுக்கு ஸ்ரீபார்த்தசாதி அனுப்பினார். மற்றவை நான் யாத்திரையின் போது எடுத்தது )

Comments

 1. Respected Sir
  Pranams.
  Thought of bringing below to you.
  Your presence once a while might help this group.
  Reciprocal help wherever possible
  https://www.clubhouse.com/club/ozMfWlrg

  ReplyDelete

Post a Comment