Skip to main content

28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம்

28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம்


திருவரங்கத்தில் மாலை சூரியன் அன்று வேகமாக கீழே இறங்கியது. ஆளவந்தார் உறக்கம் கலைந்து எழுந்துகொள்வது போலப் பரபரப்பாக காணப்பட்டார். காரணம் பெருமாள் புறப்பாட்டுக்கு நேரமாகிவிட்டது. 

“அடடா! காலட்சேபத்தில் நேரம் போனதே தெரியவில்லை நமக்காக அழகியமணவாளன் காத்துக்கொண்டு இருக்க மாட்டானே!” என்று ஆளவந்தார் அவசரமாக நடக்க தொடங்கினார். 

வீதியில் எதிர்கொண்டு வந்தவர் ஒருவர் அவரை சேவித்துவிட்டு  “பெருமாள் வீதி புறப்பட்டை ஆரம்பித்துவிட்டார்!” என்று கூற நடை ஓட்டமாக மாறியது. 

சிலர் ”அழகியமணவாளன் சாத்துப்படி காண கண் கோடி வேண்டும்!” என்று அரங்கனை காண ஓடினார்கள். 

மாடமாளிகை வீதியில் வாசலில் பெண்கள் வெள்ளை அரிசி  மாவில் கோலமிட்டு காத்துக்கொண்டு இருந்தார்கள். சிறுவர்கள் தத்தம் தந்தையின் தோள் மீது ஏறிக்கொண்டு நம்பெருமாளைத் தரிசிக்க ஆவலுடன்  காத்துக்கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். எல்லோர் வீட்டிலும் வெள்ளித் தட்டில் வெற்றிலையுடன், வாசனையான மல்லிகை, திருத்துழாயுடன், தோட்டத்துப் பழங்களை நம்பெருமாளுக்கு சம்பர்பிக்க கையில் ஏந்தியிருந்தார்கள். 

இவற்றை எல்லாம் கவனிக்காமல்  வேகமாக சென்ற ஆளவந்தாரைக் கண்டவர்கள்  “சுவாமிகள் ஏன் இப்படி ஓடுகிறார்?” என்று திகைப்புடன் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். 

தூரத்தில் நெய்ப்பந்த நெருப்பில் அதன் புகை மேல் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. மத்தள ஓசை மெலிதாகக் காதில் விழத் தொடங்கின. எம்பெருமான் அடியார்களின் சலங்கை ஒலியுடன் ஆழ்வார்களின் பல்லாண்டு ஒலி மெலிதாக கேட்டது. 

ஆளவந்தார் “திருவாங்க ராஜா எந்த வீதியில் இருக்கிறார் ? ரங்கா ரங்கா!” என்று விரைந்து சென்றார். அப்போது ஒருவர் “ பெருமாள் மேற்கு மூலைக்கு ஏளிவிட்டார் அடியேன்!” என்று கூற,  ஆளவந்தார் அப்படியே அங்குசத்துக்கு கட்டுப்பட்ட யானை போல நின்றார். கூட வந்த சிஷ்யர்கள் புரியாமல் விழித்தார்கள்.

"அடியேனைப் பொருத்தருள வேண்டும். ஏன் நின்று விட்டீர்கள் ?” என்றார் பெரிய திருமலை நம்பி. 

“நம்பியே! காரணம் இருக்கிறது. பெருமாள் மேற்கு மூலையை விட்டுக் கிளம்பட்டும்(2). அதற்குப் பிறகு நாம் திருவோலக்கத்தில் சேர்ந்துகொள்ளலாம். சற்று மெதுவாகவே செல்லலாம்!” என்றார் 

”அடியேனின் சிற்றறிவுக்கு புரியவில்லையே!” என்றார் திருமலை நம்பி.

ஆளவந்தார் நடந்துகொண்டே “பாரத போரில் தனக்கு படையுதவி செய்ய வேன்றுமென்று கண்ணனிடம் துரியோதனன் வந்தான். அப்போது கண்ணபிரான் சயனித்துக் கொண்டிருந்த படியால் அங்கேயே சற்று நேரம் அமர்ந்து கண்ணபிரான் எழும் வரை காத்திருக்க எண்ணினான். கண்ணனுடைய திருவடிகள் கீழே அமர்வது தன் மதிப்புக்குக் குறைவு என்று எண்ணிக் கண்ணபிரானுடைய திருமுடிப் பக்கமிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். அதே போல் கண்ணிடம் வந்த அர்ச்சுனனோ கண்ணபிரானுடைய திருவடிப் பக்கமிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். துஷ்டனான துரியோதனன் அமர்ந்த திருமுடிப் பக்கமாதலால், பெரிய பெருமாள் திருமுடியை வைத்தருளியிருக்கின்ற மேற்கு திசை துரியோதான்ஸ்தானம் அல்லவா? அங்கே நமக்கு என்ன வேலை? அதனால் நாம் கிழக்கு நோக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாம்!” என்றார் 

”தங்கள் திருமாளிகை பெரிய பெருமாள் திருவடியை நீட்டிகொண்டு இருக்கும்  கிழக்கு திக்கில் இருப்பதற்கு இது தான் காரணமோ?” என்றார் பெரிய நம்பி. 

ஆளவந்தார் புன்னகையுடன் கிழக்கு திசை நோக்கி நடக்க அவருடைய சிஷ்யர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். 

அன்று மனம் உருகி” ’நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து நடத்துபவர் தேடு’ என்று அடியேனின் பாட்டனார் தேடச் சொன்ன அந்த அவதாரப் புருஷரை காட்டிக்கொடு” என்று நம்பெருமாளிடம் எதையும் வேண்டிக்கொள்ளாத ஆளவந்தார் அன்று வேண்டிக்கொண்டார். 

நாட்கள் பல கடந்தது. மாதங்கள் பல கடந்தது.  திருவரங்கத்துக்கு வெளியூரிலிருந்து வரும் வைணவ அடியார்கள் ஆளவந்தாரை வணங்க வருவார்கள். ஆளவந்தார் அவர்களுக்குப் பல நல் உபதேசங்களைக் கூறி ”உங்கள் திவ்ய தேசங்களில் உற்சவங்கள் எப்படி நடைபெறுகிறது ?” என்று விசாரித்துவிட்டுத் தவறாமல் கேட்கும் கேள்வி “யாரேனும் குணத்திலும், வேதாந்தத்திலும் மிகச் சிறந்து விளங்குகிறார்களா?” வந்தவர்களும் ”அப்படி யாரும் எங்களுக்குத் தெரியவில்லையே! ஸ்வாமி” என்று பதில் கூறுவார்கள். 

அன்று விசேஷமான திருநாள். திருவத்யயன உத்ஸவம். அரையர் சேவை. அழகிய மணவாளன் திருமா மணிமண்டபத்தில் அடியார்கள் புடை சூழ எழுந்தருளியிருக்க, பெருமை மிக்க திருவரங்கத்து அரையர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை உள்ளம் உருகி அபிநயத்துப் பாடிக்கொண்டு இருந்தார். 

அடியார்கள் கூட்டம் மெய்மறந்து ‘ஆஹா ஆஹா’ என்று கேட்டும் பார்த்தும் அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். அடுத்து என்ன பாசுரத்துக்கு அபிநயம் ஆவலுடன் இருந்தார்கள். 

’கிளிங் கிளிங்’ என்று கைத்தாளத்தை இசைத்த திருவரங்கத்தரையர் உள்ளம் உருகி நம்மாழ்வாரே கூறுவது போல ‘கடுவினை’(1) என்ற பாசுரத்தை

“நம் அடியார்களே! நாம் உங்களுக்குத் தெளிவாக சொல்லுகிறோம்! புறப்படுங்கள் ! துன்பங்கள் நீங்கும் ! ஒருமிக்கதாய் விளங்கும்! மோட்சத்தை ஒத்ததாக இருக்கும் ! அத்தகைய திரு அனந்த புரத்தை அடைவீர்களாக!” என்று ஆளவந்தாரை நோக்கி அபிநயத்துடன் இசைத்தார். 

கூட்டம் அடுத்த பாசுரத்துக்குக் காத்துக்கொண்டு இருந்தது. ஆனால் அன்று அரையர் இதே பாசுரத்தை ஆளவந்தாரைக் கூர்ந்து நோக்கி மீண்டும் ஒரு முறை அபிநயத்தை அழுத்தமாக செய்து அதே பாசுரத்தைப் இசைத்து முடித்து மீண்டும் அதே பாசுரத்தை ஆரம்பித்தார். 

ஆளவந்தார் அரையரை நோக்கினார். அரையர் அணிந்துகொண்டு இருந்த நம்பெருமாள் மாலை நம்மாழ்வார் அணிந்துகொண்டிருக்கும் மகிழம் பூமாலையாக காட்சி கொடுத்தது. திருவரங்கத்து அரையர் திருகுருகூர் ஆழ்வாராக காட்சி கொடுத்தார். 

’பொலிக பொலிக’ என்று வருங்கால ஆசாரியரைக் கோடிட்டுக் காட்டியது போல ’நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து நடத்துபவர்’ திரு அனந்த புரத்தில் தேடச் சொல்லுகிறாரோ  நம்மாழ்வார் என்று அவருக்கு தோன்றியவுடன்  நம்மாழ்வார் நியமனம் என்று தீர்மானித்து திருவோலக்கத்திலிருந்து எழுந்துகொண்டார். 

நம்மாழ்வாராக காட்சி கொடுத்த அரையரை வணங்கினார். எல்லாவற்றையும் அமைதியாக கண்டு ரசித்துக்கொண்டு இருந்த திருவரங்கன் திருவடியை வணங்கி அவனிடம் வாழ்த்துப் பெற்று  “இப்போதே திரு அனந்த புரம் கிளம்பலாம்!” என்று தன் திரிதண்டத்துடன் புறப்பட்டார். 

ஆளவந்தாரைச் சூழ்ந்துகொண்டு இருந்த அவருடைய சிஷ்யர்களும் பெருமாளிடம் விடைபெற்றுக் கிளம்பச் சித்தமாக இருந்தார்கள். 

“பெரிய நம்பி ! அடியேன் கிளம்புகிறேன். ஆசிரமத்தில் நம் திருவாராதனப் பெருமாளும், சாளக்கிராமத்தையும் எழுந்தருளச் செய்துகொண்டு வாரும்!” என்று கட்டளையிட்டார். 

“அடியேன்! இதோ புறப்படுகிறேன்!” என்று பெரிய நம்பி புறப்பட்டார். 

”தெய்வாரி ஆண்டான்!” என்று கூப்பிட்டவுடன் ”அடியேன்!” என்று ஆளவந்தார் முன் கைகட்டி வாய் புதைத்து நின்றார். 

“ஆண்டான்! நாம் வரும் வரை நம் மடத்துக்கு காவலாகவும்,  திருவரங்க கைங்கரியம் தடைப்படாமல் பார்த்துக்கொள்வீராக!” என்று நியமித்துவிட்டு ஒளிவீசக் கூடிய ஆழியை கையில் ஏந்தி எழுந்தருளியுள்ள திரு அனந்தபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்து ’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ என்று ஆதிசேஷன் பாதுகாக்கும் திருமெய்யத்தில் மெய்யமலையானை சேவித்து, திருமங்கை ஆழ்வார் பெற்ற இன்ப உணர்வைப் பெற்று, பெரியாழ்வார் கண்ணனின் அவதாரப் பெரு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்த வண்ண மாடங்கள் சூழ்ந்த, இளமையான வண்டுகள் தேனை உறிஞ்சி ஆரவாரம் செய்யும்  திருக்கோட்டியூர் வந்தடைந்து, தேவர்கள் கோஷ்டியாக வணங்கும் உரக மெல்லணையானை தன் கோஷ்டியுடன் வணங்கிய ஆளவந்தார். அடுத்து கள்ளழகரை  நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். 

இதேசமயம்,  திருவரங்கத்தில் தெய்வ வாரி ஆண்டான் ஆளவந்தாரின் பிரிவுத் துயர் தாளாமையால் அவருடைய திருமேனி இளைத்து, உதடுகள் வெளுத்து, நோவுசாத்திக்கொள்ள வேரற்ற மாரம் போல சாய்ந்தார். 

சுற்றி இருந்த முதலிகள் செய்வதறியாமல் கிழக்கு சித்திர வீதியில் இருந்த வைத்தியர்களை அழைத்து வந்தார்கள்.  ஆண்டானுடைய நாடியைப் பிடித்துப் பார்த்து ”உடம்புக்கு யாதொரு குறையும் இல்லை,  ஆனால் உள் மனம் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு இருக்கிறது” என்று ஆண்டானைத் தேற்றிக் கேட்க அதற்கு ஆண்டான் “அடியேனுடைய ஆசாரியனான ஆளவந்தாரைத் தவிர வேறொன்றும் உண்டோ ?” என்று புலம்பியவாறு கூறினார். 

வைத்தியர்கள் ”இந்த வியாதி தீர மருந்து இல்லை. இதற்கு வைத்தியம் இவரை உடனே அவருடைய ஆதங்கத்தை போக்க குருவிடம் கொண்டு செல்வதே மருந்தாகும் !” என்றார்கள். 

வைத்தியர்கள் கூறிய அறிவுரையின்படி வைணவ அடியார்கள் அவரை கட்டணத்தில் அமர்த்தி ஆளவந்தார் சென்ற திசை நோக்கி அரைகுலையத் தலைகுலய பயணத்தை ஆரம்பித்தார்கள்.

பயணம் தொடரும்... 

- சுஜாதா தேசிகன் 

-------------------------------------------------------------

திருவோலக்கம் - சபை
நோவுசாத்திக்கொண்டது - நோய்வாய்ப்பட்டு
எம்பெருமான் அடியார்கள் - தேவதாசிகள்
கட்டணத்தில்  - பல்லக்கில்
அரைகுலையத் தலைகுலய - விரைந்தோடி 


(1)நம்மாழ்வார் பாசுரம்
கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர்!-நாம் உமக்கு அறியச் சொன்னோம்.

(2) ஐதீகம் 


Comments

Post a Comment