கண்ணன் கதைகள் - 12
கண்ணன் காலடி பட்ட இடங்களுக்குச் செல்லும் போது மிகப் பெரிய பிரச்சனை அங்கே கிடைக்கும் பாலும் தயிரும் தான். நமக்கே இப்படி என்றால் கண்ணனுக்குப் பாவம் எப்படி இருந்திருக்கும் ? ஏன் என்று சொல்லுகிறேன்.
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
என்று திருப்பாவையில் வந்த அந்த கலகலப்பு ஓசை வந்த இடம் இது தான் என்று யசோதை தயிர் கடைந்த இடத்தைக் காண்பித்தார்கள். எட்டிப் பார்த்தால் Black hole மாதிரி இருந்தது. எதற்கு வம்பு என்று கண்ணனைச் சேவித்துவிட்டு வரலாம் கோயில் வாசல் வரை வந்துவிட்டேன். அங்கே ஒரு பிரச்சனை.
பெரிய செட்டியில் பாலை காய்ச்சிக்கொண்டு இருந்தார்கள். பிரச்சனை இது இல்லை, பிரச்சனை பால் வாசனை தான். கண்ணனிடம் ’வெயிட்டீஸ்’ சொல்லிவிட்டு வாசனை வந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அருகில் சென்ற போது சூடாக இருந்தாலும் பரவாயில்லை அள்ளி சாப்பிடலாம் போல இருந்தது. கடைக்காரர் என் ஆர்வத்தைப் பார்த்து “பையா உள்ளே சேவித்துவிட்டு வா அதற்குள் பால் பாசுந்தியாகியிருக்கும்” என்றார்
”இதோ வந்துவிட்டேன் கண்ணா!” என்று உடனே கிருஷ்ணனைச் சேவித்துவிட்டு வந்த போது கடல் உள்வாங்கிய இடம் போலப் பால் சுடச்சுட பாசுந்தரியாக காட்சி கொடுத்தாள்.
தொன்னையில் வைத்து சின்ன மர ஸ்பூம் போட்டு கொடுத்தார். அதை நாக்கில் சூடு போட்டுக்கொண்டு சாப்பிட்ட போது பக்கத்துக் கடையில் பாலை காத்துக்கொண்டு தூத் பேடா விற்றுக்கொண்டு இருந்தார்கள்.
அதை ஒன்று வாயில் போட்டால் நன்றாக இருக்கும் என்று உள் மனத்தில் தோன்றி முகத்தில் தெரிந்ததைக் கடைக்காரர் பார்த்துவிட்டார். ‘வருக வருக’ என்று வரவேற்றார்.
'தூத் பேடா’ தூத் என்றால் பால்; பேடா என்றால் பேடா என்பது திராவிட தேசம் எனக்குக் கற்றுக்கொடுத்த ஹிந்தி.
அவர் “எவ்வளவு ?” என்றார் சைகையில்
கருமமே கண்ணாக சாப்பிட்டுக்கொண்டே சைகையில் “ஒன்று” என்றேன்.
அவர் பேடாவை பொட்டலம் செய்வார் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
ஒரு கோப்பை எடுத்து அதில் ஒரு பேடாவை உதிர்த்துப் போட்டு, சுடச்சுட வாசனை பாலை ஆவியுடன் ஊற்றி, ஆற்றி, மண் பானையில் நிறப்பி, கொஞ்சம் ஏடுகளை தலையில் போட்டுக் கொடுத்தார். சினிமாவில் இடைவேளை வரும் காட்சி போல அதிர்ச்சியாக இருந்தது. சாப்பிட்ட பிறகு தான் தெரிந்தது இது அடுத்த லெவல் என்று.
இப்போது இன்னொரு கடைக்காரர் என்னை ஏக்கமாக பார்த்தார். ’வாங்க’ என்று கண்ணாலேயே அழைத்தார். அங்கே தட்டு நிறைய வெள்ளையாக தயிர்.
மீண்டும் ‘1’ சைகை.
நிஜமான கத்தி அடுத்து தயிர் பாறையை பெயர்த்து சதுரமாக செதுக்கி இலையில் தந்தார். பாசுந்தி, பேடா பால், தயிர் பாறையுடன் கலந்தால் வயிறு என்ன ஆகும் என்று ஒரு நொடி யோசித்தேன். எதற்கு ’சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். வயிறு பாரதப் போர் புரியட்டும் என்று அவன் மேல் முழு பாரத்தைப் போட்டுவிட்டு நகர்ந்தேன். இன்னொரு கடையில் கூஜா நிறைய மோர் வைத்துக்கொண்டு... அதையும் சாப்பிட்டிருந்தால் கன்றுக்குட்டி போல பேசியிருப்பேன்.
- சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி
அனைத்து விஷயங்களும் அருமை
ReplyDeleteதங்களுடன் ஒரு பெரிய யாத்திரை சென்று வந்த த்ருப்தி.கோடி நன்றி 🙏🙏🙏
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் என்று தான் எதையும் உண்ண வேண்டும்
ReplyDelete