சென்னையிலிருந்து பெங்களூர் வந்து ஐந்து வருடம் இரண்டு மாசம் ஆகிவிட்டது. வந்த புதிதில் “இது என்ன ஊரு?” என்று அலுத்துக்கொண்ட காரணத்தாலோ என்னவோ உடனே அதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திவிட்டார்கள். வெல்லம் போட்ட சாம்பார் மாதிரி பல விஷயங்கள் ஐந்து வருஷத்தில் பழகிவிட்டன. தவித்த வாய்க்கு காவிரி தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ ஹோட்டல்களில் சாம்பார், சட்னி தாராளமாக கொடுக்கிறார்கள். போன முறை சென்னை சென்ற போது ‘இன்னும் கொஞ்சம் வெங்காய சட்னி’ என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்துவிட்டு போகும் விருந்தினருக்கு குங்குமம் தருவது போல சின்ன கிண்ணியில் தந்தார்கள். இந்த விலைவாசி ஏற்றத்திலும் எம்.ஜி.ரோடு பிருந்தாவன் ஹோட்டலில் எவ்வளவு அப்பளம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே போடுகிறார்கள். கோரமங்களா கிருஷ்ணா கபே சொந்தக்காரர் தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தயிர், மோரைத் தவிர எல்லாவற்றிலும் எப்படி அவ்வளவு தேங்காய் போட முடிகிறது? ‘நல்லவர்களிடம் உணவருந்துங்கள்’ என்ற வாசகத்துடன் அன்னபூர்ணி ஹோட்டலில் துளசி அடை செய்து கொடுக்கிறார்கள். ‘ரோட்டி மீல்ஸ்’ல் விதவிதமான ரோட்டியும் அதற்கு கருப்பாக எள்ளுப்பொடி