Skip to main content

சென்னையில் அட(டை) மழை!

போன வாரம் சென்னைக்கு சென்ற போது “இந்த மழையில் எதுக்கு வந்தீங்க?” என்று அதிர்ச்சியாக கேட்டார்கள். சென்னை சென்ட்ரல் காலை ஏழு மணிக்கு இருட்டிக்கொண்டு மாலை ஏழு மணி போல இருந்தது. அந்த மழையிலும் பிளாட்பாரத்தில் இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் சரவண பவனில் காப்பிக்கு க்யூ. மழை எதிர்த்த வீட்டு ஜிம்மி போல் குலைத்துக்கொண்டு இருந்தது.

“மழையை பார்த்தீங்கல்ல 180க்கு வருதுனா வாங்க” என்ற ஆட்டோவிடம் பேரம் பேசாமல் ஏறி சில தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது வெளியே 30 செ.மீட்டர் மழை என்றால் ஆட்டோவுக்குள் 60 செ.மீட்டர் என்று.

புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு பழகும் புது பெண்ணை போல எனக்கு மழையுடன் பழக அரை மணி நேரம் ஆனது. முழுக்க நனைந்த பிறகு வீடு வந்து சேர்ந்த பின், கொஞ்ச நேரம் ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். பிறகு பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து பர்முடா மாதிரி ஆக்கிக்கொண்டு வெளியே கிளம்பினேன்.

தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே பலாப்பழம், வேகவைத்த வேர்கடலை, கர்சீப் எல்லாம் பாலித்தின் உதவியுடன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்.

இருபது அடிக்கு ஒரு குடையை கவுத்துவைத்து அதில் குடை வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். “அறுபது, எழுபது” என்று விற்ற குடைவியாபாரிகள் எல்லோரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தர்கள். அந்த மழையிலும் “அதோ அந்த பச்சை கலர் கொடுங்க” என்று மக்கள் வாங்கிக்கொண்டிருதார்கள். குடை அன்று சென்னை மக்களின் கை, கால் மாதிரி ஒரு புதிய உறுப்பானது.

பெரிய ஆச்சரியம், இவ்வளவு மழை அடித்தும் பல இடங்களில் அவ்வளவாக தண்ணீர் தேங்கவில்லை, அல்லது சீக்கிரம் வடிந்துவிடுகிறது. ஐந்து வருஷத்துக்கு முன் சும்மா இரண்டு பேர் சேர்ந்து எச்சில் துப்பினாலே குளம் போல தேங்கி நிற்கும்.

தி.நகர் பஸுல்லா ஏரி இன்னும் அப்படியே தான் இருக்கிறது (பஸுல்லா ரோட் என்று எழுத தான் விருப்பம், ஆனால் நான் போன சமயம் ரோட் இல்லை ). மாருதி காரில் செல்பவர்கள் படகு துடுப்பு எடுத்து செல்வது உத்தமம், அதே போல் நுங்கம்பாக்கத்தில் சில பகுதிகள். தி.நகர் பஸ்டாண்ட் குளத்தில் அண்ணா நகர் பஸ் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கும் போது “சார் சரவணா ஸ்டோர்ஸ் எப்படி போகணும்?” என்று என்னிடம் வழி கேட்டுக்கொண்டு ஒருவர் சென்றார். மழைக்கு அன்று தோல்வி என்றே சொல்லணும்.

ரா.கி.ரங்கராஜன்

ரா.கி.ரங்கராஜன்

சில மாதங்களுக்கு முன் ரா.கி.ரங்கராஜனிடம் பேசிய போது “சுஜாதா Henry Slesar எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு என்னிடம் தருவதாக சொன்னார்” ஆனால் அதற்குள் அவர் போய்ட்டார். அந்த புத்தகம் கிடைக்குமா ? ” என்றார். அந்த புத்தகம் பற்றி சுஜாதா என்னிடம் பேசியிருக்கார் அதை பற்றி கற்றதும் பெற்றதுமில் எழுதியிருக்கார் என்று நினைக்கிறேன்.

“அதுக்கு என்ன அதை வாங்கி தருகிறேன்” என்று சொல்லியிருந்தேன்.
[%image(20091114-raki_rangarajan.jpg|150|195|Ra Ki RengaRajan)%]

அமேசான் மூலம் வாங்கியிருந்த அந்த புத்தகத்தை அவரிடம் கொடுக்க பஸ்ஸில் சென்றேன். ரோட்டில் உள்ள குளம், குட்டைகளை எல்லாம் கடந்து, பஸ் டிரைவர் பழைய ஜூனியர் விகடனை கிழித்து கிளாஸ் கண்ணாடியை துடைத்துக்கொண்டு அண்ணா நகர் செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஐந்து ரூபாய் டிக்கெட்டில் இவ்வளவு நேர பிரயாணமா? என்று வியந்தேன்

ரா.கி.ரங்கராஜன் வீட்டுக்கு சென்ற போது, அவரும் அவர் மனைவி திருமதி கமலாவும் இருந்தார்கள். வாடகை வீடு, இருந்தாலும் அழகாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

குமுதத்தில் தன் நாற்பது வருஷ அனுபவம், கதை கட்டுரை, தற்போதைய எழுத்தாளர்கள், எஸ்.ஏ.பி, சுஜாதா, குடும்பம் என்று எல்லா விஷயங்களையும் பற்றி கிட்டத்தட்ட மூன்று மணி பேசினோம். இனிய அனுபவம்.

“லைட்ஸ் ஆன் - வினோத்தில் எப்படி கடைசியில் நச்சுனு ஆங்கிலத்தில Quote செய்யறீங்க”

“அது என்ன பிரமாதம், என்னிடம் நிறைய Quotation புத்தகம் இருக்கு, அதுல தேடினா கிடைக்கும், இல்லை நல்ல Quote இருந்தா அதற்கு ஏத்தாப்பல செய்தியை பிடிக்கணும்” என்று சொல்லிவிட்டு அவர் ரூமுக்கு சென்று சின்ன குழந்தை போல தன் எழுதும் ரூம், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் காண்பித்தார்.

சின்ன சிலேட்டில் “டிவி பார்” என்று சாக்பிஸால் எழுதி மாட்டப்பட்டிருந்தது.

ரா.கி.ரங்கராஜன் மனைவி திருமதி கமலா பற்றி சில வரிகள் சொல்ல வேண்டும். எப்போதும் சிரித்த முகம், இந்த வயதிலும், சுறுசுறுப்பாக இருக்கிறார். நிறைய படிக்கிறார், “இந்த புத்தகம் படிச்சேன் பாதி புஸ்தகம் அழகாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள், பாதிக்கு மேல சகிக்கலை” என்று ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் குணம். தன் கணவர் எழுதியவற்றை எல்லாம் ஒழுங்காக அடுக்கி, ஆல்பம் போல சேகரித்து வைத்துள்ளார். ஒரு எழுத்தாளருக்கு இது போல் மனைவி அமைவது மிகவும் அரிது. “சார் நீங்க எழுதிய ‘கடிதம்’ கதையை பற்றி விகடன் தீபாவளி மலரில் நக்கல் அடித்திருக்கார் என்பதை பற்றி கேட்க மறந்துவிட்டேன்.

“சார் உங்களுக்கு சில புத்தகம் எடுத்து வைச்சிருக்கேன், டிவி பக்கம் இருக்கு அதை கொஞ்சம் எடுத்துக்கிட்டு வாங்க, இப்ப எல்லாம் அவ்வளவா நடக்க முடியலை. எனக்கு வயசாயுடுத்து, I am 84 you know ?” என்றார்

புத்தகத்தில் கையெழுத்து போட்டு தந்தார்.

“உங்க ரூமில் “டிவி பார்” என்று சிலேட்டில்..”

“ஓ அதுவா இப்ப எல்லாம் டிவி பார்க்க கூட மறந்து போய்டறேன் ஞாபகம் வெச்சுக்க தான்.”

அவர் கொடுத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது “இதில போட்டுக்கோங்கோ மழையில நனையாம இருக்கும்” என்று அவர்கள் கொடுத்த பிளாஸ்டிக் கவரில் புத்தகங்களை போட்டுக்கொண்டு மழையில் நனைந்து பஸ்டாப் வந்தேன்.

Comments