Skip to main content

பகுதி 6 - வைத்தமாநிதி

6. வைத்தமாநிதி

 


திருக்குருகூருக்குள் நாதமுனிகள் நுழைந்தபோது, கதிரவன் மெதுவாக எட்டிப்பார்த்தான். முன் இரவின் புயலுடன் கூடிய மழையின் சுவடுகள் எங்கும் காணப்பட்டன. தாமிரபரணி ஆற்றிலிருந்து வழிந்தோடிய நீர், வழி நெடுகிலும் சிறு வாய்க்கால் போல ஓடிக்கொண்டு இருந்தது. சிறு மீன்கள் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் துள்ளிக்கொண்டு நீர் அழைத்துச் சென்ற பாதையில் காய்ந்த சுள்ளிகளும் இலைகளுடன் சென்றன. சிறு குன்றுகள் குளித்தது போல மாட மாளிகைகள் காட்சி அளித்தன.

மரங்களின் கிளைகள் ஈரத்தின் எடை காரணமாகத் தாழ்ந்திருந்தன. அதனால் அவற்றிலிருக்கும் பழங்களைச் சிறுவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் பறிக்க முடிந்தது. வாழை மரங்களும், கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்ந்த நெற்பயிர்களும் தங்கள் தலையைக் குனிந்து நாதமுனிகளை வணங்குவது போலக் காட்சி அளித்தன.

மூங்கில் இலைகளின் நுனியில் நீர்த்துளியின் மீது இளஞ்சூரியனின் ஒளிபட்டு, அவை வைரங்கள் பூத்துக் குலுங்கும் மரம்போலக் காட்சி அளித்தன. மின்னிய அக்காட்சியைக் கண்டு நாதமுனிகள் வியந்து பார்த்த அதே சமயம், பறவைகள் அம்மரத்தின் மீது கூட்டமாக வந்து அமர்ந்தன. அப்போது, வைரத்துளிகள் மொத்தமாக நாதமுனிகளின் மீது உதிர்ந்தன.  

முந்தைய இரவின் புயல் காற்றின் மிச்சம், மெலிதான காற்றாக வண்டுகள் துளைத்த மூங்கில் மரத்தின் வழியே சென்றபோது எழுந்த ஓசை, தேவகான புல்லாங்குழல் இசையாகக் கேட்டது. அந்த இசை புற நீர்மைப் பண்ணின்[1] சாயலில் கிளிகள் மற்றும் பறவைகளின் ஓசையுடன் கேட்பவர்களுக்குப் புளகாங்கிதம் கொடுத்தது. கிருஷ்ண த்ருஷ்ணா[2] தத்துவம் களிநடனம் புரிந்ததற்கான எல்லா அறிகுறியும் அவ்விடத்தில் தென்பட்டது.

நாதமுனிகள் தாமிரபரணியில் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஸ்ரீ ஆதிநாதர் கோயிலை நோக்கி விரைந்தார். பழங்காலத்தில் ஆதிநாதர் கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்தது. பின்னர் வந்த அரசர்கள், ஊரை விரிவுபடுத்தும்போது வடக்கே கரையைத் தள்ளி வைத்துப் படித்துறை கட்டினார்கள். 

தாமிரபரணி ஆற்றின் மகிமையையும், இந்த ஊரின் பெருமையையும் வாசகர்கள் புரிந்துகொள்ள, இந்த ஊரில் உலாவிவரும் ஒரு கதையை இங்கே சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். 

திருக்குருகூரின் வடகரையில் ஒரு முனிவர் வசித்து வந்தார். அவருடன் ஒரு நாய் இருந்தது. தினமும் அந்த நாய், தாமிரபரணி ஆற்றைக் கடந்து, திருக்குருகூர் தெருவில் உள்ள எச்சில் சோற்றை உணவாக உண்டு, மீண்டும் ஆற்றைக் கடந்து முனிவரின் இருப்பிடத்திற்குத் திரும்பிவிடும். ஒருநாள், அம்முனிவர் மரத்தடியில் யோகத்தில் இருந்த சமயம், எச்சில் சோற்றை உண்ட பிறகு நாய் முனிவர் இருக்கும் இடத்தை நோக்கி ஆற்றைக் கடந்தது. அப்போது வெள்ளம் அதிகமாகி, நாய் நீர்ச்சுழியில் அகப்பட்டுத் தத்தளித்து, இறுதியில் மாண்டது. சத்தம் கேட்டு விழித்த முனிவர், அந்த நாயின் ஆன்மா ஜோதி வடிவாக விண்ணுலகம் அடைவதைக் கண்டார். அதைப் பார்த்த அந்த முனிவர், “ஆகா! இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே!” என்று வருந்தி, இந்தச் செய்யுளைப் பாடினார்:

 

வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே[3]

இவ்வூரை ’பரமபதத்து எல்லை’ என்பார்கள். அப்படி என்றால் இந்த ஊர் எப்படிப்பட்ட சிறப்புடையதாக இருக்க வேண்டும்!

‘கங்குலும் பகலும் கண் துயிலறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும், சங்கு சக்கரங்களென்று கைகூப்பும், தாமரைக் கண்ணென்றே தளரும், எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டென்றும்’ என்று குருகூர் சடகோபன் பராங்குச நாயகியாக இரவும் பகலும் விடாது அழுது அழுது அந்த அழுத கண்ணீர்  நிரம்பி கீழே குளமாகத் தேங்கியிருக்க அதைத் தம் கைகளால் எடுத்து எடுத்து இறைத்து அதுவே தாமிரபரணி நதியாக ஓடியது,  இதைப் பார்த்து, கிருஷ்ணனுக்கு  ‘பராங்குச நாயகியிடத்தில்’ அளவு கடந்த காதல் உண்டாயிற்று. பராங்குச நாயகிக்குக் கிருஷ்ணன் மீது காதல் அதிகமா ? அல்லது கிருஷ்ணனுக்குப் பராங்குச நாயகியின் மீது காதல் அதிகமா என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது நமக்குக் கடினமான விஷயம். 

கலியுகத்தின் தொடக்கத்தில் குருகூர் சடகோபன் இறைத்த கண்ணீர் இன்றும் தாமிரபரணி நதியாக வேகமாகச் சென்றுகொண்டு அதனால் ஊரே வளமிக்கதாகக் காட்சி அளித்தது. ‘திருவழுதி வளநாடு’ என்று இந்த இடம் பெயர் பெற்றதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இவ்வழுதி வளநாட்டில் ஆறு பெரிய ஊர்களும் அவற்றில் ஒன்பது திருமால் கோயில்களும்[4] இருந்தன.  

நாதமுனிகள் கோயிலை அடைந்த போது, கோயிலை ஒட்டி பெரும் புளியமரம், கோயிலின் விமானத்தின் மீது பரவி உள்ளே இருக்கும் பெருமாளுக்கு குடை பிடிக்கும் ஆதிசேஷனோ என்று எண்ணும்படி காட்சி அளித்தது. அவற்றின் இடுக்குகளில் சூரிய ஒளி கலசங்கள் மீதுப் பட்டு பொன் போல ஜொலித்தது. பல பொந்துகளுடன் முதிர்ந்த அந்தப் புளியமரம் ஞானமுள்ள முனியோ என்று நாதமுனிகளுக்கு தோன்றியது. 

கோயிலுக்குள் சென்றபோது  திருமாமணி மண்டபம் சிற்பிகளின் வேலைத்திறத்தைப் பறைசாற்றின. மிக நுணுக்கமாக இவற்றை கையால் செய்தார்களா ? என்று வியக்கும்படி இருந்தன. கல்லையே இப்படிச் செதுக்கியிருந்தார்கள் என்றால் மரவேலையைப் பற்றிக் கேட்க வேண்டுமா ? கோபுரத்தின் மூன்று கட்டிடங்களிலும் மரத் தூண், யாழி, சாளரம், சிங்கப் பொதிகை உத்திரம், மேற்கட்டு விதானம் எல்லாம் நுட்பமான வேலைத்திறம் பெற்று கோயிலுக்கு மேலும் பெருமை சேர்த்தது.

‘நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே?’ என்ற பெருமாளைப் பற்றியும், ‘தென்குருகைக்கு உண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?’ என்று ஊரின் பெருமையையும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நாதமுனிகளின் அவசரம் நாம் அறிந்ததே. அதனால், மீண்டும் இந்தக் கோயிலையும், ஊரையும் வலம் வந்து இதன் பெருமையை மேலும் அனுபவிக்கலாம். இப்போது நாதமுனிகளுடன் பெருமாளைச் சேவிக்க வாசகர்களை அழைக்கிறேன். 

நாதமுனிகள் ஆதிநாத வல்லி என்ற அமுதவல்லி தாயாரை வணங்கி ஆராவமுதமாகிய ஆயிரம் பாசுரங்களைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து,கோல் தேனாக அனுபவித்து[5] ஆதிபிரானாகிய பொலிந்து நின்ற பிரானை சேவித்து அவர் செவிக்குளிர  ’ஆராவமுதே’ என்ற பத்துப் பாசுரங்களையும் அழகுற இசையுடன் பாடினார். 

இத்தலத்து பெருமாள் தானாகத் தோன்றி பிரம்மாவுக்கு அருள் புரிந்தவர். அதனால் அவர் ஆதிநாதப் பெருமாள் என்று பெயர் பெற்றார். தானாகத் தோன்றி பொலிந்து நின்ற பிரானாக, இவருடைய திருவடிகள் வெளியே தெரியாமல், பூமியில் புதையுண்டு இருக்கும். நாதமுனிகள் பாடிய அந்தப் பத்துப் பாசுரங்களைக் கேட்டு, புதையுண்ட ஓர் காலடியை எடுத்து, நாதமுனிகள் முன் வைக்கலாமா என்று பெருமாளுக்குத் தோன்றியது. 

நாதமுனிகளுக்குத் தீர்த்தம், மாலை பிரசாதங்களை அர்ச்சகர் வழங்கி ’குருகூர் சடகோபன்’ என்று எங்கள் ஊர் ’ஆழ்வார்’ அருளியது தங்களுக்கு எப்படிப் பாடம் ?” என்று கேட்டார். 

நாதமுனிகள் குருகூர் சடகோபன் தான் இவ்வூர் ‘ஆழ்வார்’ என்று கேள்விப்பட்டு உள்ளம் மகிழ்ந்தார்.


* - * 

ஆழ்வார் என்ற சொல் குறித்து, இத்தருணத்தில் வாசகர்களுக்கு கூற கடமைப்பட்டிருக்கிறோம். ஆழ்வார் என்ற சொல்லைக் சற்று ஆய்வு செய்தால், பெருமாள் மீதும் அவன் குணத்தின் மீது ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று கூறுவர். ஆண்கள் பெண்கள் இருபாலர்க்கும் பொதுவான சொல்லாக இருக்கிறது. ஆழ்' என்ற மூலச் சொல்லுக்கு 'மூழ்குதல், ஆழமாகச் செல்லுதல், ஆழப்படுத்துதல்'[6] என்ற பொருள்களில் வருகிறது. அதனால் பன்னிரு ஆழ்வார்களும் விஷ்ணுவின் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் பாடிய பாடல்களின் தொகுப்பே 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' ஆகும். 

இதை தவிர, குந்தவை ஆழ்வார், மதுராந்தகியாழ்வார், அம்மங்கையாழ்வார்(குலோத்துங்க சோழனின் மாள்) போன்று சோழ சாசனங்களில் அரச குடும்பத்தின் பட்டத்து ராணி, இளவரசிகளை ஆழ்வார் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அரச குடும்பப் பெண்களுக்கு அவர்களுக்கே உரித்தான கேச அலங்காரங்கள் இருந்திருக்கிறது. இன்றும் நம்மாழ்வார் கொண்டை என்பது அந்த மாதிரி ஒரு அரச குல கேச அலங்காரம் தான். பராங்குச நாயகி பாவத்தில் ஆழ்வார் செய்துகொண்ட அலங்காரமாக அது இருந்திருக்க வேண்டும்.

 * - * 

நாதமுனிகள், “செழிப்பு மிக்க இந்தப் பத்துப் பாசுரங்களைக் கொடுத்த குருகூர் சடகோபன் அருளிய நல்ல தமிழ் பாசுரங்கள் ஆயிரத்தையும், கருணையுடன் இங்கே யாராவது தருவார்களா? காட்டுமன்னார் என்ற இடத்திலிருந்து திருவரங்கம், திருக்குடந்தை வழியாக அவற்றைத் தேடிக்கொண்டு இங்கு வந்தேன்” என்றார். “இந்த க்ஷேத்திரத்தில் இருந்தல்லவா ஆயிரம் பாசுரங்களையும் சடகோபன் அருளியிருக்க வேண்டும்? சிறந்த அந்த ஆயிரமும் இவ்வூரில் வாசிக்கக்கூடிய நல்லாடியார்களுக்குத் தெரியும் என்று எண்ணி இந்தத் திருவழுதி நாட்டுக்கு வந்தேன். இந்த நல்ல தமிழை அறிந்தவர் இல்லங்களில் அந்த அமுதத் தமிழ் தாங்கிய ஓலைச்சுவடிகள் இங்கே இருக்கும் அல்லவா?” என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டார்.

அர்ச்சகர், “சில தமிழ் பாசுரங்கள் உண்டு என்றும், அது எழுதப்பட்டிருப்பதைப் பற்றியும் அறிந்திருக்கிறோம். ஆனால் எங்கள் ஊரில் அப்பாடல்கள் எதையும் நாங்கள் பார்த்ததில்லை. அவற்றைக் கேட்டதும் இல்லை. அவை காலப் போக்கில் மறைந்துவிட்டன என்று எண்ணுகிறோம். உங்களுக்குத் தெரிந்த அந்தப் பத்து பாடல்கள் கூட எங்களுக்குத் தெரியாது!” என்றார் வருத்தத்துடன். 

நாதமுனிகள் ஏக்கத்துடன், ஆனால் நம்பிக்கை இழக்காமல், கூர்மையான திருவாழி, திருச்சங்குகளை ஏந்தி நிற்கும் மேகம் போன்ற பொலிந்து நின்ற பிரானை வேண்டி வணங்கிய சமயம், அர்ச்சகர் “இந்த பாசுரங்களைப் பட்டோலை கொண்டு ஏற்றம் பெற்றவரான மதுரகவிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒருக்கால் இப்பாசுரங்களைக் கற்றிருக்கலாம். அவர்கள் இங்கிருந்து இரண்டு கல் தூரத்தில் இருக்கும் திருக்கோளூரில் வசிக்கிறார்கள்” என்றார்.

நாதமுனிகள் அவரை வணங்கி மீண்டும் ஆதிபிரானை நோக்க, அப்போது அர்ச்சகர் “திருக்கோளூர் விரைந்து சென்று அறிவீராக!” என்று திருவாய் மலர்ந்து அருளினார். அவை ஆதிபிரானின் வார்த்தைகளாக உணர்ந்த நாதமுனிகள், உடல் எல்லாம் ஆனந்தமாய், பழமையான வேதங்களைக் கற்றுத் தெளிந்தவரான நாதமுனிகள் ஆதிநாதரைத் திருவடி தொழுது, கோயிலை வலம் வந்து, கண்களில் நீர் மல்க, பாக்குமரங்கள் எங்கும் காணப்படும் சோலையை உடைய திருக்கோளூருக்கு இள மான் போல் துள்ளிக்கொண்டு புறப்பட்டார்.

பூமண்டலத்துள்ளே சீரும் சிறப்பும் மிகுந்தவனான அப்பெருமானுடைய திவ்ய தேசத்தை விசாரித்து திருக்கோளூர் வந்தடைந்தார்.

முன்னொரு காலத்தில் குபேரன் இந்தப் பெருமாளை வணங்கி இழந்த செல்வத்தைப் பெற்றதால், இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் பெருமாளாக வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்துடன், செல்வத்தைப் பாதுகாத்து அதை அளந்து கொடுக்கத் திருமுடிக்கு அடியில் மரக்கால் வைத்து சயனத் திருக்கோலத்தில் இருக்கிறார். நம் நாதமுனிகளுக்கோ செல்வம் என்பது சடகோபனுடைய ஈரத் தமிழ் பாசுரங்கள் தான் என்பதில் ஐயம் இல்லை.

நாதமுனிகள் திருக்கோளூர் குமுதவல்லி தாயாரை மனம் உருகிப் பிராத்தித்து, சயனித்துக்கொண்டிருக்கும் பெருமாளை மிகுந்த பக்தியோடு வணங்கி, ‘ஆராவமுதே’ என்ற பாசுரங்களைப் பெருமாள் கேட்க இன்னிசையில் பாடினார்.

தீர்த்தம் பிரசாதங்கள் கொடுத்து அர்ச்சகரிடம் நாதமுனிகள், “இவ்வூரில் நல்ல மெய்ஞானத்தைத் தரக்கூடிய மதுரகவிகள் திருவம்சத்தில் பிறந்த நல்லருள் மிகுந்த யாரேனும் உள்ளார்களா?” என்று வினவினார்.

அர்ச்சகர் “ஊரில் ஸ்ரீபராங்குச தாசப் பிள்ளை என்று ஒருவர் இருக்கிறார். அவர் மதுரகவிகள் வம்சத்தைச் சேர்ந்தவர். இப்போது இங்கே அவர் வரும் சமயம்” என்று சொல்லிமுடிக்க, ஓர் இளைஞர் அங்கே வந்தார். அவர் முகத்தில் மதிநலம் அருளப்பெற்ற ஞானம் குடிகொண்டிருந்தது. அர்ச்சகர் “இதோ இவர் தான் நீங்கள் கேட்ட பராங்குசத் தாசப் பிள்ளை” என்று அறிமுகப்படுத்தினார். 

பராங்குச தாசப் பிள்ளை நாதமுனிகளை மலர்ந்த முகத்துடன் நோக்கி அவர் திருவடிகளை நன்கு வணங்கி “அடியோங்கள் நாதமுனிகளா?” என்றார். 

நாதமுனிகள் வியப்புடன் அப்பிள்ளையைப் பேரார்வத்துடன் கண்டு திருவடி தொழுது “பெருமைமிக்க நற்குணமுள்ளவரே! அழகு பொருந்திய தமிழ் வேதத்தை அடியேன் பெற்று உய்யும் வகையிலே  பத்தும் பத்தாக[7]அருள்வீராக” என்று சொல்லி வணங்கி நின்றார். 

அர்ச்சகர் மனம் மகிழ்ந்து பெருமாள் மீது சூட்டப்பெற்ற மகிழம் பூமாலையை நாதமுனிகளுக்குப் பிரசாதமாகச் சூட்டினார். அது நாதமுனிகளுக்கு வகுள ஆபரணமாக மணம் வீசியது. அந்த மணத்தில் சடகோபனின் பாசுரங்களின் மணத்தை நாதமுனிகள் உணர்ந்தார். 

’வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன’ வாக்கியத்துக்கு ஏற்றார் போல் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்த செல்வத்தைத் தலையில் உள்ள மரக்காலைக் கொண்டு அளக்க ஆரம்பிக்கச் சித்தமானார் வைத்தமாநிதி பெருமாள்.

-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்... 

________________

[1] புற நீர்மைப் பண் - பூபாள ராகம்

[2] கிருஷ்ண த்ருஷ்ணா - கிருஷ்ண காதல்

[3] தேன் குடித்த வண்டு போலப் பெருமாளே! உன் கவிக்கு முன் தன் மகுடத்தைச் சாய்க்கும்படி கவி பாடிய ஞானத் தமிழ்க்கடலே! (குருகூர் சடகோபன்)

நீ வாழ்ந்த இடத்தின் தெருவில் சிந்திய எச்சில் சோற்றை உண்ட ஒரு சாதாரண நாய்க்குக்கூட, நீ மோட்சத்தை அளித்தாய். அந்த நாயைப் போல, இந்தப் பேய்க்கும் (இந்த அற்பனுக்கும்) மோட்சத்தில் இடம் கொடுத்தால், அது தவறாகிவிடுமா?

[4] ஒன்பது திருமால் கோயில்களும் - இன்றைய நவதிருப்பதி.

[5] கோல் தேனாக அனுபவித்தல் - மிக்க இன்பமாக அனுபவித்தல்.

[6] AK Ramanujan - Hymns for the drowning ; poems for Viṣṇu by Nammāl̲vār

[7] பத்தும்பத்தாக - முழுமையாக

Comments

  1. ஆழ்வார் திருவடிளே சரணம் 🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. ஆழ்வார் திருவடிகளே சரணம்

    ReplyDelete

Post a Comment