Skip to main content

தமிழன் என்று சொல்லடா

தமிழன் என்று சொல்லடா



’Her Mother's Killer’ என்ற ஸ்பானிஷ் தொடர் ஒன்றை முன்பு பார்த்திருக்கிறேன். அதில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கேவலமான விஷயங்களைச் செய்வார்கள் என்று காட்டியிருப்பார்கள். அதனால் இன்று தமிழக அரசியலில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை.


திராவிடக் கட்சிகள் சினிமாவைத் தங்கள் பிரச்சாரக் கருவியாகச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்தது. ‘முன்னேற்றக் கழகம்’ என்ற வார்த்தை கட்சிகளை மட்டும் முன்னேற்றப் பயன்பட்டது. மக்கள் முன்னேறினார்களா ?


சமீபத்திய உதாரணம் – அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள் என்று விழா எடுத்தார்கள். அதை வியப்புடன் சினிமாப் பிரபலங்கள் பார்த்துக் கைதட்டினார்கள். வெளிநாடுகளில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது என்பது கனவு. இங்கே அப்படி இல்லை. இன்றும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலையை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அங்கே வாக்களிக்கும் போது பார்க்கலாம்.  வாக்களிக்கும் ஒவ்வொருவரும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால், இதுவரை அரசாண்ட எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.


இந்தச் சினிமா அரசியல் இந்தி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல மட்டுமே ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகப் பயன்பட்டது. பராசக்தி போன்ற படங்கள் சமூக சீர்திருத்தம் மற்றும் கேள்வி கேட்கும் மனப்பான்மையை மக்களிடம் எடுத்துச் சென்றன. அந்தக் கதைவசனத்தைப் பேசியவர்களை  ‘நட்சத்திரங்களாக’ உயர்ந்தனர் திராவிட இயக்கத்தின் திரைக் கதாநாயகனாக உருவெடுத்தவர்கள், திரைப்படங்களில் ஏழை மக்களைக் காக்கும், நியாயத்திற்காகப் போராடும், நேர்மையான பாத்திரங்களை ஏற்று நடித்தார்கள். அன்றாட வாழ்வில் வறுமையால் துன்பப்பட்ட சாதாரண மக்களின் மத்தியில் "தங்களைக் காப்பாற்ற வந்த இரட்சகன்"  என்று இவர்களை உணர ஆரம்பித்தார்கள். 


திராவிடத் தலைவர்களை மக்கள் வெறும் அரசியல்வாதிகளாகப் பார்க்காமல், தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாகவும், தாங்கள் திரையில் பார்த்த நாயகர்களின் நிஜ வாழ்க்கை வடிவமாகவும் கருதினர். இதனால், அவர்களின் வீடுகளுக்கு முன் அதிகக் கூட்டம் கூடுவது, கட்-அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்வது, அவர்கள் மறைந்தபோது தற்கொலை செய்வது போன்ற தீவிரமான வழிபாட்டுச் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் இடம்பெற்றன. கிரிக்கெட் போல அரசியலும் ஒரு cult  ஆனது. பக்தி தமிழ்நாட்டிலிருந்து தொடங்கியது என்று பாகவதம் சொல்லுகிறது. கலிகாலமும் என்றும் சேர்த்துக்கொள்ளலாம். 


எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிக்குப் பிறகு, சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் நுழைவதும், அவர்கள் மீது மக்கள் அசைக்க முடியாத விசுவாசம் காட்டுவதும் ஒரு சாதாரண விஷயமாக மாறியது. விஜயகாந்த், சரத்குமார், பாக்கியராஜ், டி.ஆர், கமல் ஹாசன், விஜய் என்று பல நடிகர்கள் அரசியலில் குதித்தனர். (ரஜினி பாதி குதித்தார்). இன்றைய டிஜிட்டல் நுண்ணறிவு யுகத்தில், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ரசிகர் மன்றங்கள் மூலம் நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான நேரடிப் பிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. அல்லது அப்படி ஒரு தோற்றம் இருக்கிறது. இதன் மூலம் நடிகர்களின் செல்வாக்கு, பொதுக் கூட்டங்களில் பெரும் திரளாகக் கூடும் ரசிகர் கூட்டமாக வெளிப்படுகிறது. கோயில் உண்டியலில் போடும் காணிக்கை போல, இவர்களுக்குக் கூடும் இக்கூட்டமே, முதல் நாள் முதல் காட்சிக்குப் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்த அதுவே கலக்‌ஷன் ஆகிறது.  இந்தத் திரைப்பட ரசிகர் பட்டாளமே ஓர்  உறுதியான பார்வையாளர் எண்ணிக்கையை உறுதி செய்கிறது. இதுவே, அவர்களுக்கு அதிகச் சம்பளத்தை உயர்த்தவும் செய்கிறது. 


பண்டைய தமிழ்நாட்டில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக நடுகல் என்று ஒன்று அமைத்து வழிபடும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது. மக்கள் தங்கள் தலைவர்களை, நாட்டைக் காத்தவர்களை, அல்லது தங்களுக்கு நன்மை செய்தவர்களைச் சாதாரண மனிதர்களாக அல்லாமல், தெய்வீக அம்சங்கள் கொண்டவராகப் பார்க்கும் மனநிலை நீண்ட காலமாகவே உள்ளது. அதேபோல், பக்தி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, இறைவனுடனான தனிப்பட்ட மற்றும் தீவிரமான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசாண்ட மன்னர்கள் கோயிலைக் கட்டி அதற்கு நிலத்தைக் கொடுத்துப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்று ?  நடிகர்களின் சினிமாவில் காட்டப்படும் ('டூப்' மூலம்) செய்யப்படும் வீர தீரச் செயல்களைக் கண்டு, அதை அவர்கள் செய்யும் சாதனையாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு நடுவீதியில் நடுகல் போல கட்கவுட் அமைத்து  கொண்டாடுகிறார்கள். அவர்களை இலட்சிய நாயகனாக நம்பி அவர்கள் மீது நம்பிக்கையுடன் ஒரு தெய்வத்தைப் போல வணங்குகிறார்கள். 


திரைப்பட நடிகர்களைப் பார்க்க அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு உளவியல், சமூகவியல் மற்றும் வணிக ரீதியான காரணங்கள் ஒரு கலவையாக இருக்கின்றன. மற்ற நாடுகளிலும் இது போல இருக்கிறது ஆனால் இந்தக் கலவையில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தவிக்கும் இவர்களுக்கு, 'இவர்' வந்தால் தமிழ்நாட்டின் ‘சிஸ்டத்தை’ மாற்றுவார் என்று நம்பிக்கையுடன் யாராவது வரமாட்டார்களா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காத்துக்கொண்டு இருக்கும் இவர்களுக்குப்  படிப்பு அறிவு கொடுக்காமல், சாதி அரசியலில் பிரியாணியும் சாராயமும், இலவசங்களும் கொடுத்து அவர்கள் மூளையை மழுங்கச் செய்து ஒரு மனநலக் காப்பகத்தில் வைத்திருப்பது போல வைத்துள்ளார்கள். 


"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்று கூறியவர் யார் என்று விஜய் பிரச்சாரத்தில் கேட்கப்பட்ட பொது அறிவு கேள்வி  "கஷ்டப்பட்டு விஜய பார்க்க வந்த என் இரண்டு சின்னப் பிள்ளைகளும் போச்சு" என்று துக்கத்தில் அழக்கூட முடியாத அந்தத் தாயின் முகம் இன்றைய தமிழகத்தின் முகம். தலை நிமிர்ந்து நிற்கிறோமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.


-சுஜாதா தேசிகன்

29.9.2025

Comments