8. திறவுகோல்
[சென்ற வாரம் கடைசிப் பகுதி -
பராங்குசதாஸர் உள்ளம் உகந்து கண்ணி நுண் சிறுத்தாம்பை உபதேசிக்க ஆயத்தமானார். நாதமுனிகள் தலை தாழ்த்தி தியானித்து,
வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்[1]
என்று மதுரகவிகளை சிந்தனையில் வணங்கி விநயமுடன் உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார்.]
“நாதமுனிகளே! ‘வேறொன்றும் நான் அறியேன்’ என்று நீங்கள் கூறியது, மதுரகவிகளை மேலும் நினைவுபடுத்துகிறது! மதுரகவிகள் தம் குருவான குருகூர் சடகோபனுக்கு முன்னரே சூரியோதயத்தை அறிவிக்கும் அருணோதயம் போலத் தோன்றியவர். தம் குருவிடமிருந்து பெற்ற ஞானத்தை மக்களிடம் நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற பரமகாருணிகரான மதுரகவிகள், தம்மை அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். குருவைத் தவிர தான் வேறு தெய்வமும் வேண்டேன் என்ற மனநிலையுடன், இரவும் பகலும் அவரது திருத்தொண்டிலேயே ஈடுபட்டுத் தன் வாழ்நாளைக் கழித்தவர்,” என்று கூறிய பராங்குச தாஸர், “எங்கள் பரம்பரையில் மதுரகவிகள் குறித்து ஒரு சம்பவத்தை நினைவுகூறுவார்கள்” என்றார்.
நாதமுனிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்.
பராங்குசதாஸர் தொடர்ந்தார், “மதுரகவிகள் எப்போதும் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள், பெருமாளைப் பார்க்காதவண்ணம் ஓரமாகச் சென்று, உறங்காப் புளியமரத்தடியில் வீற்றிருக்கும் சடகோபனை மட்டும் சேவிப்பார். ஒருமுறை சடகோபன், ‘எப்போதும் என்னையே வணங்கிக்கொண்டிருக்கிறீர்களே, ஒருமுறை பொலிந்து நின்ற பிரானையும் சேவித்துவிட்டு வாரும்’ என்று கட்டளையிட்டார். மதுரகவிகளும் பொலிந்து நின்ற பிரானைச் சேவித்து, ‘என் ஆசாரியனுடைய கட்டளை; அதனால் இங்கே உம்மைச் சேவிக்க வந்தேன். என் விருப்பத்தினால் அல்ல!’ என்று கூறினார்.”
“ஏழு தலைமுறையாகச் சிற்றரசர்களின் பரம்பரையில் தோன்றியவர் மாறன் சடகோபன். அதனால் இவரைக் குருகைக் கோன் என்றும் அழைப்பதுண்டு. இராமனுக்கு எப்படி இலக்குவன் உறங்காமல் கைங்கரியம் செய்தானோ, அதே போல இவர் வீற்றிருந்த புளியமரம் தன் இலைகளை இரவில் கூட மூடிக்கொள்ளாது, இன்றும் கைங்கரியம் செய்துகொண்டிருக்கிறது. புளிய மரத்தடியில் இன்றும் சடகோபர் வீற்றிருக்கிறார் என்பது எங்கள் நம்பிக்கை!” என்ற பராங்குசதாஸர், மதுரகவிகளைத் தியானித்து முதல் பாசுரத்தை இனிய ராகத்துடன் பாடினார்.
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி[2] என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)
நாதமுனிகள் மனம் உருகி, அவர் மனக்கண்களில் யசோதைப் பிராட்டி, உடம்பில் உறுத்தும்படி பல முடிகளுடன், நீளம் போதாமல் அந்தச் சிறிய தாம்புக் கயிற்றால் கண்ணன் தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட அந்த மாயக் காட்சியைக் கண்டார். ஆனந்தக் கண்ணீர் பெருகி, “ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட அவனை நினைக்கும்போது, அவன் பண்புகள் பலபல, ஆபரணங்கள் பலபல, ஒளியுள்ள திருமேனி பலபல, நாமங்கள் பலபல, ஞானமும் பலபல, கண்டு, உண்டு கேட்டு, உற்று மோந்து அனுபவிக்கும் இன்பங்கள் பலபல[3].இவற்றை எல்லாம் ‘தென் குருகூர் நம்பி’ என்று சொன்ன அந்தக் கணமே மதுரகவிகள் இந்த இன்பத்தை எல்லாம் தன் நாவில் ஆரா அமுத இன்பமாக[4] அனுபவித்துள்ளார்!” என்ற நாதமுனிகள், ‘குருகூர் நம்பி, சடகோபன்’ என்ற திருப்பெயர்களைப் பல தடவை தானும் துதித்து, தன் நாவில் சுவையை உணர்ந்து, அவர் கண்களில் இன்பக் கண்ணீர் அருவியாகப் பெருகியது.
பராங்குசதாஸர் இரண்டாம் பாசுரத்தைப் பாட ஆரம்பித்தார்.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)
மெய்மறந்து கேட்ட நாதமுனிகள், “நாம் வேறு ஒரு கதி இல்லாது, நாம் ஒப்பில்லாத புகழை உடைய திருமகளின் நாதனாகிய எம்பெருமானின் திருவடிகளைப் பற்றுகிறோம்[5]. மதுரகவிகளோ, ‘தேவு மற்றறியேன்’ என்று குருகூர் நம்பியின் பொன்னடியே தனக்கு மெய்மை, தஞ்சம் என்று அவர் மனம் சடகோபனிடமே இறைஞ்சுதலைக்[6] காட்டுகிறது!” என்றார்.
அந்தாதியின் அடுத்த பாடலை இனிய இசையுடன் பாடினார் பராங்குசதாஸர்:
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. (3 )
இதைக் கேட்ட நாதமுனிகள், “குல நாதனான எம்பெருமானுக்கே ஓய்வில்லாது, இடைவிடாமல், எல்லாக் காலங்களிலும், எங்கும் கூடவே இருந்து எப்போதும் பிரியாது, அவன் பாதத்தை உகந்து பணிசெய்வதே நாம் வேண்டுவது[7]. ஆனால் மதுரகவியாருக்கோ, குருகூர் நம்பிக்கே தான் உரியவன்; அவனுடைய திருவடிகளே தமக்கு இசைந்த பேறு![8]” (இசைதல்)[9] என்று வியந்தார். வியந்த நாதமுனிகள் நான்காம் பாடலை ஆர்வமாகக் கேட்டார்.
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே. (4)
“அடடா! அன்பும் பண்பும் உடைய தாயும் தந்தையுமாய், குணம் நிறைந்த[10] சடகோபனே எனக்கு அழிக்கலாகாத பல்லுறவு[11]சம்பந்தம்; அவரே என்னைக் காக்கும் பெருமான் என்கிறார் மதுரகவியார்!” என்று நாதமுனிகள் நெகிழ்ந்தார்.
பராங்குசதாஸர் அடுத்தப் பாசுரத்தை இசையுடன் பாடினார்.
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே. (5)
நாதமுனிகளுக்கு அந்தப் பாடல் இன்ப வெள்ளமாக உள்ளே சென்றது. “திருக்குருகூர் நம்பியையே எப்போதும் சிந்தை செய்து, இடைவிடாது அவரையே சிந்தித்து, அவருடைய பாசுரங்களை இசையுடன் பாடி ஆடிய பயனாய்[12], பழமையான தீவினைகள் முழுவதும் வேரோடு அறுத்தொழிந்து, தகாத விஷயங்களில் பற்றை விட்டு[13], சடகோபனிடமே பற்றைக் கொண்டு, அவருக்கே அன்பனாய் அடியேன் பணிசெய்யும் பக்தனானேன். அற்புதம்!” என்றார். நாதமுனிகளின் உள்ளத்தில் மதுரகவிகள் முழுவதும் ஆக்கிரமித்துக்கொண்டார்.
பராங்குசதாஸர் ஆறாம் பாடலைப் பாடினார்:
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே. (6)
நாதமுனிகளின் உள்ளத்தில் மதுரகவிகளே பரவியிருந்தார். “எம்பெருமான் தானாகவே தகுதியற்ற ஜீவனை அன்புடன் தனக்கு உரியவனாக்கி, கைவிடமாட்டாரோ[14], அதேபோல், இன்கவி பாடிய திருக்குருகூர் நம்பி தன்னை எந்த நேரத்திலும் கைவிடமாட்டார் என்று தன் தன் பற்றைக்[15] கூறும் மதுரகவிகளின் குரு பக்தியை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்!” என்றார்.
இதைக் கேட்ட பராங்குசதாஸர் நாதமுனிகளை வணங்கி ஏழாம் பாடலைப் பாடினார்:
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே.(7)
மெய்மறந்து கேட்ட நாதமுனிகள், “காரியார் புதல்வரான மாறன் தானாகவே என்னைப் பேரன்புடன் பற்றியதால், தூறு மண்டின[16] என் தீவினைகள் விலகின. அவரே எனக்கு மருந்தானார்![17] அதனால் இந்த உபகாரன், தெள்ளிய தமிழில் பாடிய பாசுரங்களை எட்டுத் திசையில் உள்ளவர்களும் அறியும்படி புகழ்ந்து பரப்புவேன் என்கிறார் மதுரகவிகள். மதுரகவியார் பரப்பிய அப்பாசுரங்களைத் தேடி வந்துள்ளேன். அவை கிடைக்க மதுரகவிகளை வணங்குகிறேன்” என்றார்.
அதைக் கேட்ட பராங்குசதாஸர் தன் கைகளைக் கூப்பிக்கொண்டு, “மதுரகவிகளின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!” என்று அடுத்த பாசுரத்தை இனிய குரலில் பாடினார்:
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே. (8)
‘அருள் கொண்டாடும் அடியவர் இன்புற’ என்ற பாசுரம் தனக்காகவே பாடியது போல உணர்ந்த நாதமுனிகள், “எம்பெருமான் அருளைப் பெறும் அடியார்களுக்குத் தானே கருணையுடன் அருள் தரும் வெள்ளப் பெருக்காக இருக்கிறான்[18]. அந்த அடியவர்கள் இன்புற, வேதத்தின் உட்பொருளை இனிய தமிழில் ஆயிரம் பாசுரங்களாகப் பாடிய சடகோபனின் தகவு[19] ஒக்கத்தைப் பாருங்கள்[20] (கருணையின் உயர்வைப் பாருங்கள்). அதுவே உலகில் நிலைத்து நிற்கிறது என்கிறார் மதுரகவிகள்,” என்று கூறிய நாதமுனிகள், மதுரகவிகளைத் தியானித்து, குருகூர் நம்பியின் ஆயிரமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டினார்.
பராங்குசதாஸர் அடுத்த பாசுரத்தைப் பாடினார்:
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே. (9)
நாதமுனிகள் “அடடா! நற்குணங்களையுடைய சடகோபன் என்ற என் நம்பிக்கு ஆசையுடன், அவர் ஒளிமயமான திருவடிகளைத் தொழுது வணங்கிப் பணி செய்து, அன்றே எனக்கு அஞ்ஞானம் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அருளி[21], சிறந்த வைதிகர்களால் ஓதப்படும் வேதத்தினுடைய ஆழ்ந்த விளக்கத்தை நிலைத்து நிற்கும்படி இன் தமிழ் மொழியால் பாடி என் மனதில் நிலைநிறுத்தினான் என்கிறார் மதுரகவிகள்,” என்ற நாதமுனிகள், தனக்கும் அந்தத் தத்துவத்தை[22] உணர்த்த வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொண்டார்.
பராங்குசதாஸர் பத்தாவது பாசுரத்தை மனமுருகப் பாடினார்:
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே. (10)
“எல்லாப் பிறவிகளிலும் அடியார்களைக் காத்து அவர்களுக்கு ஞானத்தை அருளித் தன் திருவடிகளின் கீழ் அடிமைக்கொண்டருளும் பெருமானின் உபகாரத்தை[23] மதுரகவிகள் குருகூர் நம்பியிடத்தே காண்கிறார்! பிறர் திருந்துவதால் தனக்கு ஒரு பயன் இல்லாமற் போனாலும், அவர்கள் திருந்த வழியில்லாமல் போனாலும், தம் செய்கையாலே அவர்களை நன்றாகத் திருத்தி ஆட்கொண்டு தன்னைப் போல்[24] ஆக்குகிறார். அவருடைய சிறந்த திருவடிகளில் பக்தி ஏற்பட்டு, தொண்டு புரியவே முயற்சி செய்கிறேன் என்கிறார்,” என்று நாதமுனிகள் குருகூர் சடகோபனின் சுபாவத்தை எண்ணி அவர் திருவடிகளைத் தியானித்தார்.
பராங்குச தாஸர் கடைசிப் பாசுரத்தைப் பாடினார்:
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.(11)
என்று பாடி முடிக்க, நாதமுனிகள் ஆனந்தக் கண்ணீர் மல்க, “பராங்குச தாஸரே! மதுரகவிகள் என்ற பெயருக்கு ஏற்றாற்போலப் பத்துப் பாசுரங்களும் அதன் உட்பொருளையும் உங்களிடமிருந்து உபதேசம் பெற்றது, மதுரகவிகளிடமே பெற்றது போன்ற பேறு பெற்றேன்,” என்று பராங்குசதாஸ பிள்ளையின் திருவடிகளைத் தொழுதார்.
பராங்குசதாஸர் நாதமுனிகளைத் தழுவிக்கொண்டு, “இந்த உலகில் ஒருவன் ஏதோ ஒரு பொருளின் மீது பற்று வைத்து, நாளடைவில் அப்பற்றுப் பெருகி அளவற்றதாக மாறினால், அப்பற்று அப்பொருளுடன் நின்றுவிடாமல், அதனோடு சம்பந்தம் பெற்ற எல்லாப் பொருள்களிலும் படர்ந்து பெருகிச் செல்லும் என்பதை நாம் அனுபவத்தால் அறியலாம். இதேபோல், பெருமாள் மீதுள்ள அளவு கடந்த பற்றின் வெளிப்பாடே, நாம் அவரின் பாதுகைகளை ஆதரத்துடன் தலையில் வைத்துக்கொள்வதும், அவர் சூடிக் களைந்த மாலைகளை நாம் சூட்டிக்கொள்வதும், அவரை நீராட்டிய தீர்த்தத்தைப் பருகுவதும், அவர் காலடி பட்ட பிருந்தாவனம் போன்ற இடங்களில் அம்மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வதும் இதற்குக் காரணம். எப்படி பெருமாள் சம்பந்தம் பெற்ற பாதுகைகள், மாலைகள், தீர்த்தம் முதலியவற்றை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோமோ, அதே போலத்தான் பகவானின் சம்பந்தம் பெற்ற ஆசாரியர்களும், அடியார்களும்."
மதுரகவிகள் தாம் வாழ்ந்த காலத்திலேயே கண்ணன் இப்பூமியிலே அன்பர்களுக்கு அருள் புரிய மாயனாக இருந்தான்[25]. ஆனால், அவரிடம் ஈடுபடாமல் மதுரகவிகள் குருகூர் நம்பியையே தேடிக்கொண்டு, அவரையே கதியாகப் பற்றித் தன் குருபக்தியை வெளிப்படுத்தி, அவர் சம்பந்தப்பட்ட பெருமாளைப் பற்றினார்,” என்றார்.
இதைக் கேட்ட நாதமுனிகள், “ஆம்! நன்றாகக் கூறினீர்கள். சத்ருக்னன் பரதனையே பற்றி ராம சௌந்தரியத்தை ஜயித்தது போல், மதுரகவியார் ‘தேவுமற்றறியேன்’ என்று சடகோபனைத் தவிர வேறு தெய்வத்தை அறிய மாட்டேன் என்று இருந்தார். குருவை அடைதலே குறிக்கோள் என்று இருந்த மதுரகவிகள் வம்சத்தில் தோன்றிய உங்களுடைய அடியவனாக அடியேனை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
“நாதமுனிகளே! சடகோபனின் பாசுரங்களை மீட்டுத் தரப்போகும் உங்களுக்கே நாங்கள் அடியவர்கள். நிச்சயம் உங்களுக்கு மதுரகவிகள், சடகோபன் அருள் பூரணமாக உண்டு. தாங்கள் தேடி வந்த பாசுரங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடியேனும் எங்கள் வம்சமும், இந்தப் பூவுலகமும் காத்துக்கொண்டு இருக்கிறது. சென்று வாருங்கள்!” என்று வணங்கி விடை கொடுத்து அனுப்பினார். சடகோபனே எல்லாம் என்று இருந்த மதுரகவியாரின் வம்சத்து அடியார் அருள் பெற்ற பின், பெருமாளின் பரிபூரண அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா? மதுரகவி அடியார் சம்பந்தத்துடன் புறப்பட்டார் நாதமுனிகள்.
மனதில் மதுரகவியை வணங்கிக்கொண்டு, குதிரையில் போகும்போது எப்படி இயற்கைக் காட்சிகள் கடந்து செல்லுமோ, அது போன்று, நாதமுனிகளின் நடை இருந்தது. அவரின் நடை ஓட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் இயற்கைக் காட்சிகளை முழுவதும் விவரிக்க இயலாமல் போனதற்கு வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். அவரின் நடை ஓட்டமும், மன ஓட்டமும் ஊரை நெருங்க நெருங்க எப்படி இருந்தது என்று சுருக்கமாகத் தந்துள்ளோம்:
ஆற்றுநீர் பல வாய்க்கால்களாகப் பிரிந்து பாய்ந்து, இடமெல்லாம் நெல் வயல்களும் சோலைகளும் நிறைந்து, மனதுக்கும் குளுமையைத் தந்தது. கண்கள் மலர, செந்நெல் கவரி வீசும் காட்சிகளுடன், செறுவில் செந்நெல் கரும்பொடு இருப்பதைத் தாண்டியபோது, குன்றம் போல் மாட மாளிகைகள் சூழ்ந்த அழகு திருக்குருகூரை வந்தடைந்தார்[26]. அப்போது மதுரகவியின் திருவடிகளைத் தியானித்து, பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள், ஆயிரம் இன் தமிழ் பாசுரப் புதையலைத் திறக்கும் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற திறவுகோலுடன் வேகமாகச் சென்றார்
-சுஜாதா தேசிகன்
28.9.2025
பயணம் தொடரும்...
------------------------------------------------------------------------------------------------------
________________
[1] நாதமுனிகள் மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு அருளிய தமிழ் தனியன்.
[2] நம்பி என்றால் எல்லாவற்றிலும் நிறைந்தவர் என்று பொருள். முதல் முதலில் ஆசாரியனை நம்பி என்று அழைத்தவர் மதுரகவிகளே. ஆசாரியர்களை நம்பி என்று கூறும் வழக்கம் முதன்முதலில் உண்டாக்கியவர் மதுரகவிகளே.
[3] திருவாய்மொழி 2.5.6 ’பலபலவே ஆபரணம்…’ என்று தொடங்கும் பாசுரம்.
[4] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் முதல் வார்த்தை - ‘இன்பத்தில்’ - ஆனந்த ரூபமான அனுபவம்
[5] திருவாய்மொழி 6.10.10 ’அகலகில்லேன் இறையும் என்று’ என்று தொடங்கும் பாசுரம்
[6] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 2ஆம் வார்த்தை - இறைஞ்சுதலில்’ - சரணடையும் விஷயம்
[7] திருவாய்மொழி 3.3.1 ஒழிவு இல் காலம் எல்லாம்..’ என்று தொடங்கும் பாசுரம்
[8] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 3ஆம் வார்த்தை இசையும் பேற்றில் - அவனையே பலனாக கொள்ளும் ஆசை.
[9] இசைதல் - ஒப்புதல், சம்மதம் என்ற பொருள் இங்கே வருகிறது.
[10] திருவாய்மொழி 3.6.9 ’தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு..’ என்று தொடங்கும் பாசுரம்
[11] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 4ஆம் வார்த்தை - இகழாத பல் உறவில் - விட்டு நீங்காத பலவிதமான சம்பந்தம்.
[12] திருவாய்மொழி 2.6.6 ’உன்னைச் சிந்தை செய்து செய்து..’ என்று தொடங்கும் பாசுரம்
[13] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 5ஆம் வார்த்தை - இராகம் மாற்றில் - தகாத விஷயங்களில் ஆசையை ஒழித்தல்
[14] திருவாய்மொழி 7.9.8 ‘ஆர்வனோ ஆழி அங்கை..’ என்று தொடங்கும் பாசுரம்
[15] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 6ஆம் வார்த்தை -தன்பற்றில் - தன் விஷயமான பற்றுதலை உண்டாகுவது.
[16] திருவாய்மொழி 6.10.7 ‘அடியேன் மேவி அமர்கின்ற…’ என்று தொடங்கும் பாசுரம்
[17] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 7ஆம் வார்த்தை - வினை விலக்கில் - பாபங்களை போக்குவது
[18] திருவாய்மொழி 10.6.1 ‘அருள்பெறுவார் அடியார் தம்…’ என்று தொடங்கும் பாசுரம்
[19] தகவு - கருணை
[20] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 8ஆம் வார்த்தை - தகவு ஒக்கத்தில் - கருணையின் வளர்ச்சியிலும்
[21] திருவாய்மொழி 1.1.1 ‘ உயர்வு அற உயர் நலம்…’ என்று தொடங்கும் பாசுரம்
[22] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 9ஆம் வார்த்தை - தத்துவத்தை உணர்த்துதலில் - உண்மையான பொருள்களை அறியும்படி
[23] திருவாய்மொழி 3.7.7 ‘ சன்ம சன்மாந்தரம் காத்து…’ என்று தொடங்கும் பாசுரம்.
[24] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரத்தின் 10ஆம் வார்த்தை - தன்மையாக்கில் - தன் ஸ்வபாவத்தை அருள்கிறான்.
[25] ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரம்:
அன்பர்க்கே அவதாிக்கு மாயன் நிற்க
அரு மறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே..
[பக்தர்களுக்காகவே அவதாரம் செய்த கோபாலன் இருக்க குற்றமற்றவரான மதுரகவிகள் அர்த்தம் அறிய முடியாத வேதத்தின் பொருள்களை தம்முடைய தமிழ் பாட்டுக்களாலே வெளியிட்ட நம்மாழ்வாருடைய திருவடிகளையே அடைந்து உலகத்தார் எல்லோரும் அறியும்படி காட்டின பழைய வழியே ( பழைய வழி = ஆசாரியனை அடைவது என்கிற ) ஞானமுடையோருக்கு (துணிவர்கட்கு = அற்ப விஷயங்களை வெறுக்க கூடிய) நல்ல வழி]
[26] நம்மாழ்வார் திருகுருகூர் பாசுரங்களில் உள்ள இயற்கை வர்ணனை

Comments
Post a Comment