Skip to main content

நேற்றைய கட்டுரை இன்றைய விளக்கம்

 நேற்றைய கட்டுரை இன்றைய விளக்கம்



நேற்று எழுதிய ‘1,00,000 டாலர் வீசா - புலம்பெயரும் இந்தியர்களின் புலம்பல்’ என்ற கட்டுரை பலரை பாதித்துள்ளது. கமெண்ட்ஸ் பல வந்திருந்தன. எழுதிய முக்கியமான விஷயத்தை சிலர் மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.


‘சமீபத்திய செய்திகளை படிக்க மாட்டீர்களா?’ வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கைக்கு வியாக்கியானம் அருளியுள்ளார்கள். அவர்களுக்கு வெள்ளை மாளிகை சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். டிரம்ப் வரி விதிப்பையோ, இந்த விசா குறித்த குழப்பமான அறிவிப்பு பற்றியோ என் கருத்து ஒன்றுமில்லை. அவர்கள் நாடு, அவர்கள் பாடு. அவர் எத்தனை கண்டிஷன் போட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்தியா இவற்றை அனுகிய விதம், நாம் இந்தியர்களாகப் பெருமைப்பட வேண்டும். இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.


உங்களுக்கு அமெரிக்கா சென்றவர்களைப் பார்த்துப் பொறாமை, வக்கிரம், காழ்ப்புணர்ச்சி; இங்கே இடஒதிக்கீடு, ஊழல், அரசியல் அதனால் அங்கே போகிறோம் இதில் என்ன தப்பு என்று கோபமாக பலர் கேட்டுள்ளார்கள்.


’இந்தியா பொருளாதாரம் ஒரு செத்த பொருளாதாரம் (Dead Economy)’ என்று அவமரியாதை செய்த போது வந்திருக்க வேண்டிய கோபம், என் அடாசு கட்டுரைக்கு வந்திருப்பதில் வியப்பு இல்லை. இதை எழுதியவர்களின் குழந்தைகள் தற்போது அமெரிக்கவில் இருக்கலாம், அல்லது அவர்களுடன் இவர்களும் அங்கே இருக்கலாம் என்பது என் யூகம்.


அமெரிக்கா சென்று வந்தவன் என்ற முறையில் அங்கே பார்த்தவற்றை எழுதினேன். பெங்களூரிலிருந்து பீகார், குஜராத், பெங்கால், ஏன் நேபாள் கூடச் சென்றிருக்கிறேன். இங்கு எல்லாம் செல்லும்போது ’நாம் இந்தியர்கள்’. ஆனால் அமெரிக்கா சென்று என்ன வேலை செய்தாலும் ‘நீ இந்தியன்’. இரண்டாம் நிலை அணுகுமுறைதான் கிடைக்கும். கூட பணிபுரியும் சக ஊழியர்கள், ஏன் 7/11 போன்ற ரோட்டுக் கடைகளிலும் 'எங்கள் வேலை வாய்ப்புகளை பறிக்க வந்தவர்களே’ என்று அவர்கள் பார்வையிலேயே தெரியும். நம்பெருமாள், நம்நாடு என்ற இந்த ‘நம்’ அமெரிக்காவுடன் (அல்லது எந்த நாட்டுடனும்) சேர்த்துக்கொள்ள முடியாது. அடுத்த முறை அமெரிக்காவில் இருக்கும் ’குஜராத்தி’ உணவகத்தில், அல்லது ’சர்தாஜி’ டாக்ஸியில் ஒரு வித நிம்மதி கிடைப்பதற்கு காரணம் அந்த ‘நம்’தான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். 


பொதுவாக நாம் வெள்ளையரைப் பார்த்தால் நம்மைவிட அவர்கள் ஒரு படி மேலே என்ற மனப்பான்மை சுதந்திர இந்தியாவில் இருக்கிறது. ( வெளிநாடு சென்றவர்கள் இதை கூடுதலாக அனுபவித்திருக்கலாம்.) ’நம்’ பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த மனப்பான்மை படிப்படியாகக் குறைந்து இன்று தன்மானத்துடன் இவர்களிடம் சரிக்கு சமமாக நாம் நிமிர்ந்து நிற்கிறோம். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய/இந்தியர்கள் வேறு நிலைக்குச் சென்றுவிடுவார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியனும் புரிந்துக்கொண்டு பெருமைப்பட வேண்டும். 


இடஒதிக்கீடு கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடையாது. அதனால் இடஒதிக்கீடு ஜல்லிகளை இடதுகையால் ஒதுக்கிவிட வேண்டும்.  இன்றைய பிராமணர்கள் யார் கவர்மெண்ட் உத்தியோகத்துக்கு போவார்கள்?. ’பையன் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருக்கிறான்’ பழைய விசு பட டையலாக். குடுமி போல இது இன்று பொருந்தாது. நல்ல வாழ்கை, நல்ல பணம் அதனால் அமெரிக்கா போகிறேன் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். தப்பில்லை. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வேலையில் சேர்ந்து சில ஆண்டுகளில் அப்பாவிடம் “வெளிநாட்டுக்குப் போகட்டுமா?.. நல்ல சம்பளம் கிடைக்கும்” என்றேன்.


“வாழ்க்கையில் உனக்கு எது முக்கியம் என்று நீயே தீர்மானித்துக்கொள்; it all depends on what you value in life, it's your choice” என்றார்.


எழுத்தாளர் சுஜாதா சென்னையில் இருந்ததால் நான் இந்தியாவில், சென்னையில் இருக்க தீர்மானித்தேன். போயிருந்தால் என்று பல முறை யோசித்திருக்கிறேன்... பல லட்சம் டாலர் சம்பாதித்திருப்பேன். ஆனால் ஆழ்வார், சுஜாதா உட்படப் பல விஷயங்களை இழந்திருப்பேன்!


-சுஜாதா தேசிகன்

22.9.2025

Comments