Skip to main content

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல்

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல்



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக (சுமார் 88 லட்சம் ரூபாய்) உயர்த்தி புதிய மகாளய அமாவாசை அன்று முதல் இது அமலுக்கு வரும் என்ற உத்தரவை வெளியிட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை.


சமீப காலங்களில் மோடியின் ‘நண்பர்’ டிரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோக் குடிக்க, டாஸ்மாக் போலக் கூடுதலாக 10$ கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் நம்பக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டேன்.


பையன் அனுப்பிய ‘சிஸ்கோ’ முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு, மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமன் க்யூவில் என் பையன் ‘சான் ஹோசே’வில் இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அப்பாக்களின் நிலை என்னவாகுமோ என்று தெரியவில்லை. 


இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கொடுக்கும் ‘கேரட்’தான் இந்த H1B விசா. இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றங்களுக்கு இடையில் இந்த யதார்த்தத்தை இனி எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை.


H1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பெற்றோர் ஐசியூவில் இருந்தாலும் (இருக்க வேண்டாம்), இனி போட்டது போட்டபடி வர யோசிப்பார்கள். கனடா போன்ற நாடுகளுக்குச் செல்ல முனைவார்கள். நேற்றைய இலக்கியக் கூட்டத்தில் அரைக்கால் சட்டையுடன் கலந்துகொண்ட நபர்கள் உடனே அமெரிக்கா செல்ல புஷ்பக விமானத்தைத் தேடி அலைவார்கள். ‘இது மாதிரி நடக்கும் என்று தெரியும், அதனால்தான் வரவில்லை’ என்று அங்கேயே இருப்பவர்கள் தற்காலிக சந்தோஷமடைவார்கள். அமெரிக்காவில் தேவையில்லாத ஆணியை அடித்துக்கொண்டு இருப்பவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள். 


நமக்கும் அமெரிக்காவுக்கும் பெரிதாக நல்லுறவு இருந்ததில்லை. பொக்ரான் அணுகுண்டு சோதனை போன்ற பல விஷயங்களை சொல்லலாம். பல காலமாக பாகிஸ்தானை ஏவிவிட்டு அதில் குளிர்காய்ந்தார்கள். இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் அது எவ்வளவு தவறு என்று புரிந்துகொண்டார்கள். பிட்ஸ்பர்க் கோயில் குளிரில் பஞ்சகச்சத்துடன் பெருமாளைத் தொழுதாலும், நேபாளத்திலிருந்து பிழைக்க வந்த கூர்க்காக்கள் போலவேதான் இந்தியர்களின் நிலை அங்கே. அந்த ஏளனத்தை, அவர்கள் சம்பாதிக்கும் டாலரை இந்திய மதிப்பில் மாற்றிப் பார்க்கும்போது தன்மானம் சமன்செய்யப்படுகிறது. (நான் அமெரிக்க சென்ற போது இந்தியர்கள் (நானும் தான்) தினமும் இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்). 


சில மாதங்களுக்கு முன் நாளிதழில், கணிசமான எண்ணிக்கையிலான IIT நுழைவு தேர்வில் நல்ல ரேங்க் எடுத்த மாணவர்கள் ஐஐடியில் நுழையாமல் நேராக எம்.ஐ.டி போன்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்கிறார்கள், அல்லது ஐ.ஐ.டியில் ஒரு வருடம் படித்துவிட்டு அங்கே செல்கிறார்கள் என்ற செய்தி சற்று அதிர்ச்சியைத் தந்தது.


எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி கொடுக்கும் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, ஒரு பேட்டியில், "இதுவரை நான் வெளிநாடு செல்லவில்லை; என்னிடம் பாஸ்போர்ட்கூட இல்லை" என்று சொன்னது இந்த நூற்றாண்டின் வியப்பான செய்தி. கூட இன்னொரு விஷயத்தையும் அவர் கூறினார்: "பாரத தேசக் காற்றை சுவாசிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது!", இது அதைவிட!


இந்தியர்களின் அமெரிக்க கனவு கேள்விக்குறியாகியிருக்கும் இத் தருணத்தில் ஐயங்கார் குழந்தைகளுக்கு இனி சுலபமாக கல்யாணம் நடந்துவிடும். (டிசம்பர் மாசம் பையன் டிரம்ப்னால ஆத்தோட  இருப்பான்) அடுத்த முறை நித்திய கல்யாண பெருமாள் சந்நிதிக்கு செல்லும் போது  டிரம்பு பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.


-சுஜாதா தேசிகன்

21.9.2025

Comments