Skip to main content

பகுதி 7 - மாறன்

 7. மாறன் 



நாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம், “என்ன ஆச்சரியம்! என் பெயர் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது! அப்படியானால் அமுதத் தமிழில் குருகூர் சடகோபன் அருளிய அந்த ஆயிரம் பாசுரங்களையும் நீங்கள் அறிவீர்களா?” என்று வியப்புடன் கேட்டார்.

“ஐயனே! ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டதில்லை. ஆனால், எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக 'நாதமுனிகள்' என்ற திருநாமம் எங்களுக்கு மிகப் பரிச்சயம். இந்தப் திருநாமத்தைக் கொண்ட ஒரு யோகி என்றாவது ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க விஜயம் செய்யப் போகிறார் என்று எங்கள் குலமே பல நூறு வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை! இன்று தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது!” என்றார்.

இதைக் கேட்ட நாதமுனிகளுக்குப் பட்டமரம் தழைப்பது போன்ற நம்பிக்கை தழைக்கத் தொடங்கியது. மலையிலுள்ள பாம்புக்கூட்டங்களின் பிரகாசமான மாணிக்கங்கள் எல்லாம் ஒன்று திரண்டு அருவியாக கொட்டியது போன்ற ஆனந்தத்தை அளித்தது. அவ்வதிசயத்தை ஜீரணிக்க முடியாமல் புளகாங்கிதம் அடைந்து, “நீங்கள் கூறிய அந்த நாதமுனிகள் அடியேனா என்று நான் அறியேன். ஆனால், அந்தப் பாசுரங்களை அடையும் மார்க்கத்தை தாங்கள் கூறினால் அதை உடனே நிறைவேற்றச் சித்தமாக இருக்கிறேன்” என்று அவரை நன்கு வணங்கினார்.


“எங்கள் குலக்கொழுந்தான மதுரகவிகள், ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று தொடங்கக்கூடிய ஒப்பற்ற பத்துப் பாடல்கள் உள்ளது. அதை நாதமுனிகளுக்குத் தந்தருள வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்ட கட்டளை. அதனால் நாங்கள் பல ஆண்டுகளாகச் செவி வழியாக உங்களிடம் ஒப்படைக்கவே அதைப் பாதுகாத்து வந்திருக்கிறோம். அதைத் தாங்கள் கற்றுக் கொண்டு, நியமத்துடன் இசையோடு பன்னீராயிரம் முறை திருக்குருகூரில் உள்ள திருப்புளியமரத்தடியில் உருச் சொல்வீரானால், குருகூர் சடகோபன் மனம் மகிழ்ந்து அன்போடு அவர் திருப்பாசுரங்களை வாய் திறந்து திருவாய்மொழியாக அருளுவார்” என்றார்.


நாதமுனிகள், “மதுரகவி” என்ற திருநாமமே மதுரமாக இருக்கிறது. அவருடைய கண்ணி நுண் சிறுத்தாம்பும் மதுரமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.


பராங்குசதாசர் நாதமுனிகளை வணங்கி, “இந்த திருநாளுக்காகத்தானே எங்கள் தலைமுறை இத்தனை காலமாகத் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். இன்று உங்களை தரிசிக்கும் பேற்றைப் பெற்ற நான் பாக்கியவான். உங்களுக்கு மதுரகவிகள் பற்றியும், அவருடைய ஆசாரியனான குருகூர் சடகோபன் பற்றியும், கண்ணி நுண் சிறுத்தாம்பு பத்துப் பாடல்களையும் கூறுகிறேன்” எனக் கூற ஆரம்பித்தார்.


பராங்குசதாசர் சொன்ன குருகூர் சடகோபன் வரலாற்றை நாதமுனிகளைப் போல நம் நேயர்களும் கேட்க ஆர்வமாக இருப்பார்கள் என்பதை அறிந்து அதன் விவரங்களை இங்கே தந்துள்ளோம்.


பாண்டிய நாட்டில், குற்றமற்ற பொதியமலையிலிருந்து உற்பத்தியாகிப் பெருக்கெடுத்தோடக்கூடிய தாமிரபருணி[1]  நதியின் வளம் மிகுந்த திருவழுதி வளநாட்டில், மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூரில், தர்மத்தை வளர்க்கக்கூடிய வேளாள குலத்தில், திருமாலுக்கே தொண்டு புரியும் ‘திருவழுதிக்கிழவர்’ என்னும் பரம பாகவதர் ஒருவர் வாழ்ந்துவந்தார்[2]. அவருக்கு ‘அறந்தாங்கியார்’ என்ற குமாரர் பிறந்தார். அவருக்கு மகனாய், உலகை வாழ்விக்கச் சிறந்து விளங்கும் அருள் மிக்க ‘சக்ரபாணியார்’ பிறந்தார். அவருடைய மகனாய் ‘அச்சுதர்’; பிறகு மத்தளம் போன்ற தோள்களையுடைய அவர் மகன் ‘செந்தாமரைக் கண்ணர்’; அவருடைய குமாரர் ‘செங்கண்ணர்’; அவரது மகன் ‘போர்க்கழியார்’; இவருக்கு பொற்காரியார் என்பது இயற்பெயர். பொற்காரியார் செய்த பெருந்தவத்தின் பயனாக ஏழுலகங்களும் நற்கதி பெற ‘காரியார்’ பிறந்தார்.


காரியார் பதினாறு பிராயம் அடைந்ததும், தன் குலம் விளங்க, காரியாருக்கு மணம் முடிக்க விரும்பினார் பொற்காரியார். நறுமணம் வீசும் சோலை சூழ்ந்த மலை நாட்டில் ‘திருவண் பரிசாரம்’ என்ற ஊரில் தங்கள் குலத்தார் வாழ்கிறார்கள் என்று அங்குச் சென்றார். அங்கே ‘திருவாழ் மார்பர்’[3]  என்னும் திருமால் அடியாருடைய புதல்வி, வேதமே வடிவெடுத்தாற்போன்ற ‘உடையநங்கை’ என்ற திருநாமம் பெற்ற பெண்ணை மணம் பேசி, வேத முறைப்படி அக்னி முன் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது.


மணக்கோலத்தோடு திருக்குருகூர் வந்தடைந்த தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வந்தனர். உலகத்தார் அறியாத பெரும் செல்வத்தைப் பெற்ற காரியார், தங்கள் மண வாழ்க்கைக்கு அழகு சேர்க்க மக்கட்பேறு இல்லையே என்று பெரிதும் வருந்தினார்.


ஒரு நாள் திருவாழ் மார்பர் தம்பதிகளை ஊருக்கு அழைக்க, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, காரியார் தன் மனைவி உடைய நங்கையுடன் திருவண்பரிசாரத்திற்குச் சென்று சிலகாலம் தங்கிய பின், மீண்டும் திருக்குருகூருக்குத் திரும்பி வரும் வழியில், தாமரைத் தடாகமும், மணம் கமழ் சோலை சூழ்ந்த திருக்குறுங்குடியை வந்தடைந்து அன்று இரவு அங்கே தங்கினார்கள். உள்ளம் மிக வாடிய காரியாரும் உடையநங்கையும், தங்கள் குலதெய்வமான திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரானைச் சிந்தனையில் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தார்கள். அன்று இரவு, ஆகாயவாணி ஒலிப்பதுபோல் அவர்கள் செவியில் “நீங்கள் திருக்குறுங்குடி நம்பியை வழிபட்டால் உங்களுக்குப் புத்திரப்பேறு கிட்டும்” என்று விழுந்தது.


மறுநாள் காலை, காரியும், உடையநங்கையும், அங்கே புனித நீரில் நீராடி, திருக்குறுங்குடியில் நித்திய வாசம் செய்யும் வடிவழகிய நம்பியை தரிசித்து, ’எவ்வளவோ செல்வம் உள்ள எங்களுக்குப் புத்திர சம்பத்து இல்லையே! எங்களுக்கு உங்களைப் போலவே ஒரு குழந்தை வேண்டும்’[4] என்று நம்பியின் திருவடித் தாமரையைத் தொழுத அச்சமயம், ‘நாமே பிறக்கிறோம்!’ என்று அர்ச்சகர் முகத்தாலே வரம் அளித்தருளினார். மாலை பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு காரியார் தம்பதிகள் சொல்லுவதற்கரிய மகிழ்ச்சியுடன் திருக்குருகூரை வந்தடைந்தார்கள்..


குருகூரில் பொலிந்து நின்ற பிரானை வணங்கி வாழ்ந்திருந்த காலத்தில், உடைய நங்கையார் கருத்தரித்து, ஈரைந்து திங்களில் கரியமேனியனான பெருமாளுடைய அழகு நிறைந்த உருவமாகிய சேனைமுதலியார், ஒப்பற்ற நான்கு வேதங்களையும் தமிழில் சொல்லி உலகையெல்லாம் உய்விக்க, கலி பிறந்து நாற்பத்து மூன்றாவது நாளில், வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில்[5],, பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று, திருத்துழாய் மணத்தோடு முளைக்குமாப்போல, கலி தோஷத்தை அகற்றுவதற்காக ஓர் ஆண் மகவை ஈன்றாள்.


கலியில் உள் இருளை நீக்கப் பிறந்த குழந்தை, சூரிய உதயத்தால் புறஇருள் நீங்குவது போல ஞான ஒளி உடையதாக காட்சிக்கொடுத்தது. சேனைநாதனுடைய சிவந்த திருக்கையில் உள்ள பிரம்பு போன்ற நேர்த்தியான வரிசையில் அமைந்த கேசமும், திருச்சக்கரம் போன்ற தனமும், திருச்சங்கம் போன்ற வெண்மையான வடிவமும், அழகிய கண்களும் பெற்றிருந்தது. காரியும், உடையநங்கையும் இராமன் பிறந்த நாளில் தசரதனும், கோசலையும் பெற்ற ஆனந்தத்தை அடைந்தனர். சூரிய உதயத்தால் மலரும் தாமரைப் போல காரியார், உடையநங்கை மற்றும் ஊர் மக்களின் இதய மலர்கள் மலர்ந்து குதூகலம் அடைந்தனர். 


காரியார் பூதானம், கோதானம் செய்து காரியார் தமக்குப் பிள்ளைப் பேறு கிட்டியதை கொண்டாடினார். 


அக் குழந்தை அவதரிப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஓர் ஆனி மாதம் மூல திருநட்சத்திரம் அன்று, கோயில் வெளிச் சுற்றில் புளியமரம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது. தாமிரபரணி நீரைப் பருகிப் பெரிய விருட்சமாக வளர்ந்தது, கோயில் விமானம் முழுவதும் பரவிக் குடையாகக்[6] காட்சி அளித்தது. மரக் கிளைகளில் கிளிகளும், அணில்களும் அம்மரத்துக்கு ஆபரணமாக விளங்கின. மரம் பூத்துக் குலுங்கியது, ஆனால் காய்க்கவில்லை. அந்த மரத்தில் ஒரு சின்னப் பொந்து ஒன்று உருவாகி, கிளிகளும் அணில்களும் மரத்தின் மென்மையான இலைகளைக் கிள்ளி அதில் சேகரித்து, மெத்தென்ற பஞ்ச சயனம் போல அமைத்து வந்தன. திருக்கோயில் பக்கம் வளர்ந்ததால் அம்மரத்தை அவ்வூர் மக்கள் ‘திருப்புளி’ என்று அழைத்தனர். விமானத்துக்குக் குடையாக இருந்ததால் ஆதிசேஷன் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்கள். அந்தப் புளிய மரம் கண்வளராமல் ‘உறங்காப்புளி’யாக மாறனுக்காகக் காத்திருந்தது.


உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் முலைப்பாலுக்கு வாயைத் திறந்து அழத் தொடங்கி, கடைசியில் உடலுக்கு இறுதி உணவு இடும் வரை, உண்டியே உடையே என்று உகந்து வாழ்வதற்கு மாறாக, வடிவழகிய நம்பியின் திருவருளால் அவதரித்த அக்குழந்தை, பிறந்த அன்று தொடங்கிக் கண் விழியாது, வாய் திறந்து அழாது, உடல் ஆடாது, தாய்ப் பாலுண்ணாது, உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமலிருந்த போதிலும், உள்ளொளியுடன் உருவும், திருவும் பெற்று வாட்டமில்லாது இருக்கும் அதிசயத்தைக் கண்டு பெற்றோர் தெய்வக் குழந்தை என்ற வியப்பு ஒருபுறமும், மற்றொருபுறம்  வருத்தமும் அடைந்தனர்.


குழந்தையின் இளநகை, மழலை, தளர்நடை முதலியவைகளை கண்டும் கேட்டும் அடையும் களிப்பில் ஒரு தாய் பத்து மாதம் சுமந்த பலனையும், பெற்றெடுத்த சிரமங்களையெல்லாம் மறந்து பூரிப்படைகிறாள். ஆனால் உடைய நங்கையோ அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தும் தன்னைக் கண்திறந்தும் பார்க்கவில்லை என்ற ஏக்கம் அவளை வாட்டியது.  உடையநங்கையின் துயரத்தைக் கண்ட காரியும் நெருப்பிலிட்ட மெழுகென துடித்தார். எனினும் ஒருவாறு தங்களைத் தேற்றிக்கொண்டு, எம்பெருமான் தன்னுடைய திட்டம் முழுவதையும் எவருக்கும் காட்டுவதில்லை. அப்படியே அதைக் காட்டினாலும், யசோதை கண்ணன் வாய்க்குள் உலகத்தைப் பார்த்ததுப் போல, தலை சுழலும்; மதி மயங்கும். பெருமாள் தாமே பிள்ளையாக வரப்போவதாக வரங் கொடுத்தார். அதனால் காரியார் தம்பதிகள் சிறிதும் கவலைப்படாமல் நம்பியிடம் வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தை, அதனால் அக்குழந்தையைக் காப்பது அவன் பொறுப்பு என்று எம்பெருமான் மீது முழு பாரத்தையும் வைத்து, பிறந்த பன்னிரண்டாம் நாள் திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்குக் குழந்தையை எடுத்துச் சென்று, தொட்டிலிட்டு ஆதிநாதனைச் சேவித்து அவன் திருமுன்பே அந்தக் குழந்தையைச் சேவிக்கப் செய்து, உலகில் ஏனைய குழந்தைகளின் இயல்புக்கு மாறாக இருந்தமையால் அக்குழந்தைக்கு ‘மாறன்’[7] என்று பெயர் சூட்டினர்.


அச்சமயம் மாறன் என்று திருநாமம் பெற்ற அக்குழந்தை மெதுவாகத் தவழ்ந்து சென்று, அப்புளியமரத்தின் பொந்தில் தெற்கு நோக்கி, ஒப்பற்ற ஞான முத்திரையை வலது திருக்கையில் ஏந்தி, பத்மாசனத்தில் இரண்டு திருவடிகளையும் அமைத்துக் கொண்டு இடது கரத்தை மடியின் மீது வைத்துக்கொண்டு அமர்ந்தது. அந்த மரமே ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலாக அமைந்தது. பெற்றோர்களும் அக்குழந்தையைத் தங்கள் பிள்ளையாகக் கருதாமல், ‘எங்கள் குடிக்கரசே!’ இனி பொலிந்து நின்ற பிரான் உன்னைக் காக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு பேணி வந்தார்கள்.


ஆதிப்பிரான் தான் பிரியப்பட்டுச் சூட்டிக் களைந்த மகிழ மலர் மாலையைப் பிரியமான மாறனுக்காகச் சேனை முதலியார் மூலம் அனுப்பி, அவருக்குப் பஞ்ச சமஸ்காரங்களைச் செய்வித்து, எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்கச் செய்து, ‘மயர்வற மதிநலம்’ அருளினான்[8]. உள்ளொளியுடன் உருவும், திருவும் பெற்று, ஞான முத்திரையுடன் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் பெருமாளை நினைத்த வண்ணம், தவ முனிவராக ஞான ஒளியுடன் காட்சி அளித்தான் அந்தப் பாலகன்.


கருவிலிருக்கும் குழந்தை ஞானத்துடன் இருக்கும். அது பிறந்தவுடன் சடம் என்ற காற்று குழந்தையைத் தீண்டும்போது ஞானம் அஞ்ஞானமாக மாறி, அழுதல், அரற்றுதல் போன்ற தன்மைகளை உருவாக்குகிறது. இந்தச் சடமென்னும் வாயு மாறன் பிறந்தவுடன் இவரைத் தொடுவதற்கு வர, அப்போது அதனைக் கோபித்து ஒரு ‘ஹுங்காரம்’ செய்து ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால், இவருக்கு ‘சடகோபன்[9]’  என்ற காரணப் பெயர் உண்டாயிற்று.


‘உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர்?’ என்று ஊர் மக்கள் போற்றினார்கள். சடகோபர் பதினாறு வயதிலும் கண் விழியாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள், ’மரம் அசைந்தாலும், மகன் அசையாது இருக்கிறானே!’ என்று கலங்கினர். வைத்தியர்களும், மந்திரவாதிகளும் வந்து முகத்தைப் பார்த்து ‘எங்கள் மூலிகையும், மந்திரமும், தந்திரமும் பயன்படாது!’ என்று வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். ஏழு தலைமுறையாக வந்த அரசு என் பிள்ளையுடன் பட்டுப்போக போகிறதே! என்று காரியார் உள்ளம் பதைபதைத்தது. பெரும்கலக்கமும், துன்பமும் அடைந்தாலும் திருகுருகூர் ஆதிநாதன் இவனை பாதுகாப்பான் என்ற திடமாக நம்பி, அவனை வலம் வந்து “பிரமன், சிவன், தேவர்களின் குறை தீர்க்க ஓடோடி சென்றாய். எங்கள் குறையை எப்போது தீர்ப்பாய்” என்று அவனது திருவடிகளை நம்பிக்கையுடன் வணங்கி நின்றார்கள். 


அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. மாறன் சடகோபன் பிறப்பதற்கு முன்பே திருக்கோளூரில் அந்தணர் குலத்தில் விஷ்ணுசேனர் என்ற அந்தணருக்கு புதல்வராய் பிறந்தவர் மதுரகவி. காரியாரும், உடையநங்கையும் ஆதிப்பிரானின் திருவடிகளை தொழுத அச்சமயம், மதுரகவிகள் இராமனின் அவதார பூமியில் கிழக்கு திசையில் ஆயிரம் சூரியன் உதித்தது போன்ற பேரொளி ஒன்றைக் கண்டு அதிசயத்து, அவ்வொளியை லட்சியமாகக் கொண்டு வேகமாக வழி நடந்து, இப்புளியமரத்தடியை அடைந்தார். இந்த விநோத ராஜகுமாரனைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து, வியந்து, மாறனை வாய்திறக்க வைத்து, ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று சடகோபருடன் உரையாடி, அவருக்கே சீடரானார்.


இதற்கு பிற்பாடு நடந்த கதையை நாதமுனிகளுக்கு முன்பே நம் வாசகர்கள் அறிந்துள்ளதால் அதை இங்கே மீண்டும் கூறவில்லை.


பராங்குசதாஸ நம்பி நாதமுனிகளை நோக்கி, ” நாங்கள் மதுரகவிகள் வம்சம். மதுரகவிகளுக்கு எல்லாமே சடகோபன் தான். மதுரகவிகள் தம் குருவாகிய சடகோபனை குறித்து ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்று பாடியிருக்கும் பதினோரு பாடல்களே நமக்கு தெரியும். எங்கள் வம்சத்தவர் எல்லோரும் சடகோபருடைய பெயரையே சூட்டிக்கொள்வோம்[10]. என் தந்தை பெயர் வகுளாபர தாஸர் , என் பெயரான பராங்குசதாஸன் . இரண்டுமே சடகோபருடைய பெயர்கள் தான்.” என்றார் 


நாதமுனிகள் வியந்து “ஆஹா! இந்தப் பெயர்களின் காரணம் என்னவோ?” என்று கேட்டார். 


பராங்குசாஸர் ”திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர்[11] என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு ’மாவட்டி’[12] என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர்[13] என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!” என்று உடனே பின்வரும் படலைக் கூறினார். 


சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? - தாமம்

துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?

உளவோ பெருமான் உனக்கு?


நாதமுனிகள் அந்தப் பாடலின் பொருள் சுவையை வியந்து 


”சடகோபனின் ஊர் திருக்குருகூரோ? இல்லை திருப்பாற்கடலோ? 

பெயர் பாராங்குசனோ இல்லை நாராயணனோ? 

திருமாலை துளசியில் ஆனதா? இல்லை வகுள மலர்களால் ஆனதா? அவருக்குத் தோள்கள் இரண்டோ ? இல்லை நான்கோ? 


இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போனால் திருமாலும் சடகோபனும் இருவர் அல்ல, ஒருவரே என்பது புரிந்துவிடும்!” என்ன அருமையான பொருள் பொதிந்த சொற்கள் என்று உருக்கமாக கூறி, அடியேனுக்கு அமுதக் கவி ஆயிரமும் கிடைக்க மதுரகவிகளின் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ உபதேசிக்க வேண்டும் என்று கருணை கூர்ந்து வணங்கி நின்றார். 


பராங்குசதாஸர் உள்ளம் உகந்து கண்ணி நுண் சிறுத்தாம்பை உபதேசிக்க ஆயத்தமானார். நாதமுனிகள் தலை தாழ்த்தி தியானித்து, 


வேறொன்றும் நான் அறியேன்

வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்

வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்

எம்மை ஆள்வார் அவரே அரண்[14]


என்று மதுரகவிகளை சிந்தனையில் வணங்கி விநயமுடன் உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார்.


-சுஜாதா தேசிகன்

பயணம் தொடரும்... 

________________

[1] ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே

ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்

நம்மாழ்வார் மங்கள ஸ்லோகம்

[2] எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை, வானவர் வானவர் கோனொடும்,

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,

அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.

திருமலையில் வசிக்கும் முடிவில்லத புகழுடைய எம்பெருமான் எம்குலநாதன் என்கிறார் நம்மாழ்வார்

[3] திருவாழ் மார்பர் - ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தின் தமிழ்ச்சொல். வழக்கிழந்து விட்டது.

[4] கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய

கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்

நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற

தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.

என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற - நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம்.

[5] வைகாசி விசாகம் :

ஸ்வாமி தேசிகன் பிரபந்தசாரம் - “இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்எழில் குருகை வருமாறா விரங்கு நீயே” ; ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்

[6] சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு

[7] மாறன் என்ற பெயர் பாண்டிய மன்னர்களுக்கே உரிய பொதுப் பெயர். பெரியாழ்வாரின் சீடனான மாறவர்மன் என்ற ராஜசிம்ம பாண்டியனின் மகன் மாறன் சடையன் என்பது. இப்பெயரை மாறன் சடகோபன் என்ற பெயருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மாறவர்மன், மாறன் சடையன், மாறன் காரி என்ற மன்னர்கள் பரம வைஷணவர்கள். பாண்டியர்களுக்கே உரிய பராங்குசன் என்ற பெயரும் நம்மாழ்வாருக்கு உண்டு. 

[8] அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து

அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்

அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று

அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.

இந்தப் பாசுரத்தில் அறிவு தோன்றுவதற்கு முன்பே இளம்பருவத்திலேயே பெருமாள் பேரன்பு கொண்டவராக எனக்கு அருள் புரிந்தான் என்கிறது இப்பாசுரம்.

[9] திருவாய்மொழி இறுதிப்பாசுரமகிய பல சுருதிப் பாசுரங்களில் பலவற்றில் ‘சடகோபர்’ என்ற முத்திரைச் சொல்லாக அமைந்திருக்கிறது.

[10] இன்றும் திருக்குருகூர் சுற்றி உள்ள ஊர் பெயர்கள், குடும்பத்தில் மூத்த பிள்ளைகளில் பெயர்கள் சடகோபன் சம்பந்தமாகவே இருக்கும். வேற்று மதத்தினர் கூட சடகோபன் ‘ஆழ்வார்’ என்ற அபிமானத்தில் இந்த பெயரை தங்கள் முதல் பிள்ளைக்கு சூட்டுகிறார்கள்.

[11] மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று.

[12] மாவட்டி என்பது அங்குசம்

[13] பராங்குசர் 

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? 

என்ற பாடலில் வருவது சான்று.

[14] நாதமுனிகள் மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு அருளிய தமிழ் தனியன்.

Comments