Skip to main content

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்!

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்!


கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன்  அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடை, திருத்தப்பட்ட  முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை அட்டை வாங்கி அந்தச் சொர்க்கப் பூமியில் நிரந்தரமாக வாசம் செய்வது தான். அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், பரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ? 

ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் அமுத மொழி ஒன்றில் நம்மைத் தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘இந்த மானிடப் பிறவி அடைந்திருப்பதற்கு முக்கியமாக நான் செய்ய வேண்டிய காரியம் என்ன ? இந்த மனிதப் பிறவி எடுத்ததற்கு முக்கிய பலன் என்ன ? என்பதைப் பற்றி ஐந்து நிமிஷங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள்.  முடிவில் ஒரு தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். அதாவது இவ்வுலகிலும், சாஸ்திரத்தால் அறிந்த மேல், கீழ் உள்ள உலகங்களிலும், நாம் கண்ணாலே பார்ப்பவையாகவும், காதாலே கேட்பவையாகவும், மனத்தினால் நினைப்பவையாகவும், அனுபவத்தில் இருப்பவையாகவும் உள்ள சகலப் போக போக்கியங்கள் எல்லாம் மின்னல்கள் போலவும் நீர் மேல் குமிழ் போலவும் கண்களை மூடித் திறப்பதற்குள் அழிந்து போகக்கூடியவை என்றும் கஷ்டங்களை விளைவிக்கக் கூடியவை. 

இவ்வுலகில் உள்ள பெரிய பெரிய பதவிகளையும், அவற்றினால் ஏற்படுகிற கஷ்டங்களையும், ஒவ்வொரு குடும்பத்திலும் படுகிற கஷ்டங்களையும் நன்றாக நினைத்துப் பாருங்கள். இவை யாவும் நம் பிறவிப் பயனாக என்ற தீர்மானத்துக்கு வந்துவிடுவீர்கள். 'வேறு எதுதான் மனிதப் பிறவி எடுத்ததற்குப் பலன்?" என்றால், மறுபிறவி இல்லாமல் இதைக் கடைசிப் பிறவியாக்குவது தான் இந்தப் பிறவியின் பயனாகும். ’ஆதலால் பிறவி வேண்டேன்' என்று ஆழ்வார் அருளிச் செய்துள்ளார். ஆகையால், மறுபிறவியை ஒழிக்க இந்தப் பிறவி எடுத்திருக்கிறோம் என்று தீர்மானம் செய்ய வேண்டும். பகவானும் இவ்விதம் நினைத்துத் தான் இந்த ஜீவாத்மாவுக்குப் புனிதமான மனித உடலைக் கொடுத்திருக்கிறான் என்று சாஸ்திரங்களிலிருந்து தெரியவருகிறது.

இந்தப் பிறவி எடுத்ததற்குப் பலன் மறுபிறவியை ஒழிப்பது தான் என்று ஐந்து நிமிஷத்தில் யோசனை செய்து முடிவுக்கு வந்துவிடுங்கள். அதன்பிறகு, 'மறுபிறவி இல்லாமல் எப்படித் தடுக்க முடியும்?' என்ற கவலை உண்டாகலாம்.



 

ஸ்ரீவைகுண்டத்தில் பகவானோடு சேர்ந்தும் அங்குள்ளவர்களோடு கலந்தும் அனுபவிக்கிற ஆனந்தத்துக்கு அளவே கிடையாது. நமக்குச் சொந்த இடம் பரமபதமேயாகும் இதை எப்படி அடையலாம் ? கவிதார்கிக ஸிம்ஹமான நம் தூப்புல் தேசிகன் வேதாந்த ஸாரமான ‘பரமபத ஸோபாநம்’ என்ற சாஸ்திரமான ஒரு கைவிளக்கைக்  கொடுத்திருக்கும் போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? 

நம் தூப்புல் தேசிகன் பரமபதம் என்ற என்ற மிக உயர்ந்த இலக்கை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்குகிறார். 

விவேகம்
நிர்வேதம்
விரக்தி
பீதி
ப்ரஸாதஹேது
உத்க்ரமணம்
அர்ச்சிராதி
திவ்ய தேச ப்ராப்தி
பராப்தி 

என்று ஒன்பது படிகளாக நமக்கு அருளியுள்ளார். இதைப் படிக்கும் போது இது எல்லாம் நமக்குப் புரியாது என்று உங்களுக்குக் கவலை ஏற்பட்டால், கவலை வேண்டாம். 





ஸ்ரீமதி ஹேமா ராஜகோபாலன் காலசேஷப முறையில் கற்று, ஆராய்ந்து பல தலைப்புகளில் சென்னை பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்துக்கு சமர்ப்பித்ததை நமக்கு நூலாகத் தந்துள்ளார். எளிய தமிழில்  நாம் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அட்டவணை போட்டு வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்று இந்த ஒன்பது படிகளையும் ஏறுவதற்கு வழிகாட்டியுள்ளார். 

இந்த நூலை வாங்கிப் படித்தாலே ஸ்ரீநிகமாந்த தேசிகன் உங்களுக்குப் பரிபூரண அருள் செய்வார் என்பது நிச்சயம்.

-சுஜாதா தேசிகன்
28.5.2024
நூல் அட்டைப் படம், உள் விவரங்களைக் கொடுத்திருக்கிறேன்.

Comments

  1. மிகவும் உபயோகமான விஷயம், ஸ்வாமி! தன்யோऽஸ்மி!🙏🙏👍

    ReplyDelete

Post a Comment