Skip to main content

சித்திர ராமாயணத்தின் சரித்திரம்

 சித்திர ராமாயணத்தின் சரித்திரம் 


’அந்தக் கால’ விகடன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் திருப்திப்படுத்தும். பல வருடங்களாக அதில் பிஸ்ரீ எழுதிய சித்திர ராமாயணம் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவல். பல பழைய புத்தகக் கடை, வாட்ஸ்ஆப் குழுக்கள் என்று பல வருடங்களாக தேடி அலைந்தேன்.

அந்த நூலைக் குறித்துச் சிறு குறிப்பு 

பி. ஸ்ரீநிவாச்சாரி என்ற பி.ஸ்ரீ 1944 - முதல் 1957 வரை 13 வருடங்கள் தொடர்ந்து கம்ப ராமாயணத்தை ’சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் வெளிவந்தது. சில பக்கங்களைத் திரு பசுபதி அவர்களின் வலைப் பதிவில் படித்த போது என்னைப் போலவே அவரும் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று அறிந்து. அவரிடம் எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு 

”கிட்டாது ! பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்....  வர்த்தமானன் விளம்பரம் கொடுத்தனர்... பிறகு வரவில்லை.... 'சக்தி' விகடன் சுருக்கி வெளியிடத் தொடங்கியது.... பிறகு ஆரண்யக் காண்டத்துடன் நின்று விட்டது... நானும் கேட்டுச் சலித்து விட்டேன்.... என்னிடம் இருந்த சில அத்தியாயங்களை வெளியிட்டு விட்டேன். ....உங்களுக்கு வர்த்தமானனில் யாரேனும் தெரிந்தால்.... கேட்டுச் சொல்லுங்கள் ...” என்றார். 



சென்ற வருடம் அவர் இறைவனடி சேர்ந்தார் என்று தெரிந்த போது அவர் தேடிய  ’சித்திர ராமாயணம்’ மனதில் ஊஞ்சல் ஆடிவிட்டுச் சென்றது.  

அந்தச் சமயம் விகடன் ’பிரிண்ட் ஆன் டிமாண்ட்’ என்ற விளம்பரம் கண்களில் பட, அதன் விலையைப் பார்த்த போது  ஸ்ரீராமர் மீண்டும் வனவாசம் செல்லும் போது அவரிடம் தானம் பெற்று வாங்கலாம் என்று தள்ளிப் போட்டேன். 



சென்ற வாரம் சென்னை சென்ற போது நண்பர் கணேஷ் அவர்களிடம் இந்தப் புத்தகம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அவரிடம் பார்த்துவிட்டுத் தருகிறேன் என்றேன். அவர் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டார். அவருக்கு ஸ்ரீராமர் அருள் புரியட்டும்.

திரு பசுபதி இந்தப் புத்தகத்தைப் பார்த்திருந்தால் அவருடைய ஆசை நிறைவேறியிருக்கும். இந்தப் பொக்கிஷத்தைச் சலுகை விலையில் எல்லோரையும் சென்றடைய அந்த ஸ்ரீராமர் தான் அருள் புரிய வேண்டும். 

தினமும் சந்தியாவந்தனம் செய்து விட்டு ஓர் அத்தியாயம் படிக்கலாம் என்று இருக்கிறேன்.

- சுஜாதா தேசிகன்

17.5.2024

பிகு: விகடன் புத்தகத்தில் அந்த காலத்தில் வந்ததை அப்படியே சோப்பு விளம்பரங்களுடன் பிரிண்ட் செய்திருக்கிறார்கள் !

Comments

Post a Comment