தமிழ் தொடரடைவு
இன்றைய செயற்கை நுண்ணறிவின் இயந்திர கற்றல் மற்றும் ஆழமான கற்றல் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட வழிமுறைகளைக் கொண்டு மொழியியலுக்கு ஏற்ற மாடல் கொண்டு முழு திவ்யப் பிரபந்தத்தையும் அதன் உரைகளையும் கொண்டு வந்துவிட்டால், பல விஷயங்கள் நமக்குச் சாத்தியமாக்கும்.
உதாரணத்துக்கு ஆழ்வார்கள் எவ்வளவு முறை ‘அடியார்’ என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்கள். எந்த ஆழ்வார் அதிகம் உபயோகித்துள்ளார் போன்ற கேள்விகளைக் கேட்கலாம். ஆழ்வார் பாடல்களைக் கொண்டு நரசிம்ம அவதாரம் குறித்து பத்து நிமிட உபன்யாசம் செய் என்றால் உடனே செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று ஸ்ரீ.உ.வே வெங்கடேஷ் ஸ்வாமி போல உபன்யாசம் செய் என்றால் தோணி சிக்ஸ் அடித்த மாதிரி நரசிம்மர் அடித்தார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படக் கூடாது!
திவ்யப் பிரபந்தத்துக்கு ‘Concordance’ முதலில் தேவைப்படும். [Concordance - ’an alphabetical list of the words (especially the important ones) present in a text, usually with citations of the passages in which they are found’] தமிழில் தொடரடைவுகள்.
உதாரணமாக ’அடியார்’ என்ற வார்த்தை ஆழ்வார்களின் அருளிய திவ்யப் பிரபந்தத்தில் எவ்வளவு உள்ளது? எங்கு எல்லாம் உள்ளது என்றால் உடனே நம்மால் சொல்ல முடியாது. தொடரடைவுகள் இருந்தால் உடனே கண்டுபிடித்துவிடலாம்.
இன்றைய கணினி செயற்கை நுண்ணறிவு உலகில் இது சுலபம் என்றாலும் தமிழில் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். உதாரணமாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு முதலில் அதைப் பதம் பிரித்து பிறகு கணினி நிரல்களின் உதவியால் அதைச் செய்ய வேண்டும்.
எந்தப் பிரதிபலனும் இல்லாமல், தமிழர்களுக்கு ஒரு கொடையாக முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் இதைத் தவம் போலச் செய்துள்ளார். மேலும் தகவல்களுக்கு ( http://tamilconcordance.in/ ) பார்த்துக்கொள்ளுங்கள்.
அநுபந்தம் பாகம் இரண்டாக பிரபந்த தொடரடைவு மாதிரி சொல்லடைவு ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று அடியேன் விருப்பப்பட்டு முனைவர் ப.பாண்டியராஜா அவர்களைத் தொடர்பு கொண்டேன். அன்று அவர் மருத்துவமனைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தாலும் என் தேவைகளைக் கேட்டுக்கொண்டு, அன்று மாலையே அடியேன் கேட்டவற்றை அனுப்பினார். அதைத் தனிப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆசை இருந்தாலும் ஒரு புத்தகம் கிட்டத்தட்ட 600 பக்கங்கள் வரும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டேன். இருந்தாலும் ’பிரிண்ட் ஆன் டிமாண்ட்’ மூலம் சில பிரதிகளாவது அச்சடிக்கலாம் என்று அவ்வப்போது யோசனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
Comments
Post a Comment