Skip to main content

திருவாய்மொழி ஆழ்வார்கள் வாசக மாலை.

திருவாய்மொழி ஆழ்வார்கள் வாசக மாலை.



அமுதனிடம் நம்மாழ்வாரை வரையச் சொன்னேன்.இதுவரை நாம் பார்த்த ஆழ்வார்களின் படம் மாதிரி இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றேன். நம்மாழ்வாரில் எல்லா ஆழ்வார்களும் அடக்கம் என்று சொன்னேன். ஒவ்வொரு ஆழ்வாரும் என்ன அம்சம் அல்லது அடையாளம் என்று தெரிந்துகொண்டு பன்னிரண்டு ஆழ்வார்களையும் வரைந்தான். மதுரகவி எப்பொழுதும் நம்மாழ்வாருக்கு அடியவர் என்பதையும் கூறினேன்.

நாதமுனிகள் காலத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயல் பாசுரங்கள் இல்லை. நாதமுனிகள் அதைத் தேடி அலைந்து ‘கண்ணிநுண் சிறுதாம்பை’ வைத்துக்கொண்டு நம்மாழ்வார் மூலம் திருமாய்மொழியையும் மற்ற ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களையும் நம்மாழ்வார் திருவாக்காலே பெற்றார்.

நம்மாழ்வார் நமக்கு ஆழ்வார் + ஆசாரியன் ஸ்தானத்தை வகிக்கிறார். நம் பூர்வாசாரியார்கள் நம்மாழ்வார் அவயவங்கள் தான் மற்ற ஆழ்வார்கள் என்று நிறுவியிருக்கிறார்கள்.

நம்மாழ்வாரின் அருளிச் செயல்கள் குறிப்பாகத் திருவாய்மொழி பகவத் விஷயம் என்று உயர்ந்த இடத்தில் இருக்கிறது. நம்மாழ்வாருக்கு வேதம் தமிழ் செய்த மாறன் என்று கூறுவர். பெருமாள் ஆழ்வாரின் நாக்கில் உட்கார்ந்துகொண்டு நமக்கு அருளினார்.

அமுதனின் படத்துக்குத் என்ன மாதிரிக் கட்டுரை எழுதலாம் என்று யோசித்து, திருவாய்மொழிக் பாசுரங்களால் ஆழ்வார் மாலை ஒன்று சமர்பிக்கலாம் என்று இதை எழுதினேன். 12 ஆழ்வார்கள் 12 திருவாய்மொழி பாசுரங்களைப் எளிய விளக்கமும் தந்திருக்கிறேன். பல பாடல்கள் கண்ணன் மீது ஆழ்வார் உருகும் பாடல்கள். ஆனால் இவை எந்த வரிசையும் இல்லை ஆனால் ஒரு கோர்வையாக அமைந்தது திருவாய்மொழிக்கே உள்ள ஏற்றம்.

பொய்கை ஆழ்வார்

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே

கண்ணன் ஆய்ச்சியருடன் கைக்கோர்த்து குரவைக் கூத்தாடினான். மலையைக் குடையாக ஏந்தி மழையிலிருந்து ஆயர்களைக் காப்பாற்றினான். பொய்கையிலே இருந்த காளிங்கன் என்னும் பாம்பினை அடக்கினான். இவற்றைப் போலப் பல மாயச் செயல்கள் புரிந்த கண்ணனின் செயல்களைக் கூறி இரவும் பகலும் நான் பொழுதைக் கழிப்பேன். எனக்கு இனி ஒரு குறையும் இல்லை.

பூதத்தாழ்வார்

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும்வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே

பார்ப்பதற்கு உகந்த வைணவக் கூட்டத்தைக் கண்களால் கண்டோம். வண்டுகள் மொய்க்கும் திருத்துழாய் மாலை அணிந்த திருமாலின் அடியார்கள் இந்தப் பூமியில் அவன் புகழைப் பாடிப் பாடி ஆடித் திரிகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணுக்கு இனிமையான காட்சிகளைக் கண்டோம். கண்டோம், கண்டோம். கண்டோம் கண்டோம் தொண்டர்களே எல்லோரும் வாருங்கள்.

பேயாழ்வார்

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே

கூத்தாடுபவர்கள் குடம் எடுத்து ஆடும்பொழுது கோவிந்தன் ஆடுகின்றான் என்று இவள் ஓடுகிறாள். இசையைக் கேட்டால் ‘கண்ணன் ஊதுகிறான்’ என்று மோகத்தில் மயங்குகிறாள். இடைச்சிகள் கையில் வெண்ணெய்யைக் கண்டால் ‘இத என் கண்ணன் உண்ட வெண்ணெய்’ என்கிறாள். பூதனைப் பேயின் முலை சுவைத்த கண்ணனிடம் இவள் காதல் பித்து கொண்டாள்.

திருமழிசைபிரான்

தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகி நின்று உள் உளே

கண்ணா உன்னை எண்ணி உருகும் என் மகள் ”அருளாளனே என் ஆத்மாவுக்கு இனியவனே! ” என்று கூப்பிட்டு உம் உதவியை நாடி நிற்கிறான். உபகாரனே என்று அழைக்கிறாள்.

சடகோபன்

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆக கொண்ட குருகூர் சடகோபன்
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே

இந்தப் பாசுரம் இல்லை என்றால் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் நமக்குக் கிடைத்திருக்காது!. மரம் போன்ற எலும்புகளைக் கொண்ட பூதனையின் மூலை வழியே உயிர் குடித்த கண்ணன் திருவடிகளைக் குருகூர் சடகோபன் பற்றினார். புல்லாங்குழல் இசையினும் இனிமையான அருளிய இந்த ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களையும் இளமை தீரும்படிப் பயில வல்லவர்கள் வைணவர்களுக்கு மிகவும் இனியவர்கள்.

குலசேகர அழ்வார்

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே

கொய்யாப் பழம் போன்ற சிவந்த வாயுடைய நப்பின்னையைப் பெற நீ எருதுகளின் கழுத்தை முறித்தாய். ராவணனை அழிக்க வில்லை வளைத்தாய். வலிய யானையின் கொம்புகளை முறித்தாய். உன்னைப் பூக்களுடன் தண்ணீர் சேர்த்துத் தூவி வழிபாடு செய்யாதவனே ஆனாலும், இப்போது நி பூசிக்கொள்ள என் நெஞ்சத்தையே சந்தனமாகக் கொண்டாயே!

பெரியாழ்வார்

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே

இடையர் குலத்துக்கு யானைக் கன்று ஆனவனே. எடுத்து வளர்த்த நந்த கோபனுக்கும் யசோதைக்கும் சிறுவனாய் மிகுந்த இன்பம் கொடுத்தாய். நீயே என் தலைவன். இரணியனை உன் நகத்தால் பிளந்தாய். என்னைக் காண ஒற்ற வடிவில் வரமாட்டாயா ? நீ வராவிட்டால் அடியார்கள் உன்னை எப்படி நம்புவார்கள் ?

கோதை

பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே

தேவர்களும் முனிவர்களும் வேதங்களாகிய மாலைகளால் எம்பெருமானைத் துதிக்கிறார்கள். வலிய தீவினை செய்த நான் என் பெண் உலகை அளந்த திருவடிகளில் விளங்கும் அழகிய திருத்துழாய் மாலையை வேண்டுமென்று கூவிக் கலங்குவதைக் காணும்படி ஆயிற்று ‘செம்பொன் துழாய்’ என்று கூவுகிறாள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென
கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ

அரசர்கள் தம் காலிலே மற்றவர் முடி படும்படி ஆட்சி செலுத்துகிறார்கள். பின்னொரு சமயம் இவை எல்லாம் இழந்து பொடித் துளியாய் போயினர். ஆகையால் திருத்துழாய்த் திருமுடியுடைய கண்ணன் திருவடிகளை மனத்தில் நினையுங்கள்.

திருப்பாணாழ்வார்

காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே

கோவைப் பழ வாயையுடைய தோழிகளே. திருவல்லவாய் எங்கும் வண்டுகளின் பாண் இசை கேட்கும். இளந்தென்றல் வீசும். நீண்ட கிளைகளுடைய உயர் மரங்கள் செழித்து நிற்கும். கடற்கரைச் சோலை ஊராகிய அங்குள்ள மாட்சி பொருந்திய வாமனனின் மலர் போன்ற திருவடிகளை நான் என்று காண்பேன் ?

திருமங்கை ஆழ்வார்

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே

கணப்பொழுது கூடப் பிரியாத திருமகள் வாழும் மார்புடையவனே. ஒப்பில்லாத புகழ் உடையவனே மூவுலகங்களையும் படைத்துக் காத்து உடையமையாகக் கொண்டவனே என்னை ஆள்பவனே நிகரில்லாத நித்திய சூரிகளும் முனிவர்களும் கூட்டங்களும் உகந்து துதிக்கும் பெருமை உடைய திருவேங்கடத்தானே உன்னை அன்றிக் கதி அற்ற அடியேன் உனக்கே ஆட்பட்டேன். உன் திருவடிகளில் சரண் அடைகிறேன்.

மதுரகவி

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்-மினே

அடியாரிடம் அன்புகொண்ட இறைவனை அடைந்து அடியாரிடம் பேரன்புடைய நம்மாழ்வாரிடம் பற்றுடையராய் இருந்த மதுரகவி அருளிய சொல்மாலையை மதித்து நம்புபவர் விடுபேறு காண்பர்.

- சுஜாதா தேசிகன்
ஓவியம் : அமுதன் தேசிகன்
4.6.2020
வைகாசி விசாகம்
நம்மாழ்வார் திருநட்சத்திரம்




Comments