இனிய இராமானுச நூற்றந்தாதி
( கீழே வரும் இனிய இராமானுச நூற்றந்தாதி 108 பாசுரங்களின் சரமாக, ஒவ்வொரு வரியிலும் ‘இராமானுசன்’ என்ற வார்த்தையுடன் கிட்டதட்ட அந்தாதி சாயலில் இருக்கும். பிழைகளை பொறுத்தருள வேண்டும்)
1. அலர்மேல்மங்கை உறையும் மார்பனைப் பாடிய நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றிய இராமானுசனின் நாமங்களைச் சொல்லு உள்ளமே!
2. உள்ளத்தில் திருமங்கை ஆழ்வாரை வைத்திருக்கும் இராமானுசனின் சீல குணத்தை அறிந்துகொள் மனமே!
3. மனமே! இதை அறிந்துகொண்டால் இராமானுசனின் அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் பேறு கிடைக்கும்
4. கிடைத்த பேறு ராமானுஜரின் திருவடி அதனால் திருமாலுடைய திருவடி அருள் பெற்று குறைகள் நீங்கும்.
5. குறைகள் நீங்க நமக்குக் கிடைக்கும் இராமானுசன் என்ற பெரும் செல்வம்
6. பெரும் செல்வமான இராமானுசனைப் பற்றிய நூற்றந்தாதியை நாம் பக்தியுடன் பாடுவோம் தமிழ் மொழியில்
7. மொழிகளைக் கடந்த புகழுடைய கூரத்தாழ்வானின் திருவடிகளைப் பற்றினால் செருக்கு குழியில் விழாமல் தப்பிவித்து மேலும் இராமானுசனின் புகழ் பாடி இருள் நீங்கும் நம் மனத்தில்.
8. மனத்தில் எப்போதும் பொய்கை ஆழ்வாரை வைத்திருக்கும் இராமானுசனே என் ஞான ஒளி விளக்கு
9. ஞான ஒளி விளக்கைக் கொண்டு அறியாமை இருள் கெடுமாறு செய்த பூதத்தாழ்வாரை மனதில் துதிப்பவர் இராமானுசன்
10. இராமானுசன் பேயாழ்வாரின் இனிய பாதங்களைப் பற்றிய பெருமான்.
11. பெருமாளின் இனிய பாதங்களைப் பற்றிய பாண் பெருமாளின் திருவடிகளை மாலையாகச் சூடிக்கொண்டார் இராமானுசன்
12.. இராமானுசனின் திருவுள்ளத்தை உறைவிடமாகக் கொண்டது பரந்து புகழ் வாய்ந்த திருமழிசை பிரானின் திருவடிகள்.
13. திருவரங்கன் திருவடியில் சாத்தும் தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலையையே தஞ்சமாகப் பற்றினார் இராமானுசன்.
14. இராமானுசன் எப்போதும் குலசேகர ஆழ்வார் பாசுரங்களை விரும்பிப்பாடுவாரென நினைத்தால் பல்லாண்டு கடும் தவத்தின் பயனைப் பெறலாம்.
15. பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரை தன் உள்ளத்தில் கொண்டுள்ள இராமானுசன் இருக்க நமக்குக் குறை உண்டோ ?
16. உண்டோ ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு இணை ? அவள் கருணையால் அண்ணல் இராமானுசன் மூலம் வேதம் பெருமைபெற்றது.
17. பெருமைபெற்ற திருமங்கை ஆழ்வார் அன்புக்குப் பாத்திரமானவர் இராமானுசன்.
18. இராமானுசன் ’தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன’ சொல்லைக் கொண்டு நமக்கு நல்வழியைக் காண்பித்தார்.
19. நல்வழியை காண்பிக்கும் திருவாய்மொழி எனும் அமுதத்தைப் பருகிய சடகோபன் பொன்னடி இராமானுசனே நமக்கு அமுதம்.
20. ’அமுதூரும் என் நாவுக்கே’ என்பதை வாரிப் பருகிய நாதமுனிகளை வாரிப் பருகி அனுபவித்தவர் எங்கள் இராமானுசன்.
21. எங்கள் இராமானுசன் ஆளவந்தார் இணையடி பேற்றைப் பெற்று கருணை மழை பொழிபவர்.
22. கருணைக் கடலான கண்ணனைத் துதிக்கின்ற இராமானுச ரத்தினமே நமக்கு மாநிதி.
23. மாநிதியாம் இராமானுசன் என்னும் ரத்தினத்தை நம் இதயப் பெட்டிக்குள் பாதுகாப்போம்
24. பாதுகாத்தால் நம் இதயம் என்னும் தேன்கூட்டைக் கொடிய பாவங்கள் ஆகிற தேனீக்களிடமிருந்து காப்பார் இராமானுசன், கருணையுடன்.
25. கருணை மிகுந்த கார் மேகம் போன்று இராமானுசன் எல்லோருக்கும் கருணை மழையைப் பொழிகிறார்.
26. பொழியும் மழையில் நனைவதால் நம் பாவங்களைப் போக்கி அருள்கிறார் இராமானுசன்.
27. இராமானுசன் என்ற கருணை மழையின் வள்ளல் தன்மைக்கு உண்டோ எல்லை ?
28. எல்லை இல்லாத பெருமைகளைக் கொண்ட கண்ணன் புகழைப் பாடுபவர்களுக்கே அறிய முடியும் இராமானுசனின் புகழை.
29. புகழ்மிக்க தமிழ் வேதமாகிய திருவாய்மொழிக் கொண்டு பக்தி செய்த இராமானுசரின் புகழை அறிந்த அடியார்களுடன் சேர்வதே இன்பம்.
30. இன்பமோ துன்பமோ எது கிடைத்தால் என்ன ? இராமானுசனின் திருவடியை நினைத்துக்கொண்டால் கிட்டும் பேரருள்
31. பேரருளாளன் பாதங்களை அன்புக்கிரீடமாகச் சூடிக்கொண்டிருக்கும் இராமானுசன் இருக்க நமக்கு ஏது குறை ?
32. குறை மிக்க கலியில் இராமானுசனை அடைபவர்களுக்குப் புகழும், மெய்யறிவும், செல்வமும் தாமே வந்து சேரும்.
33. சேர்ந்தே இருக்கும் திருமகள் வாசம் செய்யும் திருமாலுடைய ஆயுதங்களின் மறுவடிவம் நம் இராமானுசனே உலகை நல்வழிப்படுத்துகிறார்.
34. நல்வழியில் செல்ல விடாமல் தடுக்கும் கலிகாலத்தில் நம்முள் இருக்கும் பாவங்களைப் பொசுக்குகிறார் இராமானுசன்.
35. இராமானுசனுக்கு ’அரங்கம்’ என்ற சொல்லே காதல் ஆதரம் கடலினும் பெருகும் அவருடைய மென்மையான திருவடிகளைப் பற்றுவோம்.
36. பற்றிய திருச்சக்கரத்தையுடைய கண்ணபிரான் கடலில் மறைந்துள்ள இரத்தினம் போன்ற கீதையை அன்று போர்க்களத்தில் உபதேசித்த அதே பொருள்களை மறுபடி எடுத்துக்காட்ட அவதரித்தவர் இராமானுசன்.
37. இராமாயணம் என்ற பக்தி வெள்ளம் குடி கொண்டு இருக்கும் இடம் இராமானுசனின் இதயக் கோயில்.
38. இராமானுசனின் இதயக் கோயிலே பொருளல்லாத நம்மைப் பொருளாக்கும்.
39. பொருள்களின் மீது அற்ப ஆசையெனும் அறியாமையால் ஏற்படும் துயரங்களை இராமானுசன் நீக்கித் திருமாலின் கல்யாணக் குணங்களை அறியச் செய்யும் அற்புதர்
40. அற்புதமான மோட்சம் பெற பெருமானிடமே ஆசைக் கொள்ளுங்கள் என்பதே இராமானுசரின் அறிவுரை.
41. அறிவுரையைக் கூறி திருமாலால் திருத்த முடியாத உலகத்து மக்களை எங்கள் இராமானுசர் திருத்திய பின் ஞானம் பெற்று நாராயணனுக்கே அடிமையாகி எய்தினர் இன்பம்.
42. சிற்றின்பங்களில் ஆழ்ந்து நசித்துப் போனவர்களைத் திருத்தியருள எண்ணி திருமால் தன் அவதாரங்களால் செய்ய முற்பட்டுச் செய்ய முடியாததைச் செய்து காட்டினார் இராமானுசர்.
43. இராமானுசன் என்ற திருநாமத்தைச் சொல்லும் போதே வாயிலே சுவை பரவி, பக்தி செல்வமும், அறிவும் வளர்ந்து தீவினைகள் பறந்து ஓடும்.
44. பரந்த பூமியில் இராமானுசனின் திருநாமத்தைப் பக்தியுடன் ஓதாமல் பொழுதை வீணாக்காதீர்கள் உலக மக்களே.
45. உலக மக்களே ! இராமானுசனின் திருவடிகளையன்றி வேறு பேறு உண்டோ ?
46. உண்டோ கடவுள் ? உண்டோ குணம் ? என்று பேசிய சமயங்களை மாறனின் மறை பொருளைப் பயின்ற இராமானுசன் நிலை நிறுத்தினார் பரம் பொருள் திருமாலே !
47. திருமாலை போற்றிய அரங்கனே அறம் பொருள் என்று காட்டிய இராமானுசன் இரவு பகல் பாராமல் தங்கியுள்ளார் நம் மனத்தில்.
48. மனத்தில் தோன்றும் இழிவுக்குப் புகல் இராமானுசனின் அருள்; ; அந்த அருளுக்கு இழிவே புகல்.
49. புகல் அரிய திறல் உடைய திருவரங்கன் பாதங்களைக் கிரீடமாக உடையவர் ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்ற வாக்கியத்தை மெய்யாக்கினார் இராமானுசன்.
50. இராமானுசன் இணை அடியே நம் அற்பமான பலவீனங்களுக்கு மாமருந்து.
51. மருத்துவனாய் வந்த மணிவண்ணன் பாண்டவர்களை வழி நடத்தியது போல இராமானுசன் நம்மை வழிநடத்துகிறார்.
52. வழிநடத்தி புறம்பான சமயங்களிலிருந்து காத்து, திருவரங்கனின் அழகிய திருவடிகளில் நம்மைப் பிணைத்த இராமானுசன் என்ற அற்புதமே.
53. அற்புதக் கற்பக மரமான இராமானுசன் நம்மை நாடி வந்து நாராயணனுக்கே நாம் என்ற கருத்தை நிலைநிறுத்தினார்.
54. நிலையில்லா இவ்வுலகத்தில் நீர் போன்ற சீலகுணம் படைத்தவரான இராமானுசன் சூரிய ஒளியால் தாமரை மலர்வது போல வேதத்தை மலரவைத்து, அவர் அன்பருளால் தமிழ் மறையான திருவாய்மொழி எங்கும் பரவியது.
55. பரவிய வேதங்கள் பூமியில் சிறப்புடன் விளங்கும்படி அரங்கனின் திருவடியைப் பற்றிய இராமானுசனைப் பற்றியிருக்கும் குலமே எங்களை ஆளும் குலமாகும்.
56. ஆளும் குல மன்னர்களை வதம் செய்த பரசுராமனைப் போற்றும் இராமானுசனை நினைத்தபின் வேறெதையும் பேசாது நம் வாக்கு.
57. வாக்கில் சிறந்து விளங்கும் சான்றோரால் போற்றப்படும் இராமானுசன், திருவரங்கனின் திருவடி நிழலே நமக்குத் தஞ்சம் என்று அறிந்துகொண்டோம்.
58. அறிந்துகொள்ள முடியாத பிரமத்தின் மெய்ப்பொருளை உரைத்தது இராமானுசன் என்ற மெய் கடலே!
59. கடலால் சூழப்பட்ட எட்டுத் திசையிலும் கலியால் சூழ்ந்த கொடிய இருளை எங்கள் இராமானுசன் நான்கு வேதங்களின் ஒளியால் ஓட்டி மறையச் செய்தார்
60. தமிழ் மறையாம் திருவாய்மொழியின் இசை நடக்குமிடங்கள், திருமகள் வாசம் செய்யும் திருப்பதிகளில் மேகம் போன்ற வள்ளல் இராமானுசன் அங்குப் புகுந்திருப்பார்.
61. புகுந்து தத்தளிக்கும் சம்சாரச் சேற்றிலிருந்து நம்மைக் கைதூக்கிவிட்டு, அடுத்து யாரைத் தூக்கிவிட வேண்டும் என்று ஓயாமல் தேடும் இராமானுசனால் இந்தப் பூமியே பெருமை பெற்றது.
62. பெருமை பெற்ற இராமானுசனுடைய திருவடிகள் சம்பந்தம் பெற்ற கூரத்தாழ்வானைச் சரணடைந்த பின் நமக்கு என்ன வருத்தம்?
63. வருத்தம் இல்லாமல் ஆசையுடன் பெண் யானையைத் தொடரும் ஆண் யானையைப் போல நாமும் ஆசையுடன் தொடர வேண்டும் இராமானுசனை.
64. இராமானுசன் என்ற இந்த யானை நம்மாழ்வாரின் இன்பத் தேனைக் குடித்து வீறு கொண்டு எழுந்து வாதிகர்களைக் களைந்து உயர்வளித்தார்.
65. உயர் பயிரோடு களைகள் வளர்வது போல வளர்ந்த புற மதத்தினரைக் களை களைந்தவாறே ஐயங்களைத் தீர்த்து வைத்தார் இராமானுசன்.
66. இராமானுசனைப் பற்றியவர்கள் சிங்கத்தின் உடலில் ஒட்டியிருக்கும் சிறு பூச்சிகளைப் போல அடைவார்கள் மோட்ச கதி.
67. கதி இல்லாமல் தத்தளித்த தருமபுத்திரனை ஏற்று அன்று மாயோன் சொன்ன உபதேசங்களை இன்று இராமானுசன் உணர்த்தி நம் உயிருக்கு அரணானார்
68. அரணாய் பாரதப் போரில் பாண்டவர்களுக்கு தேரின் சாரதியாய் வீற்றிருந்து கீதையை உபதேசித்த சாரத்தை இராமானுசன் பாரினில் யாவரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு அறியச் செய்த பரந்த குணம் படைத்தவர்.
69. படைத்தவன் பிரளயத்தின்போது அழித்து மீண்டும் படைக்கும்போது காரணங்களைக் கொடுத்துச் சரணங்களைக் கொடுப்பதில்லை ஆனால் நம் இராமானுசன் நம்மை மீட்க அரங்கனின் திருவடியைக் காட்டிக் கொடுக்கிறார்.
70. காட்டிக் கொடுத்த நல்வழியில் செல்லாமல் உலக இன்பங்களில் மூழ்கி குற்றங்கள் புரிவதில் சக்கரவர்த்தியாக இருக்கும் நம்மைக் காக்கும் இராமானுஜரே நற்குணங்களுக்குச் சக்கரவர்த்தி.
71. சக்கரவர்த்தியான நம் இராமானுசன் திருவரங்கனின் திருவடிகளில் சரணடைந்து கோடிக்கணக்கான பிறவிகளில் நாம் செய்த பாவங்களை எல்லாம் அழித்து ஒழித்து கருணை மழை பொழியும் வள்ளல்.
72. வள்ளல் இராமானுசன் புறம்பான மதங்களைக் கொண்டு கலகம் செய்தவர்களைச் சிதைத்து நம்மைப் போன்றவர்களுக்கு உயர்ந்த அடியார்கள் கோஷ்டியில் இடம் அளித்தார்.
73. இடம் அளித்தார் உலகத்தவர்க்குத் தன் நெஞ்சில் குளிர்ச்சியான சந்திரனைப் போல இராமானுசனை நினைப்பது அன்றி வேறு வழியில்லை.
74. வேறு வழியில்லை என்றால் தீயவற்றை அழிக்க மாயவன் சக்ராயுதத்தை எடுக்கிறான் நம் இராமானுசனோ கருணாயுதத்தை எடுக்கிறார் கையில்.
75. கையில் திவ்யாயுதங்களை ஏந்தி தன் அழகைத் திருவரங்கன் காட்டி ‘உம்மைவிடமாட்டேன்’ என்று மயக்கினாலும், இராமானுசனின் குணங்களே நம்மை மயக்கி ஆட்கொள்ளும்.
76. ஆட்கொண்டுள்ள திருவேங்கடத் திருமலையும், திருநாடும், திருப்பாற்கடலும் நமக்கு எப்படி மகிழ்வு தருமோ அதே போல் மகிழ்வு தரும் இராமானுசனின் திருவடிகளின் அருள்.
77. அருளாத அருளை நமக்கு இராமானுசர் வழங்கிய பின்னரும் இனிமேலும் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் நெஞ்சத்தில்.
78. நெஞ்சில் உள்ள மாசுகளைப் போக்கி ஒன்றும் தெரியாத நம்மைத் திருமகள் கேள்வனுக்கு ஆளாகும்படி செய்தருளினார் நம் இராமானுசன்.
79. நம் இராமானுசன் இருக்கும் போது கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார் உண்டோ ? அது போல குருவை தேடி அலைய தேவையில்லை.
80. அலையத் தேவையில்லை யாரைப் பற்றுவது என்று இராமானுச நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும் அடியார்களுடைய அடியார்களுக்கே செய்ய வேண்டும் தொண்டு.
81. தொண்டு செய்யும் இராமானுச அடியவர்களுக்கு ஆட்பட்டவர்கள் பகவ பகவதத் தொண்டால் ஈர்க்கப்படுவது நிச்சயம்.
82. நிச்சயமற்ற உலகில் நல்லது, தீயது ஆராயும் அறிவைப் பெறாது இங்கும் அங்கும் திரிகிற நமக்கு இராமானுசன் நொடிப்பொழுதில் எங்கும் பொழியும் மேகம் போல் அருளும் கொடைவள்ளல்.
83. வள்ளல் இராமானுசனின் திருவடிகளே நமக்கு மோட்சம், வேறு மோட்சம் தேவையில்லை என்பதைக் கண்டுகொள்ளுங்கள்.
84. கண்டுகொள்ளுங்கள் நம் இராமானுசன் நம்மைப் போல மனிதரல்ல, நம்மை உய்விக்க வந்தவர் நம் ஸ்வாமி என்பதைக் கண்டுகொள்ளுங்கள்.
85. கண்டுகொள்ளுங்கள் வேதத்தின் உட்பொருளான திருமால் என்ற தலைவனை அறியாமல் திரிகிறவர்களுடைய அறியாமையைப் போக்கிய இராமானுசரின் திருவடிகளே நமக்கு ஊக்கம் அளிக்கும் பற்றாகும்.
86. பற்றா அற்ப மனிதரைப் பற்றி உற்றார் என்றோம், அப்பற்றை விட்டு இராமானுசரின் அடியார்களைப் பற்றுவோம்.
87. பற்றும் இக்கலி இராமானுசனின் அருள் ஞானத்தைப் பெறாதவர்களை.
88. ஞானத்தைப் பெறாதவர்கள் புலிகள்போல உலாவியபோது திருக்குறையலூரில் அவதரித்த திருமங்கை ஆழ்வார் திருமொழியைக் கர்ஜித்து சிங்கம்போல வந்தவர் இராமானுசன்.
89. இராமானுசனின் பெருமையைப் பேசுவதற்கு முற்பட்டால் நம் அறிவின்மை புலப்படும், ஆனால் போற்றாமல் இருக்க முடியாது நம்மால்.
90. நம் பிறவியைப் போக்கும் இராமானுசனை நினைப்பதில்லை ஆனாலும் நாம் இருக்கும் இடம் தேடி வரும் அவரைப் பெற்றது நம் பாக்கியம் அன்றோ ?
91. அன்று அறியாமையால் ஆகமத்தைத் தப்பாக வாதம் செய்து இருளானபோது அந்த இருளைப் போகும்படி செய்த இராமானுசன் பேறு பெற்றவர்.
92. பேறு பெறுவதற்கு ’நோற்ற நோன்பு இலேன், நுண் அறிவு இலேன்’ இருந்தாலும் இராமானுசன் நம் கண்ணுக்குள் மனதுள் வந்த புண்ணியன்.
93. ’புண்ணியனை’ கூறும் வேதங்களைக் காப்பதற்காக வலிமையான வாதங்கள் என்னும் கூட்டில் வைத்து தவறான பிரசாரங்களிலிருந்து காத்தவர் இராமானுசன்.
94. இராமானுசன் பிரபத்தி முதல் பரமபதம் வரை கொடுப்பவர் ஆனால் அவருடைய குணங்களைச் சுவைப்பதே நமக்குத் தரும் ஆனந்தத்தை.
95. அனந்தன் நம்முள் அந்தரியாமியாக நாம் செய்யும் பாவங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறானே தவிரத் தடுப்பதில்லை ஆனால் இராமானுசன் நல்வழியைக் காட்டி பாவங்களிலிருந்து மீட்கும் பேரன்பு உடையவர்.
96. உடையவர் உபாயமாக அருளியவை பக்தியும் பிரபத்தியைக் காட்டிலும் அவரைப் பற்றியிருப்பவர்களின் அபிமானமே நம்மை உயர்த்தும்.
97. ’உயர்ந்த பக்தியை விட என் அடியார்களிடம் பக்தி செலுத்துபவர்கள் மீது எனக்கு அதிக பிரியம்’ என்று கண்ணனைப் போல இராமானுசனும் நமக்குக் காட்டி அருளினார்.
98. அருள் மழை பொழியும் கண்கண்ட தெய்வம் ’இராமானுசனே சரணம்’ என்று சொன்னாலே சம்சாரக் கடலை நினைத்துக் கலங்க வேண்டாம்.
99. கலகங்கள் விளைவித்த சமண, பௌத்தச் சைவ மதங்களை ஸ்ரீ பாஷ்யம் கொண்டு மடியச் செய்தார் இராமானுசன்.
100. இராமானுசனின் திருவடி மலரின் குளிர்ச்சியுடன் கூடிய சுவையான தேனை நம் மனமான வண்டு புசித்தால் வேறு ஒன்றின் மீது மோகம் கொள்ளாது.
101. மோகத்தின் காரணமாகப் பாவம், பாசம் என்ற வலைகளில் சிக்கியவர்களுக்கு இராமானுசனே பாவ நிவாரணம்.
102. நிவாரணம் இராமானுசனுடைய குணங்களில் ஈடுபட்டு கை கூப்பி நம் நாக்கு அவர் நாமத்தை உச்சரிப்பது.
103. நாமத்தை உச்சரித்த பிரகலாதனுக்கு அருள் புரிய நரசிங்கமாக தோன்றிய மூர்த்தியின் கீர்த்தி ஓங்கி வளர்ந்த இடம் நம் இராமானுசனின் திருவுள்ளம்.
104. உள்ளத்தில் பெருமாள் சிறப்பை விதைத்த இராமானுசனின் திருமேனி குணத்தை மண்ணிலும், விண்ணிலும் நம் உள்ளத்தில் தாங்கி நிற்போம்.
105. நிற்காமல் பாற்கடலில் ஆனந்த யோக நித்திரையில் அவன் குணங்களில் ஈடுபட்டு அவன் திருவடிகளில் விழுந்து கிடக்கும் மகா ஞானிகள் தங்கள் மனத்தால் இராமானுசனையும் போற்றி புகழ்வார்கள்.
106. புகழ்மிக்க ஆதிசேட படுக்கையோடும், பாற்கடலோடும், திருமகளோடும் திருமால் பெரியாழ்வார் நெஞ்சில் புகுந்து நின்றது போல், வைகுண்டம், வேங்கடம், மாலிருஞ்சோலையுடன் இராமானுசனின் திருவுள்ளத்தில் புகுந்து எம்பெருமானை உடைய எம்பெருமானார் நம் மனத்தில் புகுந்தது பேரின்பமே!
107. பேரின்பக் கடலான இராமானுசனே சம்சார நோய்க்கு மருந்தாகவும், மருத்துவராகவும் இருக்கிறார்; அவருடைய அடியார்களுக்கு ஆட்படுவதே நமது நெஞ்சுக்கு இலக்கு.
107. பேரின்பக் கடலான இராமானுசனே சம்சார நோய்க்கு மருந்தாகவும், மருத்துவராகவும் இருக்கிறார்; அவருடைய அடியார்களுக்கு ஆட்படுவதே நமது இலக்கு நெஞ்சே!
108. நெஞ்சே ! இராமானுசனின் திருவடிகளாகிற செவ்விப் பூவை நம் தலையில் எப்போதும் சூடி, திருவரங்க அழகிய மணவாளனின் மார்பில் உறையும், கமலத்தில் அவதரித்த பெரிய பிராட்டியைப் வாழ்த்துவோம்!
-சுஜாதா தேசிகன்
12.05.2024
ஸ்ரீராமானுஜரின் 1007வது திருநட்சத்திரம்
ஆழ்ந்த இராமானுஜ பக்தி
ReplyDeleteபடிப்பதற்கு எளிமையும் ஆழ்ந்த பொருளும் அருமையாக உள்ளது
ReplyDelete