தான் உகந்து, தமர்களுக்கு அளித்த திருமேனி !
சிறு வயதில் என் அப்பா ஸ்ரீராமானுஜருடைய மூன்று முக்கியமான திருமேனி குறித்து அடிக்கடி சொல்லுவார். சுவாரசியமாக இருக்கும் .
அந்த மூன்று திருமேனிகளின் படத்தை ஒன்றாக ஃபிரேம் போட்டு அதற்குக் கீழே
1 தமர் உகந்த(மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம்),
2 தான் உகந்த(ஸ்ரீபெரும்புதூர்),
3 தான் ஆன திருமேனி(ஸ்ரீரங்கம்)
என்று எழுதி மாட்டியிருந்தேன்.
மேல் உள்ள வரிசைப் படி உடையவரின் திருமேனிகளை நமக்குக் கிடைத்தது. அதாவது முதல் திருமேனி மேல்கோட்டை, அடுத்து ஸ்ரீபெரும்புதூர், பிறகு ஸ்ரீரங்கம்.
இந்தப் பெயர்கள் எல்லாம் கொஞ்சம் குழப்பும். நினைவு வைத்துக்கொள்ளச் சுலபமான வழி ‘தமர்’ என்ற வார்த்தையைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
முதல் திருவந்தாதியில் ‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்று பொய்கையாழ்வார் கூறுகிறார். ‘தமர்’ என்றால் அன்பர்கள்/அடியார்கள் என்று பொருள். ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்குப் பயணமாவதற்கு ஆயத்தமான போது அவருடைய சீடர்கள் ஸ்ரீராமானுஜரைப் பிரிய வேண்டுமே என்று வருத்தமுற்றார்கள். ‘தேவரீரைப் பிரிந்து எப்படி நாங்கள் வாழ்வது? எங்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்’ என்றார்கள்.
’உங்களை அழைத்துச் சென்றால் செல்லப் பிள்ளையை யார் பார்த்துக்கொள்வது?’ என்று கூறிய ஸ்ரீராமானுஜர், உங்கள் வருத்தத்தைப் போக்க தம்மைப் போலவே ஒரு விக்ரகத்தைச் செய்யச் சொல்லி, அதில் தம் சக்தியைப் புகுத்தி அவர்களிடம் அளித்தார். இந்த விக்ரகம் ‘தம்ர்’ உகந்த திருமேனி என்று பிரசித்தம். அந்த விக்ரகத்தை இன்று பார்த்தாலும் நம்மிடம் பேசுவது போலவும், நம்மைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் மேல்கோட்டை சென்றிருந்த போது எதிராசர் சந்நிதி வாசலில் ‘தான் உகந்த திருமேனி’ என்று எழுதியிருந்ததைப் பார்த்துக் குழம்பினேன். ‘தமர் உகந்த’ என்பதற்குப் பதில் ’தானுகந்த’ என்று தப்பாக எழுதியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். பிறகு ஒரு முறை ஸ்ரீ உ.வே. பட்டணா ஸ்வாமிகளிடம் இதைக் குறித்துக் கேட்ட போது அவர் மேல்கோட்டையில் ‘தானுகந்த’ என்று தான் சொல்லுவார்கள். ’தான் உகந்து தமர்களுக்கு அளித்த திருமேனி’ என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ராஜ்யம் என்றால் மேல்கோட்டையில் யதிராஜர்.
35 தலைமுறைகளுக்குப் பிறகும் இன்றும் யதிராஜரைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு எல்லாமே ஸ்ரீராமானுஜர் தான்.
பொதுவாக நாம் குருபரம்பரை தனியனை இப்படிச் சேவிப்போம்.
லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்
மேல் கோட்டையில் இருப்பவர்கள் தங்கள் ஆசாரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படிச் சேவிப்பார்கள்
அஸ்மத் குரு சமாரம்பாம்
யதி சேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்
ஸ்ரீராமானுஜருக்கும் தன் புகுந்த வீடாம் திருவரங்கம் மீது அளவு கடந்த மோகம் “பொன் அரங்கம் என்னில், மயலே பெருகும் இராமநுசன்” என்கிறார் அமுதனார். ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டையில் இருந்த போது எப்போது மீண்டும் எப்போது திருவரங்கம் செல்வேன் என்று குலசேகர ஆழ்வார் போலத் துடித்து அலற்றி கிளியைக் கூப்பிட்டு ‘திருவரங்கத்தைப் பாடவல்ல குலசேகரன்’ என்று கூறு என்று
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்* பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன் என்றே கூறு.
இந்தத் தனியனை மேல்கோட்டையில் இயற்றியிருப்பாரோ என்று கூட அடியேனுக்குத் தோன்றுகிறது.
மேல்கோட்டையில் ஸ்ரீராமானுஜர் சந்நிதி தெற்கு நோக்கி இருக்கிறது. அதற்குக் காரணம் அவர் மேல்கோட்டைக்கு வந்த பிறகும் அவருடைய எண்ணங்கள் தெற்கில் உள்ள ஸ்ரீரங்கம் பற்றியே இருந்தது என்பதைக் காட்டுவதாக தான்!
- சுஜாதா தேசிகன்
5.5.2024
படம்: நேற்று ’தான் உகந்து தமர்களுக்கு அளித்த திருமேனி’ சேவை, சில காட்சிகள், நன்றி யதிராஜ மடம், SRSMS.
விசேஷம்
ReplyDelete