Skip to main content

தான் உகந்த திருமேனி

தான் உகந்த திருமேனி



எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் கத்யத்ரயம்  சாதித்து, கோயிலில் பல மாறுதல்களைச் செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அசுயை அவர்களைக் கொலை செய்யவும் தூண்டியது.

அவரது மாதுரகத்தில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தைத் திருக்காவேரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார்.

கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்சணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடிப் பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் அவர் திருமேனியில் பரிவுடைய ஒருவரை அறியவே காத்திருந்தோம். இன்று முதல் நீரே அவருக்கு அமுது செய்வித்துச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நியமித்தார். அன்று முதல் கிடாம்பி ஆச்சானே ஸ்வாமிக்கு மடப்பள்ளி கைங்கரியத்தைச் சிரத்தையுடன் செய்தார்.

இன்றும் அதே திருமேனியை ஸ்ரீபெரும்புதூரில் நாம் தரிசிக்கலாம். 2017ல் ஸ்ரீராமானுஜரின் 1000வது திருநட்சத்திரம் அன்று அடியேன் ஸ்ரீபெரும்புதூரில் உடையவரை அருகில் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையால் ஏதோ வரிசையில் நிற்க, திடீர் என்று கூட்டம் தள்ளியது. அந்தக் குழப்பத்தில் என்னை அவதார மண்டபத்துக்கு உள்ளே தள்ளி வெளியே பூட்டிவிட்டார்கள்.

ஸ்ரீராமானுஜரின் அவதார மண்டபத்தில் அவரின் சீடர்களான 74 சிம்மாசனாதிபதிகளுடன்,  கையால் தொட்டுப் பார்க்கும் தூரத்தில் பெரும்புதூர் வள்ளலை எந்த அலங்காரமும் இல்லாமல் அந்தத் திருமேனியை  360° சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். அந்தத் திருமேனி பற்றி சிறுகுறிப்பு...

முதலியாண்டானின் மகனாகிய கந்தாடை ஆண்டான் ஸ்ரீரங்கத்தில் உடையவரிடம்  “தேவரீர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் ஸ்தலத்தில் சர்வக் காலத்திலும்,  வரும் சந்ததியினர் எல்லோரும் சேவிக்கும்படி தேவரீருடைய ஓர் அர்ச்சா திருமேனி விக்கிரகம் ஏறியருளப் பண்ண வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய எம்பெருமானாரும் ”அப்படியே செய்யும்” என்று அனுமதி அளித்தார்.

கந்தாடை ஆண்டானும் உடனே தேர்ந்த சிற்பி ஒருவரை அழைத்து உடையவர் திருமேனியைச் சேவிக்கச் செய்தார். ’ஆதி அம்சோதி உருவை  அங்குப் போல் இங்கு வைத்து’ என்று நம்மாழ்வார் கூறுவது போல அந்தச் சிற்பியும் ஒரு மிக அழகிய அர்ச்சா திருமேனியைச் சமைத்து, அதை எம்பெருமானார் முன்பு கொண்டு வந்து வைக்க, உடையவர் திருக்கண் சாத்தி, தன் திருக்கையை ஸ்பர்சமும் செய்வித்து, தம்முடைய திவ்யசக்தி நிலைபெறும்படியாக நன்கு அணைத்து புஷ்ய மாசத்தில் குரு புஷ்யத்தில் பிரதிஷ்டை செய்யவும் என்று திருமுகம் எழுதிக் குறித்து அனுப்பினார்.

கந்தாடையானும் அப்படியே திருப்ரதிஷடையும் செய்வித்தார். (ஸ்ரீராமானுஜரின் "தான் உகந்த திருமேனி ' என்னும் அர்ச்சா விக்ரகம் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில் 1137 ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்ரதிஷ்டை நியாச முறைப்படி, சில மந்திரங்களை உச்சரித்து  உடலில் உள்ள அவயவங்களை அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஆகமங்களில் விதித்த கிரமப்படி தொட்டு தெய்வீகத்தைப் புகுத்தி ஆவாகனம் செய்தார்கள் என்று மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஒரு முறை அடியேனிடம் இதைக் குறித்து விவரித்தார். அதே போல் சிற்ப சாஸ்திரத்தைக் கொண்டு இன்றைய உடையவரின் திருவடிகளின் அளவைக் கொண்டு உடையவர் உயரம் போன்றவற்றைக் கணிக்கலாம் என்றார் )

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் பிராணப் பிரதிஷ்டை நடந்த அதே தினத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது. 

“இது என்ன நாள் ?” என்று உடையவர் கேட்க கந்தாடையானுக்கு எழுதிக் கொடுத்த நாளாயிருக்க உடையவரும் வியப்புற்றவராய் அவரை விரைந்து வரச் செய்தி அனுப்பினார். கந்தாடையான் ஓடி வந்து உடையவரைச் சேவிக்க மற்ற அந்தரங்கமான முதலிகள் எல்லோரும் சேவித்துக்கொண்டு இருக்க... உடையவர் தம்முடைய ஆசாரியர்களையும், பேரருளாளனையும் நம்பெருமாளையும் நினைத்து பரமபதம் சென்றடைந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜரின் திருமேனி  எப்பேர்ப்பட்ட திருமேனி ! 

- சுஜாதா தேசிகன்
11.05.2024

நாளை ஸ்ரீராமானுஜரின் 1007ஆம் திருநட்சத்திரம்.
படம் : அடியேன் ஸ்ரீராமானுஜரின் 1000 திருநட்சத்திரம் அன்று எடுத்தது.

Comments