அயோத்தி தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடியேனின் ஆசாரியரான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் இந்தக் குரோதி வருடத்தில் நல்லதே நடக்கும்; எல்லாவிதமான மனோரதங்கள் நிறைவேறும்… என்று அருளாசி வழங்கிய அதே வாரம் அயோத்தியா சென்று வந்தேன்.
வந்தவுடன், உற்றார் உறவினர்கள் எல்லோரும் அணிநகர் அயோத்தியில் குழந்தை ஸ்ரீராமர் சௌக்கியமா என்று கேட்கவில்லை, ‘எப்படி சேவித்தீர்கள் ? திருப்பதி போலக் கூட்டமா ? தள்ளிவிடுகிறார்களா ?’ என்று வினவினார்கள். அதற்குக் காரணம் எல்லோருடைய மனோரதமும் அயோத்தி சென்று ஸ்ரீராம் லல்லாவை தரிசிக்க வேண்டும் என்பது தான்.
நம் புண்ணிய பூமியான பாரதத் தேசத்தில் நம் வாழ்நாளில் அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அவருக்கு ஒரு கோயில் என்பது 500 வருட இந்தியர்களின் மனோரதம். சென்ற சோபக்ருத் ஆண்டு தை மாதம் 8 ஆம் நாள் (ஜனவரி 22ஆம் ) அன்று ப்ராணப் பிரதிஷ்டை (ஸம்ப்ரோக்ஷணம்) இனிதே நடைபெற்றது.
ஆண்டாளின் ‘மனத்துக்கு இனியான்’ வீற்றிருக்கும் கோயில், பாரத மக்களின் மனங்களைப் பூட்டிய ’மனோ’ரதமாக ப்ராணப் பிரதிஷ்டை அன்று காட்சி அளித்தது. அதன் பின் குழந்தை ஸ்ரீராமரின் ஆச்சரியமான அர்ச்சாவதாரத் திருமேனியை தரிசித்தவர்கள், நாம் பிறந்த பயனாகப் பார்த்தவுடனே ‘சிந்தனைக்கு இனியவனாக’ மாறி ஸ்ரீராம லல்லாவை எப்படியாவது சேவித்துவிட்டு வர வேண்டும் என்ற மனோரதமாக மாறியது. .
ஸ்ரீராம பக்தர்கள் மேற்கொள்ளும் அயோத்தி பயணத்துக்கு உபயோகப்படலாம் என்ற எண்ணத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை அடியேனின் அனுபவத்துடன் பகர்கிறேன்.
அயோத்திக்கு எப்படிச் செல்லலாம் ?
அயோத்திக்கு சென்னை, பெங்களூருவிலிருந்து நேரடி விமானச் சேவை இருக்கிறது. மூன்று மணி நேரத்தில் புஷ்பேக் விமானத்தில் சென்றடையலாம். ரயில் சேவையும் இருக்கிறது. மேலும் தகவல்களுக்குக் கூகுளை நாடுங்கள்.
ஸ்ரீராம தரிசனத்துக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும்/செல்லக் கூடாது ?
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருக்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை, எம் பெருமான் தன்னை
என்று கொலோ! கண்குளிரக் காணும் நாளே
என்று குலசேகரப் பெருமாள் உளம் உருகும் ஆசையை மட்டும் அவரிடமிருந்து கேட்டு வாங்கி பெரிய மூட்டையில் அடைத்துச் செல்லுங்கள்.
உங்களைப் போல லட்சக்கணக்கில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவதால் கூட்ட நெரிசல், அதனால் ஏற்படும் எரிச்சல், குப்பை, குழப்பம் … என்று எல்லாவற்றையும் பார்த்து ‘நம்ம ஊரே இப்படி தான்’ போன முறை அமெரிக்க சென்ற போது.. போன்ற விஷயங்களைப் பெரிய மூட்டையாகக் கட்டி இல்லத்திலேயே வைத்துவிட்டுப் புறப்படுங்கள். நீங்கள் செல்லுவது ஸ்ரீராமர் பிறந்து நடமாடிய இடம். அந்த இடமே ஒரு சாளக்கிராமம் என்பதை மனதில் அவ்வப்போது நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
அடியேன் சென்ற போது கூட்டம் அவ்வளவாக இல்லை. இருந்தாலும் கவலைப் படாதீர்கள். எந்தப் பாகுபாடும் இல்லாமல், கட்டணம் இல்லாமல், ஸ்ரீராம தரிசனம் உத்தரவாதம்.
அயோத்தியில் வானிலை ?
உத்திரப்பிரதேசத்தில் வெய்யில் குளிர் இரண்டும் அதிகம். வெய்யில் காலத்தில் செல்லுவதாக இருந்தால் தொப்பி, ஒரு ஜோடி புது பருத்திக் காலுறை(சாக்ஸ்) கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்( வரிசையில் நிற்கும் போது கால் கொதித்தால்). சின்ன பாட்டில் தண்ணீர். ஓஆர்எஸ் கரைசல், சேவிக்க பெருமாள் திருமொழியுடன் சுவாரசியத்துக்குச் சில புளிப்பு மிட்டாய்கள்.
சிலர் நெற்றியில் ‘ஸ்ரீராம்’ என்று அச்சு போட்டுக்கொள்கிறார்களே ? போட்டுக்கொள்ளலாமா ?
’ஊரோடு ஒத்து வாழ வேண்டும்’ என்பார்கள். கோயில் வாசலில் நெற்றியில் மஞ்சள் பூசி, சேப்பு வர்ணத்தில் ‘ஸ்ரீராம்’ என்று அச்சு அடித்துவிடுவார்கள். நாம என்ன ஜீயரா ? அதனால் உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று தராளமாக அடித்துக்கொண்டு செல்லுங்கள்.
என்னால் நீண்ட வரிசையில் நிற்க முடியாது, அதிகத் தூரம் நடக்க முடியாதே என்ன செய்வது ?
கவலை வேண்டாம். ‘நடந்த கால்கள் நொந்தவோ?’ என்று ஸ்ரீராமர் போல நடக்க வேண்டாம். ஸ்ரீராம ஜன்மப் பூமி நுழைவாயிலிலேயே சக்கர நாற்காலிகள் கிடைக்கிறது. (கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருக்க வேண்டியிருக்கலாம்). இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் உங்களைத் தள்ளிக்கொண்டு ஸ்ரீராமரை உங்களுக்குக் காட்டும் அந்தத் தன்னார்வலருக்கு ஆசையுடன் சிறு நன்கொடையை வழங்க வேண்டியது உங்கள் கடமை.
காத்திருக்கும் வரிசை(க்யூ) பற்றி விரிவாகக் கூற முடியுமா ? எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கும் ?
க்யூ நிஜமாகவே விரிவாக இருக்கிறது. கோயில் வருவதற்கு முன் கூண்டு பாதை வழியே சென்று தரிசித்தது போல அல்லாமல் தற்போது பல இணையான வரிசைகள்(parallel queues) இருக்கிறது. முன்பு சொன்னது போல எதில் நின்றாலும் ஸ்ரீராமர் சேவை உத்தரவாதம். கோயில் நுழைவாயிலிருந்து கிட்டத்தட்ட ½ கிமீ நடந்தால் உங்கள் உடமைகளைப் பரிசோதிக்கும் இடம் வருகிறது(மெட்ரோ ரயிலில் ஏறும் முன் பரிசோதனை போல இது). அதைத் தாண்டியவுடன் காலணிகள் கைப்பேசி வைக்க இடம் இருக்கிறது. .
காலணிகள் கைப்பேசி வைக்கப் போதுமான இடம் இருக்கிறதா ?
இருக்கிறது. பார்க்கப் படம். காலணிகளைக் கடைசிக் கவுண்டரில் வைத்தால் சேவித்துவிட்டு வரும் போது எடுப்பது சுலபம். கைப்பேசி, பெட்டி, பை, போன்றவற்றை வைக்க லாக்கர் மற்றும் பொருள் வைப்பறை(cloak room) வசதி இருக்கிறது. முதுகுப் பை (backpack)போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.
பர்ஸ், பை, நகை எல்லாம் இருக்கிறதே ? என்ன செய்ய ?
நீங்கள் இதைக் கேட்பீர்கள் என்று தெரிந்து தான் இப்படத்தைக் கவர்ந்தேன்(பார்க்கப் படம்).
பணம், ஐடி, ஏடிம், நகை தவிர்த்து மற்றவற்றை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
அலைப்பேசி வைக்கும் இடம் பாதுகாப்பானதா ?
பாதுகாப்பானது. ஒரு குடும்பமாகச் சென்றால் ஒரு அலைப்பேசி எடுத்துச் செல்லுங்கள். பூட்டி சாவியை உங்களிடம் கொடுத்துவிடுவார்கள். அதைப் பத்திரமாக வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. சொல்ல மறந்துவிட்டேனே அலைப்பேசியுடன் ’ஸ்மார்ட் வாச்’ சமாசாரங்களைக் கழட்டி வைத்துவிடுங்கள் இல்லை உள்ளே சென்ற பிறகு முட்டாள் தனமாகத் திரும்ப இங்கே வர வேண்டியிருக்கும். எலக்ட்ரானிக் சமாசாரங்களை எடுத்துச் செல்லாமல் இருந்தால் இன்னும் வேகமாகச் சேவிக்க முடியும். லாக்கரில் வைப்பதற்கும் க்யூ உண்டு !
சரி, காலணி, கைப்பேசி வைத்துவிட்டேன் அதற்குப் பிறகு உடனே தரிசனம் தானே ?
இல்லை. இதற்குப் பிறகு இன்னொரு ¼ கீமீ வரிசையில் செல்ல வேண்டும். அங்கே விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை போன்ற இடம் வரும். இங்கே எல்லாவற்றையும் பரிசோதித்து அனுப்புகிறார்கள். தண்ணீர் பாட்டில், சானிடைசர் போன்ற சமாசாரங்களுக்கு அனுமதி இல்லை. தயவு தாட்சணியம் பார்க்காமல் கடாசிவிடுவார்கள். சில காவலர்கள் அனுமதிக்கிறார்கள். சின்ன தண்ணீர் பாட்டில் தப்பிக்கலாம்.
தண்ணீர் இல்லாமல் ?
இன்னொரு ¼ கிமீ வரிசையில் சென்றால் எல்லோருக்கும் சர்பத் கொடுக்கிறார்கள். இந்த இடத்தில் இங்கே தான் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அது என்ன ?
இங்கே எந்த க்யூவில் நின்றாலும் ஸ்ரீராமர் காட்சி கொடுப்பார் ஆனால் வலது கோடியில் இருக்கும் வரிசையில் நிற்பது புத்திசாலித்தனம். வலது சாரி வரிசை சற்று மெதுவாகச் சென்றாலும் ஸ்ரீராமரை நிறுத்தி நிதானமாகத் தரிசிக்கலாம். இடது சாரிகள் அவர்கள் பெயருக்கு ஏற்றார் போல வேகமாகச் செல்வார்கள் ஆனால் ஸ்ரீராமரை முழுமையாகச் சேவிக்க முடியாது! இந்த இடத்தில் சுற்றிலும் பாருங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுங்கள் பிரமிக்க வைக்கும்.
அலைப்பேசி இல்லை, ஸ்ரீராமருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியாதா ?
முடியாது.
அற்றவர்கட்கு அருமருந்தே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே!
என்று பெருமாள் திருமொழியில் ஆழ்வார் பாடிய அந்த ஸ்ரீராமரை பெரியாழ்வார் பாடிய பல்லாண்டுடன், ஆண்டாள் ‘மனத்துக்கு இனியான்’ என்று கூறிய பாசுரத்தையும் பாடிக்கொண்டு சேவித்தால் உங்கள் சிந்தனைக்கு என்றும் இனியனாக ஸ்ரீராமர் அவருடைய அவருடைய அலைப்பேசியில் உங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வார்!
சேவிக்கும் போது சத்தமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லிச் சேவியுங்கள். ஐபிஎல் தோனிக்கு எல்லாம் கத்துகிறோம் இங்கே தயங்காதீர்கள்!
சிலர் இன்ஸ்டாவில் போடுகிறார்களே ?
அவர்கள் விஐபியாக இருக்கலாம். என் அனுபவத்தில் அலைப்பேசி இல்லாமல் சேவித்தால் முழுத் திருப்தி கிடைக்கிறது!.
அருகில் சென்று சேவிக்க முடியுமா ?
முடியாது. சற்று தொலைவில் தான் சேவிக்க முடியும். ஆனால் நன்றாக ஒளிவிளக்கு வெளிச்சம் இருப்பதால் நன்றாகச் சேவை ஆகிறது. ( படத்தில் பச்சை கோடு போட்ட இடத்திலிருந்து தான் சேவிக்க முடியும் )
ஸ்ரீராமரை அருகில் பார்க்க முடியாதா ?
இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் தினமும் காலை ஆறு மணிக்கு தூர்தர்ஷனில் மங்கள ஆர்த்தி நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது அதில் பார்க்கலாம்!
இன்றைய ஒளிபரப்பை இங்கே காணலாம்
சேவித்தவுடன் தீர்த்தம் பிரசாதம் ஏதாவது ?
இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் காவலர்கள் செல்லமாகத் தள்ளுவார்கள். வெளியே வரும் போது ஒரு பொட்டலம் ‘நகுல் தானா’ பூ போன்ற சர்க்கரை உருண்டை பொட்டலம் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு சற்று நடந்தால் ஒரு பெரிய இடத்தில் சற்று இளைப்பாறலாம் அங்கே தண்ணீர் , கழிப்பறை வசதிகள் இருக்கிறது. அதற்குப் பிறகு நீங்கள் காலணி, அலைப்பேசி போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேங்காய், பூ, பழம் … எடுத்துக்கொண்டு செல்லலாமா ?
இவற்றை தவிர்க்கும் படி கூறுகிறார்கள். தவிர்த்துவிடுங்கள். திருவாய்மொழியில்
பூசும் சாந்து என் நெஞ்சமே, புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே, வான் பட்டு ஆடையும் அஃதே,
தேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே
என்று ஆழ்வார் போலக் கைகூப்பி ஜெய் ஸ்ரீராம் என்று உரக்கச் சொன்னாலே போதும்.
எனக்கு மீண்டும் சேவிக்க வேண்டும் என்ன செய்யலாம் ?
காலணி, அலைப்பேசி போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளாமல் மீண்டும் வரிசையில் நின்று… சுற்றிக்கொண்டு இருக்கலாம்.
தரிசனத்துக்கு மொத்தம் எவ்வளவு மணி நேரம் ஆகும் ?
அடியேன் முதல் முறை சேவித்த போது ஒரு மணி நேரம் ஆனது. இன்னொரு முறை 45 நிமிடம் ஆனது. நிச்சயம் 1-2 மணி நேரத்துக்குள் சேவித்துவிடலாம்.
கோயில் தரிசன நேரம் என்ன ?
காலை 6.30 முதல் இரவு 9.30 மணி வரை. காலை 7 மணிக்கு, மத்தியம் 2-3 மணி அல்லது மாலை 8.30 மணிக்குப் பிறகு சென்றால் 45 நிமிடத்தில் சேவிக்க முடிகிறது.
என்ன உடைகள் போட்டுக்கொள்ளலாம் ?
அலுவலகத்துக்கு நிறுவனத் தலைவர், அல்லது கஸ்டமர் வருகிறார்கள் என்றால் கோட் சூட், டை என்று அலங்காரமாக நிற்கிறோம். அயோத்தி ராமர் கோயிலில் இதைத் தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் நம் ஆலயத்தின் புனிதத்தைப் பேண வேண்டும். நம்மைப் பார்த்துத் தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் பாரம்பரியம் மற்றும் எளிமையுடன் கூடிய பருத்தி உடை பொருத்தமானது. ஷார்ட்ஸ், முட்டி ஓட்டை ஜீன்ஸ் போன்றவை வேண்டாம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உபத்திரம் இல்லாத ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது உத்தமம்.
அயோத்தியா எப்படி இருக்கிறது ?
ஸ்ரீராம ஜன்ம பூமி கோயில் வருவதற்கு முன் இருந்த அயோத்தியா வேறு தற்போதைய அயோத்தியா வேறு. கோயில் பக்கம் ’மஞ்சள் மண்டலம்’(yellow zone) என்று அறிவிக்கப்பட்டு அட்டோ போன்றவற்றைக் கூட கோயில் அருகில் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஊரே அலம்பிவிட்டது போல இருக்கிறது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் இருக்கிறது. ராமர் கோயில் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகள் ஒரே மாதிரி பழுப்பு நிறத்தில் உள்ளன. மூடப்பட்ட கடைகளின் ஷட்டர்களில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ , திருமண் அல்லது ஸ்வஸ்திக் சின்னம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. மாலை நேரம் சாலைகளில் லேசர் கோலம் என்று Complete facelift!
ஓர் ஆட்டோ ஓட்டுனார் ’ஹலோ கூகுள்’ என்று போகும் இடத்தைச் சொல்லி எங்களை அழைத்துச் சென்றார். நாம் அவர்களைப் பானிப்பூரி விற்பவர்கள் என்று கிண்டல் செய்கிறோம்!
கோயில் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் அயோத்தியா இன்னும் மாறிவிடும்!
அயோத்தி ஸ்ரீராமரின் தரிசனப் பயணத்திற்கு எத்தனை நாட்கள் திட்டமிட வேண்டும் ?
விமானம் மூலம் செல்வது என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் தேவை. கோயிலுக்கு அருகிலேயே தங்கினால் இரண்டு மூன்று முறை சேவிக்கலாம். வெளியே தங்கினால் கொஞ்சம் கஷ்டம்.
அயோத்தியில் சாப்பாடு கிடைக்கிறதா ? இட்லி தோசை… ?
கோயில் சுற்றி ராம் லல்லா பரிசுப் பொருட்கள், ஜெய் ஸ்ரீராம் எழுத்துக்கள் ஏந்திய துப்பட்டா, ஊதுபத்தி புகைக்கு நடுவில் லஸ்ஸி, மட்கா சாய் போன்றவை விரவியிருக்கிறது. கோயில் பக்கம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு ஒரே ஒரு உணவகம் இருக்கிறது, ஆனால் கோயிலை விட அங்கே கூட்டம் அதிகம். மற்றபடி தடுக்கி விழுந்தால் சமோசா, கச்சோரி வஸ்துக்கள் கிடைக்கிறது சாப்பிட்டால் வயிற்றில் நளின காந்தி, கச்சோரி மன்னிக்கவும் கச்சேரி உத்தரவாதம். கோயிலுக்கு வெளியே ஸ்ரீராம் மருத்துவமனை மற்றும் வரிசையாக மருந்துக்கடைகள் இருக்கிறது தகவலுக்கு.
வேறு என்ன தான் சாப்பிடுவது ?
அயோத்திக்குள் நுழையும் போதே கையில் பழங்கள், பிரட், பிஸ்கெட் போன்றவற்றை எடுத்துச் சென்றுவிடுங்கள். ஏப்ரல், மே, ஜூன் காலம் யாகசாலை பிரகஸ்பதிக்கு அருகில் உட்கார்ந்திருப்பது போல வெப்ப அலைகள் வீசுகிறது. தண்ணீர் கிடைக்கிறது. நிறையக் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும். கையில் எலெக்ட்ரல் பவுடர் வைத்துக்கொள்ளுங்கள்.
வேறு என்ன இடங்கள் தரிசிக்க வேண்டும் ?
அனுமான் கடி, சரயூ நதி, அம்மாஜி மந்திர், கனகபவன், தசரத பவன் என்று பல இருக்கிறது. கோயில் வாசலில் 20 ரூபாய்க்கு ஒரு புத்தகம் கிடைக்கும், அதை வாங்கி பாருங்கள் விவரமாகப் போட்டிருக்கும்.
கேட்க மறந்துவிட்டேன், புதிய அயோத்தி விமான நிலையம் எப்படி இருக்கிறது ?
இரண்டு வாயில்கள் மட்டுமே உள்ள சிறிய விமான நிலையம். உள்ளே ஸ்ரீராமர் சரித்திரச் சித்திரங்கள், ஸ்ரீ அனுமாரின் வாழ்கை சித்திரங்களை மிஸ் செய்துவிடாதீர்கள்.
அயோத்தியில் என்ன வாங்கலாம் ?
தசரதப் பவன், கனகபவன் அருகில் நாமக்கட்டி கிடைக்கும். அதைத் தவிர ராம் லல்லா படங்கள், ராம் லல்லா, கோயில் மினியேச்சர் மாதிரி என்று பல விஷயங்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது. நான்கு கடையில் விசாரித்தால் விலையை அறிந்துகொள்ளலாம். அங்கே உள்ள வர்த்தகத்தை ஊக்குவிக்க எதையாவது வாங்குங்கள்.
கடைசியாக ஏதாவது ?
நம்மாழ்வார் ‘நற்பால் அயோத்தி’ என்று கூறுகிறார். அதாவது ‘நல்ல இடத்தைப் பெற்ற அயோத்தி’ என்பதற்கு நம்பிள்ளை அயோத்தியின் ‘நில மிதியே ஸ்ரீராம பக்தியை விளைவிக்கும்’ என்கிறார்.
கம்பர் போகத்திற்கு ஒரே இடமான அயோத்தியை விடச் சிறந்த இடம் இந்த உலகத்தில் வேறு இல்லை, அயோத்திக்கு என்ன உவமையைக் கூற முடியும் என்று வியந்து தவிக்கிறார். அதனால் அயோத்தியை மிஸ் செய்துவிடக் கூடாது, உடனே கிளம்பிவிடுங்கள். குழந்தை ஸ்ரீராமர் உங்களை வரவேற்க நின்று காத்துக்கொண்டு இருக்கிறார்!
- சுஜாதா தேசிகன்
3.5.2024
எழுத்தாளர் சுஜாதாவின் 89ஆம் பிறந்த தினம்.
வசதிக்காக இந்தப் படம் ( கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும்)
நல்ல விரிவான தகவல். தங்களுடன் வந்து ராமரை தரிசித்த உணர்வைெ கொடுத்தது கட்டுரை
ReplyDeleteI am not finding apt words to shower our compliments on your well compiled 777 type *FAQ* on your Ayodhya visit.
ReplyDeleteYou have nicely answered anticipating all types of possible queries.
Some hillarious ones to read were *Nalinakaanthi Kachori*( Kaccheri) etc.
The finale is simply touching ( written specially on Sujatha's birth day) Nammazhwar's *Narhpaal Ayodhiyi* motivates you to have a Darshan of Raam Lalla ASAP.
When nonagenerian Shri Paraasaran has made it to Ayodhya to handover *Shadaari* ( on behalf of Jeeyar Swamy) we should take due inspiration from him and follow suit.
Dhanyosmi for a feast of information compiled and posted for our benefit.
அருமையான கைங்கர்யம்.அயோத்தி அடுத்த மாசம் போலாம்னு இருந்தேன்.
ReplyDeleteஉமது வ்யாசம் ஏற்கனவே அங்கு இருக்கும் உணர்வை உண்டாக்கி விட்டது.
எனவே ஆராமா போலாம்னு முடிவு செய்து விட்டேன்
அயோத்திக்கு எப்பொழுது செல்வோம் என்ற யோசனையுடனே இருக்கும் என்போன்றோருக்கு ராமனை தரிசித்து, பெருமாள் திருமொழியில் அருளியதுப்போல், (திருச்சித்திரகூடம்) ராம் அல்லாவை சேமித்த பாக்யம்🙏
ReplyDeleteSir, a wonderful compilation of all the info.
ReplyDeleteஇன்று May 3rd ஆச்சே, சுஜாதா வைப் பற்றி ஒண்ணுமே எழுதலையே என்று நினைத்தேன்.கடைசி வரியில் இந்த அருமையான கட்டுரை யை அவருக்கும் எங்களுக்கும் பரிசாகத் தந்து விட்டீர்கள்
ReplyDeleteSuperb post on sujatha birthday
ReplyDeleteSuuperb
ReplyDeleteAdiyen Dhanyosmin. Very nice and clear information and instructions to be followed and comefertable journey and Dharsan.JAI SRIRAM
ReplyDeleteயாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எழுதி உள்ளீர் .
ReplyDeleteமுழு கோவிலும் கட்டி முடிக்க மூன்றாண்டு ஆகும் என்பதால்
அது வரை காத்திருக்க இயலாது. ஏன் என்றால் ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும் என்பதால் செயலாக இருக்கும்போதே பாலராமரை ஸேவித்து
விடுவது நல்லது. தகவல்களுக்கு கோடானு கோடி நன்றிகள் .
Almost in Sujatha’s style! Experienced my virtual presence. Almost 40 years back, visited the then Ayodhya, and was in tears!
ReplyDeleteதெளிவான விளக்கம் அவசியமான அற்புதமான பதிவு! ஹரே கிருஷ்ணா!
ReplyDeleteThanks for the detailed information Anna. God bless your service 🙏🏻
ReplyDelete