Skip to main content

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்!

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்!


உற்சவத்தின் போது நாயந்தே என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. அதை கடைசியில் சொல்லுகிறேன். இப்போது பெரியாழ்வாரை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லலாம்.

ஆழ்வார் பெரிய ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றால், கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சியளிக்கிறார்.

பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது?

பல்லாண்டு,
ஆண்டாளின் தகப்பனார்,
விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல்.

இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம்.

ஒரு அன்பர், “சரணாகதியில் பெரிய பெருமாள் திருவடிகளைப் பற்றுகிற மாதிரி திருவேங்கடமுடையான் திருவடிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உண்மைதான். “அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று திருவேங்கடமுடையான் திருவடிகளைத்தான் ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரே சொல்லியிருக்கிறார்.

அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே” என்று அந்த வேங்கடவன்தான் அரங்கத்தில் இருக்கிறான் என்கிறார் திருப்பாணாழ்வார்.

பெரியாழ்வாரும் இதையேதான் சொல்லுகிறார். எப்படி என்று கண்டுபிடிக்கக் கீழே உள்ள இந்தப் பாசுரத்தைப் பாருங்கள்:

சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பி தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே

இதில் திருவேங்கடமுடையான்தான் வருகிறார், ஸ்ரீரங்கம் பெருமாள் எங்கே என்று நீங்கள் தேடுவது தெரிகிறது. முதல் இரண்டு வரியை இப்படிப் பிரித்துப் படிக்கலாம்:

”சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பி” அதாவது ஓங்கியிருக்கும் குளிர்ந்த திருவேங்கடமலையில் உலகோர் வாழ வேண்டும் என்று நின்றுகொண்டு இருக்கும் நம்பியே.

”தாமோதரா சதிரா” என்பது அடுத்து வருகிறது. தாமம் - கயிறு; உதரம் - வயிறு; இதுவே தாமோதரன். இது ஸ்ரீரங்கம் நம்பெருமாளைக் குறிக்கும் சொல்! யசோதை கண்ணனை உரலோடு சிறு தாம்பினால் சேர்த்துக் கட்டியபோது வயிற்றில் உண்டான தழும்பை (திருவிலச்சினை) - அடையாளமாகத் தரிக்கிறான் என்பது பூர்வர்களின் கருத்து.

அதனால் தான் இன்றும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் (திருமஞ்சனம் நடைபெறும்போது) உள்சாத்து என்று ஒன்றை அணிந்துகொள்வார். அதைக் களையும்போது மேல்சாத்து ஒன்றை மேலே சாத்தி (அவனுடைய நிரந்தர தழும்பு வெளியில் தெரியாமல் மறைத்து) உள்சாத்தைக் களைவார்கள்.

ஏன் மறைக்கிறார்கள்? ஒருமுறை கண்ணன் இடைச்சிகளின் துணிகளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தில் ஏறி மற்றொரு கிளைக்குத் தாவுகிறபோது அவன் ஆடை சற்று விலகியது. வயிற்றிலிருந்த தழும்பைப் பார்த்த இடைச்சிகள் சிரித்துவிட்டார்களாம். அதனால் கண்ணன் வெட்கப்பட்டான். நாமும் கோபியர்கள் தானே? அதனால் தான் இன்றும் அதை ஸ்ரீரங்கத்தில் மறைக்கிறார்கள்.

பெரியாழ்வார் வேங்கடம் என்று சொன்னதுடன் உடனே நம்பெருமாளும் அவன் இடுப்பில் தழும்பும் நினைவுக்கு வர, உடனே ’தாமோதரா’ என்கிறார்.

அடுத்த இரண்டு வரிகளில்:
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே

ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்குச் சக்கரம் மற்றும் சங்கு முத்திரைகளைத் தோளில் நிரந்தரமாகத் தரித்துக்கொள்கிறோம், நாம் பெருமாளுக்கு அடிமை என்பதன் அடையாளம்.
பெருமாளும் தன் அடியவர்களுக்கு ஆட்பட்டவன் என்று சொல்லிக்கொள்ள ஒரு அடையாளம் வைத்துள்ளான்; அதுதான் இடுப்பில் இருக்கும் தழும்பு.

அவனை “கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டினால்” உடனே அவன் கட்டுப்படுகிறான். கட்டுப்பட்டு சம்சாரம் என்ற நம் மீது கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்தும் விட்டு, மீண்டும் பிறவி இல்லாமல் பார்த்துக்கொள்கிறான்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் கட்டுரைக்குள் அழைக்கலாம்.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கி போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே

வேதத்தில் சொல்லியிருப்பது போல் ஒருவனுக்கு நூறு வயது என்றால், அதில் ஐம்பது வருடம் தூக்கத்தில் போகிறது. மீதியுள்ள ஐம்பது வருடத்தில் இளமை, பசி, நோய் நொடி, முதிர்ந்த பருவம் என்று போகிறது. அதனால் இனி பிறவி எதுவும் விரும்பவில்லை என்கிறார்.

இந்தப் பாசுரத்துக்கு முழு அர்த்தம் பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததைக் கொண்டு பார்த்தால் சுலபமாகப் புரியும். சுருக்கமாகக் கீழே தந்துள்ளேன்.

'வல்லப தேவன்' என்ற அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒருநாள் இரவு அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி யாரென்று விசாரித்தான். அதற்கு அவன் 'நான் திவ்யதேச யாத்திரை செய்துவிட்டு வடநாடெங்கிலும் சுற்றி, கங்கை நீராடி வரும் அந்தணர்' என்று கூற, அரசன் அவனிடம் 'உனக்குத் தெரிந்த நீதி ஒன்றைச் சொல்லு' என்றான்.

அந்தணனும், 'மழைக்காலத்துக்கு வேண்டியதை வெயில் காலத்திலும், இரவுக்கு வேண்டியதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்னும் பொருளுடைய சுலோகத்தைச் சொன்னார். இது வல்லப தேவனின் சிந்தனையைக் கிளறியது. கடைசியாக ‘மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக’ என்ற கருத்துக்கு இதுவரையிலும் நாம் என்ன முயற்சி செய்தோம்?' என்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தான்.

மறுநாள் அரசவையில் உள்ள தன் குரு செல்வ நம்பியை அழைத்து 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்ன வழி?' என்று வினவினான். உடனே நாடெங்கிலும் உள்ள அறிஞர்களைக் கூட்டி 'பரதத்துவ நிர்ணயம்' (பரம்பொருள் பற்றிய முடிவு) செய்தால் இவ்வினாவுக்கு எளிதில் விடை கிடைக்கும் என்று யோசனை தந்தார்.

அவரது அறிவுரையை ஏற்றப் பாண்டியனும் பரதத்துவ நிர்ணயம் செய்வோருக்குப் பொற்கிழி பரிசளிப்பதாகப் பறைசாற்றிடச் செய்தான். விஷ்ணுசித்தர் 'மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்ந்நெறி' என்றும், ’அந்நெறியில் நிற்பவரே வீடுபேற்றிற்கு உரியவர்’ என்றும், ‘ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மா என்றும், அவனைச் சரணடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம்’ என்றும், ‘அவனே அறுமுதலான உறுதிப்பொருள்களை அளிக்க வல்லவன்’ என்றும் பரதத்துவத்தைப் பாண்டியன் சபையில் நிலைநாட்டினார்.

அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லப தேவன் மகிழ்ந்து 'பட்டபிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான். இந்தக் காட்சியைக் பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்குக் காட்சி தந்தார். அதைக் கண்ட பெரியாழ்வார் யானைமீது இருந்த இரண்டு மணிகளைக் கைத்தாளக் கருவியாகக் கொண்டு “உன் அழகுக்குக் கண்பட்டுவிடாதோ” என்று உருகி பல்லாண்டு வாழ்க என்று பாடுகிறார்.

இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். யானைமீது பெரியாழ்வார். பெரியாழ்வார் தலைக்கு மேலே பெருமாள் கருடாழ்வார் மீது அமர்ந்துகொண்டு காட்சி தருகிறான்.

விமானம் மேலே போகும் போது நான் அதைக் கீழே இருந்து பார்த்திருப்போம். என்ன தெரியும்? இறக்கை, பிறகு அதன் அடிப்பாகம். பெரியாழ்வாருக்கு அதே போல் பெருமாளின் திண்தோள், பிறகு திருக்கமலப் பாதம். உடனே:

“மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! - உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று பல்லாண்டை ஆரம்பிக்கிறார்.

அடுத்த முறை பல்லாண்டு சேவிக்கும்போது இதைக் கற்பனை செய்து சேவித்துப்பாருங்கள். வேறு அனுபவமாக இருக்கும். இங்கே பெரியாழ்வார் செய்தது Prayer கிடையாது; Blessing. அதைத் தான் தமிழில் மங்களாசாசனம் என்கிறோம்.

Prayerஇல் கொஞ்சம் நமக்கு என்ன வேண்டும் என்ற ஒன்று ஒட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் Blessingஇல் அது கிடையாது. இதைத்தான் சேஷத்துவம், பாரதந்திரியம் என்பார்கள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் ”ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே” என்று அடியேனை இந்தப் பூலோகத்தில் வைக்காதே என்கிறார். இது சேஷத்துவம்.

மேலே உள்ள பாசுரத்தில் “நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே” என்று ஒரு நாய் தன் எஜமான் என்ன சொன்னாலும் செய்வதற்குக் காத்துக்கொண்டிருப்பது போல அந்த ’திருக்குறிப்புக்கு’ காத்துக்கொண்டு இருக்கிறார். நாயந்தே என்று உற்சவத்தின் போது சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அதற்குப் பொருள் நாய்போல் அடிமை செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவதுதான் ”நாயந்தே”.

எஜமான் நாயிடம் ஏதாவது சொன்னால் நாய் இதைச் செய்யமாட்டேன், வேறு ஏதாவது செய்கிறேன் என்று சொல்லாது. இதுதான் பாரதந்திரியம். எல்லாம் எஜமானனைச் சார்ந்தே இருக்கும்.

லக்ஷ்மணனுக்கு இருந்தது சேஷத்துவம். ஸ்ரீராமர் என்னுடன் காட்டுக்கு வராதே என்று சொன்னதையும் கேட்காமல், இல்லை கைங்கரியம் செய்ய வருவேன் என்று சொன்னார். ஆனால் பரதன் ஸ்ரீராமர் சொன்ன பேச்சைக் கேட்டு நாட்டிலிருந்தார். இது பாரதந்திரியம்.

பாரதந்திரியம் சேஷத்துவத்தின் அடுத்த நிலை. அதுதான் பெரியாழ்வாருக்கு இருந்தது. அதனால்தான் ”நீ நல்லா இருப்பா என்று பல்லாண்டு பாடினார்”. அதனாலேயே அவர் பெரியாழ்வார் என்ற பெரிய ஆழ்வாரானார்.

-சுஜாதா தேசிகன்
5.7.2025

ஆனி ஸ்வாதி, பெரியாழ்வார் திருநட்சத்திரம் 

Comments