Skip to main content

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம்

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம்


சென்ற வருடம் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கவலைப் படாதீர்கள். இந்தக் கட்டுரை அதைப் பற்றியது இல்லை. மொழிபெயர்த்த சமயம்  ‘பிபேக் டெப்ராய்’ (Bibek Debroy) என்ற பெயர் அடிபட்டது. (விவேக் டெப்ராய் என்றும் பாடம்). அவரைக் குறித்துத் தேடிய போது, கிட்டத்தட்ட எல்லா இதிகாசப் புராணங்களையும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். இவரை வியந்துகொண்டு இருந்த சமயத்திலேயே இந்தப் பூவுலகை விட்டு(நவம்பர் 2024) சென்றுவிட்டார்.

இவர் எழுதிய புத்தகங்களை வரிசையாகப் பார்த்த போது  ’Manmatha nath dutt - translator extraordinaire ’ ( மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர்) என்ற புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. கீழடியில் தோண்டி எடுத்த அழுக்கு புத்தகம் ஒன்றை அமேசான் அனுப்பியது. திருப்பி அனுப்பினேன். மேலும் ஆழமாகத் தோண்டி எடுத்த வேறொரு புத்தகத்தை அனுப்பினார்கள். திருப்பி அனுப்பும் விளையாட்டை நிறுத்துவிட்டு, புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். 

இந்தப் புத்தகம் சீரியஸ் ரீடிங் வகையைச் சார்ந்தது. நிறுத்தி நிதானமாக ஒரு மாதத்தில் படித்து முடித்தேன். 

பிபேக் டெப்ராய் பழைய சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கும் போது, அந்த நூலை ஏற்கனவே மன்மதா நாத் தத் என்பவர் மொழிபெயர்த்திருப்பது அவருக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. யார் அந்த ஆசாமி என்ற தகவல் எதுவும் இல்லை. தனிச்சிறப்புமிக்க புறக்கணிக்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பாளர் யாராக இருக்கும் என்று கண்டறிய டிப்ராய் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறார். அவரை தேடும் முயற்சியில் அவர் விட்டுச் சென்ற தகவல்களைச் சேகரித்து, தடயங்களை ஆராய்ந்து, சிலவற்றை நீக்கிச் சிதறிக் கிடக்கும் புதிர் துண்டுகளை ஒன்றாக இணைத்து மன்மத நாத் தத் என்ற மனிதரின் சித்திரத்தை நமக்குத் தருகிறார். 

புத்தகத்தில் பல பெயர்கள், ஊர்கள், வீதிகள் என்று வருவதால் வேகமாகப் படித்துக்கொண்டு போக முடியாமல் எப்போதும் ஓட்டைகளுடன் கூடிய காஞ்சிபுரம் சென்னை சாலை வழியாகச் செல்வது போல புத்தகத்தை மெதுவாகப் படித்தேன். அதிலிருந்து சில விஷயங்களை உங்களுக்குத் தருகிறேன். 

முதலில் மன்மத நாத் தத் கல்கத்தாவில் வாழ்ந்த காலம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்  1855-1912. ரவீந்திரநாத் தாகூர், ஸ்வாமி விவேகானந்தா போன்றவர்கள் இவருடைய சம காலத்தவர்கள். 

டெப்ராய் முதலில் பல்வேறு சுயசரிதைகளை ஆராய்ந்து வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரித்து அவருடைய வம்சம் எது என்று தேட முற்படுகிறார். அவர்களுடைய பழைய ஜமீன்தார் குடும்பம், அவர்களுக்குக் கிழக்கிந்திய கம்பெனியுடனான தொடர்பு என்று ஆராய்ந்துகொண்டு வரும் போது இரண்டு மன்மதா நாத் தத் இருப்பது தெரிய வருகிறது. ஒருவர் மருத்துவர், இன்னொருவர் எழுத்தாளர். இந்த குழப்பத்தை எப்படி நீக்குகிறார் என்று விவரிப்பது சுவாரஸியம். மன்மதா நாத் தத், பிரம்ம சமாஜின் தலைவரான கேசப் சந்திர சென்னின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கேசப் சந்திர சென்னின் மருமகன் மன்மதா நாத் தத் என்று அடையாளம் காணப்படுகிறார், இருப்பினும் சிவநாத் சாஸ்திரியின் பிரம்ம சமாஜ் வரலாறு அவரை குறிப்பிடவில்லை. 

அடுத்து தத் படித்த காலம், படிப்பு குறித்து ஆராய்கிறார். 1867ஆம் ஆண்டு கல்கத்தாவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம். இதில் எழுத்தறிவு பெற்றவர்கள் சுமார் இரண்டு லட்சம். எழுத்தறிவு வகைப்படுத்தப்படாதது. அதனால் அந்த காலத்தில் 1881-82ல் எவ்வளவு மாணவர்கள் FA ( First Arts ) தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அதில் எவ்வளவு பேர் பி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அதிலிருந்து எவ்வளவு பேர் எம்.ஏ படிப்பில் தேர்ச்சி பெற்றனர் என்று தேடுகிறார். பி.ஏ படித்தவர்களில் எவ்வளவு பேர் மேல்படிப்பான எம்.ஏ படித்தவர்கள் (வென் டயகிராம் நினைவு இருக்கிறதா ?), Six degrees of separation கோட்பாடு போன்றவற்றைக் கொண்டு நெருங்கிய குழுவிற்குள் உள்ள நபர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியைத் தொடர்கிறார்( இது இன்றைய லிங்க்ட் இன் சமாசாரம் ) 

ரவீந்திரநாத் தாகூர் 1861 இல் பிறந்தார், இது அவரை தோராயமாக மன்மதா நாத் தத்தின் சமகாலத்தவராக்குகிறது. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஒரு கதை பற்றி டெப்ராய் கூறும் ஒரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

சத்யஜித் ரே  ‘சாருலதா’ என்ற திரைப்படத்தை 1964ல் எடுத்தார். அது ரவீந்திரநாத் தாகூரின் ’நஷ்டானிடா’ ( உடைந்த கூடு) என்ற குறுநாவலை மையமாகக் கொண்டது. இந்த நாவல் 1901ல் எழுதப்பட்டது. அதில் பூபதி ஒரு முக்கியமான கதாபாத்திரம். அரசியல், சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்ட இந்த பூபதி  தன் இளம் மனைவி சாருவை விரும்பினாலும் அவளைப் புறக்கணிக்கிறான். பூபதியின் மைத்துனர் உமாபதி ( ஒரு வக்கீல் ) பூபதியை ஒரு பத்திரிக்கையை ஆரம்பிக்க ஊக்கப்படுத்துகிறார். இந்தச் சமயம் பூபதியின் உறவினர் ( கசின் பிரதர் ) அமல் (எழுத்தாளர்) சாருவுடன் நெருங்கிப் பழக அது ஒரு நெருக்கமான உறவாக மாறுகிறது. இந்த உறவு அதிகம் வளர்ந்துவிட்டதை உணர்ந்த அமல், மேற்கொண்டு நீடிக்கக் கூடாது என்று மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்கிறார். இதனால் சாரு மனமுடைந்து போகிறாள். இதை அறிந்த பூபதியும் உடைந்து போகிறார். இதுதான் சுருக்கமான கதை. 

இந்தக் கதையின் ஒரு பகுதியில் சாரு, அமலின் உரையாடலில் சாரு “உங்கள் எழுத்து நடை புதிய எழுத்தாளர் மன்மதா நாத் தத்தின் எழுத்து நடை போன்று இருக்கிறது” என்று சொல்ல, அது அமலுக்குச் சற்று எரிச்சலைத் தருகிறது. அமல் மன்மதா நாத் தத்தின் எழுத்தைக் குறித்து எந்த விமர்சனமும் வைக்காமல் தத்தின் புத்தகத்தில் சில பகுதிகளைக் குறிப்பிட்டு அதை நக்கல் அடிக்கிறார். இது சாருவிற்குக் கோபத்தைத் தூண்டுகிறது. 

இந்தக் கதையை வங்க மொழியில் படித்தவர்கள் எத்தனை பேர் மன்மத தத்தா என்ற பெயரைக் கவனித்திருப்பார்கள். அமல் மற்றும் அவனது அண்ணிக்கு இடையேயான சித்தரிக்கப்பட்ட உறவு, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அவரது அண்ணி இடையேயான உறவின் அடிப்படையில் அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. திரைப்படத்தில் சாருவின் பெயர் சாருலதா ஆனால் வங்க மொழியில் எழுதப்பட்ட கதையில் அவள் பெயர் சாருபாலா ; 

மன்மத நாத் தத் மனைவி பெயர் சாருபாலா! மன்மத நாத் தத் மைத்துனர் ஒரு வக்கீல். சில சமயம் கதை எழுதும் போது நம்மையும் அறியாமல் நம் ஆழ்மனதில் தேங்கியிருக்கும் சொந்தச் சுயசரிதை பகுதிகள் நுழைந்துவிடுகிறது. 

இதைப் படித்த போது முன்பு சுஜாதா க.பெ எழுதிய பகுதி தான் நினைவுக்கு வந்தது. அதை அப்படியே இங்கே தந்துள்ளேன். 

//….எனக்கு அடுத்த பிரசவத்துக்கு அம்மா பிறந்தவீட்டுக்கு ஸ்ரீரங்கம் அனுப்பப்பட்டாள். அம்மா இரண்டு குழந்தைகளுடன் மூன்றாவது பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். பெண் குழந்தை. அந்தப் பெண் பிறந்த கையோடு அம்மாவை அழைத்துச் செல்ல அப்பா வந்திருக்கிறார். பாட்டி, 'பச்சை உடம்பு.. பச்சைக் குழந்தை' என்று சொல்லியும் கேளாமல், கைக்குழந்தையுடன் நாங்கள் இரண்டு குழந்தையுடன் ஊட்டிக்கு ரயிலில் பயணப்பட்டிருக்கிறார்கள். ரயிலில் நல்ல கூட்டமாம். குழந்தையைத் தரையில் கிடத்தி அருகில் படுத்திருக்கிறாள். குழந்தை ராத்திரி ரயிலில் இறந்துவிட்டது. வழியில் இறங்கி அதைப் புதைத்து விட்டார்களாம். இந்தச் சம்பவத்தைப் பற்றி அப்பா என்னிடம் பேசியதே இல்லை. அம்மா நான் நன்றாக வளர்ந்து சுயசிந்தனையும் மனப்பக்குவமும் வந்தப்புறம்தான் சொல்லத் தலைப்பட்டிருக்கிறாள். எனக்கு நல்லவேளை அந்த இரவுப் பயணம் எதும் ஞாபகம் இல்லை என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் உள்மனசில் அது எங்கோ தேங்கியிருக்கு வேண்டும்.

இது ஒரு சம்பவம்.

என் கல்யாணம் ஆகி முதல் குழந்தை விழுப்புரத்தில் பிறந்தது. பெண் குழந்தை. பிறந்த சில தினங்களில் இறந்துவிட்டது. அப்போது நான் டெல்லியில் இருந்தேன். அவசரமாக ப்ளேன் பிடித்து மனைவிக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்.

குழந்தையைப் பறிகொடுத்த அந்த இளம் மனைவியை முதலில் பார்த்தபோது என் அடிமனதில் பதிந்தது ஒரே ஒரு பிம்பம்.

அண்மையில் என் கனவுத் தொழிற்சாலை

நாவலைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கீழ்வரும் பகுதி ஆச்சரியம் அளித்தது. தானாகவே எழுதிக்கொண்ட பகுதிகள் ஒரு எழுத்தாளனுக்கு அரிதாகவே கிடைக்கும்.

"லூயிஸ்... டாமினிக் லூயிஸ்" என்று கூவி விசித்து அழ ஆரம்பித்தான் குழந்தை நிதானமாகத் தன் சின்னப் போராட்டத்தைக்

கைவிட்டுக் கொண்டிருந்தது.

என் பிள்ளைங்க.... என் பிள்ளைங்க... பெத்து இருபது நா ஆவலைங்க."

“அழாதம்மா... இந்தக் குழந்த சர்வேசுவரனுடைய தேவதை மாதிரி. இது என்ன பாவம் செய்தது... ஒண்ணுமில்லைல்ல? இதற்கு எப்பேர்ப்பட்ட மோட்ச சாம்ராஜ்யம் காத்திருக்குது தெரியுமா... குழந்தை இந்த ஸ்தூல சரீரத்தைவிட்டு சூட்சும சரீரமாய் அந்த நாளில் இது எந்திரிக்கிறபோது இதைப் பரலோகத்துத் தேவதைகள் எல்லாம் தங்க வாசலிலே தாங்கி வாங்கிக்கு வாங்கம்மா.... பேர் சொன்னிங்க?"

"லூயிஸ் டாமினிக் அருமைராசன்."

"லூயிஸ் டாமினிக் அருமைராசன்! சமாதானத்துடன் கடவுளோடு ஒன்றித்திருப்பாயாக. உன் ஆத்மா அந்த சர்வேஸ்வரனுடன் இளைப் பாறட்டும்."

குரு அந்தக் குழந்தைக்குப் பரிசுத்த எண்ணெய் தடவ, அந்தக் குழந்தை யின் பிராணன் என்னும் அழகான இளம் காற்று ஒரு பிரபஞ்சக் கானத்துடன் கலந்துகொள்ள பிரயாணப்பட்டது.

லூயிஸ் டாமினிக் அருமைராசன் பெங்களூரில் பிறந்து, பதினெட்டு நாள் வாழ்ந்து சென்னைக்கு வந்து அதன் வெளிப்புறத்தில் இருக்கும் செமெட்டரியில் ஒரு சின்னப் பெட்டியில் அடக்கமானான். உபதேசியார் 'மண்ணிலே பிறந்தாய்... மண்ணிற்கே போகிறாய். கடவுளின் சமாதானத்தில் இளைப்பாறுவாயாக' என்று முணுமுணுக்க, செமெட்டரிக்கு வெளியில் சகாயமேரி தெருவோரத்தில் உட்கார்ந்திருக்க, அவள் மார்பெல்லாம் முலைப்பாலால் நனைந்திருந்தது.

செத்துப்போன தங்கைக்கும் மரித்த மகளுக்கும் பல வருடங்கள் கழித்து ஒரு அழகான கிறித்தவ நல்லடக்கம் செய்தபின்தான் என் மனதின் அடித்தளத்தில் இருந்த அந்தச் சோகம் வடிந்தது….

//

அடுத்து தத் அவர்களின் மொழிபெயர்ப்பு குறித்து ஆராயத் தொடங்கிய டெப்ராய் தத் ராமாயண மொழிபெயர்ப்பு மிக நேர்த்தியாக இருக்க ஆனால் மற்ற மொழிபெயர்ப்புகள் சுமாராகவும், கங்குலியின் படைப்பைத் தழுவியும்(அக்காலத்தில் காப்புரிமைச் சட்டம் இல்லை,) இருந்ததை உணர்கிறார் டெப்ராய். இதற்குக் காரணம் தத் மொழிபெயர்ப்பு பணியுடன் பதிப்பிக்கும் பணியையும் செய்தது தான் முக்கிய காரணம் என்கிறார். இருந்தாலும் தத் தான் எழுதித் தள்ளிய 21ஆண்டு காலத்தில் சுமார் 2.6 கோடி வார்த்தைகளை எழுதியுள்ளார். அதாவது 1,24,000 வார்த்தைகள்; மாதத்திற்கு 10,300 வார்த்தைகள் இது அவரது அசாதாரணத் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவர் மொழிபெயர்ப்புகளுக்கு அப்பால் பல ஹிந்து மதம் சம்பந்தமான  படைப்புகளை எழுதியும் உள்ளார். தன் ஆரம்பக் காலத்தில் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்!. 

தத் தன் மொழிபெயர்ப்புகளுக்கு ஆங்கிலேயர்களையும், மைசூர் மகாராஜாக்கள் போன்ற தாராளப் பிரபுக்களையும் தன்வெளியீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய நாடியுள்ளார். இது தொடர்பான பல கடிதங்களை அவர் எழுதியுள்ளார். சிலவற்றுக்கு ஆங்கிலேயர்கள் மழுப்பலான பதில்களை அனுப்பியுள்ளார்கள். சில அலுவலக உள் தொடர்பு கடிதங்களில் மொழிபெயர்ப்பு கங்குலி மொழிபெயர்ப்பைக் காப்பி அடித்தது போல இருக்கிறது என்று பேசிக்கொண்டதும் தெரிகிறது. ஆரம்பத்தில் தத்தின்  ஹிந்து மதம் சம்பந்தமான  சில பகுதிகளைக் குறிப்பிட்டு கிறிஸ்தவத்திற்கு ஹிந்து மதத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது என்பதைப் போல எழுதியது ஆங்கிலேயர்களைக் கவர்வதற்காக என்று குறிப்பிடுகிறார் டெப்ராய். ஆனால் ஸ்வாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைக்குப் பிறகு இவருடைய அணுகுமுறை மாறிவிடுகிறது. இந்து மற்றும் பிற இந்திய மதங்கள் நவீன உலகில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை. மேற்கு உலகின் நாகரிக மக்கள் இந்துக்களைக் குறித்த விமர்சனங்களையும் அவர்களின் குருட்டுப் புரிதல்களையும், இந்து நம்பிக்கைகளை அவர்களுடைய விக்கிரக ஆராதனைகளைக் குறித்த பார்வைகளை மறைமுகமாகச் சாடுவதற்கும், தவறாகச் சித்தரிக்கக் காரணம் ஹிந்துக்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்குத் தான் என்று கடுமையாக எதிர்ப்பு அவருடைய எழுத்தில் தென்படுகிறது. 

முன்பு சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ( பிற்பாடு சுஜாதாவே ஆழ்வார் பாடல்களும் வேற்று மதத்தில் அதே போல இருக்கிறது என்ற எடுத்துக்காட்டுகளையும் நான் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை). 

//

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்ததகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.

அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி. "கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மை தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப்ப பட்டுள்ளது.

லண்டனில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனை தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு சரியான சாட்சி.

லேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்கு புரிந்ததே இல்லை.

//

கல்கத்தாவில் சாலை பெயர்கள் தேடிக்கொண்டு செல்கையில் மன்மத நாத் தத் சாலை என்று இருக்க, மன்மத நாத் தத் வீடு 65/2 எண் அங்கே இருக்கிறதா என்று கண்டறிய டெப்ராய் முயற்சி செய்கிறார். அங்கே பலரையும் கேட்டுக் கண்டுபிடிக்க முடியாமல் சைக்கிளில் வரும் ஒரு தபால் காரரைக் கேட்க அவர் ஒரு மளிகைக் கடையைக் காண்பிக்கிறார் அது 65/2 ! அதற்கு அருகில் 65/2 B . அதன் வாசலில் அரசாங்கம் ஒரு நோட்ஸ் ஒட்டியுள்ளது. அதில் “இந்த வீடு பாதுகாப்பற்றது” என்ற ஒரு பழுதடைந்த வீடு அது. வீட்டுச் சுவரில் செடிகள் முளைத்து… அங்கே வயதான ஒரு பெண்மணியுடன் தத் குறித்துக் கேட்க, நாங்கள் இங்கே ஐம்பதுவருடங்களாக இருக்கிறோம். மன்மத நாத தத் பற்றி எதுவும் தெரியாது. சில வீடுகள் தள்ளி ஒரு தாத்தா இருக்கிறார் அவரை வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்கள் என்கிறாள். அந்த 90 வயது கிழவரின் வீட்டைத் தேடிக்கொண்டு சென்று அவரிடம் கேட்க, அவர் நான் சிறுவனாக இருந்த போது என் அப்பா ‘மன்மத நாத தத்’ என்ற பிரபல எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடுவது எனக்கு நினைவிருக்கிறது என்கிறார். 

1912 இல் அவரது "ரிக் வேத சம்ஹிதா" மொழிபெயர்ப்பு பாதியில் திடீர் என்று நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு தத் பற்றி எதுவும் தெரியவில்லை. இந்த திடீர் நிறுத்தத்துக்குக் காரணம் அவர் மரணத்தைத் தழுவியிருக்கலாம் என்று யூகிக்கவே முடிகிறது. இருப்பினும் உறுதியான தகவல் இல்லை.

இந்த புத்தகம் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைச் சமீபத்தில் கொடுத்தது. 

-சுஜாதா தேசிகன்
4.7.2025

Comments