வந்தே குரு பரம்பராம்
கூரத்தாழ்வான் அருளிய தனியன் இது.
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்
நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்
இந்தத் தனியன் வட மொழியிலிருந்தாலும், அர்த்தம் சலபமாகப் புரியும்.
திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களையும் வணங்குகிறேன்
கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன் மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது. எவ்வளவு நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம்.
அஹோபில மடத்தின் ஜீயர்களை பெருமாளே காட்டிக்கொடுக்கிறான் என்பதற்கு மடத்தின் குருபரம்பரையைப் படித்தாலே புரிந்துவிடும். அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் சமாஸ்ரயணமும் பரண்யாசமும் செய்து வைத்து ராமானுஜ சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரியனை முன்னிட்டு தான் திருமகளுடன் கூடிய பெருமாளை அணுகுவார்கள். அது தான் முறை. ஆசாரியன் என்பவர் நம் குரு, அந்த ஆசாரியனை நமக்குக் காட்டுபவர்களும் எனக்கு குருவே.
ஒரு சின்ன அவரை விதையை மண்ணில் புதைத்துவிட்டு, அதற்கு மேலே ஒரு பந்தல் கட்டுவார்கள். விதையிலிருந்து சின்ன அவரைக் கொடி வந்தபிறகு அதை அந்தப் பந்தல் மீது செல்வதற்கு ஏதுவாக ஒரு சின்னக் குச்சியை நடுவார்கள். அந்தக் குச்சியைப் பற்றிக்கொண்டு அந்த அவரைக் கொடி அந்தப் பந்தல் மீது படரும்.
பந்தல் வைகுண்டம் என்றால் அதன் மீது ஏற்றிவிடும் அந்தச் சின்னக் குச்சிகள் நம் ஆசாரியர்கள். என் முதல் குரு என் அப்பா தான். சின்ன வயது முதற்கொண்டு ஆழ்வார் கதைகள், பிரபந்தம் குறித்தும் எனக்கு ஊட்டிவிட்டு, கூடவே சுஜாதாவின் எழுத்தையும் அறிமுகம் செய்து வைத்தவர். டவுசர் போடும் வயதில் சென்னை ஐஸ் அவுஸ் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல கூட்டம். கதவு பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். சுவாரசியமாக எதுவும் இல்லாமல் ஸ்ரீ பக்த மீரா கதையைக் கேட்க ஆரம்பித்தேன். என்னையும் அறியாமல் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. கிருஷ்ணப் பக்தி உண்டாவதற்குக் கோடி ஜன்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள்.
ஒரு விதையை மண்ணில் விதைத்தால் முளைக்காது. முளைவிடத் தண்ணீர் சூரிய ஒளி இரண்டும் தேவை. அது போலத் தான் பக்தியும். நாம் விதைகளாக இந்த உலகில் புதைந்து கிடக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்ற தண்ணீரும், சூரியன் போன்ற பெருமாள் கருணையும் சேர்ந்தால் தான் பக்தி முளைவிடும். பக்தி என்பதற்கு definition கோகுலத்துக் கோபிகைகள். இதைப் படிக்கும் போது இன்னும் பல கோடி ஜன்மம் எடுத்து புண்ணியம் செய்ய வேண்டுமே என்று தோன்றும். சுலபமான வழி எதுவும் கிடையாதா ? இருக்கிறது. அது ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்றவர்களின் உபன்யாசத்தைக் கேட்பது. பக்தி உணர்வுப்பூர்வமானது. பக்தியைப் புரிந்துகொள்ள அறிவு தேவை, ஆனால் பக்திக்கு அறிவு தேவை இல்லை என்பதைத் தன் உபன்யாசத்தில் மூலம் புரிய வைத்தவர்.
என்னுடைய ஆசான் என்றுமே சுஜாதா தான். சுஜாதாவின் நட்பு கிடைத்தது அவர் பாஷயிலேயே சொல்ல வேண்டும் என்றால் போன ஜென்மத்தில் ஏதோ ஒரு நாய்க்கு பிஸ்கேட் போட்டிருக்க வேண்டும். அவரைப் பற்றி பல விஷயங்களை எழுதிக்கொண்டே போகலாம். அவருடனான நட்பை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. அவருடனான உறவு
ஆண்டாள் கூறுவது போல ‘உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ இதை நான் சொல்லவில்லை, சுஜாதாவே கூறியது.
ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராம பாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்ம அனுபவம் விவரிக்க இயலாது.
பிறகு சுஜாதா இவரைப் பற்றி எங்கோ எழுத, 1997-98ல் ஸ்ரீராம பாரதி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று பைக்கில் பள்ளிக்கரணை ஜல்லடம்பேட்டைக்கு சென்றேன். பிரபந்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை என்றவுடன் அவரிடம் இருந்த திருப்பாவை, நித்யாநுஸந்தாநம் சந்தைமுறை ஒலிநாடாவை எனக்குக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் இன்று நானே ஆரம்பிக்கிறேன் என்று எனக்குச் சந்தை முறையில் இரண்டு பாசுரங்களை அவரே சொல்லிக் கொடுத்து, எனக்குப் பெருங்காயம், கறிவேப்பிலை கலந்த மோர் கொடுத்தது அனுப்பி வைத்தார். அவரை அன்று சேவித்துவிட்டுப் புறப்பட்டேன். அவருடைய ஆசீர்வாதம் எனக்கு என்றும் பெரும் பலமாக இருக்கிறது.
ஸ்ரீ வைஷ்ணவத்தில் அடியேனை அடுத்த நிலைக்கு மேலே ஏற்றிவிட்டவர் ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் என்றால் அது மிகை ஆகாது.
சிலர் அருமையாகப் பேசுவார்கள். சிலர் தெளிவாகப் பேசுவார்கள். நம் வேளுக்குடி ஸ்வாமி இரண்டையும் சேர்த்துச் செய்வார். தன் நலம் கருதாது தினமும் ’என் பணி’, மற்றும் பல ஊர்களுக்குச் சென்று உபன்யாசம் என்று என்னைப் போலப் பலருக்கு வழிகாட்டியாக இருந்துகொண்டு இருக்கிறார். சில குழப்பமான தருணத்தில் ராமாயணத்தைப் பிரித்துப் படித்தால் விடை கிடைக்கும் என்பார்கள். நான் இவருடைய உபன்யாசத்தைக் கேட்பேன்.
உபன்யாசத்தில் தேவை இல்லாத அசட்டு உதாரணம் எதுவும் இல்லாமல் ஸ்ரீ வைஷ்ணவம் என்ற ஒரே நேர்கோட்டில் பயணம் செய்து, அதே சமயம் நம்மை உள்ளே இழுத்து ஆழ்வார்களையும் திவ்ய தேச பெருமைகளையும் செவி வழியாகக் காட்சிப் படுத்துவதில் வல்லவர். அவருடைய குருபரம்பரை உபன்யாசம், ஆழ்வார்கள் பாசுரங்களுடன் கேட்டபோது பல இடங்களில் கண் கலங்கியது இன்றும் நினைவிருக்கிறது.
சுஜாதா ஒரு முறை ’கற்றதும், பெற்றதும்’ல் போகிற போக்கில் ஓரத்தில் ”சிறு தொழில் சேவை நிறுவனங்கள் (SISI) திரு.வி.எஸ்.கருணாகரன் அவர்களைச் சந்தித்த போது ஆழ்வார் பொம்மை ஒன்று தனக்குக் கிடைத்தது” என்று எழுதியிருந்தார்.
அவரை தேடிக்கொண்டு சென்றது குறித்து முன்பு எழுதியிருந்தேன். கிளம்பும் போது இன்று மாலை ஃபிரியா ? என்றார்.
ஆம் என்றவுடன், சரி என்னுடன் வா என்று அவர் காரில் அழைத்துச் சென்றார்.
கார் நேராக அண்ணா நகரில் ஒரு கோயிலுக்குச் சென்றது.
“ஸ்ரீ.உவே. வில்லூர் நடாதூர் கருணாகராசார்யஸ்வாமி அவர்களின் திருப்பாவை உபன்யாசம்” என்று பலகையில் எழுதியிருந்தது.
மேடையில் அவர் தியான ஸ்லோகம் சொல்லிவிட்டு கீழே நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
“ஆண்டாள் பாசுரம் சொல்லும் போது தேசிகன் கூட இருந்தால் எனக்கு ஓர் இன்ஸ்பிரேஷன்” என்று என்னை மேலே அழைத்தார். நடுங்கிக்கொண்டு சென்றேன். அன்று அவர் ஆண்டாளைக் கொண்டாடினார். அவரிடம் ஆசி பெற்று வீடு திரும்பினேன். இது நடந்து பல வருடங்கள் கழித்து, அடியேனுடைய ஆண்டாள் அருளிய திருப்பாவை புத்தகத்தை ஸ்ரீ.உவே. வில்லூர் நடாதூர் கருணாகராசார்யஸ்வாமி அவர்கள் வெளியிட்டது என் பாக்கியம்.
2007ல் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதாவைச் சந்தித்தபோது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகம் இருப்பதைக் கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்தபோது "நாலாயிர திவ்யப் பிரபந்தம்" இந்தப் புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது என்றார். சுஜாதாவிடம் இருந்த இந்தப் புத்தகத்தின் முகவரியைத் தெரிந்துகொண்டு திருவல்லிக்கேணியில் அலைந்து திரிந்து வாங்கினேன். எனக்கு அப்போது எழுத்தாளர் கடுகு அவர்களைத் தெரியாது. பிறகு, பல வருடங்கள் கழித்து ஒரு நாள் கடுகு அவர்கள் நான் சுஜாதா கையில் இருந்த பிரபந்தம் பற்றி எழுதியிருந்ததைப் படித்துவிட்டு எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அவரை சந்தித்துச் சேவித்துவிட்டு அவர்கள் கையால் ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். பழகுவது, பேசுவது இரண்டும் ஆத்மார்த்தமாக எனக்கு ஒரு நல்ல நண்பனாக, வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைச் சொல்லும் அப்பாவாக, எல்லாமாக இருந்தார். கடைசியில் ஆசாரியன் திருவடியை அடையும் போது என்னிடம் அவர் தன் பதம் பிரித்த பிரபந்தங்களை ஒப்படைத்துவிட்டுச் சென்றதை நினைக்கும் போது என் வாழ்க்கையிலும் நானும் ஒரு நல்ல காரியம் செய்தேன் என்ற திருப்தியை இன்றும் ஏற்படுத்தும்.
என் அலுவலக நண்பர் ‘மன்னுபுகழ் மணவாள மாமுனிகள்' என்ற புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தான். அதை எழுதியவர் மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே இரா.அரங்கராஜன் ஸ்வாமி. அடையாரில் இருந்த அவர் இல்லத்தைத் தேடிச் சென்று புத்தகம் குறித்து விசாரித்து தனக்கு ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டுள்ளார். என்ன காரணம் என்று தெரியவில்லை, நண்பருக்குப் புத்தகம் கிடைக்கவில்லை. மறுநாள் என்னிடம் இதைப் பற்றி வருத்தத்துடன் கூறினான். சில வாரம் கழித்து நான் அவர் இல்லத்துக்குச் சென்று அவரை வீட்டின் கதவைத் தட்டி புத்தகம் குறித்துக் கேட்டேன். என்னை உள்ளே அழைத்து, என்னிடம் பிரதிகள் இல்லை என்று கூறி, தன்னிடம் இருக்கும் பிரதியை எனக்கு அவருடைய கையொப்பத்துடன் கொடுத்தார். அன்றிலிருந்து அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டது பூர்வ ஜென்மச் சுகிர்தம் என்பேன். இவருடைய உபன்யாசம் தனி ரகம். தமிழும், சம்பிரதாயமும் கலந்த கலவை. இவர் மூலம் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டால், ஆழ்வாரே நமக்குச் சொல்லிக்கொடுப்பது போல இருக்கும். ’கலையிலங்கு மொழியாளர்’ என்று திருமங்கை ஆழ்வார் கொண்டாடுகிறார். சாஸ்திர பயிற்சியுடன் வாய்ப்பேச்சை உடையவர்கள் என்று பொருள். காஞ்சி மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே. அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் இவருக்கு ’கலையிலங்கு மொழியாளர்’ என்ற பட்டத்தை சும்மாவா கொடுத்தார்? இவருடைய நம்பிள்ளையுன் உரைத்திரன் போன்ற மிக உன்னதமான விஷயங்களை நமக்கு அளித்திருக்கும் கொடை. இவர் என்னிடம் அடிக்கடி பேசுவார் என்பதே எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.
‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ என்று ஒலிக்கும் குரலுடன் ஸ்ரீ உ.வே திருநாகை வீரராகவாசார்யர் (பட்டண்ணா ஸ்வாமிகள்) ஸ்வாமிகளிடம் முதல் முறை பேசிய முதல் நொடியில் நெடுநாள் பரிச்சயம் ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு அவருடன் அடிக்கடி பேசினேன். ஒவ்வொரு முறையும் பேசும் போது வைஷ்ணவத்தில் எந்தப் பேதமும் இல்லாமல் ஆழ்வார்கள் ஆசாரியர்களைக் குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பேசி முடித்த பின் வாழ்கை குழப்பங்களுக்கு ஒரு பாசிடிவ் அப்ரோச் கிடைத்து, அதன் சவால்களை எதிர்கொள்ள உற்சாகமாகவும், நம்பிக்கையும் கிடைத்துவிடும்.
’வாயார வாழ்த்துபவர்கள்’ என்று கேட்டிருக்கலாம். ஆனால் அதை அனுபவிக்க காட்டுமன்னார் கோவிலில் இருக்கும் ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரியார் ஸ்வாமியுடன் பேசினால் கிடைத்துவிடும். தமிழ் சமிஸ்கிரதம் இரண்டிலும் முனைவர் பட்டம் வைத்திருந்தாலும், தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களைப் புகழ்ந்து பேசும் இவருடைய பண்பு வியக்க வைக்கும். பதம் பிரித்த புத்தகம் முதல் பிரதியில் உள்ள பிழையை நாதமுனிகளே இவர் மூலமாக எனக்குக் காட்டிக் கொடுத்து ’செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டார்’ அவருக்கு நன்றி கூறிச் சேவித்த பொழுது, “இந்த திவ்ய தேசத்து பெருமாள் காட்டும் மன்னார், நாலாயிரத்தை நாதமுனிகளுக்கு காட்டிக்கொடுத்த மன்னார். இன்று உங்களுக்கும் காட்டிக்கொடுத்துள்ளார் !” என்றார்.
ஒவ்வொரு முறை திருநகருக்குச் செல்லும் போதும், ஸ்ரீமணவாள மாமுனிகள் கலியனைப் பற்றி எழுதிய வடிவழகு தான் நினைவுக்கு வரும். அதே வடிவழகை அழகாகச் சேவித்து அடியேனுக்குக் கலியன் அருகில் அழைத்துச் சென்றவர் ஸ்ரீ எம்பார் ராமானுஜன் ஸ்வாமி. இந்த வயதிலும் கைங்கரியம் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக ஆழ்வார் குடிகொண்ட இடமே தமக்கு எல்லாம் என்று திருநகரியில் வாசம் செய்பவர். ஆழ்வார் இவருக்குத் துணையா அல்லது இவர் ஆழ்வாருக்குத் துணையா என்று நமக்கே குழப்பம் ஏற்பட்டுவிடும்.
ஸ்ரீரங்கத்தில் ஏதாவது சந்தேகம் என்றால் நான் பெரிதும் நம்பியிருப்பவர்கள் இருவர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி அவர்கள். இன்னொருவர் ஸ்ரீ முரளி பட்டர். பூலோக வைகுண்டத்தில் வைகுண்டத்தையே காண்பித்தவர். பல காலமாக என்னையும் இவர்கள் நட்பில் வைத்திருப்பது அந்த அரங்கனின் கருணை.
பிரம்மசூத்திரம் பற்றி சுஜாதா எழுதும் போது வியந்து அவர் என்னிடம் பேசும் போது உபயோகித்த வார்த்தை ‘பயங்கரமாக’ இருக்கிறது என்பது.
இதை எழுதிக்கொண்டு இருந்த சமயம், சுஜாதாவிடம் ’இப்போது அதிகம் ஆன்மீகம், ஆழ்வார் பாடல்களைப் பற்றியே எழுதுகிறீர்கள் என்று ஒருவர் கேட்க அதற்கு அவர் அளித்த பதில் “அறிவியலில் கிடைக்காத பல விஷயங்களுக்கு விடை இதில் கிடைக்கிறது என்பது தான் காரணம்” என்றார். காலக்ஷேபம் என்றால் காலத்தை எப்படிச் செலவிடுகிறோம். பொழுதுபோக்கல் என்று கூறலாம். காலக்ஷேபத்தில் ஒரு focus இருக்கும். ஆசாரியர்களின் உரையைக் கொண்டு தகுந்த அதிகாரி அதை ஒழுங்காக விளக்குவார். கிட்டத்தட்டக் கல்லூரி வகுப்பு மாதிரி
ஸ்ரீ.உ.வே. கபிஸ்தலம் ஸ்வாமிகள் ஸ்ரீ பாஷ்யத்தை ( பிரம்ம சூத்திரத்துக்கு உரை ) அடியேனுக்கும் ஆங்காங்கே புரியும் வண்ணம் எடுத்து உரைக்கும் இவருக்கு எப்படி நன்றி சொல்வேன்?
ஸ்ரீ வேதாந்த தேசிகன், அஞ்சலி வைபவம் என்று தனியாக எழுதியுள்ளார். அதில் கையைக் கூப்பிக்கொண்டு அஞ்சலி செய்வது தான் சிறந்தது என்று கூறியுள்ளார். ஓர் அவரைக் கொடிபோல இவர்களை எல்லாம் சுற்றிக்கொண்டு அவர்களின் பாதுகைகளை இன்று வணங்குகிறேன்.
- சுஜாதா தேசிகன்
10.7.2025
குரு பூர்ணிமா
படம் நன்றி : கேஷவ்
Comments
Post a Comment