Skip to main content

ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும்



சென்ற ஞாயிறு ஸ்ரீ உ.வே. அரங்கராஜன் ஸ்வாமியின் 90-ஆம் ஆண்டு விழாவில் அடியேனையும் பேச அழைத்திருந்தார்கள். நேரம் குறைவாக இருந்ததால் ஐந்து நிமிடத்திற்கு வாய்க்கு வந்ததை உளறிவிட்டு வந்தேன்.


நான் பேச நினைத்து, எழுதி எடுத்துக்கொண்டு சென்ற உரை வடிவம் இது.

./சுஜாதா தேசிகன்

------o0o-o0o-o0o------

ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும்




அடியேனுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் என் ஆசாரியர், 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடிகளை வணங்கி, இந்த ஆன்றோர் சபையில் குழுமியிருக்கும் ஆசாரியர்கள், பெரியோர்களை வணங்கி, என்னையும் புவியில் ஒரு பொருளாக்கி இன்று இங்கு பேச அழைத்ததற்கு நன்றி கூறி, மதுரைப் பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமியுடனான என் அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆங்கிலத்தில் ‘Odd man out’ என்பார்கள். இன்று அந்த ‘Odd man’ நான் தான்! என் முகத்தைப் பார்த்தாலே அது உங்களுக்குத் தெரிந்துவிடும். நெற்றியில் இருக்கும் திருமண்ணைச் சொல்லவில்லை—இங்கே இருக்கும் சபையில் எல்லோரும் நூல்களை நன்கு படித்தவர்கள்; நானோ முகநூல் (Facebook) படிக்கும் ஆசாமி!

பொதுவாக, கடைசியில் பேச வருபவர்கள், "நான் சொல்ல நினைத்ததையெல்லாம் முன்பு பேசியவர்கள் சொல்லிவிட்டார்கள்; எனக்குப் பேச ஒன்றும் இல்லையே!" என்று புலம்பலுடன் ஆரம்பிப்பார்கள். நான் அப்படிப் புலம்பப்போவதில்லை. ஏனென்றால், அரங்கராஜன் ஸ்வாமியைப் பற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொன்னாலும், சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அது எப்போதுமே அலுக்காது.

அரங்கராஜன் ஸ்வாமியின் வயதில் கிட்டதட்ட பாதிதான் என் வயது. என்னை இந்த மேடையில் பேச ஏன் அழைத்தார்கள் என்று அரங்கராஜன் ஸ்வாமியின் மகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் என் அப்பாவிற்கு ஆப்த நண்பர்" என்றார்கள். என் மனைவி, "உங்களுக்கு அமையும் நண்பர்கள் எல்லாம் வயதானவர்களாகவே இருக்கிறார்களே!" என்பாள். எழுத்தாளர் ‘சுஜாதா’ ரங்கராஜன், இங்கே அரங்கராஜன் ஸ்வாமி, ‘ரங்கா ரங்கா’ கோபுரத்துக்குள் என்றும் இளமையான ரங்கராஜன்... இப்படி வயதான ரங்கராஜன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்! இன்று ’friendship day' என்றார்கள்.

90-ஆம் ஆண்டு நவத்பூர்த்தி விழாவில் அரங்கராஜன் ஸ்வாமியை வாழ்த்துவதற்கு முன், நான் இன்னொருவரை முதலில் வாழ்த்த வேண்டும்:

அடியார்கள் வாழ,
அரங்கநகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,
மணவாள மாமுனியே!
இன்னுமோர் நூற்றாண்டிரும்.

"என்னடா இது, தேசிகன் மணவாள மாமுனியை வாழ்த்திப் பாடுகிறாரே!" என்று உங்களுக்குத் தோன்றலாம். வாழ்த்துவதில் தப்பில்லை. ஆனால், இங்கே வாழ்த்துவதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது.

காவிரி பாயும் போக மண்டபமான ஸ்ரீரங்கம் என் சொந்த ஊர். ஆனால், காவிரி உற்பத்தியாகும் ஞான மண்டபமான கர்நாடகாவில், ஞானத்தைத் தேடிச் செல்லாமல், பிழைப்புக்காக ஒரு IT நிறுவனத்தில்—AI வந்த பிறகும்—இன்னும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்.

சுமார் பதினொரு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் "உனக்கு இனி சென்னையில்தான் வேலை" என்றார்கள். மாமனார் வீடு இருக்கும் சென்னைக்குப் போக நான் தயங்கினேன். "ஒன்றாம் தேதி சம்பளம் வேண்டுமென்றால் போய்த்தான் ஆக வேண்டும்" என்று சொல்லிவிட்டார்கள். சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்பது போல, சென்னை அலுவலகத்தில் என் ஸ்ரீசூர்ணத்தைப் பார்த்து, அருகில் இருந்த ஸ்ரீசூர்ணக்காரர், "நீங்கள் யார்?" என்று விசாரித்தார். சொன்னேன்.

அவர், "நீங்கள் வைணவம் சம்பந்தமாக எழுதுகிறீர்களே... 'மன்னு புகழ் மணவாள மாமுனிவன்' புத்தகம் உங்களிடம் இருக்கிறதா?" என்று கேட்டார்.

அப்பாவியாக "யார் எழுதியது?" என்று கேட்டேன்.

"இதுகூட தெரியாதா?" என்பது போல என்னைப் பார்த்துவிட்டு, "அரங்கராஜன் ஸ்வாமி!" என்றார்.

"இப்போதுதான் கேள்விப்படுகிறேன்" என்றேன்.

"ஜெராக்ஸ் பிரதியாவது கிடைத்தால், தன் பாதிச் சொத்தை எழுதித் தரவும் தயாராக இருக்கிறார்" என்ற அளவுக்கு அவர் அந்தப் புத்தகத்திற்காக ஏங்கினார்.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்து, "இன்று அரங்கராஜன் ஸ்வாமி வீட்டுக்குச் சென்று புத்தகம் கேட்கப் போகிறேன். வருகிறாயா?" என்றார். அன்று எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. நண்பர் மட்டும் தனியாகச் சென்றார்.

மறுநாள் அவரிடம், "புத்தகம் கிடைத்ததா?" என்று கேட்டேன். "கதவைத் தட்டினேன், கேட்டேன். 'எக்ஸ்ட்ரா காப்பி இல்லை' என்று சொல்லி அனுப்பிவிட்டார்" என்று வருத்தத்துடன் சொன்னார்.

சில மாதங்கள் கழித்து, அந்த நண்பரிடமிருந்து அரங்கராஜன் ஸ்வாமியின் முகவரியை வாங்கிக்கொண்டு, அடையாரில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு நானே சென்றேன்.

கதவைத் தட்டியவுடன், "நீங்கள் யார்?" என்று கேட்டார். எனக்கு வைஷ்ணவ பரிபாஷை எல்லாம் தெரியாது. "தேசிகன்" அவ்வளவுதான்; ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன்.

உள்ளே அழைத்து, "வந்த விஷயம் என்ன?" என்று கேட்டார். "நீங்கள் எழுதிய 'மன்னு புகழ் மணவாள மாமுனிவன்' புத்தகம் ஒரு பிரதி வேண்டும். வீட்டுக்குப் பக்கத்தில் ஜெராக்ஸ் எடுத்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்றேன்.

சீதை ராமரைப் பார்த்துக் கண்ணால் பேசுவது போல, அருகில் இருந்த ஸ்வாமிகளுடைய அம்மங்காரின் பார்வை, "இவரைப் பார்த்தால் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் ஆசாமி போல நல்லவராகத் தெரிகிறார். தேடிப் பார்த்துக் கொடுங்களேன்" என்று சொல்வது போல இருந்தது.

ஸ்வாமி உடனே உள்ளே சென்று தேடி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து, "என்னிடம் இருக்கும் ஒரே பிரதி இதுதான்" என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். "ஆசிரியரின் அன்பளிப்பு" என்று எழுதி, "இரா. அரங்கராஜன் – 23.09.2015" என்று கையொப்பமிட்டுக் கொடுத்தார். அந்தப் புத்தகம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

கூரத்தாழ்வானுக்கு எப்படி ஆண்டாள் என்ற மனைவி துணையாக அமைந்தாரோ, அதுபோலத்தான் ஸ்வாமிக்கும் அவருடைய தர்மபத்தினி. ஸ்வாமியின் மனைவியின் பெயரும் 'ஆண்டாள்' என்பதில் ஆச்சரியம் இல்லை. அன்று ஆரம்பித்த அந்த அறிமுகம், பிறகு எனக்கு அவர் ஒரு நல்ல mentor – வழிகாட்டியாக அமைந்தார்.

பராசரபட்டரிடம் ஒரு அரசன் வந்து சேவித்துவிட்டு, "எனக்கு ராஜாங்கக் காரியங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் பகவத் விஷயம் கேட்க முடிவதில்லை. தியானத்துக்கு ஒரு பொருளைச் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டாராம். அதற்குப் பட்டர், "கடற்கரையை எப்போதும் நினைத்திரு" என்றாராம்.

அதுபோல, நான் எப்போது சென்னை சென்றாலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைச் சேவிக்கிறேனோ இல்லையோ, அடையார் திவ்யதேசத்தில் ஸ்வாமியைச் சேவித்துவிட்டு, அவரிடம் சில நல்வார்த்தைகளைக் கேட்டுவிட்டுத்தான் திரும்புவேன். இப்போது அந்த அரசன் பராசரபட்டரிடம் கேட்ட விஷயமும், ஸ்வாமி எனக்குக் கூறிய நல்வார்த்தைகளில் ஒன்றுதான். இப்படி ஸ்வாமி கூறிய நல்வார்த்தைகளையெல்லாம் தொகுத்தால், நமக்கு இன்னொரு 'வார்த்தா மாலையே' கிடைத்துவிடும்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் பெங்களூருக்கு வந்துவிட்டேன். ஆனாலும் ஸ்வாமியுடனான தொடர்பு குறையவில்லை. அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். சில சமயம் ஸ்வாமியே அடியேனைத் தொலைபேசியில் அழைப்பார். "ஆழ்வார் பாசுரங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் அழைத்தேன்" என்று சொல்லி, முத்தான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். அவற்றையெல்லாம் அடியேன் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வேன்.

ஸ்வாமி எவ்வளவு பெரியவர்! ஆழ்வார் பாசுரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, அடியேனுடைய நினைவு வந்து, அதை என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது—அதுதான் அரங்கராஜன் ஸ்வாமி.

பொதுவாக, சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும் பழுத்த வைணவர்களுக்கும் எப்போதும் ஏதாவது முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும். ஸ்வாமி ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர்; அதே சமயம் பழுத்த வைணவர்.

பிள்ளை லோகாசாரியர் திருநாட்டுக்கு எழுந்தருளியது 'ஜோதிஷ்குடி' என்ற ஊரில்தான் என்பதைப் பல வரலாற்று நூல்களின் ஆதாரத்துடன் ஆராய்ந்து வந்தார். ஒருநாள், எதேச்சையாக ஒரு நில உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இருக்கும் கிராமத்தில் இருளில் ஒளிவிடும் 'ஜோதிவிருட்சங்கள்' நிறைய இருக்கின்றன என்று சொன்னவுடன், ஸ்வாமிக்குச் சட்டென்று ஒரு பொறி தட்டியது. உடனே அங்கே செல்கிறார் பேராசிரியர் அரங்கராஜன். அங்கிருந்தவர்கள், "இங்கே ஒரு முனிவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது" என்று கூறுகிறார்கள். அதுவே பிள்ளை லோகாசாரியரின் 'திருவரசு' என்பதைக் கண்டுபிடிக்கிறார். இன்று அங்கே வருடந்தோறும் உற்சவங்கள் நடைபெறுகின்றன என்றால், அதற்குக் காரணம் நம் அரங்கராஜன் ஸ்வாமியே. இது அவருடைய ஆராய்ச்சி!

பி. ஸ்ரீ எழுதிய ராமானுஜர் புத்தகம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் புத்தகத்தை முதலில் எழுதியபோது, ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை "அண்ணா" என்று அழைத்த நிகழ்வை அவர் எழுதவில்லை. "அர்ச்சையில் இருக்கும் ஆண்டாள் எப்படி 'அண்ணா' என்று கூப்பிட்டிருப்பாள்? இது கற்பனையாக இருக்கலாம்" என்று நினைத்து அந்தப் பகுதியை விட்டுவிட்டார். பிறகு காஞ்சி ஸ்வாமிகள், "பல ஆசாரியர்கள் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வாக்கு எப்படி கற்பனையாக இருக்கும்?" என்று எடுத்துக்கூறிய பிறகு, அந்தப் பகுதியைச் சேர்த்தார். இந்தச் சம்பவத்தை ஸ்வாமி ஒருமுறை என்னிடம் கூறினார். ஏன் இதை இங்கே சொல்கிறேன் என்றால், ஆராய்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், வைணவத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை ஸ்வாமி எடுத்துக் காட்டுகிறார். அதற்கு இந்தச் சம்பவமே ஒரு சிறந்த உதாரணம்.

நம் ஊரில், பொன்னியின் செல்வனுக்கு அடுத்து ராமானுஜர் சரித்திர நூல்கள்தான் அதிகம் என்று சொல்லலாம். பல நூல்களைப் படித்தால், எது கற்பனை, எது நிஜம் என்று நமக்கே குழப்பம் ஏற்படும். அப்படி எப்போது எந்தக் குழப்பம் ஏற்பட்டாலும், ஸ்வாமியின் 'பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த ஸ்ரீ ராமானுஜ திவ்ய சரிதை' என்ற தமிழாக்க நூலையே நான் refer செய்வேன்.

ஸ்வாமியின் பேச்சைக் கேட்டால் நம் மனமே உருகிவிடும். ஸ்வாமியின் உபன்யாசத்தைக் கேட்ட 'செல்லப்பெருமாள் கோனார்' என்ற நாத்திகர், "இவ்வளவு காலம் வீணாகச் செய்துவிட்டேனே!" என்று மனம் வருந்தி, சமாஸ்ரயணம் செய்துகொண்டு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனாக மாறினார். ஒரு நாத்திகரே இப்படி மாறினால், பக்தர்களின் நிலைமை எப்படி இருக்கும்? இன்பத் தமிழில் அடித்துக்கொண்டு செல்லாமல் இருக்க, ஸ்ரீரங்கத்தின் திருமணத் தூணைப் பிடித்துக்கொண்டு ஆழ்வார்கள் அனுபவித்த இன்பத்தை நாமும் அனுபவிக்கலாம்.

நமக்கு என்ன சந்தேகங்கள் வந்தாலும், அவரிடம் பேசினால் ஒரு தெளிவு ஏற்படும். மாசமான மங்கைக்கு கொடுக்கும் பத்திய சாப்பாடு போலத்தான் என் எழுத்து 'சப்பென்று' இருக்கும். அப்படியும் ஒரு முறை நான் எழுதிய கட்டுரைக்கு சிலர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னைக்குப் புறப்பட்டு, அடியேன் எழுதிய கட்டுரையை பிரின்ட் அவுட் எடுத்து ஸ்வாமியிடம் கொடுத்து, "ஏதாவது தவறு இருந்தால் திருத்திக்கொள்கிறேன்" என்றேன். ஸ்வாமி அதைப் படித்துவிட்டு, மறுநாள் எனக்குத் தொலைபேசியில் அழைத்து, "ஒன்றும் தப்பில்லை" என்று சொல்லி, மேலும் பல நல்ல கருத்துகளையும் கூறினார்.

ஸ்வாமியின் உபன்யாசங்கள் ஒரு தனி ரகம். தமிழும் சம்பிரதாயமும் கலந்த ஒரு அருமையான கலவை. இன்று இதைப் போலச் சொல்வதற்கு யாரும் இல்லை. இவர் மூலம் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டால், ஆழ்வாரே நமக்குச் சொல்லிக்கொடுப்பது போல இருக்கும்.

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவும், அதை பிறருக்கு எடுத்துரைக்கும் அழகிய பேச்சாற்றலும் ஒருசேரக் கொண்ட சான்றோர்களை "கலையிலங்கு மொழியாளர்" என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட நம் ஸ்வாமிக்கு, காஞ்சி மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே. அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் "கலையிலங்கு மொழியாளர்" என்ற பட்டத்தை அருளினார்.

ஸ்வாமி அவரிடம் "என்ன கலை என்னிடத்தில் இலங்குகிறது?" என்று கேட்டபோது, "உம் கடிதங்களில் ஆழ்வார் பாசுரங்களின் ஈரத் தமிழ்ச் சொற்களைக் கொண்டே எழுதிவருகிறாய். அதனால்தான் அந்தப் பட்டத்தை அளித்தேன்" என்று கூறினார்.

இது நடந்தபோது நான் பிறக்கவே இல்லை!

அப்படிப்பட்ட என்னையும், நம்மாழ்வார் குறிப்பிடுவது போல, "நம் பையல்" என்று தன்னுடைய கருணையால் ஏற்றுக்கொண்ட ஸ்வாமியின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடி, இன்னும் பல ஆண்டுகள் ஸ்வாமி நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்து, ஸ்ரீவைஷ்ணவ உலகிற்கு அரும்பணியாற்ற வேண்டும் என்று என் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளைப் பிரார்த்தித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

படம் உதவி : Sampathkumar Srinivasan

Comments

  1. Om Sri Ramanujaya Namaha You are very blessed to be mentored by such great souls.

    ReplyDelete

Post a Comment