Skip to main content

பகுதி - 13 - விளைநிலம்

 13. விளைநிலம்



சென்ற அத்தியாயத்தில் நம்மாழ்வார் முன் நாதமுனிகள் ’பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’ என்ற வரிகளை அழுத்திப் பாடி, வருங்கால ஆசாரியனின் உருவத்தை சர்வ அவயவ பூர்ணமாக[1] காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு குருகூர் சடகோபன் சிந்தனையில் ஆழ்ந்தார்.

நம்மாழ்வார் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், நாதமுனிகளைப் பார்த்து, “உமக்கு இன்று இரவு சொப்பனத்தில் (கனவில்) நாமே அதைப் பாவனையாகக் (உருவகித்துக்) காட்டியருளுகிறேன்” என்றார்.

அன்று இரவு நாதமுனிகளின் கனவில் ஆழ்வாரே தோன்றி, “நாதமுனிகளே! நம் குலத்தில் அவதரித்து[2], இப்பூவுலகம் முழுக்க வாழ்ச்சி அடையப் போகும் அவதாரத்தைக் காணுங்கள்! நாமே வருங்கால ஆசாரியனை உமக்குக் காட்டியருளுகிறேன்!” என்று நம்மாழ்வாரே வருங்கால ஆசாரியனாக நாதமுனிகளுக்குக் காட்சியளித்தார்.

பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் மீது, பால சூரியனின் ஒளிபட்டவுடன் எப்படிப் பிரகாசிக்குமோ, அது போல அந்த ஒப்பற்ற திருமேனி ஒளிர்ந்தது. அந்த வடிவழகு காட்சியைக் கண்ட நாதமுனிகளின் உடல் ஆனந்தத்தில் பூரித்தது. சக்கரவர்த்தித் திருமகனின் அழகைப் பார்த்த விஸ்வாமித்திரர் பேச முடியாமல் தவித்தது போல, நாதமுனிகள் உடலும் உள்ளமும் உருகிப் பெருமகிழ்ச்சி கொண்டார். அந்த உணர்ச்சியின் வெளிப்பாட்டில் வாய் திறந்து

செறிந்து கட்டிய செந்நிறக் காவி ஆடை என்னே!
சிகை வனப்பு என்னே!
மகரம் சேர் குண்டலங்கள் இருமருங்கும் இலங்கி அசைந்தாடும் அழகு என்னே!
திரிதண்டம் ஏந்தும் திருக்கரம் என்னே!
திருமேனியில் திகழும் யக்ஞோபவீதம் என்னே!
எழில் மிகுந்த பன்னிரண்டு திருமண் காப்புகள் என்னே!
அள்ள அள்ளக் குறையாத ஒளிவீசும் திருக்கண்கள் செந்தாமரையோ? திருவடிகள் தாமரைப் பூக்களோ?
உதிக்கும் கதிரவன் ஒத்த பேரொளி! என்னே பேரழகு! என்னே பேரழகு![3]

என்று தீர்க்கமான காட்சியைக் கண்ட நாதமுனிகள் சிலிர்த்து, மலைத்து, திருமாலைக் கண்ட பெரியாழ்வார் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று பாடியதைப் போல, நாதமுனிகள் “பஞ்சாயுத அவதாரமான [4](3) மூவுலகின் புண்ணியத்தின் பலனாய்க் காட்சி கொடுக்கும் பவிஷ்யதாசாரியரைக் கைகூப்பி, ‘பொலிக பொலிக பொலிக’ என்று தன்னை அறியாமல் வாழ்த்தி, பவிஷ்யதாசாரியராகக் காட்சி கொடுக்கும் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்தெழுந்து மீண்டும் அத்திருமேனியைத் தரிசித்தார்.

வியந்து, உவந்து, “அதிகாரம் (தகுதி) உண்டு என்றால் அரங்கர் இரங்குவார். இவரோ அதிகாரம் இல்லாதவர்களுக்கும் இரங்கி, நல்வாழ்வளிக்கும் கருணை பொழியும் அபயப் பிரதான ராஜராக (அடைக்கலம் அளிக்கும் தலைவராக), ஜகத்குருவாக (உலகத்திற்கே குருவாக) இருக்கிறாரே என்று முகமும் முறுவலையும் கண்டால் தெரிகிறதே!” என்று மீண்டும் திருவடிகளில் விழுந்து எழுந்து[5], “உகப்பு உருவனாய் (மகிழ்ச்சியின் வடிவமாய்), ஒளி உருவனாய், மகப்பு உருவனாய் (குழந்தையின் வடிவமாய்) தேவரீர்களுடைய திருமேனியைக் காட்டிலும், தேவரீர் பாவித்துக் காட்டியருளிய திருமேனி மிகவும் ஈர்ப்பாகவும், அலை கடல் கடைந்த ஆர் அமுதம் போன்று இருக்கிறதே!” என்று விண்ணப்பம் செய்து நின்றார்.

நம்மாழ்வார் புன்முறுவலுடன், “இதில் என்ன மாயம்! இந்த லோகம் முழுவதும் இத் திருமேனியைக் கண்டு மோகித்து, இவரே தஞ்சம் என இவர் மீது விழப் போகிறார்கள்! திருமகள் கிருபையும், உய்யுமாறு எண்ணி உகக்கும் திருமால் திருவடியையும் சேர்ந்து மருவிய இத் திருமேனி ஆகர்ஷணமாக (கவர்ச்சியாக) இருப்பதில் வியப்பேதும் இல்லை!

சேஷனும் (அடியவனும்), சேஷியும் (தலைவனும்) உடைய திருமேனி. ஆசாரியனும் சிஷ்யனும் உடைய திருமேனி. வேதத்தின் சாரமான கீதையை உபதேசித்த கீதாசாரியன், தமிழ் வேதத்தை உமக்கு அருளிய சடகோபனைக் காட்டிலும் ‘குரு’ என்ற சொல் இத்திருமேனியிலே கட்டுப்பட்டு ஒளி பொருந்தி விஞ்சி நிற்கும்![6] கருணைக் கடலே திருமேனியாக உருப்பெற்று, பார் எல்லாம் உய்ய இவரே உத்தாரகம் (காக்கும் வழி) என்று உடைய இத்திருமேனியே நம் தரிசனத்தின் விளைநிலம்!

மரம், வேர் இரண்டுக்கும் மத்தியில் அவற்றுக்கு ஆதாரமாக விளைநிலம் விளங்குவது போல, ஆரோகணம் (முன்னோக்கிய), அவரோகணமாக (பின்னோக்கிய) இரு ஆசாரிய பரம்பரைக்கும் விளைநிலம் இவ் உடையவரே. இவ் விளைநிலத்தில் வேரும், விழுதுமாக பிரபன்ன ஜன கூடஸ்தர்கள் (சரணாகதி நெறியைக் கடைப்பிடிப்போர்) கொழுந்துவிட்டு வளர்ந்து பரவப் போகிறார்கள். த்வயத்தில் இடையில் வரும் ‘உபாயம்’ போல, ஆசாரிய மணி மாலையில் இவர் நடுநாயக ரத்தினமாக விளங்கி, இடைகழியில் நடுவில் ஒளிவிளக்கு இரண்டு பக்கமும் ஒளிவீசுவது போல, முற்பட்ட, பிற்பட்ட ஆசாரியர்களுக்கு ஒளி ஊட்டி, சரணாகதியே உபாயம் என்று காட்டி, உபய விபூதி (இரு உலகங்களுக்கும்) நாயகனாக, உத்தாரகத்துவத்துக்கு [7]இவர் ஒருவரே என்று வீற்றிருக்கப் போகிறார்!

இவருக்கு முன் உள்ள ஆசாரியர்கள், பக்தியால் பிரபத்திக்குச் செல்லும் அனுவிருத்திப் பிரசன்னாச்சார்யர்களாகவும்[8] (தகுதியுடன் தொண்டு செய்வோருக்கு மட்டும் உபதேசிப்போர்), இவர் அவதாரத்துக்குப் பிறகு கலியின் கொட்டத்தை அடக்க பிரபத்தியால் பக்திக்குச் செல்லும் க்ருபா மாத்ரப் ப்ரசன்னாச்சார்யர்களாகவும்[9] (அன்பின் அடிப்படையில் கருணையால் உபதேசிப்போர்) விளங்கப் போகிறார்கள்[10]. திருமந்திரத்தின் நடுவில் வரும் ‘நம’ பதம்[11] முன் பின் சேருமாப்போலே இவர் எல்லோருடனும் சேர்ந்து சம்பந்தத் த்வயமாக (இருவகைத் தொடர்புகளை உடையவராக) விளங்குவார்!” என்றார்.

நாதமுனிகள் மீண்டும் ஆழ்வாரை வணங்கி, “ஆழ்வார்கள் அனைவரும் தேவரீரின் திருமேனியாய்த் திகழ, தேவரீரோ எம்பெருமானின் திருமேனியாய்ப் பொலிகின்றீர். அந்த மாறன் அடிபணிந்து உய்ந்தவனாக, இந்தப் பவிஷ்யதாசாரியன் ஒளி வீசுகின்றார். வியக்கத்தக்கச் சொப்பனத்தில் இந்த ரூபத்தைப் பாவித்து எமக்குக் காட்டினீர். கருணையே வடிவான அமுத வெள்ளத்தில் நனைக்கப்பட்டு அடியேன் துளிர்த்துத் தளிர்த்து நிற்கிறேன். இவரே இறுதியான உபாயமாக, அனுதினமும் அனுபவித்துக்கொண்டு உத்தாரகத்துக்கு உடையவராக இருக்கும் இவருக்கு உடமையாக இருப்பதற்கு வழி யாது?” என்று விண்ணப்பம் செய்தார்.

சொப்பனத்தில் பாவித்துக் காட்டிய ரூபத்தை நிஜமாக்கிக் கொடுப்பதா என்று சிந்தனையில் ஆழ்ந்த ஆழ்வார், “விரைவில் வெளியிடுவோம்!” என்று திருவாய் மலர்ந்து அருளி, சொப்பனத்திலிருந்து மறைந்தார்.

அதே சமயம், தாமிரபரணி கரையோரம் மரங்கள் நிறைந்த தோட்டத்தின் மத்தியில் சிறு குடிசை ஒன்றும், நிலவொளியில் குடிசையைச் சுற்றி கருங் கற்களும், கல்லுளிகளும், பாதி வடித்த சிலைகளும் சிதறியிருக்க, அது ஒரு சிற்பியின் குடிசை என்று நமக்குத் தெரிகிறது. அந்த ரம்மியமான இரவில் இளந்தென்றல் உலாவிய அந்தப் பொழுதில், குடிசையின் வாசலில் நட்சத்திரங்கள் மினுமினுக்க, அதை அனுபவித்தவாறு கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான் நாவலன்[12]. மேகங்கள் மெதுவாகச் செல்ல, ஒவ்வொரு மேகத்தையும் தன் கற்பனை உளியால் யானையாகவும், குதிரையாகவும் செதுக்கிக்கொண்டு, அப்படியே நித்திரையில் ஆழ்ந்தான்.

நாவலன், திருக்குருகூர் ஆதிப்பிரான் கோயிலின் ஆஸ்தானச் சிற்பி மரபில் வந்தவன். இவனது முன்னோர்களே மதுரகவிகள், தாமிரபரணி நீரைக் காய்ச்சும் போது குருகூர் சடகோபனின் திருமேனியைக் கைப்படாமல் சமைக்க (உருவாக்க) உதவியவர்கள் ஆவர். பெயர்பெற்ற சிற்பியரிடம் நாவலன் பாடம் கற்று, இளமையிலேயே சிற்பக் கலையில் தேர்ந்தான். பாறைகளையும் குன்றுகளையும் கண்ட மாத்திரத்தில், அவற்றின் உருவத்தை மனதால் அறிந்து குடைந்து, பல அற்புதச் சிற்பங்களைச் சமைத்து (உருவாக்கி) மன்னர்களிடம் பரிசுகளைப் பெற்றிருந்தாலும், அவன் கனவிலும் எதிர்பாராத ஒரு பெரும் பேறு அவனுடைய கனவில் கிடைத்தது!

சற்று நேரத்துக்கு முன் உறங்க ஆரம்பித்த நாவலனுக்கு கனவு ஒன்று வந்தது. அதில், வியக்கத்தக்க பவிஷ்யதாசாரியரின் திருமேனியை, ஆழ்வாரே நாதமுனிகளுக்குப் பாவித்துக் காண்பித்தது போல, உருவகுப்பை வெளிப்படுத்தினார். “நாவலனே! அங்ஙனம் கண்டபடியே நாளை நம் புளியமரத்துக்குக் கீழே வந்து இப்படியே சர்வ அவயவப் பூர்ணமாகச் சமையுங்கள் (செதுக்குங்கள்). அங்கே எமது சீடனான நாதமுனிகளிடம் அதை ஒப்படையுங்கள்!” என்று ஆழ்வார் நியமித்தார்.

சிற்பி திடுக்கிட்டு எழுந்து கண் விழித்த போது, மேலே பூர்ண சந்திரன் பிரகாசிக்க, சில்லென்ற காற்று தன்‌ முகத்திலடிப்பதையும், அதில் மகிழம் பூ வாசனை பரவியிருந்ததையும் உணர்ந்தான். நிசப்தமான அந்தச்‌ சூழ்நிலையில்‌ அவன்‌ உணர்ச்சிகள் பேரிரைச்சலாக தாமிரபரணியின் சலசலப்புடன் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தன.

கோயில் கோபுரத்தை தழுவத்‌ தொடங்கிய சூரிய கிரணங்கள், பசுமையான பயிர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருந்தன. அந்த மனோகரமான காலை நேரம் பட்சிகள் அமுத கீதங்களைப் பெருக்கிக்கொண்டு இருக்க, சிற்பி இதை எல்லாம் ரசிக்காமல் தாமிரபரணியில் நீராடிவிட்டு ஆழ்வார் சந்நிதிக்கு விரைந்தார். புளியமரத்துக்கு அருகில் அமர்ந்து இருந்த நாதமுனிகளை வணங்கி, “ஆழ்வார் கட்டளையை நிறைவேற்ற வந்திருக்கிறேன்! என்னை ஆசிர்வதியுங்கள்” என்று அவர் திருவடியில் விழுந்தான்.

நாதமுனிகள், “அப்படியே ஆகட்டும்,” என்று சிற்பிக்கு ஆசிகளை நல்கி, கண்ணி நுண் சிறுத்தாம்பை வாயினால் பாடி, மனதினால் மாறனை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார்.

சிற்பி புளியமரத்தைச் சுற்றி வலம் வந்து, அதன் அடிப்பாகத்தில் தன் கையால் மெதுவே வருடி மண்ணைத் தோண்ட ஆரம்பித்தான்.. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மதுரகவிகள் செதுக்கியும், செதுக்காமலும் மறைத்து வைத்த அவ்விக்ரகம் நாவலனுக்கு கிடைத்தது.

தாமிரபரணி ஆற்று நீரைக் கொண்டு அதன் மீது படிந்த மண்ணை விளக்கி, ஆழ்வார் சந்நிதியில் அல்லும் பகலும் ஆகாரம், நித்திரை எதுவும் இல்லாமல் நியமத்துடன் அவ்விக்ரகத்தை உருவாக்கி முடித்த போது, ஆழ்வார் ஒரு சக்தி விசேஷத்தை அத்திருமேனியின் உள்புகுத்தி, “நாதமுனிகளே!” என்று அழைத்தார். நாவலன் திடுக்கிட்டு செய்வதறியாமல் திகைத்தான்.

தியானம் கலைந்து நாதமுனிகள் கண்களைத் திறந்த போது, “இதோ உம்முடைய விருப்பத்தை தலைக்கட்டினோம் (நிறைவேற்றினோம்)! உம்முடைய நித்திய ஆராதனைக்கு (தினசரி வழிபாட்டுக்கு) வைத்துக்கொள்ளும்!” என்று கூற, நாவலன் அந்த விக்ரகத்தை நாதமுனிகளிடம் பிரசாதமாக சமர்ப்பித்தார்.

நாதமுனிகள் ‘நிறை கொண்டது என் நெஞ்சினையே!’ என்று வியந்து, உவந்து அதைத் தரிசித்தபோது, ஆழ்வார்:

“இராமனுக்கு வலக்கையான இலக்குவன் இவரே! நம்முடைய அவயவமாக இவரையே நினைத்திரும். யசோதை கண்ணனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தது போல, உமக்கு அளித்த தமிழ் மறைகளான திருவாய்மொழியை வளர்க்கப் போகும் தாயாக இவர் விளங்குவார்! இவரே நமக்கு அடி, நம் காரியத்துக்கும் இவரே அடி! இனிமேல் நம் தரிசனத்தை வளர்ப்பதற்காக இவரை அடியிட்டு வைத்தோம்! நாதமுனிகளே! உம்முடைய குலத்திலே ஒருவர் இந்தத் திருமேனிக்கு உரியவரைக் கண்களாரக் கண்டு நேரே தரிசிக்கப் போகிறார். பெருமாள் பட்டாபிஷேகத்துக்கு[13] நாள் குறித்த மாசத்திலே, பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையில் பிரதமோபாயம்[14] (முதல் வழி) பிறந்தாற்போல, நம் பிறவி நாளுக்குப் பிறகு[15] பதினெட்டாம் நாளில் சரம உபாயம்[16] (இறுதி வழி) பிறக்கப் போகிறது!” என்றார்.

நாதமுனிகள் நாவில் பேச முடியாமல் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்க, ஆழ்வார், “நாதமுனிகளே! இப்போது வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டு இருப்பது போல், இந்தப் பவிஷ்யதாசாரியரை கண்டுகொண்டிரும். நாலாயிரம் பாசுரங்களுக்கும் சுருதி கூட்டி (இசையமைத்து), எல்லோரிடமும் அதைக் கொண்டு சேரும். இதை மேலும் பெருக்குவதற்கு, நீர் கையில் வைத்திருக்கும் பவிஷ்யதாசாரியர் அவதரிப்பார்![17]” என்று நாதமுனிகளுக்கு விடை கொடுத்தார்.

“கருணைமிக்கவராய் அடியேன் தூங்கும்போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்கிரகத்தை அடியேனுக்குக் காட்டியருளின, காரியரின் பிள்ளையான குருகூர் சடகோபனைச் சரண் அடைகிறேன்[18]” என்று நாதமுனிகள் நம்மாழ்வாரை வணங்கி, திருநகரில் ஆழ்வார் திருவடிகளில் கைங்கரியம் (தொண்டு) செய்துகொண்டு, ஆழ்வாரை விட்டுப் பிரியாமல் அங்கேயே நித்தியவாசம் செய்துகொண்டு இருக்கையில், அவருக்கு மீண்டு ஒரு கனவு வந்தது!

பயணம் தொடரும்..
-சுஜாதா தேசிகன்

________________
[1] முழுமையான அங்கங்களுடன்.
[2] சரணாகதியே சிறந்த வழி என்ற பிரபன்ன குலத்தில்(மரபில்)
[3] காஷாய சோபி என்று தொடங்கும் கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகம்;
(திருமஞ்சனக் கட்டியம் ஸ்ரீபெரும்பூதூரில் உள்ளபடி)
காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்ட்த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே.
[4] ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய யதிராஜ சப்ததியின் மேற்கோள்.
[5] ஆர்த்திப் பிரபந்தம் ( 14ஆம் பாசுரம் )
[6] சரமோபாய நிர்ணயத்தில் வரும் ஸ்லோகம்
விஷ்ணு: சேஷீ ததீய: சுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி:
ஸ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரமயம் ததீயம்
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர
தஸ்மாத் சிஷ்டம் ஸ்ரீமத்குரூணாம் குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ:
[7] உத்தாரகத்துவம் - சம்சாரத்திலிருந்து மோட்சம் என்ற பேற்றை பெற்று கொடுக்க கூடியவர்
[8] அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள் - அடிப்படை ஞானம் அனுஷ்டானத்துடன், ஆசாரியனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாகி, தொண்டு செய்பவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வது. ஓரண்வழி என்பர்.
[9] க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் - ஆசை ஒன்று இருந்தால் அவர்களுக்கு கருணை அடிப்படையில் உபதேசம் செய்வது. அனுவிருத்தியை மாற்றியவர் இராமானுசர்.
[10]உபதேசரத்தினமாலை:
ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
ஆசையுடை யோர்க்கெல்லாம் ஆரியர்காள்: கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின்
[11] நம என்ற பதம் ஓம் நம: என்றும், நமோ நம: என்றும், நாராயண நம: என்றும் சேரும்
[12] நாவலன் - கற்பனை பெயர். நாவலன் பெருமாள் என்பது நம்மாழ்வாரின் திருநாமங்களின் ஒன்று.
[13] பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்த மாசத்திலே - சித்திரை
[14] பிரதமோபாயம் - சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற கீதையின் சரணாகதி வாக்கியம்
[15] நம் பிறவி நாள் = விசாகம்; விசாகத்திலிருந்து பதினெட்டாம் நாள் திருவாதிரை
[16] சரம உபாயம் - சரணாகதியே உபாயம்
[17] உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்
வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங் கியசீர்
நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர்
அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே.
[18] நாதமுனிகள் சாதித்த ஸ்லோகம் சரமோபாய நிர்ணயம்
யஸ் ஸ்வாபகாலே கருணாகரஸ்ஸந்
பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம்
ஸந்தர்சயா மாஸ மஹாநுபாவம்
தம் காரிஸூநும் சரணம் ப்ரபத்யே

Comments