Skip to main content

பகுதி - 10 - சடகோபன் அருள்

10. சடகோபன் அருள்




காலைக் கதிரவன் புறப்படும் சமயத்தை அருணோதயம் என்பார்கள். பிறகு சூரியோதயம் ஏற்பட்டு எங்கும் வெளிச்சம் பரவுகிறது. சில சமயம் இருண்ட மேகங்கள் அந்த வெளிச்சத்தை மறைக்க, பலமான காற்று வீசத் தொடங்கியவுடன் அம்மேகங்கள் விலகிச் செல்ல மீண்டும் வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது.

ஆழ்வார்கள் காலத்துக்கு முன் அருணோதயமாக இருந்த இப்பூவுலகம், அவர்கள் அவதரித்தபின் சூரியோதயமாக விளங்கியது. சூரியனை மேகங்கள் மறைப்பது போல, ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் ஒருசில காலம் மறைந்திருந்தன.

நாதமுனிகள் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பிரபந்தத்தை ஏகசந்தையாகப்[1] பன்னீராயிரம் முறை இசைத்தார். அது, பலமான பன்னிரண்டு துவாதச நாமக் காற்றாக உருவெடுத்தது. மறைத்த மேகங்களை விலக்கி, திருப்பள்ளியெழுச்சியாக ஒலித்து, ஞானசூரியனான அரங்கனை எழுப்பிப் பக்தி ஒளியைப் பரவச் செய்தது. இந்த ஒளி நூறு குளிக்கு நிற்குமா போலே இருந்தது.[2]

பெருமாளின் எண்ணற்ற திருநாமங்களை ஆயிரம் திருநாமங்களாகப் பீஷ்மர் விஷ்ணு சகஸ்ர நாமமாக ஜபித்தார். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரண்டு திருநாமங்கள்[3] முக்கியமாகக் கருதப்படுகிறது.

பன்னிரண்டு திருமண் காப்பு தரித்துக்கொள்ளும்போது, கேசவாய, நாராயணாய, மாதவாய, கோவிந்தாய, விஷ்ணவே, மதுசூதனாய, திருவிக்கிரமாய, வாமநாய, ஸ்ரீதராய, இருடிகேசாய, பத்மநாபாய, தாமோதராய என்று தரித்துக்கொள்ளும் இந்தக் காப்புக்குப் பலன் கிடைப்பது போல, கண்ணிநுண் சிறுதாம்பில் ‘சடகோபன் அருளையே’ என்று மதுரகவிகள் கூறும் அந்த அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா?

பொதுவாக, ஆழ்வார் பாடல்கள் பத்து பாசுரம் இறுதியில் ஒரு பலஸ்ருதி பாசுரம் என மொத்தம் பதினொரு பாசுரங்களாக அமைந்தவை. பெரியாழ்வார் திருமொழியிலும்[4], நம்மாழ்வார் திருமொழியிலும்[5] பன்னிரண்டு பாசுரங்களுடன் இறுதியில் பலஸ்ருதி[6] பாசுரம் என மொத்தம் பதிமூன்று பாசுரங்களாக அமைந்திருக்கிறது.

இவ்விரு திருமொழிகளிலும் பன்னிரு திருநாமப் பாடல்களாக அவை அமைந்திருக்கின்றன. பெரியாழ்வார், இந்தப் பன்னிரண்டு பாட்டுக்களையும் (நாமங்களும்) ஓதவல்லவர்கள் எம்பெருமானுக்கு அடிமை செய்யும் பேறு பெறுவார்கள் என்கிறார். நம்மாழ்வாரோ இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் பண்ணில் இசைப்பவர்களுக்குப் பெருமாளின் திருவடியில் சேர்க்கும் என்கிறார்.

பன்னீராயிரம் முறை இசைத்தபோது, ஆஸ்திகனாய், அறவழியில் நடப்பவனாய், நற்குணம் நிறைந்தவனாய், விஷ்ணு பக்தனாய், பரிசுத்தனாய், ஆழ்ந்த திருவுள்ளம் உடையவனாய், மங்களாசாசனத்தில் வல்லவனாய், பேரறிவாளனாய் இருப்பவனே சிஷ்யன் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் சிஷ்ய லக்ஷணங்கள் நிறைந்தவரான நாதமுனிகளுக்கு, திருக்குருகூர் நம்பி மிக மகிழ்ந்து, யோக தசையில் மதுரகவிகளுடன் காட்சி கொடுத்தார். அப்போது அசரீரி வாக்குப்போலத் திருவாய் மலர்ந்து, “ஏன் நம்மைக் குறித்து இப்படி உபாசனை செய்து என்னை அழைத்தீர்?” என்று கேட்டார்.

அதற்கு நாதமுனிகள், “‘ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்’ என்ற திவ்வியமான தமிழ்ப் பாடல்களால் வசீகரிக்கப்பட்டு, ஆயிரம் பாசுரங்களும் வேண்டும் என்ற பேராசையால் [7]அலைந்து, அதைத் தேடி வந்தேன். அதன் பொருட்டு, 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்ற பாடல்களைப் பன்னீராயிரம் முறை உருச் சொன்னால், தேவரீர் பிரசன்னமாகி உபதேசிப்பீர் என்று மதுரகவிகளின் வம்சத்தவரான பராங்குசத் தாசரிடம் உபதேசம் பெற்றேன். 'சடகோபன் அருளை' பெற வேண்டும் என்று இங்கே ஓடிவந்தேன். அடியேனுக்குத் தேவரீருடைய பிரபந்தங்களும், அதன் அருள் விளக்கங்களுடன் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மதுரகவிகள் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பாசுரத்தில் ஓர் இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்று குறிப்பிடும் அந்த அருள் குறித்த சில சரித்திர நிகழ்வுகளை, இந்தக் கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

யோக ஆசான் என்று போற்றப்படும் யோகாச்சார்யா ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா (1888-1998) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஓர் அரிய சம்பவத்தை இங்கே நினைவு கூர்வோம்.

#
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா இளம் வயதில் வேதத்தைத் தன் தந்தையிடம் சந்தை முறையில் கற்றார். ஆனால், பத்தாவது வயதில் அவர் தன் தந்தையை இழந்தார். பின்பு, பன்னிரண்டாம் வயதில் மைசூரில் இருந்த தன் பாட்டனாரிடம் சென்று பரகால மடத்தில் மாணவராகச் சேர்ந்தார். பதினாறாம் வயதில் (1904) அந்த அதிசயம் நிகழ்ந்தது. கனவில் நாதமுனிகள் தோன்றி, தெற்கே உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு கட்டளையிட்டார். பணத்தைச் சேர்த்துக்கொண்டு அவர் ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட்டார்.

ஆழ்வார் திருநகரியில் புளியமரத்தடியில் ஒரு பெரியவரை அணுகி, “நாதமுனிகளை எங்கு தரிசிக்கலாம்?” என்று கேட்க, அவர் கைகாட்டிய திசையை நோக்கிச் சென்றார்.

அது தாமிரபரணி நதிக்கரையில் இருந்த ஒரு மாமரத்தடி. உணவருந்தாமல் மிகவும் களைத்திருந்த அவர் அங்கு மயக்கமுற்று விழுந்தார். அப்போது அவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அவர் மூன்று மாமுனிவர்கள் மத்தியில் இருந்தார். அவர்களை வணங்கி, நாதமுனிகள் இயற்றிய 'யோக ரஹஸ்யம்' நூலைத் தனக்குப் போதிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். நடுவில் வீற்றிருந்த நாதமுனிகள், தனது இனிமையான குரலில் 'யோக ரஹஸ்யத்தைச்' செய்யுள் வடிவில் அருள, அவர் அதைக் கேட்டுக்கொண்டார். சில மணி நேரம் கழித்து, ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் சுயநினைவு பெற்றபோது, முனிவர்களும் மாமரத்தடியும் மறைந்திருந்தன.

மீண்டும் கோயிலுக்குத் திரும்பினார். அங்கு அந்தப் பெரியவர் இவரைப் பார்த்தவுடன், “என்ன, நாதமுனிகளிடமிருந்து யோக ரஹஸ்யம் உபதேசமாயிற்றா? கோயிலுக்குப் போய்ப் பெருமாளைச் சேவியும்” என்று கூறினார். பெருமாளை சேவித்துவிட்டு திரும்பி வந்ததும் அந்தப் பெரியவரையும் காணவில்லை. அப்போதுதான், தாம் கண்ட பெரியவர் தன் கனவில் தோன்றிய, மூன்று முனிவர்கள் நடுவில் காட்சி தந்த நாதமுனிகளின் தோற்றமாய் இருந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்துகொண்டார்.[8]

இவ்வகையில், காலத்தால் அழிந்திருந்த ‘யோக ரஹஸ்யம்’ என்ற அரிய நூல் இவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில்தான் தன் யோகத் தத்துவங்களை வகுத்துக்கொண்டார்.

##
அடுத்து நிகழ்ந்த சம்பவம், பல வருடங்களுக்கு முன் நடந்தது.

லிப்கோ நிறுவனரும், சில பக்தர்களும், நாதமுனிகளைப் போலவே பல ஆயிரம் முறை 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' அனுசந்தானம் செய்ய முடிவு செய்து, குழுவாகச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில், விழாக்கோலமாக மேளதாளத்துடன் திருமணம் களைகட்டியிருந்தது.

திடீரென்று ஏதோ காரணத்தால் திருமணம் தடைபட்டு நின்றது. மணமக்களுக்குக் கோயில் மாலை பிரசாதங்களுடன் அங்கே சில அந்தணர்கள் வந்தார்கள். திருமணம் நின்றுபோன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் செய்வதறியாமல் தவித்தார்கள். அருகில் இருந்த ஒருவர் அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், அருகில் ஒரு இடத்தில் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' அனுசந்தானம் நடக்கிறது. பிரசாதங்களை அங்கே சென்று சேர்த்துவிடுங்கள்” என்றார்.

கோயிலில் இருந்து வந்தவர்கள் அந்தப் பிரசாத மாலைகளை எடுத்துக்கொண்டு, பாசுரம் சேவித்தவர்களுக்கு வழங்கினர். அப்போது பாசுரம் சேவித்தவர்களுக்கு ஏற்பட்ட ஆனந்த பூரிப்புக்கு அளவே இல்லை! அவர்களுக்குக் கிடைத்தது என்ன தெரியுமா? அது ஆழ்வார் திருநகரியின் மாலை! சாட்சாத் நம்மாழ்வாரின் அருள் மாலை!

###
'தமிழ்த் தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே. சாமிநாதையர் அவர்கள், பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து எங்கும் கிடைக்காமல் கடைசியாக ஆழ்வார் திருநகரிக்கு வந்திருந்தார். எல்லா இடங்களிலும் தேடியும் அது கிடைக்காததால், மிகுந்த வருத்தத்துடன் இரவில் ஒரு திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டார்.

அப்பொழுது திருவீதியில் பெருமாளும் நம்மாழ்வாரும் உற்சவத்துக்கு எழுந்தருளினர். உ.வே.சா. அவர்கள் எழுதியது இது:[9]

“அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து “ஸ்வாமி! 'வேதம் தமிழ் செய்தவர்' என்று தேவரீரைப் பாராட்டுகிறார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூல் ஒன்றைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு நான் பட்ட சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா?” என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்துபோய், 'இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை' என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்கனம் பிரார்த்தனை செய்தேன்” (10).

பெருமாளும் ஆழ்வாரும் கடந்து செல்ல, நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது அவர் நண்பர் லக்ஷ்மண கவிராயர், எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு, மிகவும் வேகமாக அவரை நோக்கி வந்தார். கோயில் பிரசாதம் என்று நினைத்தேன்.

கவிராயர், “இந்தப் புத்தகத்தைப் பாருங்கள்” என்று கூறி, மேலாடையால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.

உ.வே.சா. அதனைப் பிடுங்கிப் பார்த்தபோது, நிலா ஒளியில் சட்டென்று 'முல்லைப்பாட்டு' என்ற பெயர் கண்ணில் பட, அவருக்கு உண்டான சந்தோஷத்தை விவரிக்க வேண்டுமா? அன்றிரவு தூக்கம் இன்றி, மறுநாள் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று, பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து நன்றியைக் கூறி, மேலும் தான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாகச் செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு அவர் நம்மாழ்வார் அருளுடன் தமிழ்ப் பயணத்தைத் தொடர்ந்தார்.

நாம் வாழும் இந்த நூற்றாண்டிலேயே இதுபோலச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எனவே, நாதமுனிகளுக்குச் சடகோபன் அருள் கிடைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

பரமபதத்தில் பெரிய பிராட்டியார் ஆணையாலே, திருக்குருகூர் நம்பியான சடகோபன், நாதமுனிகளை அருள் கூர்ந்து பார்த்து, பிரியத்துடன், “நாதமுனிகளே! இந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்ல; அடியேனுடைய மற்ற பாசுரங்களையும், மற்ற ஆழ்வார்கள் அருளிய ஏனைய பாசுரங்களையும், அஷ்டாங்கயோக ரகசியத்தையும் உமக்குத் தருகிறேன். பெற்றுக்கொள்ளும்!” என்று திருவாய் மலர்ந்தார்.

விஸ்வரூப தரிசனத்தின்போது, கண்ணன் அர்ஜுனனிடம், “உன்னுடைய தற்போதைய கண்களால் என்னை நீ காண முடியாது. எனவே, நான் உனக்குத் திவ்யமான ஞானக் கண்களைத் தருகிறேன்; எனது யோகத்தின் ஐஸ்வரியத்தைப் பார்”[10] என்று காட்டிக்கொடுத்தது போல, சடகோபரும் நாதமுனிகளுக்குத் தெய்வீகமான கண்ணை அளித்தார். அத்துடன், மந்திர ரத்தினமான த்வயம் உள்பட மூன்று ரகசியங்களின் பொருளையும் உபதேசித்தார்.

இதைப் படித்துக்கொண்டு இருக்கும் வாசகர்களுக்கு ஞானக் கண் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை இங்கே தருகிறோம்[11]:

ஓரு ஊரில், ஒருவன் மரத்தடியில் அமர்ந்து, யாசகம் செய்து வாழ்ந்து வந்தான். பலகாலம் அவன் பிச்சை எடுத்து வாழ்ந்தபின் ஒரு நாள் அவன் அந்த இடத்திலேயே மாண்டான். பல காலம் கழித்து அவன் உட்கார்ந்த மரத்தின் கீழே தோண்டும்போது பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதை அறியாமல், பல ஆண்டுக்காலம் தினந்தோறும் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான் அந்த யாசகன்.

நம் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் பெருமாளைக் காண முடியாமல், நீரை அருந்தவிடாமல் தடுக்கும் துரும்பு போல, நம் பண்டை வல்வினைகள் பெருமாளை அனுபவிக்க முடியாமல் தடுக்கின்றன. மதுரகவிகள், குருகூர் சடகோபன் தம் பார்வையாலேயே அந்த வல்வினைகளைப் பறக்கடித்தருளினார் என்று கண்ணி நுண் சிறுத்தாம்பில்[12] கூறுகிறார்.

அந்த யாசகனிடம், “நீ அமர்ந்துள்ள இடத்தின் கீழே புதையல் இருக்கிறது” என்று காட்டிக்கொடுத்திருந்தால், எப்படி அவனுக்குப் பொக்கிஷம் கிடைத்திருக்குமோ, அதுபோல ஆசாரியன் நமக்குப் பெருமாளைக் காட்டிக்கொடுக்கிறார். கண்ணன் அர்ஜுனனுக்கும், சடகோபன் நாதமுனிகளுக்கும் காட்டிக்கொடுத்தது இதுவே. இதுவே சடகோபன் அருள்.

பெருமாள் குருகூர் நம்பியின் நாக்கில் அமர்ந்துவிட, சடகோபன் 'பல்லாண்டு' தொடக்கமாக, ஆழ்வார்களின் அவதாரங்களையும், அவர்களின் அன்பு விளைத்த அருந்தமிழ்ப் பாசுரங்களையும் உபதேசிக்க ஆரம்பித்தார். நாதமுனிகள் சடகோபன் அருளால் அதைக் கேட்கத் தொடங்கினார்

-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
________________
[1] ஏகசந்தையாக - ஓரிடத்தில் தொடர்ந்து அமர்ந்து எதற்கும் எழுந்துசெல்லாமல் ஒருசேர பாடல்களைப் பாடி பூர்த்தி செய்வது.
[2] நூறு குளிக்கு நிற்கும் - நெடுங்காலம் நிற்கும். பெண்கள், கண்ணன் தங்களை ஒரு முறை அணைத்துவிட்டால் அது நூறு குளிக்கு நிற்கும் என்றார்கள்.
[3] துவாதச திருநாமங்கள்
[4] பெரியாழ்வார் திருமொழி 139-151
[5] நம்மாழ்வார் திருவாய்மொழி 3075 - 3087
[6] பலஸ்ருதி - பலன்
[7] பேராசை பெரும் நஷ்டம் என்பர். ஆனால் பேராசை ஆழ்வாருக்கு பெரிய லாபம் ஆயிற்று. ஆழ்வாரின் பேராசை எவ்வளவு பெரியது என்று இந்த பாசுரம் கூறுகிறது. அது போல நாதமுனிகளின் பேராசை இருந்தது.

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவுஇல் பெரும் பாழேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீயோ,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.

சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த, முடிவற்ற, பெரிய மூலப்பகுதியாகத் திகழ்கிறவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, உயர்ந்த, நல்ல, மலர்ச்சோதிவடிவானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, சுடர்விடும் ஞான இன்பமானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய என்னுடைய ஆசை தீரும்படி என்னைச் சூழ்ந்தாயே.
[8] ஒரு யோகியின் சரிதம் - புத்தகத்திலிருந்து.
[9] உ.வே.சா எழுதிய ‘நிலவில் மலர்ந்த முல்லை’ கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
[10] கீதை 11-8
திவ்யம் ததாமி தே சக்ஷு:
பஷ்ய மே யோகம் ஐஷ்வரம்
[11] ஸ்ரீபாஷ்யத்தில் எம்பெருமானார் கூறும் உதாரணம்

[12] கண்ணிநுண் சிறுத்தாம்பு - பண்டை வல்வினை பாற்றி யருளினான் 

Comments