Skip to main content

சாமி படம்


அந்த ஞாயிற்றுக்கிழமையை என்னால் மறக்க முடியாது. அன்று தான் நாங்கள் புளு ஃபிலிம் பார்க்கத் திட்டம் போட்டோம். நாங்கள் என்றால் நான், பக்கத்துவீட்டு பாபு, 'சபியா' செல்வம் ('சபியா' பற்றி பிறகு சொல்கிறேன்). அந்த நாள்களில் பாபு வீட்டில் மட்டும்தான் டிவி இருந்தது. சன், ஜெயா, ராஜ் எல்லாம் கிடையாது. தூர்தர்ஷன் மட்டும்தான். வெள்ளிக்கிழமையோ, புதன்கிழமையோ சரியாக ஞாபகம் இல்லை, சித்திரஹார் வரும். அதில் கடைசியில் வரும் (சில சமயம் நடுவில்) தமிழ்ப் பாட்டிற்காக ஹிந்தி தெரியாவிட்டாலும் கபூர், தர்மேந்திரா, வானவில் கலரில் வரும் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ஸ்லைட் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்போம். சித்திரஹார் மற்றும் கிரிக்கெட் பார்க்க மட்டும் பாபு வீட்டுக்குப் போவோம். மதியம் யூஜிசி ப்ரோகிராம் அல்லது பாபுவின் அப்பா வீட்டில் இருந்தால் டிவி பார்க்கப் போகமாட்டோம். பாபுவிற்கு திடீர் என்று பல சலுகைகள் கிடைத்தது. கிரிக்கெட்டில் முதல் 'காஜி', ஓர் ஓவரில் ஏழு பந்துகள், புல்டாஸாகப் போட்டுக்கொடுத்து சிக்ஸர் அடிக்க வைப்பது... சலுகைகளுக்குக் காரணம், பாபுவின் மாமா தூபாயிலிருந்து வாங்கிவந்திருந்த விசிபி. நாங்கள் விசிபி பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர படம் பார்த்ததில்லை. நாங்கள் கொடுத்த சலுகைகள் வீண் போகவில்லை. அந்த டெக்கில் படம் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கும், செல்வத்துக்கும் கிடைத்தது. அதைப் பற்றி சொல்கிறேன்....



செல்வம் கிரிக்கெட் விளையாடும் போது "டேய் பாபு! எப்புடு டெக்கில படம் மாக்கு ச்சூப்பிஸ்தாவு" என்றான். செல்வம் அடுத்த தெருவில் இருப்பவன். வேறு பள்ளியில் படிப்பவன். சின்ன வயசில் ஆந்திராவில் இருந்ததற்கான அடையாளம் பேச்சில் இன்னும் இருக்கிறது. எங்களைவிட ஒரு கிளாஸ் சீனியர். பாடத்தைத் தவிர 'மற்ற' விஷயங்களில் சந்தேகம் என்றால் இவனிடம்தான் கேட்போம். செல்வம் கொஞ்சம் அதிகாரமாகப் பேசுவான். எது சொன்னாலும் தட்ட முடியாது. தட்டினால், மண்டையில் தட்டுவான் (இலவச இணைப்பாக இரண்டு கெட்டவார்த்தையுடன்) அல்லது முழங்கையை பின்பக்கமாக முறுக்குவான்.  செல்வத்துடன் சகவாசம் வைத்துக்கொள்ள எல்லோர் வீட்டிலும் தடைவிதித்திருந்தார்கள். ஆனால் நாங்கள் அவன் பின்னால்தான் சென்றோம்.


செல்வம் பாபுவிடம் டெக்கைப் பற்றி கேட்டவுடன், பாபு சிக்கனமாக, "பார்க்கலாம்" என்றான். பாபு என்னுடைய வகுப்பில் படிப்பவன். இரண்டு வீடுகள் தள்ளி இருக்கிறான். 'பெல்ட்' என்றால் அவனுக்கு பயம். காரணம் அவன் அப்பா போலிஸ் இன்ஸ்பெக்டர். கண்டிப்பானவர். எப்பொழுது எங்களைப் பார்த்தாலும் "என்னடா மார்க்?" என்று விசாரிப்பார். நிச்சயம் எதாவது ஒன்றில் கம்மியாக இருக்கும். கேட்டுவிட்டுத் திட்டுவார். எங்கள் அப்பாவைவிட இவரிடம்தான் எங்களுக்கு அதிக பயம். மற்றபடி இன்ஸ்பெக்டர் என்பதால் எங்களுக்குச் சின்னச்சின்ன சலுகைகளும் கிடைத்தன. தீபாவளிக்கு ரஜினி பட டிக்கெட், குறுக்கு வழியில் ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல், ஓசி பட்டாசு... என்று.


செல்வம் விடாமல் "பிளாசா தியேட்டர் பக்கல ஒக்க லெண்டிங் லைப்ரரி புதுசா ஒச்சுந்தி, மி நைனா பேரு செப்பிதே இண்டிக்கே கேசட் வரும்!"


பாபு திரும்பவும் "பார்க்கலாம்" என்று வீட்டுக்கு ஓடிவிட்டான்.


செல்வம் விடுவதாக இல்லை. அடுத்த நாள் கிரிக்கெட் விளையாடும் போது திரும்பவும் "என்ன பாபு சண்டே படம் ச்சூதாமா?"


"சரி, பார்க்கலாம் அப்பா வீட்டில் இல்லாட்டி" என்று பாபு பேட்டிங் செய்யப் போய்விட்டான். எம்.ஜி.ஆரால் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது.


ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர் திருச்சி வழியாக மதுரை செல்கிறார் என்று பாபுவின் அப்பா பந்தோபஸ்துக்கு காலையிலேயே சென்றுவிட்டார். பாபுவின் அம்மா, பக்கத்து வீட்டு மாமியுடன் மேல்மருவத்தூர் போனதால் பாபுவீட்டில் யாரும் இல்லை. செல்வம் காலை பத்துமணிக்கு வந்து "பாபு, வாடா போய் மன்ச்சி கேஸட் தெச்சிக்கொனி ச்சூதாமா" என்றான். பாபுவிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. சைக்கிள் எடுத்துக்கொண்டு ஜங்ஷன், பிளாசா தியேட்டர் பக்கத்தில் இருக்கும் புது வீடியோ லெண்டிங் லைப்ரரிக்குப் புறப்பட்டோம். கடை வைத்திருப்பவர் பாபுவை உடனே அடையாளம் கண்டுகொண்டு "வாங்க தம்பி, அப்பா நல்லா இருக்காரா? எங்க இந்த பக்கம்?"


செல்வம் தான் ஆரம்பித்தான் "அண்ணே, மன்ச்சி இங்கிலிஷ் கேசட் உந்தா?"


"அதுக்கென்ன, 'பட்ஸ்பென்ஸர்' படம் புதுசா வந்திருக்கு," என்று கேசட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, "நல்ல சிரிப்பா இருக்கும், பார்த்துவிட்டு எப்போ வேணா தாங்க தம்பி. அப்பாவைக் கேட்டதா சொல்லுங்க!" என்றார்.


அங்கிருந்து வெளியே வந்தபோது பிளாசா தியேட்டர் வாசலில் "சிராக்கோ" சினிமா போஸ்டர் எங்களைப் பார் என்றது; பார்த்தோம். ஒரு நிர்வாணப் பெண்ணின் முக்கியமான இடங்களை பெரிய எழுத்து "A" மறைத்து பார்ப்பவர்களுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டிருந்தது. ஓரத்தில் "லாஸ்ட் ஃபியூ டேஸ்" என்று ஒட்டப்பட்டிருந்தது. 'கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று கீழே எழுதியிருந்தது.


"போன வாரம் நேனு ச்சூஸ்தானு, படத்துல ஒக்கே ஒக்கட்டி குதிரை சீன்" என்றான் செல்வம்.


செல்வத்திடம் அது என்ன என்று கேட்க வேண்டும் போல் இருந்தது; கேட்கவில்லை.


"உன்னை உள்ளேயே விட்டுருக்க மாட்டான், சும்மா ரீல் சுத்தாதே!" என்றேன்.


"ஐயரே, கீரனூர்ல 'சபியா' தியேட்டரில் நேனு படம் ச்சூஸ்சானு..எங்கிட்ட.." என்று கெட்ட வார்த்தையில் திட்டினான்.


கீரனூர் 'சபியா' தியேட்டரில் ஒரு நடிகையின் 'பிட்' காண்பிக்கப்படுவதாக ஒரு செய்தி பரவ, ஸ்கூல் கட் அடித்துவிட்டு செல்வம் போயிருக்கிறான். "தியேட்டர் பூரா கிழபோல்ட்டுகள்" என்று எங்களிடம் ஒரு முறை சொல்லியுமிருக்கிறான். அதற்குபின் 'சபியா' என்ற வார்த்தை செல்வத்தின் பெயரின் முன் ஒட்டிக்கொண்டது. இதைத் தவிர சாக்ஸ் மட்டுமே அணிந்த பெண்கள் புத்தகம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறான்; நான் பார்த்தில்லை.


போஸ்டர் தந்த 'இன்ஸ்பிரேஷனில்' செல்வம் அந்தத் திட்டத்தைச் சொன்னான்.


"இந்த கேஸட் கடையில நிச்சியம் 'டபுள் எக்ஸ்' படம் கிடைக்கும், அடுகுதாமா?, அதான் இண்ட்லே எவரு லேதுல்ல"


பாபுவின் கண்களில் கலவரம் தெரிந்தது. "அய்யோ, அப்பாக்கு தெரிந்தால், பெல்ட்டுதான்!" என்றான்.


"டபுள் எக்ஸா? " என்றேன் ஒன்றும் புரியாமல்.


"ஐயரே, ஒனக்கு ஒன்னும் தெலியேது , கொஞ்சம் ...பொத்திக்கிட்டு இரு" என்று மறுபடியும் இலவச இணைப்பு.


நாங்கள் சைக்கிள் எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டோம்.


முதல் முறையாக டெக்கில் படம் பார்த்தோம். சித்திரஹார் மட்டுமே டிவியில் பார்த்த எங்களுக்கு, இது புது அனுபவமாக இருந்தது. படத்தைப் பார்த்துமுடித்த பிறகு செல்வம் மறுபடியும் அந்தப் பேச்சை ஆரம்பித்தான்.


"என்ன பாபு எமண்டாவு ? அத்தான் இண்ட்லே எவரு லேதுல்ல"


பாபு பதில் சொல்லவில்லை. செல்வம் விடுவதாக இல்லை. "இது போல மன்ச்சி சான்ஸ் கிடைக்காது என்ன சொல்லற?"


"கடையில நான் போய் கேட்க மாட்டேன்பா!"
 
"நீ ரா ஒத்து, நானும் ஐயரும் போய் 'பட்ஸ்பென்ஸர்' காஸட்டை கொடுத்திட்டு 'அந்த' காஸட்டை தீஸ்கோனி ஒஸ்தானு" என்று மளிகைக்கடையில் அரிசி பருப்பு வாங்குவது போல் சாதாரணமாக சொன்னான்.


"இ... இல்ல... ஐயோ! நான் வரலை.." என்றேன் உடனே.


"என்ன ஐயரே ஜகா வாங்கற..சரி நான் மட்டும் போறேன்"


"செல்வம்! கடையில என்னனு கேட்ப?" என்றேன்.


"சாமி படம்னு அடுகுதுனு எல்லாருக்கும் தெரியும், என்ன ஐயரே இது கோடா தெலியேதா..." என்றான்.


"அப்பாவிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான்!" என்று பாபு பயந்துகொண்டு சொன்னான். உள் மனம் 'அந்த' மாதிரி படத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று சொல்லிற்று. செல்வம் அதற்குமேல் தாமதித்தால் நாங்கள் நல்லவர்கள் ஆகிவிடுவோம் என்று பயந்துகொண்டு 'பட்ஸ்பென்ஸர்' காஸட்டை எடுத்துக்கொண்டு என் சைக்கிளை ஓட்டிச்சென்றான். அரை மணிக்குப்பின் செல்வம் 'அந்த'க் காஸட்டுடன் வந்தான். எனக்கு பயமா, ஆர்வமா, தயக்கமா... என்று அந்த உணர்ச்சியை வர்ணிக்க முடியவில்லை.


"ஐயரே, சந்தாயாவந்தனம் எல்லாம் பண்ற...நீ ஆத்துக்கு ஓடிபோய்டு" என்றான் கிண்டலாக.
நான் பதில் பேசவில்லை.


"ஐயரே, எல்லா கதைவையும் ஒழுங்கா தாப்பா போட்டுரு வந்துடு, இல்ல ஒட்டுக்க தொர்கிபோக்கதாமு" என்று எச்சரித்தான்.


எல்லாக் கதவுகளையும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்தபோது காஸட் ஓடிக்கொண்டிருந்தது; கோடு கோடாக தெரிந்துகொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களுக்குப் பொறுமை இல்லாமல் கொஞ்சம் ஃபார்ஸ்ட் ஃபார்வோர்ட் பண்ணி, 'ப்ளே' பட்டனை அழுத்தியவுடன் எங்கள் வாழ்கையில் மறக்க முடியாத அந்தச் சம்பவம் நடந்தது.


எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவினால் கடைசி நிமிடத்தில் தன் பயணத்தை ரத்து செய்ததால் பந்தோபஸ்துக்குப் போன பாபுவின் அப்பா திரும்பவந்துவிட்டார். அவசரத்தில் மேல்தாழ்பாளை நான் போடாமல் விட்டிருந்ததால் அவர் உள்ளே நுழைந்தது எங்களுக்குத் தெரியவில்லை.


உள்ளே வந்தவர், "என்னடா திருட்டுத்தனம் பண்றிங்க?" என்றார். குரலைக் கேட்டவுடன் பாபு டெக்கை அணைத்தான். நான் பெருமாளை வேண்டிக்கொண்டேன். "இ.... இல்லபா.. ஒண்ணுமில்ல.. காமெடி படம்..!".


"போடு, நானும் பாக்கிறேன்!" என்றார்.


அப்படியே செய்வதறியாமல் நின்றோம். ஒரு மயான அமைதி நிலவியது. எனக்கு நாக்கு ஒட்டிக்கொண்டது. ஓட தைரியம் கூட வரவில்லை. என் மனக்கண் முன் லாக்கப்பில் இருப்பது போல் காட்சி தெரிந்து மறைந்தது. "பாபு, அம்மா கூப்பட்ராப்பல இருக்கு. நான் ஆத்துக்குப் போறேன்" என்று நழுவினேன்.


தனியாக அவர்களை விட்டுவிட்டு வந்ததை நினைத்தால் அடிவயிற்றில் ஏதோ பண்ணியது.


அதன்பிறகு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்த நாள் பாபு என்னுடன் பேசவில்லை. "புத்திய காமிச்சுட்டயில்ல ஐயரே, தனியா விட்டுவிட்டு ஓடிட்டயில்ல" என்று மட்டும் ஒரு முறை கேட்டான். தலையைக் குனிந்துக்கொண்டேன். "வந்து.." என்று ஏதோ சொல்ல வந்தேன். பாபு கேட்பதாக இல்லை.  அன்றிலிருந்து பாபு என்னுடன் பேசுவதேயில்லை. சில வாரங்களில் செல்வமும் வேறு ஊருக்குச் சென்று விட்டான்.


-0-0-0-


இவையெல்லாம் நடந்து இருபது வருடங்கள் கழித்து...


மார்கெட்டிங் விஷயமாக ஜெர்மனி சென்று திரும்பிக்கொண்டிருந்த்தேன். சென்னை ஃபிளைட்டுக்கு ஃபிரங்போர்ட் ஏர்போர்ட்டில் போர்டிங் பாஸ் வாங்க கியூவில் நின்றபோது, எனக்குமுன் போர்டிங் கார்ட் வாங்கியவரை எங்கோ பார்த்த ஞாபகமாக இருந்தது. லாப்டாப், இளந்தொந்தியுடன் அவரும் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். சற்று தயங்கிவிட்டு அவர் அருகில் போய், "ஹாலோ, யு லுக் லைக் மை ஃபிரண்ட் பாபு!" என்றேன்.
 
"நீ...நீங்க.."


"நான் திருச்சியில் உங்க பக்கத்து வீட்டில்.."


"ஐ... ஐயரா? எப்படி.. இருக்க.. எங்க இந்தப் பக்கம்?" என்று உடனே அடையாளம் கண்டுகொண்டான்.


ஃபிளைட்டில் யாருடனோ பேசி சீட் மாற்றிக்கொண்டு என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து...  வேலை,குடும்பம், குழந்தைகள் என்று பேசியபின்,  "அப்புறம், அன்னிக்கு ஞாபகம் இருக்கா ? " என்றான்.


"ஞாபகம் இல்லாமலா? நான் போனதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?"
 
"நீ பயந்து ஓடிட்ட; என்ன செய்யறதுனு தெரியல; டெக்கை ஆன் பண்ணேன். நல்ல வேளையா அப்போன்னு பார்த்து கரண்ட் கட். புழைச்சேன். கடவுள்தான் காப்பாத்தினாரு!"


"அப்படியா? நல்லவேளை!!"


அன்று பாபு வீட்டிலிருந்து வெளியே வந்த நான், போகும்போது ஃப்யூஸ் பிளக்கை எடுத்து அதில் இருந்த ஃபுயூஸ் வயரை எடுத்துவிட்டுத்தான் என் வீட்டுக்கு நடந்து போனேன். இதை ஏனோ இன்றும் பாபுவிடம் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை.


[மற்ற சிறுகதைகள் ]

Comments

  1. அன்புள்ள தேசிகன்,

    உங்களைப்பற்றி சுஜாதா உயிருடன் இருந்த காலத்திலேயே கேள்விபட்டிருந்தாலும் உங்கள் வலைமனையை சமீபத்தில்தான் வாசிக்கநேர்ந்தது. சாமிபடம் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அது ஏனோ ஸ்ரீரங்கத்து தேவதைகளை வாசிப்பதுபோலவே தான் தோன்றியது. உங்கள் எழுத்தில் சுஜாதாவின் தாக்கமும் சாயலும் தெரிகிறது. சுஜாதாவை ரொம்ப விரும்பி படித்தாதால் எனது கன்னி முயற்சிகள் கூட அவ்வாறே அமைந்தது.

    உங்கள் வலைமனையில் பழைய பதிவுகள் எல்லாவற்றையும் படிக்க துவங்கியுள்ளேன். சுஜாதா இன்று இல்லையே என்ற ஏக்கத்தை குறைப்பதாக உள்ளது உங்கள் எழுத்து நடை.

    /// செல்வத்துடன் சகவாசம் வைத்துக்கொள்ள எல்லோர் வீட்டிலும் தடைவிதித்திருந்தார்கள். ஆனால் நாங்கள் அவன் பின்னால்தான் சென்றோம். ///

    உங்கள் செல்வம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் "பெண் வேஷம்" வரதனை ஞாபகபடுத்துகிறது. வர்ணனையில் சற்றே வித்யாசம் இருந்தாலும் இதை தவிர்க்க முடியவில்லை. பொதுவாக பையன்கள் வாழ்வில் செல்வம் மாதிரி யாரேனும் ஒருவராவது அமைவார்கள். ஒருவேளை என்வாழ்வில் நேர்ந்த இதுபோன்ற விஷயத்தை எழுதினாலும் வரதன் சாயல் இருக்கும்தான் போலும்.

    வாழ்த்து(க்)கள். நன்றி.
    அன்பன்
    ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  2. அன்புள்ள ஸ்ரீநிவாசன்,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    தேசிகன்

    ReplyDelete
  3. ஒரு சிறு திருத்தம்! சித்ரஹார் நிகழ்ச்சி இந்திப் பாட்டுகளுக்கு மட்டுமே. சித்திரமாலா என்று 2 வாரங்களுக்கு ஒருமுறை வியாழன் இரவு வரும் நிகழ்ச்சியில்தான் தமிழ் உட்பட் பிராந்திய மொழிப்பாடல்கள் வரும்.

    சித்ரஹார் புதன், வெள்ளி இரண்டு நாட்களும் வரும். வெள்ளி டெல்லியிலுருந்தும், புதன் பாம்பேயிலிருந்தும் ஒளிபரப்பாகிவந்தது.

    சரவணன்

    ReplyDelete

Post a Comment