Skip to main content

காந்தாராவும் காப்பியும்

 காந்தாராவும் காப்பியும் 



பல வருடங்கள் முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த பத்தாவது நாள் கொரியாவிற்கு அனுப்பினார்கள். போகும் போது என் பாஸ் பெரிய நிறுவனம் புதிதாக ஒன்றைத் தயாரிக்க போகிறார்கள். அதன் விவரக்குறிப்புகளை ஒழுங்காக எழுதிக்கொண்டு வா என்று அறிவுரையுடன் பெட்டிப் படுக்கையுடன் கிளம்பினேன்.

கொ(பெ)ரிய மேலதிகாரியைச் சந்தித்தேன். ”உங்களுடைய தயாரிப்பு எப்படி வேண்டும் அதைக் குறித்து சொல்லுங்கள்” என்று குறிப்பை எழுத புத்தகத்தை திறந்தேன். அவர் என் கையில் டேபிள் மீது இருந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து, இதே மாதிரி ’ஈயடிச்சான் காப்பி’ செய்து கொடுங்கள் என்று ஐந்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துக்கொண்டார்.

அவர் கொடுத்தப் புத்தகம் பெரிய அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு. 

”இதை அப்படியே கா.அடித்தால் பிரச்சனைகள் வராதா ?” போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன். நீங்கள் செய்து கொடுங்கள் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். செய்து கொடுத்தோம். அதில் அவர்கள் சிற்சில மாற்றங்கள் செய்து சில புதிய அம்சங்கள் சேர்த்து புதிய தயாரிப்பு போல வெளியிட்டார்கள். 

சில மாதங்களுக்கு முன் ’கில்டி மைண்ட்ஸ்’ என்ற ஒரு ’வெப் சீரிஸ்’ பார்த்தேன். அதில் ஒரு பகுதியில் ஏற்கனவே உள்ள பாடல்களின் இசையைப் பயன்படுத்தி புதிய பாடல்களை உருவாக்கக்கூடிய மென்பொருளை உருவாக்கிய ஒருவருக்கு எதிராக இசையமைப்பாளர்கள் குழு வழக்கு பதிவு செய்கிறது. 

மென்பொறியாளருக்கு வாதாடும் வக்கீல் ஒரு யுத்தியைக் கையாளுவார். பல முகங்களின் சித்திரத்தைக் காண்பித்து, ஒவ்வொரு படத்திலும் உள்ள கண், வாய், மூக்கு, காது என்று தனித்தனியே எடுத்து புதிய முகம் ஒன்றை உருவாக்குவார். இப்போது இந்த புதிய முகம் காப்பி என்று சொல்ல முடியாது, அது போல் தான் மென்பொறியாளரும் பல பாடல்களில்  சில பகுதிகளை  எடுத்து புதிய இசையை உருவாக்கியுள்ளார் இதில் என்ன தப்பு ? என்று வாதாடுவார். 

காந்தாரப் படத்தின் ஜீவனாக வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் தைய்க்குடம் பிரிட்ஜின் நவரசா பாடலின் சாயலில் இருக்கிறது என்ற பஞ்சாயத்து நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள்.  நான் இரண்டு பாடலையும் கேட்ட போது முன்பு கொரியா நிறுவனம் செய்த மாதிரியே எனக்குப் பட்டது. இரண்டு பாடல்களையும் கேட்ட போது சில பகுதிகள் கொஞ்சம் காப்பி என்று என் காதுகள் சொல்லியது. ’அது காது’  இவை இரண்டும் ஒரே ராகம் போன்ற விஷயங்களைப் பெரியவர்கள் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதலாம். ஞாயிற்றுக்கிழமை பொழுது போகும். காந்தாரா இசையமைப்பாளரே நவரசா பாடல்களைக் கேட்டு  அது போல(இன்ஸ்பிரேஷன்) இசையமைத்தேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

நீதிமன்றம் உத்தரவு காரணமாக சமீபத்தில் ஒடிடியில் வெளியான இந்தப் படத்தில் அந்த சர்ச்சைக்குரிய பழைய பாடலை எடுத்துவிட்டு சுமாரான வேறு ஒன்றைப் புதிதாக புகுத்தியுள்ளார்கள். படத்தில் முன் பின் அந்த பழைய பாடல் இல்லாமல் படத்தைப் பார்த்த போது காந்தாரா  காப்பியம்  அந்தஸ்தை இழந்தது. 

நேற்று மீண்டும் நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க மீண்டும் பழைய பாடல் ஒடிடியில் சில மணி நேரத்துக்கு வந்தது, பிறகு புதிய பாடலாக மாறிவிட்டது. ஹிந்தி எதிர்ப்பு மாதிரி பழசு, புதுசு என்று பழக்கப்பட்ட நமக்குப் பிரச்சனை இல்லை ஆனால் மற்றவர்களுக்கு ? 

- சுஜாதா தேசிகன்
27.11.2022

Comments