யாதவாப்யுதயம் - தமிழில்
இன்றைய 'கூல்’ ப்ரோ குழந்தைகள் தமிழ் மொழியைப் படிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் சமஸ்கிருதம் எல்லாம் ’டூ-மச்’ . சமீபத்தில் ’தாங்கள் பதிப்பித்த பதம் திவ்யப் பிரித்த பிரபந்தம் ஆங்கிலத்தில் கிடைக்குமா ?’ என்று ஓர் அன்பர் கேட்டார். நிலைமை இப்படி இருக்க ஸ்வாமி தேசிகன் அருளிய சமஸ்கிருதப் பொக்கிஷங்கள் என் தாத்தா காலத்தோடு போய்விட்டது.
ஆண்டவன் ஆசிரமம், அல்லது அஹோபில மடத்தில் ஸ்பான்சர்களின் உபயத்தால் அதைப் பதிப்பிக்கிறார்கள். ஆனால் அதை வாங்கி படிக்க வேண்டிய நம் குழந்தைகள் அமெரிக்கா சென்றுவிட்டார்கள். என்னைப் போன்றவர்கள் அந்த மாதிரி புத்தகங்களை திருப்பிப் பார்த்து எல்லாம் சமஸ்கிருதம் என்று கீழே வைத்துவிடுவேன். இன்று சமஸ்கிருதப் பொக்கிஷங்களுக்கு ’சப்-டைட்டில்’ தேவைப்படுகிறது. யாரையும் குறை சொல்ல முடியாது, ஆனால் இது தான் இன்றைய நிலைமை.
கோதா ஸ்துதி, பாதுகா சஹஸ்ரம் போன்ற பிரபலமானவை தமிழ் விளக்கத்துடன் கிடைக்கிறது. அதைத் தவிர உபன்யாசம் போன்றவைகலால் பலரிடம் சென்று சேருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பாகவதம் தொடர்பாக படித்துக்கொண்டு இருந்த போது ஸ்வாமி தேசிகனின் யாதவாப்யுதயம் குறித்துக் கேள்விப்பட்டு அதைத் தேடினேன். ஆண்டவன் ஆசிரமம் உத்தமூர் ஸ்வாமிகளின் விளக்கவுரையுடன் பதிப்பித்திருக்கிறார்கள். ஆசையாக அதை பார்த்த போது உரை முழுவதும் சமஸ்கிருதம் கடைசியில் இரண்டு வரிகள் தமிழில் இருந்தது. தாகத்துக்குக் குழாயில் சொட்டும் தண்ணீரை நக்குவது போல் அந்த இரண்டு சொட்டு தமிழுக்காக வாங்கினேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எது முதல் பாகம், எது இரண்டாம் பாகம் என்று அட்டையைப் பார்த்து கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடினேன்.
அந்த சமயம் தான் எனக்கு ஸ்ரீ துரைராஜன் அவர்களிடமிருந்து ( என் அப்பாவின் நண்பர், இவரால் தான் எனக்கு ஸ்ரீராம பாரதி அறிமுகம் எல்லாம் கிடைத்தது) ஓர் அன்பளிப்பு வந்தது. அது “ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிச்செய்த யாதவாப்யுதயம் முதல் ஸ்ர்கம் ” அதற்குக் கீழே இரண்டு எழுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது - “தமிழ் உரை” என்று இருந்தது.
இந்த திவ்ய காவியத்தைத் தமிழில் நாவல்பாக்கம் ஸ்ரீ NR குமார் அவர்கள் எழுதியுள்ளார். படித்த போது அடியேனுக்கும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பதவுரை, பொழிப்புரை, காய்வ ரசம், சம்பிரதாயப் பொருள், வேதாந்தப் பொருள் என்று கூடவே சில ’டிட் பிட்ஸ்’ என்று பல விஷயங்களை விவரித்துக் கொடுத்துள்ளார்.
ஸ்வாமி தேசிகனின் இந்த மஹா காவியம் மொத்தம் 24 சர்க்கம், 2400 ஸ்லோகங்கள் கொண்டது. எனக்குக் கிடைத்த புத்தகம் முதல் சர்க்கம் மட்டும் ( கிட்டத்தட்ட 100 ஸ்லோகங்கள் ). புத்தகம் வந்த போது இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு எழுதாமல் தள்ளிப் போட்டேன் ( நேரம் இல்லை என்று சொன்னால் பொய் ). பிறகு ஒரு வருடம் கழித்து இன்னொரு அன்பளிப்பு வந்தது அது அதன் இரண்டாம் பாகம். இரண்டாம் ஸர்கம் !
இன்னும் 22 புத்தகங்கள் வெளிவர வேண்டும்! அதற்குள் இந்தப் புத்தகத்தை குறித்துச் சிறு குறிப்பு ஒன்றை எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன்.
மீதம் 22 புத்தகங்களும் விரைவில் வர வேண்டும் என்று ஸ்வாமி தேசிகனை வேண்டிக்கொள்கிறேன்.
திரு NR குமார் அவர்களுக்கும், ஸ்ரீ துரைராஜன் அவர்களுக்கும் பல்லாண்டு.
புத்தகத்தை பற்றி விவரிப்பதை விட, மாதிரிக்கு சில பக்கங்களைக் கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தாலே இந்த புத்தகத்தின் சிறப்பு உங்களுக்கு விளங்கும்.
புத்தகத்தை பற்றி முழு விவரம், எப்படி பெறுவது என்பதையும் கொடுத்திருக்கிறேன்.
- சுஜாதா தேசிகன்
8.11.2022
8.11.2022
Yes Swamin. I too got the first two parts vyakhyanam by Sri.N.R.Kunar through my brother. Superb service I got the two volumes from Srimat Andavan Asranam too. Three times parayanam prapti kidaithadu.
ReplyDeleteAcharyan thiruvadigale saranam.