Skip to main content

இடைகழி மெய் விளக்கு

 இடைகழி மெய் விளக்கு  



முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களின் திருவந்தாதிகள் முதல்/இரண்டாம்/மூன்றாம் திருவந்தாதி என்ற வரிசையில் இயற்பாவில் வருகிறது.


'ஞான தமிழ் புரிந்த நான்' என்று சொல்லும் ஆழ்வார்களுக்கு ஸ்வாமி தேசிகனின் இந்தப் பாசுரத்தை தமிழில் அருளியிருக்கிறார் 


பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க
வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே


மருளற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம்
இருள் அற்று இறைவன் இணை யடிப் பூண்டு உய எண்ணுதலால்
தெருள் உற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர் பால்
அருள் அற்ற சிந்தையினால் அழியா விளக்கினரே


முதலாழ்வார்களின் வைபவத்தை அதன் மேன்மையையும் இப்படி ரத்தான சுருக்கமாகச் சொல்ல ஸ்வாமி தேசிகனாலேயே முடியும். என்ன பொருள் என்று பார்க்கலாம் 


முதல் பாசுரத்தில்  - முதலாழ்வார்கள் மூவர் எழுதும் பாடல்களே பாடல். 

முன்பு ஒரு காலத்தில் அதிகமாக நெருங்கியதால் திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியிலேயே வேதாந்த மார்க்கம் பிரகாசிக்க, இந்த உலகத்தில் அஜ்ஞாநம் என்ற இருள் விலக மெய் விளக்கை ஏற்றினார்கள்.  

இந்த மெய் விளக்கே ‘மெய்’ வீட்டுக்கு ( மோட்சம் ) செல்லும் வழியைக் காண்பிக்கிறது. 


இரண்டாம் பாசுரத்தில்  - அஞ்ஞானமில்லாத ஆசாரியர்கள்  பரமபதம் செல்ல விரும்பியதால், இந்த உலகம் முழுவதும் அஞ்ஞானம் நீங்கி எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றி உஜ்ஜிவிக்க வேண்டுமென்று நினைத்ததாலும் கிருபை நிறைந்த மனத்தோடு செம் தொழில்( கைங்கரியம்) செல்வம் பெருகி உயர்ந்து நின்ற சிஷ்யர்கள் பக்கம் அழியாத ( சம்பிரதாயமாகிய ) தீபத்தை ஏற்றி வைத்தார் ( உபதேசித்தார் )


பொதுவாக முன்பு விரிவாகச் சொன்னதை ”இது தாம்பா ‘bottom line’” என்பது போலக் கடைசியில் ஸ்வாமி தேசிகன் இதைச் சொன்னாரோ என்று கூடத் தோன்றுகிறது.  

இப்படி அடியேன் சொல்லுவதற்குக் காரணம் முதல் மூன்று திருவந்தாதிகளின் கடைசியில் ஆழ்வார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். முதலாழ்வார்களின்  ‘bottom line’ 


முதல் திருவந்தாதி கடைசி பாசுரம் : 


ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை


ஓ நெஞ்சே ! ஒரு திருவடியால் இந்த உலகம் அளந்தவனைக், கேசி என்ற அரக்கனை அழித்தவனும், குளிர்ந்த துளசி மாலையைச் சூடியவனை வியக்கத்தக்கச் செயல்களைச் செய்பவனான பெருமாளை உள்ளத்தில் நிறுத்திக்கொள் அவனைப் பற்றினால் நீ உலகளந்ததும் சகடத்தை முறித்ததும் ஆன அவனுடைய மலர் போன்ற இரு திருவடிகளையும் நேரே காணலாம். 


இரண்டாம் திருவந்தாதி கடைசி பாசுரம் :


மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு


அடியார்களிடம் மோகம் கொண்டவனே ! அளவிட முடியாத பெருமாளே ! ( அடியார்களிடம் அளவிட முடியாத மோகம் கொண்டவனே என்றும் படிக்கலாம் ! )  நித்திய சூரிகளின் தலைவனே துளசிமாலை அணிந்தவனே கண்ணபெருமானே முன்பு விளாங்காயைக் கன்றால் வீழ்த்தியவனே உன்னிடம் அடியேன் வைத்துள்ள பக்தி பெருக்கான அன்பு என்னளவில் அடங்காது 


மூன்றாம் திருவந்தாதி கடைசி பாசுரம் :


சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண்
தேன் அமரும் பூ மேல் திரு


கையில் சக்கரம் ஏந்தியவனும் குளிர்ந்த துளசி மாலையை மார்பில் அணிந்தவனும் ஆன எம்பெருமானைப் பிரியாமல் திருமகள் சேர்ந்தே இருக்கிறாள். மேகம் நிறைந்த வானில் மின்னல் போல விளங்குகின்ற அவள், அழகிய தாமரைப் பூப் போன்ற கண்களுடன் தேன் நிறைந்த தாமரையில் உறைபவள். இந்தப் பெரிய பிராட்டியாரே நமக்கு எப்பொழுதும் தஞ்சம் ஆவாள். 


இப்பொழுது மூன்று திருவந்தாதிகளின் கடைசி பாசுரத்தையும் ஒன்றாக அர்த்தம் பார்த்தால் நமக்குக் கிடைப்பது இந்தச் சுருக்கம்: 

( மூன்றாம் திருவந்தாதியிலிருந்து முதல் திருவந்தாதிக்கு போகலாம் ) 


(3)பெரிய பிராட்டியாரே நமக்கு எப்பொழுதும் தஞ்சம் ஆவாள்.

(2)அவள் அருளால் நமக்கு அடியார்களிடம் அளவிட முடியாத மோகம்

கொண்டவனிடம் அன்பு  ( கைங்கரியம் ) செய்யும் புருஷார்த்தம் கிடைத்து,

(1) இந்தச் சம்சார துக்கத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைய அவனின் திருவடிகளைப் பற்றுவதே என்று உணர்ந்து வாழுங்கள் 


இங்கே  மாயவனை’யே’ என்கிறார் ஆழ்வார் அதனால் அவனின் திருவடிகளே என்று படிக்க வேண்டும்.  

மூன்று பாசுரங்களிலும் துளசி மாலை வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். பெருமாள் மட்டுமே என்று குறிக்கும் குறியீடு இது.  


முதலாழ்வார்கள் கதை உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்தது.  கீழே உள்ள வார்த்தைகளைப் படித்து மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். 


ஒரு மழை நாள் இரவு
இடைகழியில் மூவரும் சந்திக்க
ஒருவர் படுக்கலாம்
இருவர் இருக்கலாம்
மூவர் நிற்கலாம்
ஆயன், மாயனைப் பற்றிப் பேசப்
பெருமாள் பிராட்டியுடன் நெருக்க
ஞான விளக்கு தமிழில் ஏற்றப்பட்டது 


பொதுவாகப் பெருமாள் மட்டும் நெருக்கினார் என்று படித்திருக்கிறோம்.  பிராட்டியும் சேர்ந்தால் ஐந்து பேர் நெருக்கினார்களா ? என்று தோன்றும். 


தாய், தந்தை என்று இருவரும் சேர்ந்து குழந்தைகளை நெருக்கிக் கொஞ்சுவது போல அர்த்தம் கொள்ள வேண்டும். இதை அடியேன் சொல்ல வில்லை ஆழ்வாரே சொல்லுகிறார் 


நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல்
இடைகழியே பற்றி இனி


நீயும் பிராட்டியுமாய் வாசலுக்கு வெளியே போகாமலும் உள்ளே புகாமலும் இப்பொழுது நின்று அருளிய தன்மைதான் என்ன என்று சொல்லுவது என்கிறார் ஆழ்வார். 

இடைகழி என்பது வீட்டுக்கு வெளியேயும் இல்லை, வீட்டுக்கு உள்ளேயும் இல்லாத நடுவில் இருக்கும் இடம். அங்கே அன்புடன் தீபம் ஏற்றினால் வெளிச்சம் இரண்டு பக்கமும் தெரியும். 

அந்த வெளிச்சத்தால் என்ன பயன் ? வெளி உலகில் உள்ள அஞ்ஞானம் என்ற இருட்டைப் போக்கி வீட்டுக்கு உள்ளே செல்ல வழி கிடைக்கும்.  ( பெருவீடு என்ற மோட்சத்துக்கு ) இந்த வெளிச்சமே ஞானம் என்ற மெய்விளக்கு.   

இதே இடைகழியில் இரணியனும் பெருமாளைப் பார்த்தான் ஆனால் அன்பு இல்லாததால் அவன் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை!


திருப்பாணாழ்வார் பெருமாளின் ‘திருக்கமல பாதம்’  பற்றி  இடையில் உள்ள ‘திருவயிற்று உதர பந்தத்தை’ காண்டு ஞானம் பெற்று ‘அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்’ என்று பிரமத்தை அனுபவிக்கிறார். 

மதுரகவிகள் ஆரம்பிப்பதே ‘கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெருமாயன்’ என்று இடையில் ஆரம்பித்துக் கடைசியில் ’ வைகுந்தம் காண்மினே’ என்று வீட்டுக்கு வழி சொல்லுகிறார். 

மீண்டும் மேலே தேசிகன் என்ன சொல்லுகிறார் என்று ஒரு முறை படியுங்கள்.  அந்த இரண்டு பாசுரமே என்னைக் கேட்டால் ‘ரஹஸ்ய த்ரய சாரம்’ - இடைகழி மெய் விளக்கு ! 


விளக்கு பிகு: 

முதல் மூன்று ஆழ்வார்கள் பாடிய முதல் பாசுரங்கள் விளக்கு ஏற்றுவது பற்றித் தான்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக என்று பொய்கையாழ்வார் விளக்கு ஏற்றுகிறார். 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்” என்கிறார் பூதத்தாழ்வார் 

அவர்கள் ஏற்றிய விளக்கின் வெளிச்சத்தில் திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் என்கிறார் பேயாழ்வார். 


நம் நாட்டில் பெண்களைப் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது ‘விளக்க ஏற்ற ஒரு பெண்’ என்று சினிமா வசனம் பேசுவார்கள். 

ஆண்டாள் ’கொழுந்தே! குல விளக்கே!' என்று அங்கேயும் தாய்க்குலத்தைக் குல விளக்கே என்கிறாள். 

எல்லா நிகழ்ச்சிகளும்(கார்பரேட் உட்பட) விளக்கு ஏற்றி தான் துவங்குகிறோம். 

”வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்” இருளை போக்கும் விளக்காகப் பெருமாளை வணங்குகிறார் மேலும் ‘நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே' என்று நீ அணையா விளக்கு என்கிறார். திருமலையில் இருக்கும் திருவேங்கடவனை ‘திருவேங்கடம் மேய விளக்கே’ என்கிறார். நம் ஹிந்து தர்மத்தில் விளக்கு ஏற்றுவது சுப காரியத்தைக் குறிக்கும். தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என்று எல்லாம் விளக்கு சம்பந்தமானவை. 

ஆனால் நம் ஒளிவிளக்கான குழந்தைகளின் ‘பர்த்-டே’ என்று விளக்கை அணைத்து கொண்டாடுகிறோம்! 


- சுஜாதா தேசிகன்

1.11.2022 ஐப்பசி ஓணம் - பொய்கை ஆழ்வார் திருநட்சத்திரம்.

2.11.2022 - பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.

3.11.2022 - பேயாழ்வார் திருநட்சத்திரம் 


ஐப்பசியில் ஓணம், அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்

( படம் இன்று இங்கள் இல்லத்தில் முதலாழ்வார்கள் சேவை )

Comments