Skip to main content

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை



இந்தியன் - 2 டிரைலர் பார்க்கும் போதே நிச்சயம் ஊத்திக்கும் என்று தெரிந்தது. எப்படி ஊத்த போகிறது என்று பார்க்க இன்று காலை சென்றிருந்தேன். 

படம் ஆரம்பிக்கும் போது பரவாயில்லையே என்று தோன்ற ஆரம்பிக்கும் போது சொதப்பல் ஆரம்பிக்கிறது. பார்த்த காட்சியையே பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டு கைக்கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பிக்க, பெங்களூர் சென்னை ரயில் பேசின் பிரிட்ஜ் முதல் செண்ட்ரல் ஸ்டேஷன் வரை ஊர்ந்து செல்வது போலப் படமும் செல்கிறது. திரைக்கதை என்ற ஒன்று படத்தில் இல்லவே இல்லை. பலர் காட்சிக்குக் காட்சி நடித்துவிட்டுச் செல்கிறார்கள். ஒரு காட்சியுடன் இன்னொரு காட்சி ஒட்டவே இல்லை. 

சங்கர் போன்றவர்களுக்கு சுஜாதா இல்லாதது ஒரு ஹேண்டிகேப் என்று இப்படத்தில் மீண்டும் இன்னொரு நிரூபணம் ஆகிறது.

படம் முழுவதும் பிராஸ்தடிக் மேக்கப் உள்ளேயே கமல் நடிப்பதால் அவருடைய அரசியல் நிலைப்பாடு போல நமக்கு வெளியே தெரிவதில்லை. படம் ஆரம்பிக்கும் முன் ஆகஸ்ட் வெளியீடு என்று பிரஷாந்த் நடித்த அந்தகன் டிரைலர் போட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் படம், அதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்தார்த் என்ற சமூக ஆர்வலர் இதில் சமூக ஆர்வலராகவே வருவது சிரிப்பை வரவைக்கிறது. 

படம் முழுக்க குஜராத், ஒடிசா, காஷ்மீர் என்று வந்துகொண்டே இருக்கிறது. ஓசியில் எல்லா ஊர்களையும் பார்த்த ஒரு ஃபீலிங். தமிழ்நாட்டைப் பற்றி எதையும் சொல்லி மாட்டிக்கொள்ளக் கூடாது என்று கவனமாக இருந்திருக்கிறார்கள். 

பாபி சிம்ஹா சிபிஐ அதிகாரியாக பேபி சிம்ஹா வருகிறார். வழக்கம் போல் கூலிங் கிளாஸ் போட்டு கேஸை கண்டு பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். 

பிரம்மாண்டத்துக்குப் பேர் போன இயக்குநர் இதிலும் தலை, கட்டிடச் சுவர் எல்லாம் சாயம் பூசிப் பாடல் அமைத்திருக்கிறார். இன்னும் எவ்வளவு நாளுக்கு இதைச் செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. 

விவேக் நகைச்சுவை செய்கிறார் ஆனால் அதை விட காமெடி கமல் தாத்தா சிக்ஸ் பேக் சண்டை ஒன்று போடுகிறார்... மிடியல சாமி

அனிருத் இசை ஒரு ஹைப். 

படத்தில் கோபேக் இந்தியன், கம்பேக் இந்தியன் என்று வருகிறது. சங்கர், கமல் இருவருக்கும் இனி கம்பேக் என்று ஒன்று இருக்காது என்று நினைக்கிறேன். 

கமல் தாத்தாவின் வர்மத்தால் அடிப்பட்டவர்கள் லூசு மாதிரி குதித்து குதித்து ஓடுகிறார்கள். 

படம் பார்த்த பின் நாமும் அது மாதிரி தான் ஓடுகிறோம் - மூன்றாம் பாகம் இருக்கிறதாம் ! 

ஜெய் ஹிந்த் 

-சுஜாதா தேசிகன்

Comments