Skip to main content

திருக்குடந்தை சென்று வந்தேன்

திருக்குடந்தை சென்று வந்தேன் 




ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்று பதிப்புகள் கண்டு, பல திவ்ய தேச எம்பெருமான்கள், ஆழ்வார் ஆசாரியர்கள் ஆசீர்வாதம் பெற்றது குறித்த அவ்வப்போது பதிவிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

ஆனால்  ’ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் நமக்கு மொத்த நாலாயிரத்தையும் பெற்றுத்தந்த ’திராவிட வேதம் காட்டிய பெருமாளே ’ என்று போற்றப்படும் திருக்குடந்தை ஆராவமுத ஆழ்வானின் திருவடிக்கு இதுவரை செல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது. சில நாள் முன் அது நிறைவேறியது. 

ஒப்பிலியப்பன் ஸந்நிதி வங்கீபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியர் ஸ்வாமிகளைச் சனிக்கிழமை அவருடைய திருமாளிகையில் சென்று சேவித்தேன். ரயில்வேயில் மிக உயர்ந்த பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பின் திருவிண்ணகர் என்று ஒப்பிலியப்பன் ஸந்நிதியில் சந்நியாசி போல இருந்துகொண்டு, ஸம்ப்ரதாய கைங்கர்யமும், ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் கௌரவ அத்யாபக கைங்கர்யமும் செய்து வருகிறார்.வடமொழி, தென்மொழியில் பெரும் புலமை உடையவர்.  இந்த 91 வயதிலும் பலருக்குப் பஞ்சசமஸ்காரம் செய்து வைக்கும் ஆசாரிய புருஷர். இவருடைய புத்தகங்களுக்கு அடியேன் அடிமை. ஸ்வாமி எப்படி எளிமையாக சௌலப்யத்துடன் விளங்குகிறாரோ அவருடைய மொழியும் அத்தகையது. அவருடைய ‘வைணவம் ஓர் உரையாடல்’ என்ற புத்தகம் இன்றும் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் கையேடாக கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துள்ளேன்.  



இந்த ஆசாரிய ஸ்வாமியைப் பல வருடங்களாகச் சென்று சேவிக்க வேண்டும் என்று விருப்பம். ஞாயிறு மாலை ஸ்வாமியின் திருமாளிகைக்குச் சென்று சேவித்து பிரபந்த புத்தகங்களை அவரிடம் கொடுத்து, ஆசீர்வாதம் பெற்று,  ஸ்ரீமத் ஆண்டவனின் சாதுர்மாஸ்ய சங்கல்ப உற்சவத்தில் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்ற போது அவர் திருக்குடந்தை ஆராவமுதன் கோயிலில் இருப்பதாக சொன்னார்கள்.  அங்கே சென்றேன். 

ஆண்டவன் ஸ்வாமிகள் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில் மரியாதைகளை பெற்றுக்கொண்டிருக்க,  ஆப்த நண்பர் திருப்புல்லாணி ரகுவீரதயாள் ஸ்வாமியைக் கண்டேன். உடனே அடியேனுக்கு ஸ்வாமி தேசிகனின் சடாரி அருளைப் ஸ்பெஷலாக பெற்றுத் தந்தார். பிறகு  ஆஸ்சிரமத்தில் ஆண்டவன் ஸ்வாமிகளிடம் பிரபந்தப் புத்தகத்தை சம்ர்பித்து அதில் ஸ்ரீமுஷ்ணம் பெரிய ஆண்டவனின் ஸ்ரீமுகத்தை திருப்புல்லாணி ஸ்வாமி எடுத்துக் காட்ட, அதை ஆர்வமாகப் பார்த்த ஆண்டவன் ஸ்வாமிகள் புத்தகத்தை அலமாரியில் வைக்கச் சொன்னார். அலமாரியில் வைத்தவுடன், மேல் தட்டில் வையுங்கள் என்று அதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து, ஆசி வழங்க அவரிடம் விடைப்பெற்று, மறுநாள் காலை ஒப்பிலியப்பன் சந்நிதியில் மீண்டும்  திருப்புல்லாணி ஸ்வாமியைப் பார்க்க,  ‘முராரி ஸ்வீட்ஸ்’ போல எங்குத் திரும்பினாலும் இவரையும் பார்க்கலாம் போல என்று நினைத்துக்கொண்டேன். அவரின் தயவால்  ஒப்பிலியப்பன்  ’நம்ம பையல்’ என்று சிறப்பாகத் தரிசனம் கொடுத்து ஆராவமுதன் கோயிலுக்கு அடியேனை அனுப்பி வைத்தார். 

அழகிய கோபுர வேலைப்பாடுகளுடன் விளங்கும் சார்ங்க பாணி கோயில் உள்ளே, கடைவீதிகளின் பரபரப்பும் எதுவும் இல்லாமல் காப்பிடப்பட்டு, அமைதியாகப் பாசுரங்கள் ஒலிக்க, கோமளவல்லி தாயார் சந்நிதிக்குள் நுழைந்த, அர்ச்சகர் ஸ்வாமிகளிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகத்தைச் சமர்ப்பித்து தாயார் திருவடியில் வைத்துத் தர வேண்டும் என்று பிராத்தித்தேன். 

பிரபந்தப் புத்தகங்களைத் தாயார் மடியில் வைத்தவர், தாயார் மடியிலிருந்தே பக்கங்களைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார். பல முறை பல பக்கங்களைப் புரட்டிக்கொண்டே இருந்தது தயாரே படிப்பது போன்று ஒரு அனுபவமாக அமைந்தது. அர்ச்சகர் தாயார் சூடிய தாமரையுடன் புத்தகங்களைக் கொடுத்த போது, சமீபத்தில் சொல்லடைவு புத்தகத்தில் தாயார் அமுதன் படங்களைக் காண்பித்து போது,  அர்ச்சகர் பூரிப்புடன் அவர் கையில் இருந்த குங்குமத்தைப் புத்தகத்தின் மீது கொட்டி ஆசீர்வதித்தார். 

தாயார் ஆசீர்வதித்த புத்தகங்களை அமுதனிடம் சமர்ப்பித்த போது அர்ச்சகர் “இந்தப் பெருமாள் ஆராவமுத ஆழ்வான். ’ஆரா அமுதே! அடியேன் உடலம்  நின்பால் அன்பாயே’ என்ற பாசுரத்தால் நமக்கு நாலாயிரத்தையும் பெற்றுத் தந்தவர்’ என்று கூற அமுதாழ்வார் திருவடிகளில் பிரபந்த புத்தகங்களுடன்  இதைக் கேட்கும் போது கண்களில் நீர் வருவதைத் தடுக்க முடியவில்லை. 

 'நடந்த கால்கள் நொந்தவோ? ... கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே’ என்று திருமழிசை பிரான் கேட்க பெருமாள் மெதுவாக எழுந்துகொள்ள இதுவே நன்றாக இருக்க அப்படியே இரும் என்று ஆழ்வார் கூற இன்றும் நமக்கு ‘உத்தான சயன' கோலத்தில் காட்சிகொடுக்க அந்த திருமழிசை ஆழ்வார் திருவரசு கும்பகோணத்தில் எங்கோ சந்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதற்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் எழுந்தது. 

மத்தியம் ’தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்’  சாதிக்கும் மருத்துவர் ஸ்ரீ.உ.வே. திருக்குடந்தை வேங்கடேஷ் ஸ்வாமிகளை அவர் இல்லத்தில் சந்தித்து சில மணி நேரம் பேசிக்கொண்டு இருந்த போது திருமழிசையாழ்வார் குறித்துக் கூறினேன். உடனே நானே அழைத்துக்கொண்டு செல்கிறேன் என்று ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றார். மிக அருமையான சேவை கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமா ? பெருமாள் பக்திசார வரதன் தாயாருடன் திருமழிசை பிரான் சேர்த்தியாகக் காட்சி கொடுக்க, இது திருவரசு இல்லை. திருமழிசை ஆழ்வார் இன்றும் யோக நிலையில் இருக்கிறார் என்று அர்ச்சகர் கூறினார். அடியேனுக்கு அதில் எந்த சந்தேகமும் வரவில்லை. 

-சுஜாதா தேசிகன்
25.07.2024

Comments

  1. நாராயணன் சேஷாத்ரிJuly 26, 2024 at 8:07 AM

    ஸ்வாமி இதுவரை அமுதனை சேவித்ததில்லை என்பது ஆச்சர்யம்.ஸ்வாமி ராமசாமி கோவிலுக்கு சென்று அங்கு லக்ஷ்மணன் கையில் ராமனின் கோதண்டம் இருப்பதையும் சேவித்திருப்பீர் என நம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அமுதனைப் பல முறை சேவித்திருக்கிறேன். ஆனால் பிரபந்தம் புத்தகத்துடன் இதுவே முதல் முறை.

      Delete

Post a Comment