Skip to main content

திவ்யப் பிரபந்த(த்துக்கு) இசை

திவ்யப் பிரபந்த(த்துக்கு)  இசை 


ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவயப் பிரபந்தத்துக்குச் சமீபத்தில் ‘திவ்ய பாசுரங்கள்’ என்று இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டு அதை இந்நேரம் கேட்டிருப்பீர்கள். 

நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு 1200 வருடங்கள் முன் இசை கூட்டிய  ‘இசைக்காரர் ஸ்ரீமந் நாதமுனிகள். நாதமுனிகள் பண்ணிசையிலும் தமிழிசையிலும் வல்லவராக விளங்கினார். திருவாய்மொழி பாசுர ஈட்டு உரையில் இசைக்காரர்  - இயலுக்கு இசையிட வல்லவர்கள் ஸ்ரீ மதுரகவிகளையும், நாதமுனிகளையும் போல இருக்குமவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆழ்வார்களும் இசையை அதன் சுவையை நன்கு அறிந்துள்ளார்கள். திருமங்கை ஆழ்வார் திருக்கோவலூரில் ‘வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்’ என்கிறார்.  எம்பெருமானையே ‘ஏழிசையின் சுவைதன்னை!” என்று இசையைச் சுவைத்துமுள்ளார் நம் திருமங்கை மன்னன். பட்டர் அருளிச் செய்த தனியனில் நம்மாழ்வார்  அருளிச்செய்த திருவாய்மொழிப் பாசுரங்கள் ‘யாழின் இசை வேதத்தியல்’ என்கிறார். 

ஆழ்வார்கள் இசைக் கருவிகள் பற்றியும் பாடியுள்ளார்கள். குலசேகராழ்வார் ’இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி’ என்றும் பெரியாழ்வார் கண்ணனின் குழலோசையை வர்ணிக்கும்போது புல்லாங்குழல் தும்புரு, வீணை, கின்னரம் ஆகிய பண்ணிசை கருவிகளைக் கூறுகிறார். இதைத் தவிரத் தண்ணுமை, எக்கம், மத்தளி, முழவம், பறை, மத்தளம், சங்கு, துடி, முரசு என்று நீண்ட  இசைக் கருவி பட்டியலே இருக்கிறது! 

நாதமுனிகள் ஆழ்வார் பாசுரங்களுக்கு இசைக் கூட்டி அதற்கு அவர் கொடுத்த பெயர் ‘தேவகானம்’ . செப்புதற்கரிய ஆழ்வார் அருளிய தமிழ்ப் பாடல்கள் அனைத்தையும் முறைப்படி தேவகானத்தில் அமைத்து மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் பயிற்றுவித்து,  நாதமுனிகளின் வழியில் அரையர்கள் பரம்பரை இன்று வரை நிலைத்திருப்பதற்கு அதுவே காரணம். 

ஸ்வாமி தேசிகன் அதிகாரசங்கிரகத்தில் 

காளம் வலம்புரி அன்ன நல் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கு ஆர் நிகர் நானிலத்தே

(காளம் : ஒரு விதமான இசைக் கருவி.  எக்காளம் என்றும் கூறுவர்)

காளத்தையும் சங்கையும் போலிருந்த நல்ல பக்தியையுடைய , அடியவர்க்குச் சிஷ்யர்களுக்குத் தாள வித்தையைச் சொல்லிக்கொடுத்து, தமிழ் வேதமான திருவாய்மொழியினுடைய , இனிமையான கானத்தைத் தந்து உபதேசித்த, வள்ளல் நாதமுனிகளின் திருவடிகளை ஒவ்வொரு நாளும் தொழுது எழுவோம் என்று நாதமுனிகளைத் தொழும் பெருமிதம் குறித்து இப்படி விவரிக்கிறார்.

நாதமுனிகளின் இசையில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு சம்பவமே சான்று. சோழ அரசன் ஒரு முறை அரசவையில் இரண்டு பெண்களுக்கு இடையே வாக்கு வாதம் நடந்தது. ஒருவர் மனுஷ கானமே சிறந்தது என்றாள். இன்னொருத்தி தேவ கானமே சிறந்தது என்றாள். அரசன் மனுஷ கானமே சிறந்தது என்று பரிசு கொடுத்தான். தேவ கானம் பாடிய பெண் நாதமுனிகளிடம் முறையிட்டாள். நாதமுனிகள் அவளின் சங்கீதத்தைப் புகழ்ந்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்டு நாதமுனிகளை அழைத்துவரச் செய்து “எந்த இசை சிறந்தது?” என்று கேட்க நாதமுனிகள் வேத கானமே சிறந்தது என்றார். அரசன் நாதமுனிகள் திறமையைச் சந்தேகப்பட ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து ஒலியைக் கேட்டு, ஒவ்வொரு வாத்தியத்தின் எடையையும் துல்லியமாகக் கூறினார். அரசன் பரிசுகளை வழங்கியபோது பெருமாளுக்குத் தொண்டு செய்வதே பெரிதெனக் கூறிப் பரிசுகளை மறுத்தார்.


நாதமுனிகளுக்கு முன்பே ஆழ்வார்கள் இசையுடனே பாசுரங்களைச் சேவித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் பல்லாண்டை யானை கழுத்திலிருந்த இருந்த மணிகளைக் கைத்தாளமாகக் கொண்டு பாடினார். திருப்பாணாழ்வார் அவரே ஓர் இசைக்கலைஞர். “குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடி திரிவனே” என்று திருவாய்மொழியை “நாவினால் நவிற்று இன்பம்” அடைந்தவர் மதுரகவி ஆழ்வார். அவர் பெயரிலேயே மதுரம் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில், பல்லாண்டு பாடினார்கள் என்று சொல்லாமல்,  “பல்லாண்டு இசைப்பாரே” என்கிறாள். உய்யக்கொண்டார் ஆண்டாளின் திருப்பாவை தனியனில் “இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை” என்று ஆண்டாளே இசையமைத்துப் பாடிக்கொடுத்தாள் என்கிறார். “இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே” என்று இன்னிசையால் பாடினால் வைகுந்தம் நிச்சயம் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இவற்றை எல்லாம் ஸ்ரீீமந் நாதமுனிகள் அனுபவித்து திவ்யபிரபந்தங்களை ’theatre experience'சாக தேவகானமாக நமக்குக் கொடுத்தவர். ஆழ்வார்களின் பாசுரங்களின் நுட்பமான தத்துவங்களை மக்கள் கண்ணாரக்கண்டு தெளிவடையும்பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்தவர் நாதமுனிகள். இசையுடன் பாசுரங்களைக் கொடுக்கும்போது அது மக்களைச் சுலபமான சென்றடைகிறது. ’குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற பாடல் ராஜாஜி எழுதியது என்பதைவிட, எம்.எஸ் பாடியது என்பது தான் பிரபலம். 

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல்களின் அர்த்தம் உணர்ந்து, திரு கடையநல்லூர் வெங்கட்ராமன் போன்றவர்கள் அதற்கு அழகான இசை அமைத்துக் கொடுக்க அவற்றைப் பாவத்துடன் பாடும் போது கேட்கும் நமக்கு இசை அனுபவம் ஏற்படுகிறது. 1 ½  நிமிஷம், ஒற்றை தம்பூராவின் இசையில் மூன்றாம் திருவந்தாதி பாசுரமான “தாழ்சடையும் நீள்முடியும்  ஒண்மழுவும் சக்கரமும்” என்ற பாசுரத்தைக் கேட்கும் போது நமக்கு ஏற்படும் ஆத்ம அனுபவத்துக்குக் காரணம் திருவரங்கத்து அமுதனார் சொல்லும்  “ஈஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு” என்பது தான். 

எம்.எல்.வி திருப்பாவையும் அதே ரகம் தான். அவர்கள் அனுபவித்துப் பாடியதால் தான் இன்றும் நிலைத்திருக்கிறது. 


ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது தான் திரு.ஸ்ரீராமபாரதி என்று ஒருவர் இருக்கிறார் என்று அடியேனுக்கு தெரிந்தது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் ராகத்துடன் கேட்டு ஓர் ஆத்தும அனுபவமாக இருந்தது. அவர் நாதமுனிகளின் அரையர் சேவை குறித்து ஆராய்ச்சி செய்து, அரையர் சேவையைக் கோயில்களில் நிகழ்த்தியும் காண்பித்தார். திருமங்கையாழ்வாரின் வடிவழகை மணவாள மாமுனிகள் போல் அவர் அனுபவித்து பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 

அவர் பாடிய தனியன்களை நம்பெருமாள் சேவையுடன் கேட்பதே ஒரு தனி இன்பம். 

சமீபத்தில் கர்நாடக இசைப் பாடகர் ராமகிருஷ்ண மூர்த்தி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, பெரிய திருமொழியில்  திருவேங்கடம் குறித்து அவர் (ராகமாலிகாவில்) பாடிய பாடலுக்கு நான் ரசிகன் என்று திவ்யப் பிரபந்தப் புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசளித்தேன். திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் அமர்ந்து திருவேங்கட மலை மீது பெருமாளை சேவிக்கப் போகிறார். அப்போது அவர் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு போகிறார் என்று கற்பனை செய்து இந்த ராகமாலிகாவை கேட்டுப் பாருங்கள். 

அதே போல் சில ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பேராசிரியர் அரங்கராஜனை சந்தித்த போது கர்நாடகப் பாடக ஏசுதாஸ் அவர்கள் நம்மாழ்வாரின் ‘மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது’ என்று அவர் பாடிவதைப் பற்றிக் குறிப்பிட அதைத் தேடிக் கேட்டு அனுபவித்தேன். 

பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் திருப்பாவை பாடல்கள் சில பாடியிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. தொண்டரடிப் பொடியாழ்வாரின் ’பச்சைமா மலைபோல் மேனி’ என்று மனம் உருகி அவர் பாடுவதைக் கேட்கவில்லை என்றால் தேடிக் கேட்டுவிடுங்கள். 


சமீபத்தில் இளையராஜா இசையில் திவ்யப் பிரபந்தங்களைக் கேட்ட போது நாச்சியார் திருமொழியில் ‘வாரணமாயிரம்’ அனிதா குஹா குழுவினரின் நாட்டியத்துடன் மனதைக் கவர்ந்தது. 

அடியேன் இதுவரை கேட்டு அனுபவித்த நாலாயிர திவ்யப் பிரபந்த இசையின் சுட்டிகளைக் கீழே தந்துள்ளேன். 

-சுஜாதா தேசிகன்
13.07.2024


சுட்டிகள்


எம்.எஸ் - தாழ் சடையும் - https://www.youtube.com/watch?v=3MHhydB_36E 



திருமங்கை ஆழ்வார் வடிவழகு - ஸ்ரீராம பாரதி - https://www.youtube.com/watch?v=InbC0OfdJ5k




ராமகிருஷ்ண மூர்த்தி - திருமங்கை ஆழ்வார் - ராகமாலிகா - https://www.youtube.com/watch?v=pip1t9UGzaQ



பித்துகுளி முருகதாஸ் - பச்சைமா மலை போல் மேனி - https://www.youtube.com/watch?v=Ns093NuAzCE


இளையராஜா - அனிதா குஹா - வாரணமாயிரம் - https://www.youtube.com/watch?v=dupC1X3yZeA



கே.ஜே.ஏசுதாஸ் - நம்மாழ்வார் - https://www.youtube.com/watch?v=mrMy5OdLKS4&t=1341s



ஸ்ரீராம பாரதி - பொது தனியன்கள் ( முதல் சில நிமிடங்களில் ) https://www.youtube.com/watch?v=rmcgkukBs-s

Comments

Post a Comment