Skip to main content

மணி சொல்லும் கதை

மணி சொல்லும் கதை
 ஸ்ரீரங்கம் கிளி மண்டபத்தில் இந்தப் பெரிய மணியைப் பார்த்திருப்பீர்கள். இந்த மணிக்கு ‘அரவணை மணி’ என்று பெயர். எப்போதும் ரங்க விமானம் என்னும் ப்ரணவாகார விமானத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘இருக்கிறது’ என்று தான் எழுத வேண்டும் ஆனால் ’இருக்கிறார்கள்’ என்று எழுதியதற்கு ஒரு கதை இருக்கிறது.

என் சிறுவயதில், நம்மாழ்வார் பற்றியும், ஆழ்வர் திருநகரியில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நாலாயிரம் கிடைத்த கதை, நம்மாழ்வார் அர்ச்சா மூர்த்தி, பதினாறு வருடம் நம்மாழ்வார் தவம் செய்த புளியமரம் (உறங்காப் புளி ) போன்ற விஷயங்களை என் தகப்பனார் சொன்னார்.

“அதே விக்ரகமும், புளியமரமும் இன்றும் ஆழ்வார்திருநகரியில் இருக்கிறது” என்றார்.

ஆர்வத்துடன் “அப்படியா ?” என்றேன்.

“சரி வா ஆழ்வார்திருநகரிக்கு போய் நம்மாழ்வாரைச் சேவித்துவிட்டு வந்துவிடலாம்” என்று உடனே புறப்பட்டோம். நாங்கள் ஆழ்வார்திருநகரிக்கு சென்றிருந்த சமயம், அன்று ஏதோ சிறப்புத் திருமஞ்சனம் முடிந்து, நடை சாத்தியிருந்தார்கள்

”இனிமே நாளைக்கு தான் சேவை... ” என்றபோது “என்னப்பா இப்படி ஆயிடுத்து” என்றேன் ஏமாற்றத்துடன்.

“இருடா நம்மாழ்வார் ஏதாவது வழி காண்பிப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.
அப்போது யாரோ ஒருவர் எங்களிடம் வந்து விசாரித்தார்.

“ஸ்ரீரங்கத்திலிருந்து நம்மாழ்வாரை சேவிக்க வந்திருக்கிறோம்…”

”வாரும் என்னுடன்” என்று அழைத்துக்கொண்டு போனார்.

”கதவைத் திறக்க முடியாது… ஆனா ஒரு ஓட்டை இருக்கு..அது வழியா சேவிக்கலாம்” ஓட்டை பெரியதாகவே இருந்தது.உறங்காப்புளி

முதல் முறையாக நம்மாழ்வாரைப் புகை மண்டலத்தில் ஒரே ஒரு சின்ன மல்லிகை பூ மாலையுடன் பார்த்தது இன்றும் நினைவு இருக்கிறது.

அதே போல் ஸ்ரீமந் நாதமுனிகள் சன்னதி ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருப்பதே என் அப்பா சொல்லித் தான் தெரியும். உடனே கிளம்பி ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் கடைகளுக்கு நடுவே போய்ச் சேவித்தோம்.ஆழ்வார் - ஆழ்வார்திருநகரி

பிறகு ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலில் அவர் பேரனான ஆளவந்தாருடன் சேவித்துவிட்டு அங்கேயே ஒரு முழு நாளைச் சில வருடங்களுக்கு முன் கழித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களில் முதல்வரான ஸ்ரீமந் நாதமுனிகள் காட்டு மன்னார் கோவில் (வீரநாராயணபுரத்தில்) அவதரித்தார்.( இவருடைய முழு திருநாமம் ஸ்ரீ ரங்கநாத முனி என்பது) வேதம், அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் தேர்ந்த வல்லுநராக விளங்கினார்.

ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் ’காட்டு மன்னார்’ பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும்போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பாசுரமான "ஆராவமுதே" என்ற பாசுரத்தைச் சேவித்தார்கள்(பாடினார்கள்) அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, இந்தப் பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்தப் பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறிவிட்டார்கள்.ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் - காட்டுமன்னார்கோயில்

நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெற வேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம் இருக்கும் திருக்குருகூருக்கு சென்று அங்கு விசாரித்ததில் அந்தப் பிரபந்தம்பற்றி யாருக்கும் தெரியவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் சீடரான பராங்குசதாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பிரபந்தத்தை உபதேசம் பெற்று அதைப் பன்னீராயிரம் முறை சேவித்த பின் நம்மாழ்வார் தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த பிரபந்தங்களையும் தந்தருளினார். ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்களைத் தொகுத்த பெருமை ஸ்ரீமத் நாதமுனிகளையே சாரும்.ஸ்ரீமந் நாதமுனிகள் - ஓவியம் ஸ்ரீ கேஷவ்

ஸ்ரீீமந் நாதமுனிகள் ஆசாரியர்களில் மட்டும் முதல்வர் இல்லை அரையரிலும் அவரே முதல்வர். அவர் தான் திவ்யபிரபந்தங்களை ’theatre experience'சாக தேவகானமாக நமக்குக் கொடுத்தவர். இசையுடன் பாசுரங்களைக் கொடுக்கும்போது அது மக்களைச் சுலபமான சென்றடைகிறது. ’குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற பாடல் ராஜாஜி எழுதியது என்பதைவிட, எம்.எஸ் பாடியது என்பது தான் பிரபலம். அதுபோல ஆழ்வார்களின் பாசுரங்களின் நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக்கண்டு தெளிவடையும்பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்தவர் நாதமுனிகள்.கையில் மணியுடன் - பெரியாழ்வார்

நாதமுனிகளுக்கு முன்பே ஆழ்வார்கள் இசையுடனே பாசுரங்களைச் சேவித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் பல்லாண்டை யானை கழுத்திலிருந்த இருந்த மணிகளைக் கைத்தாளமாகக் கொண்டு பாடினார். திருப்பாணாழ்வார் அவரே ஒரு இசைக்கலைஞர். “குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடி திரிவனே” என்று திருவாய்மொழியை “நாவினால் நவிற்று இன்பம்” அடைந்தவர் மதுரகவி ஆழ்வார். அவர் பெயரிலேயே மதுரம் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில், பல்லாண்டு பாடினார்கள் என்று சொல்லாமல், “பல்லாண்டு இசைப்பாரே” என்கிறாள். உய்யக்கொண்டார் ஆண்டாளின் திருப்பாவை தனியனில் “இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை” என்று ஆண்டாளே இசையமைத்துப் பாடிக்கொடுத்தாள் என்கிறார். “இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே” என்று இன்னிசையால் பாடினால் வைகுந்தம் நிச்சயம் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.பெரியவாச்சான் பிள்ளை அருளிய ‘கலியன் அருள்பாடு’ என்ற பகுதியில் திருவத்யயன உற்சவம் எப்படி திருமங்கை மன்னனால் ஏற்பட்டது என்று பல விஷயங்களை விவரித்துள்ளார்.

ஒரு கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருமங்கை ஆழ்வார் ( திருநட்சத்திரம் ) நம்பெருமாள் முன் இசையுடன் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவித்து போது பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு என்ன வேண்டுமோ கேளும்” என்று சொல்ல உடனே திருமங்கை ஆழ்வார் “திருவத்யயன உத்ஸவம் போது வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்க உடனே நம்பெருமாள் “தந்தோம்” என்று அவருடைய ஆசையை நிறைவேற்றினார். உடனே திருமங்கை மன்னன், ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து நம்பெருமாள் முன் எழுந்தருள நம்பெருமாள் ஆழ்வாரை நோக்கி “நம்மாழ்வார்” என்று திருநாமம் சாற்றி திருமாலை, ஸ்ரீ சடகோபம், திருபரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதித்து, நம்மாழ்வாரின் பாசுரங்கள் பத்து நாட்களும் நூறு நூறு பாசுரங்களாகக் கேட்டு அனுபவித்த பின், நம்மாழ்வாரைப் பெருமாள் திருவடிகளில் ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று சேரும்படி செய்த (நம்மாழ்வார் மோட்சம்) அந்தச் சமயத்தில் ஸ்ரீசடகோபத்துக்கு நம்மாழ்வாரின் பெயரைச் சூட்டும் படி திருமங்கை ஆழ்வாரிடம் கேட்டிருக்க வேண்டும். அதற்கும் நம்பெருமாள் ‘தந்தோம்’ என்று கூற அன்றிலிருந்து நம்மாழ்வாரே ஸ்ரீசடகோபம் என்றாகியது.

பிறகு நாதமுனிகள் திருமங்கை ஆழ்வாரைப் போலவே இவரும் ஒரு கார்த்திகை திருநாளில் திருநெடுந்தாண்டகத்தை பாடி போது, அரங்கன் வழக்கம்போல மகிழ்வித்து மற்ற ஆழ்வார் பாசுரங்களுக்கும் வேத அந்தஸ்தைப் பெற்றார்.

திருவாய்மொழி திருநாளுக்கு முன்னதாகப் பத்து நாள்களில் மற்ற ஆழ்வார் பாசுரங்களையும், திருவாய்மொழி திருநாளுக்கு மறுநாள் இயற்பா முழுவதையும் கேட்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய ‘தந்தோம்’ என்று நம்பெருமாள் சொல்ல, இன்றும் பகல் பத்து, இராப்பத்து என்று கொண்டாடப்படுகிறது.அரையர் அகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், தாளம் ( pic : Srirangam, Bhooloka Vaikundam book )

நாதமுனிகள் அந்த ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் நமக்கு மீண்டும் மீட்டுக்கொடுத்தார். பின்பு வந்த ஸ்ரீராமானுஜர்

ஆர பொழில் தென் குருகைப்பிரான் அமுத திருவாய்
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரை பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரி பருகிய நம் இராமானுசன்

திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் இசையுடன் சேவிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

“கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்” என்கிறாள் ஆண்டாள். இங்கே கானம் என்பது காட்டைக் குறிக்கும். கானம் என்றால் இசையையும் குறிக்கும் சொல். அதாவது கண்ணனின் புல்லாங்குழல் இசையான ‘தேவ கானம்’. வேதம், உதாத்த, அனுதாத்த, ஸ்வாத முதலிய ஸ்தாயிகளில் பாடப்படுகிறது. நாதமுனிகள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு வேதம்போல இசையைக் கூட்டி அதை ’தேவகானம்’ என்ற ‘யாழின் இசை வேதத்தியலாக்கினார்’ஸ்ரீரங்கம் அரையர்

நாதமுனிகளின் இசையில் எவ்வளவு தேர்ச்சி பெற்றார் என்று அறிந்துகொள்ள ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். சோழ அரசன் ஒரு முறை அரசவையில் இரண்டு பெண்களுக்கு இடையே வாக்கு வாதம் நடந்தது. ஒருவர் மனுஷ கானமே சிறந்தது என்றாள். இன்னொருத்தி தேவ கானமே சிறந்தது என்றாள். அரசன் மனுஷ கானமே சிறந்தது என்று பரிசு கொடுத்தான். தேவ கானம் பாடிய பெண் நாதமுனிகளிடம் முறையிட்டாள். நாதமுனிகள் அவளின் சங்கீதத்தைப் புகழ்ந்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்டு நாதமுனிகளை அழைத்துவரச் செய்து “எந்த இசை சிறந்தது?” என்று கேட்க நாதமுனிகள் வேத கானமே சிறந்தது என்றார். அரசன் நாதமுனிகள் திறமையைச் சந்தேகப்பட ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து ஒலியைக் கேட்டு, ஒவ்வொரு வாத்தியத்தின் எடையையும் துல்லியமாகக் கூறினார். அரசன் பரிசுகளை வழங்கியபோது பெருமாளுக்குத் தொண்டு செய்வதே பெரிதெனக் கூறிப் பரிசுகளை மறுத்தார்.

நாதமுனிகளுக்குப் பின் அவர் வம்சத்தில் தோன்றியவர்கள் இன்றும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதியில் இரண்டு மூலவர்கள் இருப்பதைக் கவனித்திருக்கலாம். முன்னே எழுந்தருளியிருப்பவர் இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது அங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மற்றொருவர் அந்தப் படையெடுப்பு நிகழும் நேரத்தில் அவர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்ற காரணத்தால் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டவர். கலகம் முடிந்த பின் மறைக்கப்பட்ட தாயார் பற்றி அடுத்த தலைமுறைக்குத் தெரியவில்லை. ஒரு நாள் அரையர் ஒருவர் தாளம் இசைக்க அந்த ஒலி சுவரில் அடித்த போது அங்கே வெற்றிடமாக இருக்க வேண்டும் (hollow) என்று தோன்றி, சுவரை இடித்துப் பார்த்த போது மறைக்கப்பட்ட தாயார் காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரையர்களுக்குத் தமிழ் நாடு அரசு உதவித்தொகை தருவதாகக் கூறியபோது அதை அரையர்கள் மறுத்துவிட்டு “இதைப் பெருமாளுக்குச் செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம் இந்த கைங்கரியத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று உறுதியாகக் கூறினார்கள். அதனால் தான் அரையர் ‘சேவை’ என்கிறோம்.

சங்கீத சபா கச்சேரிகள் போலச் சாதாரண மேடையில் அரையர் சேவை நிகழ்த்தி கைத்தட்டல் பொன்னாடை எல்லாம் கிடையாது. பெருமாளுக்கு முன் நிகழ்த்துவது மட்டுமே அரையர் சேவை. அப்படி நிகழ்த்தும் போது பெருமாளுக்கும் இவர்களுக்கும் நடுவில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அரையர்களும் பெருமாளைத் தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டார்கள். நீங்கள் சம்பாவனை கொடுக்க விரும்பினாலும் அவர்கள் தோளில் உள்ள பையில் போட்டுவிட வேண்டும். நாம் சம்பாவனை கொடுக்கும் போதும் அவர்கள் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.

கல்வெட்டு வியாக்கியானத்தில் ’விண்ணப்பம் செய்வார்கள்’ என்று தான் அரையரைக் குறிப்பிடுவார்கள்.

நாதமுனிகளின் தன்னுடைய மருமக்களான கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் என்ற இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்பித்து நம்பெருமாள் முன்பே தாளத்துடன் இசையுடன் அபிநயத்துடன் சேவிக்க, அழகியமணவாளன் இசையிலே குளிர்ந்து ஒருவருக்கு “மதியாத தெய்வன்கள் மணவாளப் பெருமாள் அரையர்” என்றும் இன்னொருவருக்கு “நாதவினோத அரையர்” என்ற சிறப்புத் திருநாமங்களை வழங்கினார். அன்று முதல் விண்ணப்பஞ் செய்வார்களை அரையர்கள் என்றே அழைத்தனர். அரையர் என்றால் ”இசைக்கலையில் மன்னர்கள்” என்று பொருள். அரசர்களுக்கு மகுடம் மாதிரி இவர்களுக்குக் குல்லாயும் தொங்கல் பரிவட்டமும் திருவரங்கரால் வழங்கப்பட்டன. பெருமாளுக்குச் சங்கு சக்கரம் போல இவர்களுக்கு இது அடையாளம்.அரையர் குல்லா ( மகுடம் )

அரையர் சேவைக்கு, கோயிலிலிருந்து வந்து அரையர்களை அழைத்துச் செல்வது மரபு. அரையர்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததால், இன்றும் அரையர்கள் சேவிக்கும் போது அவர்களுக்குப் பெருமாளின் பரிவட்டம் கொடுக்கப்படுகிறது. அதைக் குல்லாவின் மீது சாத்திக்கொண்டு தான் அரையர்கள் ஆரம்பிக்கிறார்கள்.

அரையர் சேவை இன்று ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய மூன்று திவ்வியதேசங்களில் மட்டுமே நடைபெறுகிறது. மேல்கோட்டையில் நடக்கிறது. அரையர் சேவை கொண்டாட்டம், பாசுரங்களை இசையுடன் பாடுதல், பாசுரங்களை அபிநயம் செய்தல், பாசுரங்களின் வியாக்கியானம், கொண்டாட்டம் ஐந்து பகுதிகளாக அமைகிறது. கொண்டாட்டம் என்பது “முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்” என்று பெருமாளின் அழகையும் குணத்தையும் பூரிப்புடன் சொல்லுவது.

நாதமுனிகளுக்குப் பின் அவர் திருப்பேரனார் ஆளவந்தார் திருவரங்கத்தில் தங்கி அரையர் சேவையில் பல புதிய நிகழ்ச்சிகளைப் புகுத்தி வளர்த்தார். தன்னுடைய குமாரரான திருவரங்கப் பெருமாள் அரையரை, அரையர் சேவையில் வல்லுநராக்கினார். பெருமாள் உலகலந்தது, கம்சவதம் போன்ற புராணங்களை நாடகமாக நடித்துக் காட்டி நம்பெருமாள் கொக்கி போட்டு செக்க வைத்தவர். நம்பெருமாள் இவருடைய இசையில் லைத்டு “கோயிலுடைய பெருமாள் அரையர்” என்று சிறப்புத் திருநாமத்தை வழங்கினார். அரையர் ஸ்ரீராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்தது பற்றி உங்களுக்குத் தெரிந்த கதை தான். சுருக்கமாக இங்கே.திருவரங்க பெருமாள் அரையர் காஞ்சி வரதனிடம்..

காஞ்சி தேப்பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த ஸ்ரீ ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வர வேண்டும் என்று அடியார்கள் பெரிய பெருமாளிடம் வேண்டி நின்றார்கள். பெரிய பெருமாள் அரையரை அழைத்து இசைப் பிரியரான தேவப்பெருமாளிடம் அபிநயித்து எம்பெருமானாரை வரமாகப் பெற்றுவரும்படி நியமித்தார். அரையரும் காஞ்சிபுரம் சென்றார். அவரை அவ்வூர் அரையரான ’வரம் தரும் பெருமாள்’ அரையர் வரவேற்று தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். மருநாள் அரையர் தேவப்பெருமாளைப் பார்த்து அபிநயத்து மங்களாசாசனம் செய்தார். தேவப்பெருமாள் மிக மகிழ்ந்து அரையருக்குப் பரிசுகளை வழங்கினார். ஆனால் அரையர் அவை எல்லாம் வேண்டாம், அடியேன் வேண்டுவதைக் கொடுக்க வேண்டும் என்று கேட்க நிற்க, அதற்கு வரதன் என்னையும் என் திருமாமகளையும் தவிர எது வேண்டும் என்றாலும் கேளும் என்றார். அரையர் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த இராமானுசரை காண்பித்து “இராமாநுசரைத் தந்தருளவேணும்” என்றார். வேறு வழியில்லாமல் இராமானுசரை வருத்தத்துடன் அனுப்பிவைத்தார் தேவப்பெருமாள்.ஸ்ரீவில்லிப்புத்தூர் அரையர் ஸ்வாமி

ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவம். ஆளவந்தார் அங்கே எழுந்தருளியிருக்கிறார். அரையர் திருவாய்மொழிக்கு இசையுடன் அபிநயம் செய்துகொண்டு இருக்கிறார்.

அபிநயம் செய்யும் பாசுரம் இது:

கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர்!-நாம் உமக்கு அறியச் சொன்னோம்.

திருவனந்தபுரம் பெருமாளைச் சேவிக்க என்னைச் சேர்ந்தவர்கள் இப்போதே எழுந்திருங்கள் உடனே திருவனந்தபுரம் நடந்து சென்று அவன் பாதத்தை வணங்கலாம் என்று நம்மாழ்வார் அழைக்கும் பாசுரத்துக்கு அரையர் இசையுடன் அபிநயம் செய்கிறார். ஆளவந்தார் ரசிக்க அன்று அரையருக்கு என்ன தோன்றியதோ இந்தப் பாசுரத்தை இரண்டு முறை அபிநயம் செய்கிறார் அதுவும் ஆளவந்தாரைப் பார்த்துக்கொண்டே

நம்மாழ்வார் தனக்கு ஒரு குறிப்பு வைத்திருக்கிறார் என்று ஆளவந்தார் உடனே எழுந்துகொண்டு, திரிதண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார், மடத்துக்குக் கூட செல்லாமல், அவர் சிஷ்யர்களைக் கூப்பிட்டு மடத்திலிருந்து ”திருவாராதன பெருமாளை எழுந்தருளிக்கொண்டு வா” என்று உடனே திருவனந்தபுரம் நோக்கி சிஷ்யர்களுடன் ஆழ்வார் சம்பந்தம் கிடைக்கும் என்று புறப்படுகிறார். அரையர் சொன்னால் ஆழ்வார் சொன்ன மாதிரி என்ற பாவம் அவர்களிடத்தில் இருந்திருக்கிறது.ஸ்ரீவில்லிப்புத்தூர் அரையர்

1978ல் ஒரு நாள் மாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் அரையர் வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்த போது, ஒரு ஜோசியர் அந்த பக்கமாகச் செல்ல, அவரிடம் பேசும் போது “வடக்கே பத்ரி நாராயணனை சேவிக்க வேண்டும்” என்று சொல்ல அவர் “இப்போதே கிளம்புங்கள்” என்று கூற அரையர் உடனே கிளம்பிவிட்டார்!

சென்னை, அங்கிருந்து ஆந்திரா சென்று ஸ்ரீமந் நாராயண ஜீயரை சேவித்துவிட்டு அங்கிருந்து இமய மலையில் உள்ள பத்ரி நாராயணன் கோயிலுக்குச் சென்றார். ஒரு நாள் காலை 3.30மணிக்கு எல்லோரும் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்க, ஸ்ரீவில்லிப்புத்தூர் அரையர் பத்ரி நாராயணன் முன் அரையர் சேவை நிகழ்த்தினார்.பத்ரியில்...

அரையர்களின் இசை நோய்க்கு மருந்தாகவும் இருந்திருக்கிறது. நஞ்சீயர் நோய்வாய்ப்பட்டிருந்த போது ‘வரந்தரும் பெருமாள்’ அரையரை அழைத்து திருமங்கையாழ்வாரின் பாசுரத்தைத் தாளத்துடன் இசைத்து அபிநயிக்கக் கேட்டு மகிழ்ந்தார் என்று பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

நஞ்சீயர் நம்பிள்ளை, பிள்ளை லோகாசாரியார் ஆசாரியர்களின் காலத்தில் அரையர் சேவையில் ”கொண்டாட்டம்”, ”முத்துக்குறி” போன்றவை இடம் பெற்றன. இன்றும் ஸ்ரீரங்கத்தில் முத்துக்குறி நடைபெரும் போது அடியார்களுக்கு அரையர்களே ஸ்ரீசடகோபம் சாதிக்கிறார்கள்.

ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது.ஸ்ரீராம பாரதி

பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரைத் தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென். இந்த அரையர் சேவைக்கு இந்த நூற்றாண்டில் மீண்டும் உயிர் கொடுத்தவர் நம் ஸ்ரீராம பாரதி.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்குச் சென்றவர், அங்கே ஒரு சிற்ப கடையில் பழங்காலத்து ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர் ( நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம் )

விக்ரகம் ஒன்று வாங்கி தன் வீட்டுக்குக் கொண்டுவந்த பின் அவருக்கு சில தெய்வீக அனுபவம் கிடைக்க, திடீர் என்று ஒரு நாள் தன் பெட்டி படுக்கையைச் சுருட்டிக்கொண்டு இந்தியா திரும்பினார். தில்லியில் வி.வி.எஸ் என்று அழைக்கப்படும் திரு வி.வி. சடகோபனிடம் சேர்ந்தார். அவருடன் இந்திய இசை மற்றும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு இசை சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல திய்வதேசங்களுக்கு சென்று ஆழ்வார்களின் பக்தி உள்ளத்தின் உணர்ச்சி பாவனைகளுடன் ஆடியும் குழித் தாளத்துடன் இசைக் கூட்டிப் பாடியும் “அரையர் சேவை”யாக பெருமாளுக்கு அர்ப்பணம் செய்தார்.

1980ல் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த வி.வி.எஸ் ரயிலிலிருந்து கூடூர் நிலையத்தில் இறங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தன் குரு திரு வி.வி.சடகோபனின் மறைவுக்குப் பின் சீடர் ஸ்ரீராம பாரதி தன் துணைவியார் திருமதி சௌபாக்யலக்ஷ்மி ( இவரும் திவ்ய பிரபந்தங்களில் தேர்ச்சி பெற்றவர் ) தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஆழ்வார்திருநகரி, மேல்கோட்டையில் சில காலம் தங்கி அரிதாகி வரும் அரையர் இசையை ஆராய்ந்து கற்றார் திவ்ய பிரபந்த பாடல்களுக்கு ராகம் அமைத்து இசைக் குறியீடுகளுடன் ’தேவ கானம்’ என்று நாதமுனிகள் சூட்டிய பெயரையே சூட்டி புத்தகம் ஒன்றை 1995ல் வெளியிட்டார். 1997ல் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மிக அழகான புத்தகம் ஒன்றை வெளியிட்டார். ’அரையர் சேவை’ என்ற புத்தகம் ஒன்றையும் ஆங்கிலத்தில் எழுதினார் ( பாரதிய வித்யா பவன் வெளியீடு )

தூர்தர்ஷனில் இயக்குநர் வேலையிலிருந்தவர் அதை விட்டுவிட்டு சென்னை பள்ளிக்கரணை அருகில் தன் குருவின் பெயரால் ”ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை” ஒன்று அமைத்து அக்கம் பக்கம் கிராமத்துக் குழந்தைகளுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்றுக்கொடுத்தார். 1997 1998 நினைக்கிறேன் ஸ்ரீராம பாரதி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று பைக்கில் பள்ளிக்கரணை ஜல்லடம்பேட்டைக்கு சென்றேன். ”பிரபந்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை” என்றவுடன் அவரிடம் இருந்த திருப்பாவை, நித்யாநுஸந்தாநம் சந்தை முறை ஒலிநாடாவை எனக்குக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் இன்று நானே ஆரம்பிக்கிறேன் என்று எனக்குச் சந்தை முறையில் இரண்டு பாசுரங்களை அவரே சொல்லியும் தந்தார்.

அரையர்கள் இல்லத்தில் பிறந்த குழந்தைக்கு, அப்போது அவர்கள் மனதில் தோன்றும் திவ்ய தேச பெருமாளின் பெயரையே அந்த குழந்தைக்குத் திருநாமமாகச் சூட்டுகிறார்கள். அந்த திவ்ய தேசத்தின் மீது பாடப்பட்ட பாசுரங்களை அந்த குழந்தைக்கு விசேஷமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.கதவை திறந்து... சேவிக்க வைத்த குட்டி அரையர்

சமீபத்தில் வைகாசி விசாகத்துக்கு ஆழ்வார்திருநகரிக்குச் சென்ற போது ஆழ்வார் அவதரித்த இடமான அப்பன் கோயில் சாத்தியிருந்தது. விசாரித்ததில் அந்த கோயிலை அந்த ஊர் அரையர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள் என்று தெரிந்தது. அரையரின் திரு குமாரர் ஸ்ரீராம் ஸ்வாமி அவர்கள் சற்று நேரம் எங்களுக்கு ஒதுக்கி அப்பன் கோயிலைத் திறந்து எந்த அவரசமும் இல்லாமல், பொறுமையாக எல்லா விஷயங்களையும் எடுத்துக்கூறி எங்களுக்குப் பெருமாள் சேவை செய்து வைத்தார். நாதமுனிகள் வம்சம் பற்றி ஆராய்ச்சியும் செய்வதாகக் கூறினார். அவர் குழந்தையாக இருந்த போது எடுத்த படத்தைப் பார்த்தால் குட்டி நாதமுனிகள் மாதிரியே அடியேனுக்குத் தெரிந்தது.அரையர் தாளம் ( நம்மாழ்வார் என்று எழுதியிருப்பதை பார்க்கலாம்)

அரையர்கள் கையில் குழித் தாளம் என்ற இசைக் கருவியைத் தாளத்துக்காக உபயோகிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வலது கையில் இருக்கும் தாளத்துக்குப் பெயர் நம்மாழ்வார், மற்றொரு தாளத்தின் பெயர் நாதமுனிகள். நம்மாழ்வார் தாளைத்தை கொண்டு நாதமுனிகளின் தாளத்தைத் தட்டுவார்கள். நம்மாழ்வார் ஆசாரியனாக நாதமுனிகளுக்கு உபதேசம் செய்வது என்று ஐதீகம். அடுத்த முறை அரையர் சேவையில் தாளச் சத்தம் கேட்கும் போது அது நம்மாழ்வார், நாதமுனிகளின் நாதம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்ரீமந் நாதமுனிகள் இல்லை என்றால்.. என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் - நமக்கு ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தம், திவ்ய தேசத்தில் தமிழ், அவருக்குப் பின் வந்த ஆசாரியர்கள், வியாக்கியானங்கள், ஏன் 108 திவ்ய தேசம் என்று எதுவும் இல்லாமல் திக்குமுக்கு தெரியாமல் அலைந்துகொண்டு இருந்திருப்போம்.அரையர் தாளங்கள்

ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் கீழ உத்திர வீதி முழுவதும் ஸ்ரீரங்கத்தில் 700 அரையர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதனாலேயே அந்த வீதிக்கு ‘செந்தமிழ் பாடுவார் வீதி’ என்றே அழைத்திருக்கிறார்கள். நாளடைவில் அரையர்கள் குறைந்து தற்போது ஸ்ரீரங்கத்தில் இரண்டு குடும்பம் மட்டுமே அரையர் சேவைக்கு ஈடுபட்டுள்ளார்கள். ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த மற்ற அரையர்களின் தாளங்களை ஒரு மணியாகச் செய்து அது கிளி மண்டபத்தை அலங்கரிக்கிறது. அது தான் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த மணி.

இன்று ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் (திவ்ய பிரபந்தம் , அரையர் சேவைக்கு ஆதாரமாகவிருந்தவர்), ஸ்ரீஆளவந்தார் (ஸ்ரீராமானுஜர் கிடைக்க ஆதாரமாகவிருந்தவர்) அர்ச்சா மூர்த்திகள் ஆழ்வார்-ஆசாரியன் கோஷ்டியில் எழுந்தருளாதது ஒரு பெருங்குறைதான். அதனாலோ என்னவோ எல்லா அரையர்களின் தாளமும் இன்று அரவணை மணியாக, ரங்க விமானத்தை நோக்கி ’நாத மணியாக’ ஒலித்துக்கொண்டு இருக்கிறது.


- சுஜாதா தேசிகன்
13-07-2019,
ஆனி அனுஷம,
ஸ்ரீமந்நாதமுனிகளின் 1197ஆவது திருநட்சித்திரம்.

Comments