Skip to main content

பொன்னியின் செல்வன் - 1 - சில எண்ணங்கள்

 பொன்னியின் செல்வன்  - 1 - சில எண்ணங்கள் 



’கல்கியின்’ பொன்னியின் செல்வனை மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். பிறகு ம.செ அழகான ஓவியங்களுடன்,  அடுத்து பத்ம வாசன் ஓவியங்களுடன், . கடைசியாக விகடன் பிரசுரம் செய்த அழகான புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறேன். இதைத் தவிர காமிக்ஸ் புத்தகம் போல் வந்தவற்றையும் விட்டுவைக்கவில்லை. 


பொன்னியின் செல்வன் நாடகமாக 2014ல் வந்த போது மியூசிக் அகடமியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். பாம்பே கண்ணன் அவர்கள் ஒலிச் சித்திரமாக வந்த போது முழுவதையும் அலுவலகம் செல்லும் போது, வாக்கிங் போது கேட்டு மகிழ்ந்தேன். 


மணிரத்தினம் இதைப் படமாக எடுக்கிறார் என்ற போது அதையும் விட்டு வைக்காமல் முதல் நாள் பார்க்க வேண்டும் என்று இன்று காலை சென்று வந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்களில் மணிரத்தினம் மட்டும் அதைச் செய்து முடித்திருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு வாழ்த்துகள்.  


பொன்னியின் செல்வனைப் படம் எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. 


- சில/பல இளம் பாட்டிகள் நான் இன்னும் பொ.செ படிக்கவில்லை என்று ஸ்டைலாக சொல்லுவதிலிருந்து சிக்கல்கள் ஆரம்பிக்கிறது. அவர்களுக்கு இந்த திரைப்படத்தைக் குறைந்தபட்சம் குத்துமதிப்பாக புரிய வைக்க வேண்டும். 


- கல்கி பொன்னியின் செல்வனில் பல கதாபாத்திரங்களைச் செதுக்கியிருப்பார். பல ஓவியர்கள் இதற்குச் சித்திரத்தைத் தீட்டியிருந்தாலும், முகச் சாயல் மாறாமல் செய்திருப்பார்கள் ( உதாரணம் பழுவேட்டையர் மீசை, நந்தினி கொண்டை .. ) அதனால் அத்தியாயத்தில் பூங்குழலியோ, பழுவேட்டரையர்களோ வரும் போது நம் மனதில் அவர்களின் பிம்பம் வந்து செல்லும். சுண்ட காய்ச்சிய பால் போன்ற பொசெவை திரட்டுப்பால் போன்ற சினிமாவாக எடுக்கும் போது சரியான பதத்தில் கிளறி இறக்க வேண்டும். 

- பகுபலி போல பிரம்மாண்டமா ? மணி சார்  படம் எடுக்கும் போது கல்கி நாவல் சிதைக்கப்படுமா ? ஏ.ஆர் ரகுமான் போன்ற அந்த அரபிக் கடலோரம் குரலிசை பொசெவிற்கு பொருந்துமா ?  ஜெயம் ரவி அருண்மொழிவர்மனா ? போன்ற பல கேள்விகள்....


கமல் குரலில் படம் ஆரம்பிக்கும் போது ஒரு பெரிய கதையைக் கடகடவென்று சுருக்கமாக சொல்லி கதையைப் படிக்காதவர்களின் தலையில் பனங்காய் வைக்கப்படுகிறது. அ.கரிகாலனுக்கு யார் அண்ணன், குந்தவை யாருக்குத் தங்கை அவளுக்கு யார் அண்ணன் ? மதுராந்தகத் தேவர் யார் போன்ற விடைகள் கிடைப்பதற்குள் காட்சிகளுடன் கதை நகர்வது, பஃபே தட்டில் எல்லா ஐட்டங்களையும் ஒன்றாக குவித்துக் கலந்துகட்டி சாப்பிடும் போது சுவையில் ஒரு குழப்பம் ஏற்படுவது போல ஏற்படுகிறது. பல கதாபாத்திரங்கள் தக்க அறிமுகம் இல்லாமல் வருவதால் ஒரு கனெக்ட் இல்லாமல் குழப்பத்தைத் தவிர்க்க முடியவில்லை. கதையைத் திரைக்கதையாக சொல்லுவது ஒரு கலை. 


கதையை அத்தியாயம் அத்தியாயமாக படித்தவர்களுக்கு கல்கியின் உதவியுடன் படத்தை ஜீரணிக்க முடிகிறது. காட்சிகளை ரசிக்க முடிகிறது. பாத்திரத் தேர்வில் குறை சொல்ல முடியாது. நந்தினி ( ஐஸ் ), குந்தவை ( திரிஷா ), ஆழ்வார்க்கடியன்(ஜெயராம் ) போன்றவர்கள் கல்கியின் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். திரிஷா, நந்தினியின் சிரிப்பு, முகபாவம் எல்லாம் மாஸ்டர் பீஸ். ஜெயம் ரவி மேல் இருந்த சந்தேகம் எல்லாம் மாயமாக மறைந்து ஆச்சரியப்பட வைக்கிறார். (பசுபதியை சின்ன பழுவேட்டரையராக உபயோகித்திருக்கலாம் என்பது என் எண்ணம்). பூங்குழலி வானதி கதாபாத்திரங்கள் முகஜாடைலில் இருக்கும் ஒற்றுமை ரசகுல்லா, ரசமலாய்ப் போலக் குழப்புகிறது. கடலில் ஈரத்துணியுடன் இருப்பவள் ரசமலாய் சாரி பூங்குழலி பிறகு ஒருவாறு புரிந்துகொள்ளலாம். தப்பில்லை. 


பல விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்க, பாடல்கள் சில இடங்களில் சுருக்கப்பட்டிருந்தாலும், படத்தின் பிரம்மாண்டமே இசை என்று சொல்லுவேன். படத்தின் லேண்ட் ஸ்கேப் காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தாலும், கப்பல் காட்சிகள் போன்றவை வரும் போது பாகுபலி அளவுகோலுடன் நம்மை அறியாமல் ஒப்பிட்டுவதை தவிர்க்க முடிவதில்லை. சில இடங்களில் லைட்டிங் குறிப்பாக நந்தினி வரும் காட்சிகளில் சிறப்பாக இருக்கிறது. 


சோழர்கள், பாண்டியர்கள் எல்லாம் ராஜ கம்பீரமான அரசர்கள் கிடையாது அவர்கள் எல்லாம் கிட்டதட்ட தமிழ் காட்டுமிராண்டி கூட்டம் என்று பேன் இந்தியா மக்கள் இனி நம்பப் போகிறார்கள். அவர்களிடம் சோழர்கள் தான் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினார்கள் என்றால் அப்படியா ? என்று கேட்க போகிறார்கள். 


இனி  ? முதல் பாகம் பார்த்தவர்கள் இரண்டாம் பாகத்தைப் பார்ப்பார்கள். கதையைப் படிக்காத மாமிகள் இனி கதைச் சுருக்கத்தையாவது படிப்பார்கள்.  படத்தில் குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பிப்பார்கள், புத்தர் விஷ்ணு ஒன்றா ? பத்து அவதாரங்களிள் புத்தர் வருகிறாரா ? புத்தர் பற்றி நம்மாழ்வார் என்று என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது ! 


பொதுவாக பொன்னியின் செல்வன் என்று கூற மாட்டோம், ‘கல்கி’யின் பொன்னியின் செல்வன் என்று தான் கூறுவோம். இந்தப் படத்தில் டைட்டில் கார்டில் ’கல்கியின்’ மிஸ்ஸிங். படத்திலும். 


- சுஜாதா தேசிகன்

30.9.2022

பார்த்த இடம் : சென்னை லக்ஸ் திரையரங்கம்

Comments

  1. கதைக்கு திரைக்கதை வசனம் எழுதுவதும் காட்சிப்படுத்துவதும் இசையமைப்பதும் மிகவும் நுட்பமான கலை கலவை.
    கருப்பு வெள்ளை சிவப்பு அனுபவத்திற்கு பிறகு ரத்தம் ஒரே நிறம் என்று சுஜாதா மீண்டு வந்தார். கல்கி நேரடியாக தொடத் தயங்கிய நெருடும் வரலாற்றையே சரடு போல நுட்பமாக நெய்த காந்தளூர் வசந்த குமாரன் கதை சிதைக்கப்படாமல் படம் எடுப்பதற்கு தமிழ் சமூகம் பக்குவப்படவில்லை என்பதை உணர்ந்தே இருந்தார். அந்த கதையை தொடர்வதற்கு தமிழ் பெருமிதங்களுக்கு வேளையும், மூடும் வராது என்பது அவருக்கு தெரியும்.
    இசை அமைப்பாளரையும் , கலை இயக்குனரையும் ஏற்கனவே தெரியும் என்பதால் Money ரத்ன கவனம் , கவலை எல்லாமே புரடக்சன் மேனேஜ்மென்ட்தான். அதில் சரித்திரம் படைத்து விட்டார்.
    கல்கி ஒரு சினிமா விமர்சகரும் கூட. Money ரத்னத்தின் பொன்னியின் செல்வத்திற்கு கல்கி என்ன விமர்சனம் எழுதியிருப்பார் ?
    Operation Success,Kalki murdered

    ReplyDelete

Post a Comment