Skip to main content

கொங்கில் பிராட்டி மற்றும் கொங்கில் ஆச்சான் கதைகள்

கொங்கில் பிராட்டி கதை

ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தினால் தம்முடைய திரிதண்டம் காஷாயங்களை ஆழ்வானுக்கு கொடுத்துத் தாம் வெள்ளை சாற்றிக்கொண்டு திருநாராயணத்துக்கு போகும் வழியில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள வாசகர்களை ஸ்ரீராமானுஜருடன் பயணம் செய்ய அழைக்கிறேன்.

கூரத்தாழ்வான், பெரிய நம்பிக்கு என்ன ஆனதோ என்று மனம் கலங்கிய ராமானுஜர், அரங்கனே துணையாக நீலகிரித் தொடரை சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். அன்று ஏழாம் நாள் உபவாசம், மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு. தூரத்தே கொஞ்சம் வெளிச்சம் தெரிய சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க சென்றார்கள்.

விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் “வழி எங்கே?” என்றார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்க

“கோயிலிலிருந்து(ஸ்ரீரங்கத்திலிருந்து) வருகிறோம்” என்று பதில் சொல்ல “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?”




அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள் எங்களுக்கு நல்லான் உபதேசிக்கும் போது த்வயத்தை உபதேசித்துவிட்டு ஸ்ரீமானுஜரின் பிரபாவத்தைச் சொல்லிவிட்டு ‘நமக்கு எல்லோருக்கும் பரமாசார்யர் எம்பெருமானார் நீங்கள் அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கள்” என்று உபதேசம் செய்தார் என்று பதிலை கேட்ட உடையவர்

“நல்லான் என்கிற காளமேகம் நடுக்காட்டிலும் மழை நீரைப் பொழிய செய்துள்ளதே!” என்று வியப்புற்றுச் சொல்ல அங்கிருந்த ஒரு சீடர்

“இவர் தான் எம்பெருமானார்” என்று உடையவர் திருவடிகளை காட்ட அவர்கள் விழுந்து எம்பெருமானாரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார்கள். ( நல்லான் பற்றி பிறகு ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன்)

அன்று இரவு அவர்களுக்குத் தேனும் தினைமாவும் அமுது செய்ய கொடுத்து இரவு கண்வளர்ந்தருளினார்கள் ( உறங்கினார்கள் ).

மறுநாள் வேடர்கள் ஸ்ரீராமானுஜரையும் அவருடைய சீடர்களையும் அழைத்துச் சென்று மலை மேலே இருக்கும் ஒரு வேடுவர் தலைவனிடம் விட “பிராமணர்கள் பட்டினியிருக்க நாம் எப்படி உண்ணலாம் ?” என்று நினைத்து அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் “கட்டளை வாரி” என்ற பிராமணன் இல்லத்துக்கு அனுப்பி “சீக்கிரம் இவர்களுக்கு அமுது செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்று ததியாராதனைக்கு வேண்டிய பொருள்களையும் கொடுத்தனுப்பினான்.

அப்போது அந்த இல்லத்தில் பிராமணன் இல்லை. அவன் மனைவி மட்டுமே இருந்தாள். அவள் அந்தச் சீடர்களை வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் “வேண்டாம்” என்றார்கள்.

அந்தப் பெண் “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் ? இங்கே அமுது செய்வதில் சந்தேகம் ஏதும் வேண்டாம். அடியாளும் எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவளே!” என்று அதிர்வைக் கொடுத்தாள்.

”எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தது எப்படி ?” எப்படி என்று சீடர்கள் முழிக்க அந்த அந்தணப் பெண் பழைய கதையை இவ்வாறு சொன்னாள்.

”ஒரு சமயம் இங்கே மழை இல்லாமல் பஞ்சம் வந்தது. நானும் என் கணவரும் ஸ்ரீரங்கம் சென்று சில காலம் வசித்தோம். அங்கு எம்பெருமானார் தினம் மாதுகரம் செய்ய வருவார். அவரைப் பிரபுக்களும், செல்வந்தர்களும் விழுந்து வணங்குவார்கள். ஒருநாள் மாதுகரம் செய்ய வரும் போது அவரைத் தடுத்தேன்
“இப்படிச் செய்யலாமா ? ஏன்” என்று கேட்டார் உடையவர் அதற்கு நான்

“மகாராஜாக்களும், பிரபுக்களும் உமது திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்கள் ஆனால் நீரோ மாதுகரம் செய்கிறீர் எதனால் ?” என்று கேட்டேன் அதற்கு அவர் புன்முறுவல் கொண்டு “நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்லவார்த்தைகள் சொல்லுகையாலே” என்றார்



 

“அந்த நல்ல வார்த்தைகளை அடியவளுக்கும் அருளக்கூடாதா ?” என்று கேட்டேன்

அவரும் மனமுவந்து என் காதில் அந்த மகா மந்திரத்தை ஓதினார்.

எங்கள் ஊரில் மீண்டும் மழை பொழிந்து பஞ்சம் போனது. ஊருக்குப் புறப்படும் போது அவர் எனக்குக் காதில் சொன்ன வார்த்தையை மறந்துபோனேன். மீண்டும் அவரைச் சேவிக்க சென்றேன். அப்போது

“தேவரீர் முன்பு அருளிச் செய்த நல்வார்த்தையை மறந்துபோனேன் அதை என் நெஞ்சிலே நிலைக்கும்படி மறுபடி அருளிச்செய்ய வேணும்” என்றேன். மீண்டும் ஒரு முறை த்வயத்தை நெஞ்சிலே நிலைக்கும்படி உபதேசித்தார்.

புறப்படும் முன் “தேவரீர் ஆத்ம ரக்ஷயாக ஏதேனும் ஒன்றை தந்தருள வேண்டும்” என்று கேட்டேன் … எம்பெருமானாரின் கருணையை என்ன என்று சொல்வேன். தாம் தரித்திருந்த திருவடி ஜோடியைக் கழற்றி பிரசாதித்து அருளினார். அவர் உபதேசங்களுடன், ஸ்ரீபாதுகைகளுடன் இங்கு வந்து சேர்ந்தோம். பிறகு மழைக்குக் குறைவில்லை. வாழ்வு வளம் பெற்றது. அதனால் பயப்படாமல் இங்கேயே நீங்கள் அமுது செய்யலாம்” என்றாள்.

சீடர்களுடன் உடையவர் வெள்ளை சாத்திக்கொண்டு இருந்தால் அவளுக்கு ராமானுசர் இருக்கிறார் என்று தெரியவில்லை. உடையவர் அவள் கூறியவற்றை தம் திருவுள்ளத்தில் நன்கு ஆராய்ந்து அமுது உண்ணச் சம்மதித்தார். தம் சீடர் ஒருவரை அவள் செய்யும் காரியங்களைக் கண்காணிக்கும்படி நியமித்தார். பிறகு என்ன நடந்தது என்று விசாரித்தார். அந்தச் சீடர் மேற்கொண்ட விஷயத்தைச் சொன்னார்.


 

”அந்தப் பெண் சுத்தமான புடவை தரித்துக்கொண்டு, சமையலறை சென்று “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று கூறி தளிகை செய்துமுடித்து, கதவைச் சாத்திக்கொண்டு எம்பெருமானார் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து, அதற்கு அமுது கண்டருளப் பண்ணி பிறகு வெளியே வந்து “அமுது செய்யலாம்” என்றாள்.
உடையவர் அந்தப் பெண்ணை பார்த்து “உள்ளே கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள்

“எம்பெருமானார் ஸ்ரீபாதுகைளைச் சோதித்து அவற்றுக்கு அமுது கண்டருளப் பண்ணினேன்” என்றாள்.

“அவற்றைக் காட்டு” என்றார் உடையவர்

அவளும் அதைக் கொண்டு வந்து காட்ட தமது பாதுகைகள் என்று கண்டுகொண்ட ராமானுசர் “ராமானுசரிடம் நீ உபதேசம் பெற்றது உணமையாகில் எங்களில் யாராவது இராமானுசர் போலிருக்கிறாரா ?” என்று கேட்டார்


 

அப்போது பொழுது சாய்ந்துவிட்டபடியால் விளக்கு ஒன்றை ஏற்றிவந்து அந்தப் பெண் ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டு வந்து ஸ்ரீராமானுசர் முன்பு வந்ததும் நின்று ஊன்றிக் கவனித்து அவர் திருவடிகளை கண்டதும் திகைத்து “திரிதண்டமும், காஷாயமும் இல்லாததால் தெரியவில்லை என்று அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றிய உடையவர் அங்கே சில நாள்கள் தங்கி திரிதண்ட காஷாயாதிகளை தயாரிக்கச் சொல்லி அவற்றை தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாள் முன்பு சமர்ப்பித்து அடிபணிந்து பழைய எம்பெருமானாராக தன் பயணத்தை தொடர்ந்தார்.


கொங்கில் ஆச்சான் கதை

’கொங்கில் பிராட்டி கதை’ என்று போன பகுதியில் கொங்கில் பிராட்டியின் கணவரான ’கொங்கில் ஆச்சான்’ பற்றி எதுவுமே கூறவில்லை. அவருடைய வைபவத்தை இந்தப் பகுதியில் பார்ப்பதற்கு முன், ‘முன் கதை’ சுருக்கமாக என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

கிருமிகண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து ஸ்ரீராமானுஜர் மற்றும் அவருடைய சீடர்கள் மேல் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். வழியில் நல்லானின் வேடுவ சீடர்கள் அவர்களுக்கு உதவி செய்து, தேனும் திணை மாவும் அமுது செய்யக் கொடுத்து வழி அனுப்பினார்கள்.
பிறகு அவர்கள் கொங்கில் பிராட்டி இல்லத்தை அடைந்தார்கள். அங்கே கொங்கில் பிராட்டி ஸ்ரீராமானுஜரையும் சீடர்களையும் வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் உணவு அருந்த தயக்கம் காட்டுகிறார்கள்.


 

கொங்கில் பிராட்டி ‘எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவள்’ என்று தன் கதையைக் கூறி, தான் சமைத்த உணவை ராமானுஜர் பாதங்களுக்குச் சமர்ப்பித்துக் கொடுக்க, ’விதுரர் ஆசையுடன் கொடுத்த உணவைக் கண்ணன் உண்டது போல, இந்த அம்மையார் ஆசையுடன் கொடுக்கும் ஆசாரிய பிரசாதத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ராமானுஜர் கூற சீடர்கள் உணவை எடுத்துக்கொண்டார்கள். தன் பாதுகைக்கு வைத்த உணவைத் தானே எடுத்துக்கொள்ள முடியாது, மேலும் ஒரு பெண் சமைத்த உணவை யதிகள் உட்கொள்ளக் கூடாது என்பது மரபு என்று ராமானுஜர் கூற கொங்கில் பிராட்டி பாலும், பழமும், சர்க்கரையும் கொண்டு வந்து கொடுத்தாள். ராமானுஜர் தான் ஆராதிக்கும் பெருமாளுக்குக் கண்டருளச் செய்து உட்கொண்டார்.

சீடர்கள் உட்கொண்ட மிச்ச பிரசாதங்களையும், ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாத தீர்த்தத்தையும் தூங்கிக்கொண்டு இருந்த தன் கணவரை எழுப்பி அவருக்குக் கொடுத்துவிட்டு, தான் ஒன்றும் உண்ணாமல், தரையில் படுத்துக்கொண்டாள். ஆனால் தூக்கம் வராமல் தவித்தாள். இதைக் கண்ட அவளுடைய கணவர் “ஏன்?” என்று கேட்க, ”திருவரங்கத்திலிருந்து வந்த எம்பெருமானாரும் அவருடைய சீடர்களும் நம் அகத்தில் உணவு உட்கொள்ளத் தயங்கி உறங்கச் சென்றார்கள்” என்றாள். அதற்கு அவர் “நான் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்க, “நீர் எம்பெருமானாரை ஆச்ரயிக்க வேண்டும். நீங்கள் ஆச்ரயித்தால் நம் அகத்தில் அவர்கள் பிரசாதிப்பார்கள்(உணவு உட்கொள்வார்கள்)” என்று கூறினாள். அவளுடைய கணவரும் இதற்கு இசைந்து “அப்படியே செய்கிறேன்” என்றார். இதைக் கேட்ட கொங்கில் பிராட்டி மகிழ்ச்சியுடன் நிம்மதியாக உறங்கினாள்.

இங்கே வாசகர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் யார் கையால், என்ன உணவை, எங்கே உட்கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்திருக்கிறார்கள். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்





கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று திருவரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து உணவு அருந்தலாம் என்று தேடும் போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்படச் சரி அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாதக் கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.
ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது. உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ? அவர் பகவன் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு
“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.

இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

ஒருமுறை கொங்கு நாட்டுக்குப் பிள்ளான் சென்றிருந்தார். அங்கே ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இல்லத்தில் தங்கினார். அங்கே தாமே தளிகை(சமையல்) செய்து உண்ண நினைத்தபோது அவருக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெருமாள் திருநாமங்களைப் பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளான் இவர்கள் இல்லத்தில் உணவு அருந்துவது தகாத விஷயம் என்று புறப்பட்டார்.
பிள்ளான் ஏன் இப்படிச் செய்தார் ? என்று நமக்குத் தோன்றும். காரணம் இருக்கிறது. அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியர்களுடைய திருநாமங்களைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களை மட்டுமே கூறியதால் ஆசாரிய அபிமானம் இல்லாதவர்கள் இல்லத்தில் அமுது செய்வது தகாது என்று அங்கிருந்து புறப்பட்டார்.

இப்போது மீண்டும் கொங்கில் பிராட்டியின் அகத்துக்குச் செல்லலாம்.
மறுநாள், பொழுதுவிடிந்தவுடன் உடையவர் திருவடியில் தண்டம் சமர்ப்பித்து,
“இவர் திருரங்கத்தில் பஞ்சசமஸ்காரம், மந்திர உபதேசம் பெற்றுக்கொள்ளவில்லை, நேற்று ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தையும், உங்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தையும் உட்கொண்டதால் இவர் மனம் உங்களை ஆச்ரடிக்க இசைந்துள்ளது” என்றாள்.
உடையவரும் மனம் உகந்து “பஞ்சசமஸ்காரம் செய்வித்து, உபதேசம் செய்தருளி அவருக்கு ‘கொங்கில் ஆச்சான்’ என்று தாஸ திருநாமம் சூட்டி, அவர் கையால் செய்த பிரசாதத்தை எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து, கண்டருளச் செய்து அவ்வமுதை உட்கொண்டு எல்லோருக்கும் சாதிக்கப்பட்டது. அங்கேயே நாலைந்து நாட்கள் அவர்கள் இல்லத்தில் எழுந்தருளி பிறகு அங்கிருந்து திருநாராயணபுரம் நோக்கிப் புறப்பட்டார். புறப்படும் முன் அவர்களுக்குத் திருவாராதனப் பெட்டியில் உள்ளச் சாளக்கிராமம், லஷ்மி நரசிம்ம பெருமாளையும் கொடுத்தார்.


 

ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டை வந்த பிறகு அங்கே ஓர் ஏரி அமைக்க விரும்பினார். இன்று ’தொண்டனூர் ஏறி’ என்று புகழ்பெற்ற அந்த ஏரியை நிர்மாணிக்கப் பொருள் உதவி தேவைப்பட்டது. அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர் கொங்கில் ஆச்சான். அவருக்கு ஒரு கடிதம் எழுத, அனுப்ப வேண்டிய பொற்காசுகளை உடனே தன் ஆசாரியனின் கைங்கரியத்துக்கு அனுப்பி வைத்தார்.

ஸ்ரீராமானுஜருடைய கடைசிக் காலத்தில், ஆசாரியரைப் பிரியப் போகிறோம் என்று அவருடைய சீடர்கள் மனக்கலக்கம் அடைந்தார்கள். அப்போது உடையவர் சிஷ்யர்களை கொங்கு பிராட்டி இல்லத்துக்குச் செல்லும்படி கூறினார்.

சீடர்களும் அம்மையார் இல்லத்துக்குச் சென்றார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து வந்த காரணத்தைக் கேட்டாள். அவர்களும் உடையவர் அனுப்பினார் என்று கூற, ராமானுஜர் ஏன் அனுப்பினார் என்ற காரணத்தைத் தன் நுண்ணறிவால் அறிந்துகொண்டு ஓர் அறைக்குச் சென்று சிவந்த பட்டு கயிற்றையும், ஒரு வெள்ளைப் பட்டு கயிற்றையும் எடுத்து வந்தாள். அவர்கள் முன் அமர்ந்துகொண்டு அலைந்து இருந்த கூந்தலை எண்ணெய் தடவி, சிக்கலை எடுத்து, சிகப்புப் பட்டு கயிற்றால் முடிச்சு போட்டாள். பிறகு வெள்ளைப் பட்டு கயிற்றால் முடிச்சு போட்டாள். வந்திருப்பவர்களை வணங்கி அனுப்பி வைத்தாள்.

சீடர்கள் ஒன்றும் புரியாமல் திரும்பினார்கள். நடந்தவற்றை உடையவரிடம் கூறினார்கள். ராமானுஜர் “கொங்கு பிராட்டி ஒரு சாதாரணப் பெண் அல்ல” என்று அம்மையார் கூறிய குறிப்பால் உணர்த்திய விஷயத்தை உடையவர் விளக்கினார்.

வேத தேவதை பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். கொங்கில் பிராட்டியே வேத அவதாரம். அவளுடைய கூந்தல் வேத சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துகள். மற்ற மதத்தினரின் அபத்தமான பொருள்களால் அலைந்து கலைந்து சீர்குலைந்தது. எண்ணைத் தடவி அதைச் சரி செய்தது, வேதத்தின் பொருளைச் சீர் செய்து அதை மக்களுக்குப் புரியும்படி விளக்கியதைக் காட்டுகிறது. பின் சிகப்பு கயிற்றால் கட்டியது, காஷாயம் தரித்த சந்நியாசியாகிய அடியேன் பல நூல்களை அருளிப் பாதுகாத்ததைக் குறிக்கிறது. மறுபடி வெள்ளை கயிற்றினால் கட்டியது, பல ஆண்டுகள் கிரஹஸ்தராக தேசிகராக அவதாரம் செய்து மீண்டும் வேதத்தை நிலை நிறுத்தப் போகிறோம் கலக்கம் வேண்டாம் என்று கூறினாள் என்று விளக்கம் அளித்தார்.

ஸ்வாமி தேசிகன் ‘யதிராஜ சப்ததி’யில் ஒரு ஸ்லோகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். அரண்மனையில் பட்டத்து ராணிக்குப் பணி புரியும் பணிப் பெண்கள் அரசியின் கலைந்த கூந்தல் முடிகளை, சரி செய்து, ஒன்று கூட்டி வாரி முடிந்து அழகு செய்வார்கள். இங்கே வேதத்தை வேத மாதாவாக உருவகம் செய்கிறார் தேசிகன். வேதம் திருமாலுடைய பட்டத்து ராணி. மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அதை அலங்கோலப் படுத்த, ராமானுஜர் என்ற பணிப்பெண் அந்தக் கூந்தலை ஒன்று சேர்த்து சீராக்கித் தான் அருளிய நூல்கள் மூலம் அழகு படுத்தினார் என்கிறார்.

- சுஜாதா தேசிகன்


Comments